Saturday, March 24, 2012

விலங்கிடப்பட்ட விடுதலை?



சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய தந்தை ஒரு கரி வேப்பிலை கன்றொன்றை எங்களுடைய வீட்டின் முன்றலில் நிழலை எதிர்பார்த்து நாட்டி வைத்தார்.

என்னுடைய அத்தை அந்த கன்றை பாதுகாக்கும் நோக்கில் பழைய டயர் ஒன்றை எடுத்து அதனை அந்த கன்றை சுற்றிலும் வேலியாக வைத்தார்.

காலம் நகர்ந்தது.

கரி வேப்பிலைக் கன்று டயரின் பாதுகாப்பில் பத்திரமாக வளர்ந்தது.

கொஞ்ச நாள்கள் செல்ல......செல்ல....கன்று சிறு செடியாக சிலிர்த்து நிமிர்ந்து சலசலத்தது.

அத்தை பாதுகாப்புக்கு போட்ட அந்த பழைய டயர் அந்த சிறு செடியை சுற்றி நிலத்தில் செடிக்கு வளையம் அணிவித்தது போல அழகாக இருந்தது.

இப்பொழுது எங்களால் அந்த டயரை தூக்கி வெளியே எடுத்து அந்த மரத்தையும், செடியையும் பிரித்து விட முடியுமான நிலை இருந்தது.

ஆனால் அப்படி செய்ய யாருக்கும் தோன்றவில்லை.

மெதுவாக நகர்ந்த  நாள்கள் வருடங்களாக வேகமாக ஓடி மறைந்தன.

சென்ற விடுமுறையில் நான் வீடு சென்ற பொழுது பதினேழு வருட நினைவுகளை பசுமையாக சுமந்தபடி அந்த கரி வேப்பிலை செடி, கம்பீரமாக   கரி வேப்பிலை மரமாக நிமிர்ந்து நின்றது.

சட்டென்று ஏதோ நினைவுக்கு வர நான் மரத்தின் அடியைப் பார்த்தேன்.

என்னுடைய அத்தை அந்த மரத்தின் பாதுகாப்புக்கு வைத்த அந்த பழைய டயர்  கொஞ்சம் சிதைந்துப் போய் நிறம் மங்கி அப்படியே இருந்தது.

அந்த டயரின் பாதுகாப்பு இப்பொழுது அந்த மரத்துக்கு அவசியப் படவில்லை.

டயரின் இருப்புக்கு மரமும் அவசியப் படவில்லை.

இம்முறை நாம் நினைத்தால் கூட எங்களால் அந்த பழைய டயரை மரத்தை விட்டும் அப்புறப் படுத்த முடியாத நிலையில் அவற்றின் பிணைப்பின்   நிலை இருந்தது.

ஏனெனில், நன்கு வளர்ந்து கிளை விட்டு வியாபித்திருந்த மரம் டயரின் சுற்றளவை   விடவும் பெரியதாக இருந்தது.

அப்படி யாராகிலும் விரும்பினால், டயரை இரண்டாக வெட்டித்தான் மரத்தையும் டயரையும் பிரிக்க வேண்டிய நிலையில் அவை இரண்டும் இணைந்திருந்தன.

மரத்தின் அடியில்  இருந்த   டயரையும், மரத்தையும் போலத்தான் இன்று நம்மில் அநேகர் இருக்கின்றனர்.

எங்களுடைய சிறு வயதில் எங்களுடைய பெற்றோர் அவர்கள் அறிந்த அறிவுக்கு தக்க அவர்கள் நம்பிய இறைவனை நமக்கு அறிமுகப் படுத்திவிட்டு போய் விட்டார்கள்.

கரி வேப்பிலை கன்றை சுற்றி பாதுகாப்புக்கு அத்தை அமைத்த டயர் வேலி போன்று அந்த நம்பிக்கைகள் அப்பொழுது நமக்கு அவசியப்பட்டன.

இப்பொழுது நாம் பெரு விருட்சமாக அந்த கரிவேப்பிலை மரத்தைப் போல வளர்ந்து விட்டோம்.

சிறு வயதில் நாம் அறிந்த இறைவனைப் பற்றிய கதைகளை விடவும் இறைவனைப் பற்றிய இரகசியங்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்துக் கொண்டோம்.

அவற்றின் உண்மைகளை நாம் அறிந்தாலும் சிறு வயதில் நாம் அறிந்த பழைய நம்பிக்கைகளை விட்டு விட நாம் தயாராக இல்லை.

விளைவு?

மரத்தில் சிறை கொண்ட டயரைப் போல அல்லது டயரில் சிறை பட்ட மரத்தைப் போல நாம் விலங்கிடப் பட்டிருக்கிறோம்.

எங்கள் மோட்சத்தின் விடுதலை எங்களிடமே சிறைப் பட்டிருப்பதை நாம் புரிந்துக் கொள்ள தவறிப் போனோம். 

Sunday, March 18, 2012

இறைவனைத் தேடும் அன்புராஜ்.........இஸ்லாத்தைக் குழப்பும் அஷ் சேய்க் அகார் (நளீமி)BA ......இருவரில் இறுதி வெற்றி யாருக்கு ???!!!



டாக்டர் அன்பு ராஜ் அஹ்லுல்பைத் தளத்துக்கு நன்கு பரிச்சயமானவர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் , பிரச்சாரப் பீரங்கி தற்கால இஸ்லாமிய அறிஞர்களில் இலங்கையை பிரபலமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர்
லண்டனுக்கும், சுவிசுக்கும் .....பணம் படைத்தவர்கள் நிறைந்திருக்கும் இடங்களுக்கு கால்சீட் வைத்து இஸ்லாமிய பிரசாரத்துக்குப் பறந்து ...பறந்துக் கொண்டிருக்கும் ஒரு நவீன பிரச்சார நாயகன்.

அல்லாஹ்வின் ஆட்சியை உலகில் நிலை நிறுத்தப் போவதற்காக , ஸ்திரப் படுத்துவதற்காக இஸ்லாத்தின் வெள்ளைகார எதிரிகளின் மண்ணிலேயே அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் பூரண ஆதரவுடன் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் விரிவு பட்ட ஒரு விரிவுரையாளர்.

என்றாலும், கருப்பர்கள்  நிறைந்த வரண்டு போன சூடானுக்கோ, பசியினால் மெலிந்து போன சோமாலியாவிற்கோ அவர் அல்லது அவர் போன்றோர்  இஸ்லாமிய பிரச்சாரத்துக்குப் போனதாக அறியக் கிடைக்கவில்லை.

அன்பு ராஜ் VS அகார் .........

இல்லை...இல்லை....அது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றிய உண்மைகளையும் மரணத்தின் பின்னால் இருக்கின்ற நித்திய வாழ்வின் இரகசியங்களையும் தேடுபவர்.

மற்றவர் இஸ்லாத்தில் மிகவும் ஆளுமையான புலமைப் பெற்று இஸ்லாத்தை நன்கு கற்றறிந்து இஸ்லாத்தை அறியாத மக்களுக்கு அதன் உண்மையான சத்தியங்களை மிகவும் சூசகமாக  மறைப்பவர்.

நாம் இவ்வாறு துணிச்சலுடன் கூற அல்லது முடிவுக்கு வர என்ன காரணம் தெரியுமா?

Monday, March 12, 2012

ஆன்மீகக் குருடர்கள்




தன் புலன் சொல்லும் அறிவினால் அளவிட முடியாத விடயங்களுக்கு மனிதன் எப்பொழுதும் எதிரியாகவே இருப்பான் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.

தேர்த் திரு விழா ஒன்றிற்கு தனது இளம் மகனை ஒரு தந்தை அழைத்து சென்றார்.

தூரத்தில் தேர் வருவது தெரிந்தது.

நெருக்கியடித்த கூட்டத்தில் தந்தையும் மகனும் திக்கு முக்காடினார்கள்.

உடனே தந்தை தனது மகனை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தேர் வரும் திசையை நோக்கி முன்னேறத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில் மகன் "சாமி தெரியுது........சாமி தெரியுது.." என்று பரவசத்துடன் கூச்சலிடத் தொடங்கினான்.

தந்தை அண்ணாந்துப் பார்த்தார்.