Sunday, June 5, 2011

மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!!


மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!! 

சில தினங்களுக்கு முன்பு, மாவனல்லை நகரில் ஹெம்மாதகம கிராமத்துக்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்று இருந்தோம்.

மாலையில் மையத்தை அடக்கினார்கள்.

அதன் பின்னர், அப் பகுதி மதரசாவின் அதிபர் மையத்தை அடக்க வந்த மக்களுக்கு அற்புதமான உரையொன்றை மண்ணறை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் நிகழ்த்தினார்.


இந்த உரை,  நாம் முன்னர் செய்து  வந்த  'தல்கீனுக்கு ' பகரமாக  நிகழ்த்தப்  பட்டது 

அதென்ன 'தல்கீன்'?

மையத்தை அடக்கியதன் பின்னர் இமாம் அந்த மையத்துக்கு சில விடயங்களை சொல்லிக் கொடுப்பார்.

அவ்வாறு சொல்லிக் கொடுப்பதை 'தல்கீன்' என்று அழைப்பார்கள்.

மையத்தை அடக்கி முடித்ததன் பின்னர், 'தல்கீன்' ஓதும் வழக்கம் தொன்று  தொட்டு இருந்து வந்தது.

தல்கீனில் சில முக்கிய விடயங்களை அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லிக் கொடுப்பது போல பேஷ் இமாம் உரையாற்றுவார்.

சுற்றி இருப்பவர்கள் காது தாழ்த்தி அமைதியாக அதனைக் கேட்டுக்  கொண்டு இருப்பார்கள்.

அவர் சொல்லும் விடயங்கள் அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லுவது போல இருந்தாலும், நிஜத்தில்  அவைகள் மையத்தை அடக்க வந்த மக்களுக்கே சொல்லப் படும். 

தொன்று  தொட்டு  எது வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரி நினைவு படுத்தி சொல்லி வரப்பட்ட 'தல்கீன்' இப்பொழுது மருவி "கபுரடி பயானாக" புது அவதாரம் எடுத்து இருக்கிறது.

தல்கீன் ஓதும் பொழுது மண்ணறையில் அடக்கப் பட்ட மையத்திடம்   மலக்குகள் கேட்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பள்ளி வாயல் இமாம் சொல்லிக் கொடுப்பார்.

தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கினால், இப்பொழுது தல்கீன் தூக்கி எறியப் பட்டு விட்டது.

நாம் கூட மண்ணறையில் ஓதப் படுகின்ற 'தல்கீனை' குறித்து வாதம் செய்பவர்களாக, அதற்கு எதிரானவர்களாக இருந்து இருக்கிறோம்.

ஜமாத்தே இஸ்லாமியினதும், தவ்ஹீத் ஜம்மாத்தினதும் செல்வாக்கு எங்களின் மீது ஆதிக்கம் செலுத்தியது அதற்கு பிரதான காரணமாகும். 

அத்தகைய முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள்  தல்கீனுக்குப் பதிலாக "கபுரடி பயானை" அறிமுகப் படுத்தி விட்டார்கள்.

தல்கீனுக்கு எதிரான இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களின் செயல் பாடு 'நருக்'கென நெஞ்சில் குத்தியது.

'அறிந்தோ அறியாமலோ அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான போக்கில் இருக்கின்ற இவர்கள் எதற்காக தல்கீனை இலக்கு வைத்தார்கள்?'

உடனே, நாம் தல்கீனில் கேட்கப் படுகின்ற கேள்விகளையும், அதற்கு சொல்லிக் கொடுக்கப் படுகின்ற பதில்களையும் ஆராய்ந்துப் பார்த்தோம்.
     
ஆச்சரியமாக, இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களினால்  இலக்கு வைக்கப் பட்டு தூக்கி எறியப் பட்ட தல்கீனில் கேட்கப் படும் கேள்விகளிலும், அதற்கான பதில்களிலும் 'அஹ்லுல் பைத்களுக்கு' ஆதரவான ஒரு உண்மை ஒளிந்து இருந்தது.



தல்கீனில் , மண்ணறையில் கேட்கப்படுவதாக சொல்லப் படும் முதல் கேள்வி- "மன் ரப்புக்க?"- "உமது இறைவன் யார்?" என்பதாக இருக்கும்.

பதில் "அல்லாஹ்" என்று வரும்.

இரண்டாவது கேள்வி "வமன் நபியுக?" - "உமது நபி யார்?"

பதில் "முஹம்மத் (ஸல்) " என்று வரும்.

மூன்றாவது கேள்வி- "வமா தீனுக?"- "உனது மார்க்கம் என்ன?'

பதில் "தீனுல் இஸ்லாம்" - 'எனது மார்க்கம் இஸ்லாம்" என்று வரும்."

நான்காவது கேள்வி " வமா கிப்லதிக்க? "-'நீ முன்னோக்கும் திசை என்ன?"

"கஹ்பதுல்லா" என்று தவறாக சொல்லப் படும்.

கஹ்பதுல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் வீடு என்று பொருள் படும்.

அகிலமெல்லாம் பரந்திருக்கும் அல்லாஹ்வின் 'அரியாசனம்' அர்ஷ் என்று அழைக்கப் படும்.

மூமின்களின் உள்ளம் அல்லாஹ்வின் 'அர்ஷாகும்'.

ஆக,  மூமின்களின் பரிசுத்த உள்ளம் தான் 'கிப்லாவாகும்'.

ஆகவே, மண்ணறையில் கேட்கப் படும் கேள்விக்கு 'எனது முன் நோக்கும் திசை கஹ்பதுல்லாஹ் ' என்ற பதில் பொருத்தம் அற்றது.

கஹ்பதுல்லாஹ்வை முன்னோக்கி தொழுவதற்கு முன்னர், நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் அக்சாவை முன்னோக்கி தொழுது வந்தார்கள்.

இதன் காரணமாக யூதர்கள் கொஞ்சம் பெருமிதமாக தம்மை நினைத்துக் கொண்டார்கள்.

திடீரென முஸ்லிம்களின் முன்னோக்கும் திசை  கஹ்பதுல்லாஹ்வாக அல்லாஹ்வினால் மாற்றப் பட்டது.

'கஹ்பதுல்லாவை' நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கியவுடன் அவர்களது அந்த செய்கைப் பற்றி மெலிதான சல சலப்பு சஹாபாக்கள் மத்தியிலும், யூதர்கள் மத்தியிலும் எழுந்தது.

உடனே நபி (ஸல்) அவர்களது செய்கைப் பற்றி விளக்கும் வகையில் வஹி அருளப்பட்டது.

"மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள் ; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி விட்டது எது?." என்று.(நபியே!) நீர் கூறும்;"கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர் வழியில் நடத்திச் செல்வான்." என்று.
(அல் குரான்: 02 : 142 )

இந்த ஆயத்தில் இருந்து மனிதனது இம்மை மறுமை வெற்றிக்கு தேவை 'நேர் வழி' எனபது விளங்குகிறது அல்லவா?

முஸ்லிம்களது நேர் வழி அல் குரானின் வாழ்க்கை வழிக் காட்டியான நபி (ஸல்) அவர்களையும், அல் குரானின் விளக்கமான அவரது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்களைப் பின்பற்றுவதில் மாத்திரமே இருக்கிறது.

ஆகவே, எங்களது நேர் வழிக்கு நாம் முன்நோக்க வேண்டியது 'அஹ்ளுல்பைத்களின்' பக்கம் எனபது தெரிந்த விடயம் தானே.

இதன் படி "உம்முடைய முன்னோக்கும் திசை என்ன? "என்று மரணித்த மையத்திடம் கேட்கப் பட்டால் , அதற்கான பதில் "அஹ்லுல் பைத்" -'நான் அஹ்லுல் பைத்களைத்தான் முன் நோக்கினேன்" என்று வர வேண்டும்.ஆனால், கஹ்பதுல்லாஹ்  என்று நாம் தவறாக விளங்க வைக்கப் பட்டு இருக்கிறோம்.

ஐந்தாவது கேள்வி "வமன் இக்வாணுக?" "உனது உறவினர்கள் அல்லது சகோதரர்கள் யார்?"

பதில் "இக்வானுல் அஹ்லுல்பைத்" என்று வரவேண்டும்.ஆனால்,   "இஹ்வானுள் முஸ்லிமீன் " என்று பொதுவாக கூறப்படும்.

இஹ்வானுல் அஹ்லுல் பைத்தா?

அதெப்படி?

உறவினர்களைப் பற்றிய அல் குரானின் குறிப்பில், நாம் கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய உறவினர்களைப் பற்றி மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிடப் பட்டு உள்ளது.

".....................(நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை", அன்றியும், எவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் , நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கிறான்"
(அல் குரான்; 42 : 23 )

அல்லாஹ் எங்களுக்கு செய்த பேரருளுக்கு நாம், அல்லாஹ்வுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்பதைப் பற்றி விளக்குகின்ற புனித அல் குரான் வசனம் இது.

உண்மையாகவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று ஒருவன் விரும்பினால், அவன் நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களாகிய 'அஹ்லுல் பைத்கள்' மீது அன்பு செலுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி,  'அஹ்லுல் பைத்கள்' மீது நாம் வைக்கின்ற நேசம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு நாம் செய்கின்ற நன்றிக் கடனாகும்.

அத்தகைய நன்றிக் கடனைக் கட்டாயம் செலுத்துமாறு அல்லாஹ் முஸ்லிம்களிடம் கட்டளை பிறப்பிக்கின்றான்.

எல்லா இஸ்லாமிய பேரறிஞர்களும்  ஏகோபித்த நிலையில் அல் குரான் குறிப்பிடும் நபி (ஸல்) அவர்களின் உறவினர்கள் நபி (ஸல்) அவர்கள் எமக்கு இனம் காட்டிய அவர்களது 'அஹ்லுல் பைத்கள்' என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அல் குரான் ஆயத் அருளப் பட்டவுடன், சில சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் ரசூலே! அல்லாஹ் அல் குரானில் எமக்கு அன்பு செலுத்துமாறு கட்டளை பிறப்பித்த உங்களது உறவினர்கள் யார்?" என்று வினவினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் " அலி, பத்திமாவுடன் அவர்களது குழந்தைகள்" என்று பதில் சொன்னார்கள்.

இந்த சம்பவம் பற்றி பின் வரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் தங்களது கிரந்தங்களில் மிகவும் விரிவாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

 1 )  இப்னு ஹிஜ்ர் அவரது 'சஹாகுள் முக்ரிகாவில்"

2 ) தாளபி

3 ) இமாம் சுயூதி தனது அல் 'தூர் அல் மன்தூரில்'

4 ) அபு நியாம் தனது 'ஹியாத் அல் அவ்லியாவில்'

5 ) ஹம்வினி ஸாபி தனது 'அல் பாரேதில்'

இது சம்பந்தமான இன்னுமொரு பதிவை தபாரியும் இப்னு ஹிஜிரும் தமது கிரந்தங்களில் நபி (ஸல்) ௦ அவர்கள் கூறியதாக பின்வருமாறு பதிந்து இருக்கிறார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு எனது உறவினர்களாகிய எனது குடும்பத்தவர்கள் மீது அன்பு கொள்வதைக் கட்டாய கடமையாக்கி இருக்கிறான்.நான் மறுமையில் உங்களிடம் அதனைப் பற்றி விசாரிப்பேன்"

இப்பொழுது சொல்லுங்கள்?

மண்ணறையில் எங்களிடம் கேட்கப் படப் போகின்ற 'உறவினர்கள்' நபி (ஸல௦ அவர்களும் அல்லாஹ்வும் எமக்கு அறிமுகப் படுத்தி அன்பு கொள்ளுமாறு கட்டளைப் பிறப்பித்த அஹ்லுல் பைத்களை விட வேறு யாராக இருக்க முடியும்.?

ஆகவே, நாம் மண்ணறையில் எங்களிடம் கேட்கப் படப் போகின்ற "உமது உறவினர்கள் யார்?" என்ற கேள்விக்கு விடையாக "இக்வானுல் அஹ்ளுல்பைதி" என்று தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், 'இக்வானுல் முஸ்லிமீன்'என்று தவறாக வழி நடாத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆறாவது கேள்வி "வமன் இமாமுக?"-"உனது தலைவர் யார்?"

பதில் "இமாமுன் மஹ்தி"என்று சொல்லப் படல் வேண்டும்.மாறாக, "இமாமி  அல் குரான், அல்லது இமாம் ஷாபி என்று அல் குரான் அல்லது நாம் பின் பற்றும் மத்ஹபுகளின் இமாமின்  பெயர் குறிப்பிடப்பட்டு அந்தப் பெயர் சொல்லப் படும்.

இந்தக் கேள்விக்கு விடையாக இமாம் மஹ்தி என்றாலும் , இமாமி அல் குரான் என்று சொன்னாலும் சரிதான்.

இந்த இரண்டும் தவறு இல்லை.

ஏனெனில், அல் குரானாக நபி (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்.

அஹ்லுல் பைத்கள் அந்தக் குரானுக்கு உரிய சரியான விளக்கமாக இருக்கிறார்கள்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த எங்களது காலத்து இமாமாக இருக்கிறார்கள்.

ஆனால், இவைகள் இல்லாமல் நாம் மத்ஹபுகளின் இமாம்களின் பெயரை அல்லது வேறு நபரை சொல்லுவது தவறாகும்.

எங்கள் மத்ஹபுகளின் இமாம்களும், நாம் தலைவர்களாக குறிப்பிடும் நபர்களும் மண்ணறையில் இந்த கேள்விகளுக்கு கட்டாயம் விடை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தல்கீனில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு நாம் சொன்ன பதில்களில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும், அவர்களை முழுமையாக அறிந்துக் கொள்ளும் அறிவில் நபி (ஸல்) அவர்களை சரியாக , அப்பழுக்கு இன்றி அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பது புரியும்.

அந்தப் பதில்களில் அல்லாஹ்வும், அவனது நபியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறொன்றும் இல்லை.

ஆனால், அதற்கு மாற்றமாக சொல்லப் பட்ட பதில்களில் நபி (ஸல்) அவர்களை தனித்து சரியாக தெரிந்துக்  கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

நபி (ஸல்) அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தவிர்ந்து மார்க்கத்தை மட்டும் தேடிப் போன அறிவில், நபி (ஸல்) அவர்களை தெளிவாக தெரிந்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைப்பது அரிது.

புகாரி ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி உள்ள இந்த ஹதீதை கவனியுங்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப் பட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்லும் போது , அவன் அவர்களது செருப்பின் ஓசையை செவி ஏற்பான்.

அப்போது இரு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டு இருந்தாய்?" என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து கேட்பார்.

அவன் மூமினாக இருந்தால் "இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்பான்.

அவனிடம் "(நீ இதனை அறியாதவனாக இருந்து இருந்தால், உனக்கு கிடைக்க விருந்த ) நரகத்தில் உள்ள உனது இருப்பிடத்தைப் பார்" (நீ இதனை அறிந்துக் கொண்டதால் )அல்லாஹ் உனது இருப்பிடத்தை மாற்றி உனக்கு சுவனத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி உள்ளான் " என்று கூறப் படும்.

சுவனம், நரகம் ஆகிய இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்.

"அவனுக்கு அவனது மண்ணறை விசாலமாக்கப் படும்" என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்கள்.

அவன் நயவஞ்சகனாகவோ , நிராகரிப்பானவனாகவோ இருந்தால், "இந்த மனிதர் விசயத்தில் நீ என்ன கருதிக் கொண்டு இருந்தாய்?" என அவனிடம் கேட்கப் படும் பொழுது, "இவரைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது.அதிகமான மக்கள் சொல்லிக் கொண்டு இருந்ததையே நானும் சொல்லிக் கொண்டு இருந்தேன்."    எனக் கூறுவான்.

உடனே "நீ (அவரை) அறிந்து இருக்கவும் இல்லை.(அவரைப் பற்றி) படித்ததும் இல்லை" என்று கூறப் படும்.

அதன் பின்பு, அவன் இரும்புக் கத்திகளால் அடிக்கப் படுவான்.

அப்போது, அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர, மற்ற அனைத்தும் செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்"

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்.
(ஆதாரம்: புஹாரி : பாகம்: 02 ஹதீத்: 1374 ) 

தல்கீனுக்கு நாம் சொன்ன விடைகளை இலக்காக கொண்டு ஒருவன் வாழ்ந்தால் ,மேலே உள்ள ஹதீதில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அவனால் சிறப்பாக பதில் கூற முடியும்.

மாறாக, நாம் இப்பொழுது தல்கீனுக்கு சொல்லுகின்ற பதில்களில் , அல்லது கபுரடிகளில் சொல்லப் படுகின்ற ,கபுரடி பயான்களில் இந்த ஹதீதின் கேள்விகளுக்கான பதில் இல்லை என்பது புரிகின்றதா?

ஹெம்மாதகம கபுரடி பயானில் பிரசங்கம் நிகழ்த்திய மதரசா அதிபர்,  மனிதனுடன் கூடவே இருந்து மரணத்தின் பின்னர் மூன்று நிலைகளில்  அவனை விட்டும் தூரமாகும் நண்பர்களைப் பற்றி விலாவாரியாக விளக்கிப் பேசினார்.

முதலாவது நண்பன் அவன் தேடிய சொத்து.

அவைகள் வீட்டுடன் நின்று விடும் என்றார்.

இரண்டாவது அவனது உறவினர், நண்பர்கள்.

அவர்கள் கபுரடியுடன் அவனை விட்டும் பிரிந்து விடுவார்கள் என்றார்.

மூன்றாவது மனிதன் செய்யும் நல் அமல்கள்.அதாவது, தொழுகை, நோன்பு , சகாத் போன்ற இன்னோரன்னவைகளை அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான , மனிதன் செய்கின்ற மனிதனின் நல் அமல்கள் தான் அவனுடன் இறுதிவரை துணை நிற்கும் என்றார்.

அவரது இந்தக் கூற்றுடன் எம்மால் உடன் பட முடியாததையிட்டு வருந்துகிறோம்.

ஒரு முறை நபி (ஸல௦ அவர்கள் சஹாபாக்கள் மத்தியில் " நீங்கள் செய்கின்ற நல்  அமல்களைக் கொண்டு உங்களால் சுவனம் செல்ல முடியாது" என்று சொன்னார்கள்.

சஹாபாக்கள் அதிர்ந்து போனார்கள்.

"யாரசூலுல்லாஹ்! உங்களினாலும் உங்களது நல் அமல்களைக் கொண்டு சுவனம் செல்ல முடியாதா?"  என்று கேட்டார்கள்.

"ஆம்!...நானுந்தான்" என்ற நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மட்டுமே ஒருவனால் சுவனம் செல்ல முடியும்" என்றார்கள்.

அல்லாஹ்வின் அருள் என்ன? அது எங்கே இருக்கிறது? எங்களால் அதனை எப்படி அடைய முடியும்?

அல்லாஹ்வின் அருளைப் பற்றி விளக்குகின்ற அல் குரான் ஆயத் இப்படி ஒலிக்கிறது.

"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் 'ரஹ்மத்தாக' ஓர் அருட் கொடையாகவே அன்றி அனுப்பவில்லை"
(அல் குரான்: 21 ; 107 )

அல்லாஹ்வின் அருளான நபி (ஸல்) அவர்களை நிராகரித்த நிலையில் நாம் செய்கின்ற நல் அமல்களில் எதுவித பயனும் இல்லை.

மேலே நாம் எடுத்து சொன்ன ஹதீதின் படி மனிதனது நல் அமல்களால் மட்டும் அவனால் வெற்றிபெற முடியாது என்பது தெளிவு.

மனிதன் செய்த நல் அமல்களின் கேள்விகளுக்கு  முன்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அவனது அறிவு அல்லது அவரிலும், அவர் குடும்பத்திலும் அவன் வைத்து இருக்கும் அவனது நேசம் பற்றிய கேள்விதான்  முதலில் இருக்கிறது.

ஏனெனில், அல்லாஹ்விடம் நல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப் பட ஈமான் அவசியம்.

மனிதனது உள்ளத்தில் ஈமான் பதியப் பட்டு இருக்கிறதா இல்லையா என்று எப்படி அறிந்துக் கொள்வது?

மனிதனது உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்துக் கொள்ள எதாவது உரை கல் இருக்கிறதா? 

மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில, எங்களது ஈமானின் நிஜத் தன்மையை அறிந்துக்கொள்ள அல் குரான் உடைய ஒரு ஆயத் உரை கல்லாக இருக்கிறது.

பின் வரும் அந்த அல் குரான் ஆயத்தைக் கவனியுங்கள்.


"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் , அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காண மாட்டீர்.அவர்கள் தங்கள் பெற்றோராயினும், தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தவராயினும் சரியே;(ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் (அல்லாஹ் )ஈமானை எழுதி (பதித்து) விட்டான்...................." 
(அல் குரான்; 58 : 22 )

எங்களது ஈமானை உரசிப் பார்க்க அல் குரான் உரை கல்லாக சொல்லுகின்ற புனித ஆயத் இதுதான்.

நீங்கள் அந்த ஆயத் சொல்லும் பிரகாரம் இருந்தால், அதாவது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் பகைவர்களுடன் நீங்கள் பகை கொண்டிருந்தால்  உங்களது உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருக்கிறது என்று புரிந்துக் கொள்ளுங்கள்.

இல்லை என்றால் இதன் பிறகாவது அந்த அல் குரான் ஆயத் உங்களிடம் வேண்டி நிற்கும் தன்மையை உங்களில் நீங்கள் கொண்டு வாருங்கள்.

மரணத்தின் பின்னர் மண்ணறையில் நாம் வெற்றி பெறுவோம்.

அப்படி இல்லாமல், அஹ்லுல் பைத்களின் எதிரிகளில் நீங்கள் நேசம் கொண்டிருக்கிறீர்களா? ........

கவனம்!(அவர்கள் அனைவரும் அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் எதிரிகள்).

அப்படியான நேசம் துரதிர்ஷ்டவசமாக எங்களது ஈமானை இழக்கச் செய்து விடும்.

அவ்வாறு இல்லாமல், அஹ்லுல் பைத்களின் எதிரிகளின் நேசத்தை விட்டு விட்டு ,அஹ்லுல் பைத்களில் நீங்கள் நேசம் கொண்டிருக்கிறீர்களா?.....

சந்தோஷப் படுங்கள்.

நீங்கள் ஈமானுடன் இருக்கிறீர்கள்.

ஏனெனில், மூமின்களை தவிர வேறு எவரும் அஹ்லுல் பைத்களை நேசிக்க மாட்டார்கள்.

4 comments:

  1. வித்தியாசமான கோணம். உனது சகோதரன் யார்? என்ற கேள்விக்கு அஹ்லுல் பைத் எனும் பதில்.... அப்பப்பா.. புல்லரிக்கிறது. கட்டாயம் எனது குழந்தைகளிற்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடமிது. "வமன் இக்வாணுக?" இதுவரை விடயாக முஸ்லிம் என்றே நம்பியிருந்தேன். இப்போது தான் புரிகிறது எனது சகோதரன் அஹ்லுல் பைத் என்பது. நன்றி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஒவ்வொரு முஸ்லிமும் அஹ்ளுல்பைத்களின் நேசர்களாக மாறவேண்டும் என்பதே எமது பேரவா.

    நிஜத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அஹ்ளுல்பைத்களின் நேசர்கள்தான். ஆனால், அவர்களை வழிநடாத்தும் 'உமையாக்களின்' உலமாக்களினால் அவர்கள் அவர்களை அறியாமல் திசை மாற்றப் படுகிறார்கள்.

    அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. You have nothing to hide to your wife and those women who are war captive .This saying of Mohammed is highly barbaric.I want your comments

    ReplyDelete