Wednesday, June 1, 2011

இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்.... .......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர் 'காப் அல் அஹ்பார்'


இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்....
.......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர்  'காப் அல் அஹ்பார்'


உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதீனாவுக்கு அராபிகள் அல்லாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.

கிட்டத்தட்ட இஸ்லாமிய தலை நகர் மதீனா ஒரு பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப் பட்டு இருந்தது.

மதீனாவினுள் வருவதற்கு தடை செய்யப் பட்ட யாராவது மதீனாவினுள் நுழைய வேண்டும் என்றால் அவருக்கு கலீபாவின் அனுமதியும், பொறுப்பாளர் ஒருவரின் சிபாரிசும் வேண்டப்பட்டது.

தலை நகர் மதீனாவின் பாதுகாப்பே இப்படி என்றால், கலீபாவின் பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்து போகும்.

இத்தகைய பாதுகாப்பு வியூகத்தை உமர் (ரலி) அவர்களின் கொலையின் சூத்திரதாரிகள் மிக இலாவமாக சிதைக்கிறார்கள். 


திடீரென ஒரு நாள்,  உமர் (ரலி) அவர்களின் நெருங்கிய தோழர் முகைரா இப்னு ஸுபா கலீபாவுக்கு ஒரு கடிதம் வரைகிறார்.

"என்னிடம் மிகத் திறமையாக வர்ணம் தீட்டக் கூடிய, இரும்பு வேலைகள் செய்யக் கூடிய கொல்லன் ஒருவன் இருக்கிறான்.அவனால் தளபாட வேலைகளும் செய்ய முடியும்.மதீனா மக்களுக்கு அவனது சேவை தேவையாக இருக்கிறது.நீங்கள் அனுமதித்தால் அவனை நான் உங்களிடம் அனுப்புகிறேன்"

நண்பரின் வேண்டுகோளை ஏற்று அந்தக் கொல்லனுக்கு உமர் (ரலி) மதீனாவினுள் நுழைய அனுமதிப் பத்திரம் வழங்கினார்.

இன்னொரு வார்த்தையில் சொன்னால், அவரைக் கொல்வதற்கு ஏவி விட்டவனுக்கு அவரது கையாலேயே மதீனாவினுள் நுழைய அனுமதிப் பத்திரம் வழங்கி இருக்கிறார்.

அதன் பின்னர் முகைரா இப்னு ஸுபா அவரது நம்பிக்கையை வென்ற அவரது வேலையாள் அபூ லுளுவை உமர் (ரலி) இடம் அனுப்பி வைத்தார்.

உமர் (ரலி) அபுலுளுவிடம் கேட்டார்" உன்னால் என்னென்ன வேலைகள் செய்ய முடியும்?"

அபூ லுளு தனது திறமைகளை சொன்னான்.

அதன் பின்னர் அபூலுளு மதீனாவினுள் சுதந்திரமாக உலா வரத் தொடங்கினான்.

சில நாள்கள் அமைதியாக கடந்து சென்றன.

திடீரென ஒரு நாள், அபூ லுளு உமர் (ரலி) இடம் தனது எஜமான் முகைரா இப்னு ஸுபாவைப் பற்றிய , அவருக்கு எதிரான முறைப்பாடு ஒன்றைக் கொன்று சென்றான்.

அவன் மதீனாவில் செய்யும் வேலைகளுக்கு அவனுக்கு கிடைக்கும் கூலியில் இருந்து இரண்டு திர்கம்களை தினமும் முகைரா இப்னு சுபாவுக்கு வரியாக    கொடுக்க வேண்டி இருப்பதாகவும் இதனைக் கொஞ்சம் குறைக்குமாறு தனது எஜமானுக்கு சொல்லுமாறு அவன் உமர் (ரலி) யை வேண்டினான்.

அவனது முறைப்பாட்டைக் கேட்ட உமர் (ரலி) அவனது வேண்டுகோளை நிராகரித்து அவரது தோழர் முகைரா இப்னு சுபாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

"அனைவருக்கும் நீதி செய்யும் கலீபாவின் நீதி எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை?" என்று கூறியவனாக உமர் (ரலி)உடைய தீர்ப்பு பற்றி திருப்தி இல்லாமலேயே அபூ லுளு மக்களிடம் குறை சொல்லியபடி இருக்கத் தொடங்கினான்.
(ஆதாரம்:ஹயாத் அல் ஹயாவான் பாகம்: 01 : பக்கம் 51)

அவனது இந்த செய்கையை அறிந்த உமர் (ரலி) அவனை அழைத்து மீண்டும் விசாரித்து இருக்கிறார்.

அவன் உமர் (ரலி)இடம் அவனது வழக்கு சம்பந்தமாக வாதிட்டு இருக்கிறான்.

கலீபாவுக்கும் அவனுக்கும் இடையே பெரிய வாக்கு வாதமே நடந்து இருக்கிறது.

இது நடந்து சில நாள்கள் செல்ல, உமர் (ரலி) அபூ லுளுவை அழைத்து அவருக்கு ஒரு பெரிய காற்றாடி ஒன்றை செய்து தருமாறு வேண்டியிருக்கிறார்.

அபூ லுளு உமர் (ரலி) அவர்களைப் பார்த்து கேலியாக அவரைக் கொல்லப் போவதாக பயமுறுத்தி இருக்கிறான்.

அதன் பின்னர் அவன் "நான் செய்யப் போகும் இந்த வேலையை உலக மக்கள் கியாமம் வரை நினைவில் வைத்து இருப்பார்கள்"என்று சொல்லி இருக்கிறான்.

அபூ லுளு இப்படி சொல்லி அடுத்த நாள்,  கலீபாவின் பிரதம ஆலோசகர் 'காப் அல் அஹ்பார்' உமர் (ரலி) இடம் வந்து "இன்னும் மூன்று நாள்களில் நீங்கள் மரணிக்க போகிறீர்கள்அதற்கு முன்னால் இறைவனிடம் உங்களை மரணிக்க செய்ய வேண்டாம் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்"   என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்.

அந்தக் கதை இஸ்லாமிய வரலாற்று பதிவுகளில் இப்படி பதியப் பட்டு இருக்கிறது.

"அமீருல் மூமினீன் அவர்களே!" உமர் (ரலி) அவர்களை சந்தித்த காப் அல் அஹ்பார் "நீங்கள் உங்களது மரண சாசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்.இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் மரணமடைவீர்கள்" என்று கூறினார்.

"உங்களுக்கு அது எப்படி தெரியும்?" உமர் (ரலி) காப் அல் அஹ்பாரிடம் வினவினார்.

"அல்லாஹ்வின் வேதப் புத்தகமான தவ்ராத்தில் அதனை நான் கண்டேன்"என்று பதிலுறுத்தார் காப் அல் அஹ்பார்.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக உமர் இப்னு கத்தாப் என்று அதில் உள்ளதா" மீண்டும் கேட்டார் உமர் (ரலி) அவர்கள்.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை. " என்ற காப் அல் அஹ்பார் "நான் உங்களைப் பற்றிய உங்களது விவரணங்களை அதில் கண்டேன்.அதன் படி உங்களது முடிவு நெருங்கி விட்டது" என்றார்.

"நான் மரணிக்கும் அளவுக்கு எனக்கு நோய்களோ அல்லது வருத்தங்களோ இல்லையே?' என்று ஆச்சரியப் பட்டார் உமர் (ரலி) அவர்கள்.

இரண்டாம் நாள் உமர் (ரலி) அவர்களைப் பார்த்த 'காப் அல் அஹ்பார் ' "மூன்று நாள்களில் ஒரு நாள் கழிந்து விட்டது. இன்னும் இரண்டு நாள்கள் தான் உங்களது இறுதி நாளுக்கு பாக்கி இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.
அதன் பின்னர், அடுத்த நாளும் உமர் (ரலி) அவர்களை சந்தித்த காப் அல் அஹ்பார் "மூன்று நாள்களில் இரண்டு நாள்கள் கழிந்து விட்டன.உங்களது இறுதி நாளுக்கு இன்னும் ஒரு நாள் தான் பாக்கி" என்று கூறி இருக்கிறார்.
(ஆதாரம்: தாரீக் அல் தபாரி பாகம்:  04 பக்கம்: 191 )  

அவர் அப்படி சொல்லிய அடுத்த நாள் அதிகாலை அபூ லுளு பள்ளிவாயலில் அதிகாலை சுபாஹ் தொழுகை நேரத்தில் இரு புறமும் கூர்மையான கத்தியால் உமர் (ரலி) அவர்களின் வயிற்றில் ஆறுமுறை குத்தி அவரை படு காயப் படுத்தினான்.

அத்துடன் ,  அவனைப் பிடிக்க முயன்ற சஹாபாக்களில் சுமார் பதின் ஏழு  பேர்களை அவன் அந்தக் கத்தியினால் படு காயப் படுத்தி விட்டு தப்பி ஓட முயன்று இருக்கிறான்.

ஆனால், அவனை அமுக்கிப் பிடித்த சஹாபாக்கள் , தங்களது கலீபாவை அவன் கொலை செய்ய முயன்றதன் காரணமாக கோபமுற்று அவனைக் கொலை செய்து விடுகிறார்கள்.
(ஆதாரம்; தாரீக் அல் தபாரி, பாகம் : 04 : பக்கம் 191)

இந்த சம்பவம் நடந்து இரண்டொரு நாள்களில் , இதனால் ஏற்பட்ட படு காயத்தின் காரணமாக உமர் (ரலி) மரணமாகிறார்கள்.

இவைகள்தான் உமர் (ரலி) அவர்களின் மரணம் சம்பந்தமாக எமக்கு கிடைத்து இருக்கின்ற வரலாற்று துணுக்குகள்.

அபூ லுளு கேலியாக உமர் (ரலி) அவர்களைப் பயமுறுத்திய அதே நாளில் உமர் (ரலி) யை சந்தித்த காப் அல் அஹ்பார் உமர் (ரலி ) உடைய மரண நாளை ஆச்சரியமாக எதிர்வு கூறுகிறார்.

அவர் சொன்ன மாதிரியே , அவர் குறித்த நாளிலேயே உமர் (ரலி) படு காயப் படுத்தப் படுகிறார்கள்.சரியாக மூன்று நாள்களில் அதன் காரணமாக அவர் இறந்தும் போகிறார்.

உமர் (ரலி) உடைய மரண நாளை சரியாக எதிர்வு கூறியதில் இருந்து உமர் (ரலி) உடைய கொலையை திட்டமிட்டவர்களில் காப் அல் அஹ்பார் இருந்து இருப்பார் என்பது புலனாகிறது.

இல்லாவிட்டால், அவரால் எவ்வாறு உமர் (ரலி) உடைய மரண நாளை சரியாக யூகிக்க முடிந்தது?

அதற்கு முன்னர், இந்த காப் அல் அஹ்பார்  என்பவர் யார்?

காப் அல் அஹ்பார் என்று நம்முடைய உலமாக்கள் செல்லமாக அழைக்கும் இவரது பெயர் அபூ இஷாக் காப் இப்னு மாதி அல் ஹுமயாரி அல் அஹ்பார் ஆகும்.

இவர் , எமன் நாட்டைச் சேர்ந்த "தூ ரைன்" அல்லது "தூ அல் கிலா" கிளையினரைச் சேர்ந்த யூத "ரப்பி'களில் ஒருவர். 

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் மதீனாவுக்கு வந்த இவர் புனித தீனுல் இஸ்லாத்தில் இணைகிறார்.உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் மரணம் அடைகிறார்.

நபி (ஸல்) அவர்களை இவர் சந்திக்க வில்லை.

ஆனால், சஹாபாக்களை சந்தித்து இருக்கிறார்.

ஆகவே, இவர் ஒரு 'தாபிஈன்".

எங்களது ஹதீத் கலையில் "இஸ்ராயிலியட் " என்றொரு பிரிவு இருக்கிறது.

அவைகள் அனைத்தும் காப் அல் அஹ்பாரைக் கொண்டே சொல்லப் பட்டிருக்கின்றன.

"இஸ்ராயிலியட்"களில் அதிகமான அறிவிப்புகள்"இது தவ்ராத்தில் எழுதப் பட்டிருக்கிறது" அல்லது "நாம் இவைகளை முன்னைய கிதாபுகளில் கண்டோம்" அல்லது "நபி மார்களின் புத்தகங்களில் " என்ற குறிப்புகளிலேயே சொல்லப் பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

சுன்னத் வல்  ஜமாஅத் அறிஞர்கள்  "இஸ்ராயிலியட்" ஹதீத்களை மூன்று பிரிவுகளில் பிரித்து இருக்கிறார்கள்.

முதலாவது பிரிவு: அந்த ஹதீத்கள் அனைத்தும் உண்மையானவைகள்.ஏனெனில், முஹம்மத் (ஸல்) அவர்களின் கூற்றும் அவைகளுக்கு இடையேயும் எதுவித முரண் பாடுகளும் இல்லை.

இரண்டாவது பிரிவு: அந்த ஹதீத்கள் அனைத்தும் பொய்யானவைகள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவற்றை நிராகரித்து இருக்கிறார்கள்.

மூன்றாவது பிரிவு:அந்த ஹதீத்கள் உண்மையானவைகளா அல்லது பொய்யானவைகளா என்பதை பற்றி யாருக்குமே தெரியாது. அல்லாஹ்வே அறிந்தவன்.

உமர் (ரலி) அவர்களும் , இன்னும் சில சஹாபாக்களும் அதிலும் குறிப்பாக அமீர் முஆவியாவும் காப் அல் அஹ்பாரைப் பற்றி மிகவும் நல்ல  அபிப்பிராயமே கொண்டிருந்தார்கள்.

அவர்களது கருத்தியலில், காப் அல் அஹ்பார் என்பவர் தீர்க்க தரிசனம் மிக்க தூர நோக்குள்ள சிறந்த அறிஞர் என்பதாகவே இருந்திருக்கிறது.

காப் அல் அஹ்பார் அறிவித்த ஹதீத்களில் முஸ்லிம் கிரந்தத்தில் ஒரே ஒரு ஹதீதும் அபூ தாவூத், திர்மிதி ஆகிய கிரந்தங்களில் சில ஹதீகளும் இடம் பெற்றிருக்கின்றன.

காப் அல் அஹ்பாரின் சில ஹதீத்கள் "தப்சீர் அல் குர்துபியில்" சூரத் அல் ஞாபிர் அல்லது சூரத் அல் மூமின் என்கிற நாற்பதாவது அத்தியாயத்தில் விளக்கவுரையில் இடம் பெற்றிருக்கிறது. 

எனினும், காப் அல் அஹ்பார் அவரது இறுதி நாள் வரை 'அஹ்லுல் பைத்களுக்கு ' எதிரான போக்கிலேயே இருந்திருக்கிறார்.
 
மதீனாவில் காப் அல் அஹ்பார் உமர் (ரலி) யுடன் ஒன்றாக இருக்கும் பொழுது இமாம் அலியும் மதீனாவிலேயே இருந்தார். 

அவரிடம் காப் அல் அஹ்பாரைப் பற்றி சொல்லப் பட்டது.

"காப் அல் அஹ்பார் ஒரு பொய்யர்" என்ற இமாம் அலி "நிச்சயமாக அவர் பொய்யை தனது தொழிலாக கொண்டவர்.அதில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்" என்று பகிரங்கமாக சொன்னார்.

இதைக் கேட்டதன்  பின்பு இமாம் அலி அவர்களை நேரிடையாக சந்திக்கும் துணிவில் காப் அல் அஹ்பார் இருக்கவில்லை.

அஹ்ளுல்பைத்களும், அவர்களது ஆதரவாளர்களும் அவரை ஒரு இஸ்லாமிய அறிஞனாக கருதவில்லை.

அவர்களது கருத்தியல்  காப் அல் அஹ்பார் இஸ்லாத்தை அதனது சரியான போக்கில் இருந்து திசை திருப்பும் நோக்கில் இஸ்லாத்தை தழுவியதாக நடித்து அவரது இலக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதாகவே இருந்திருக்கிறது.

அவர்களது கருத்துக்கு வலு சேர்ப்பது போல, உமர் (ரலி) அவர்களுடன் அவரது மறைவுவரை ஒன்றாக இருந்த காப் அல் அஹ்பார் அதன் பின்னர், அமீர் முஆவியா கவர்னராக இருந்த சிரியாவுக்கு சென்று அங்கே, அமீர் முஆவியாவின் தலைமை ஆலோசகராக இறுதிவரை  இருந்திருக்கிறார். 

அஹ்ளுல்பைத்களும், அவர்களது ஆதரவாளர்கள் மட்டுமன்றி இமாம் புகாரி கூட காப் அல் அஹ்பாரை நம்பிக்கைக்கு உரிய நபராக கணிக்கவில்லை.

இமாம் புகாரியின் ஹதீத் கிரந்தத்தில் காப் அல் அஹ்பாரின் ஒரு ஹதீத் கூட இடம் பெறவில்லை எனபது இதற்கு சிறந்த அத்தாட்சியாகும்.

இத்தகைய ,இந்த காப் அல் அஹ்பார் உமர் (ரலி) அவர்களின் சரியான மரண நாளை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறார். 

ஆச்சரியமாக இல்லை?


உமர் (ரலி) அவர்களின் படு கொலை சம்பந்தமாக பல அறிவிப்புகள் வேவ் வேறு விதங்களில் அறிவிக்கப் படுகின்றன.

இவைகளில் அதிகமான அறிவிப்புகள் 'இப்னு சஆத்' அவர்கள் அறிவித்ததாக அறிவிக்கப் படுகின்றன.

அவற்றில் அநேகமானவைகள் "ஒரு அசரீரி சத்தம் கேட்டது....ஆனால், யாரும் சொன்னவரைக் காணவில்லை. கவிதை வடிவில் அசரீரியாக பாடப் பட்டது"எனபது போன்ற அறிவிப்புகளாகவே இருக்கின்றன.
(ஆதாரம்: தபகாத் அல் குப்ரா பாகம் ; 03   பக்கம்; 334 ; 374 )
( தாரீக் அல் மதீனத் அல் முனவ்வரா :பாகம் ; 03   பக்கம்; 888 ; 891 )

உமர் (ரலி) குற்றுயிராக இருக்கும் பொழுது அவரைப் பார்க்க வந்த காப் அல் அஹ்பார் "நீங்கள் சஹீதாக்கப் படுவீர்கள் என்று நான் கூறவில்லையா?"என்று கேட்டு இருக்கிறார்.
(ஆதாரம்: தபகாத் அல் குப்ரா பாகம் ; 03   பக்கம்; 342 )

உமர் (ரலி) காயப் பட்டவுடன் காப் அல் அஹ்பார் அவரிடம்" இறைவனிடம் நீங்கள் கேட்டால் அவன் உங்களை உயிருடன் வைப்பான்" என்று கூறினார்.

அதற்கு உமர் (ரலி) "நான் குறை சொல்லப் படுபவனாகவும், இயலாதவனாகவும்  ஆகுவதற்கு முன்னர் இறைவன் என் உயிரைக் கைப் பற்றுவதை விரும்புகிறேன்"  என்று கூறினார்.
(ஆதாரம்: தபகாத் அல் குப்ரா பாகம் ; 03   பக்கம்; 334 ; 374 )

உமர் (ரலி) அவர்களின் மரணத்தைப் பற்றி முன்னைய வேதங்களில் சொல்லப் பட்டிருக்கிறது என்ற காப் அல் அஹ்பாரின் கூற்றை தாபிஈன்களோ அல்லது தாபிஈன்களுக்குப்    பின்னர் தோன்றிய தாபிஈன்களை அறிந்த அறிஞர்களோ ஆராய்ந்து பார்க்கவில்லை.

ஆனால், அதன் பின்னர் வந்த சில ஆய்வாளர்கள் காப் அல் அஹ்பாரின் கூற்றுக்களை ஆராயத் தொடங்கினார்கள்.

அதன் அடிப்படையில், காப் அல் அஹ்பார் அறிவித்த ஹதீத்கள் எதுவும் தவ்ராத்தில் இல்லாமல் இருப்பதை அவர்கள் அறிந்துக் கொண்டார்கள்.


இது தவிர, இஸ்ரவேலுக்கு எதிரான கருத்தில் இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் உமர் (ரலி) கண்மூடித்தனமாக நம்பியது போல  காப் அல் அஹ்பாரை நம்பவில்லை.

அந்த அறிஞர்களின் ஆய்வுகளின் முடிவின்படி ,உமர் (ரலி) அவர்களின் கொலைக்கு யூதர்களே திட்டமிட்டதாகவும், அந்த சதியின் பிரதான சூத்திரதாரி காப் அல் அஹ்பார் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

அது மட்டுமன்றி, அந்த சதிகாரக் கூட்டத்தினர் அவர்களுடன் கூட்டு சேர்ந்த சிலருடன் அவர்கள் திட்டமிட்டபடி அபூ லுளுவை உபயோகித்து உமர் (ரலி௦ அவர்களை படு கொலை செய்து இருக்கிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
(ஆதாரம்: தார் அஹ்லுல் கிதாப் பில் பித்தன் வல் ஹுருப் அல் அஹ்லியாய    பக்கம்; 237 ; 240 )


பனு உமையாக்களின் அற்புதமான அரசியல், உமர் (ரலி) அவர்களின் கொலைக்கு பின்புலமாக இருந்தது மட்டுமன்றி, அதன் பிரதான சூத்திர தாரியை மா பெரும் இஸ்லாமிய அறிஞராகவும் வடிவமைத்து அவர்களின் முயற்சியில் பெரும் வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் படு கொலையின் பின்னணியில் புதைந்து இருக்கின்ற இரகசியங்களில் சிலதை வெளிக் கொணர்ந்து விட்டோம்.

எனினும், இஸ்லாமிய வரலாற்றில் சொல்லப் படாத இரகசியங்கள் இன்னமும் மீதம் இருக்கின்றன.

No comments:

Post a Comment