Sunday, May 8, 2011

இஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி! இது அவர் மறைந்த மாதம்............அவர் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு!



இஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி!
இது அவர் மறைந்த மாதம்............அவர் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு!

இது ஜமாதுல் ஆகிர் மாதம்.

இந்த மாதத்தில் ஒரு நாளில் தான் எங்களது இம்மை மறுமையின் அரசியல் தலைவி இந்த உலகத்தை விட்டும் மறைகிறார்.

தடம் பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் எழுந்து நின்றதை வெறுப்புடன் நோக்கிய அந்த ஆட்சியாளர்களின் ஊடகவியலின்  வலிமையின் தாக்கத்தின் காரணமாக அவர் மறைந்த நாள் எது என்று யாருக்குமே தெரியாது.

ஜமாதுல் ஆகிர் பிறை மூன்று என்று சிலரும் பிறை பதினேழு  என்று சிலரும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவரின் மறைவு, நபி (ஸல்) அவர்களின் மறைவின் பின்னர் ஆறு மாதங்களின் பின்னர் அல்லது மூன்று மாதங்களின் பின்னர் அல்லது எழுபத்து ஐந்து நாள்களின் பின்னர் என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்தக் குழப்பமான அவர் மறைவு பற்றிய செய்திகள் எமக்கு அக்கால ஆட்சியாளர்களின் வக்கிரமான போக்குக்கு சிறந்த சான்றாகும்.

இஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளியின் நினைவுக் குறிப்பில் எங்களது முதலாவது கலீபாவும் இரண்டாவது கலீபாவும் அவரது வில்லன்களாக அவதாரம் எடுத்து இருக்கின்ற அநியாயம் மிகவும் பரிதாபமாக  நடந்து இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?



நபி (ஸல்) அவர்கள் எமக்கு கோடிட்டு காட்டிய தீனுல் இஸ்லாத்தில் உமர் (ரலி௦ அவர்கள் துணிகரமாக பல மாற்றங்களை செய்தார்.

அவர் செய்த மாற்றங்களின் விளைவாக இன்னமும் சரியான தலைமைத்துவத்தை இனம் கண்டு கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் எமது சமூகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

ஹசரத் அபூபக்கரை இஸ்லாமிய உலகின் முதலாவது கலீபாவாக ஹசரத் உமர் (ரலி) தெரிவு செய்கிறார். இது அவரும், அவரை சார்ந்தவர்களும் செய்த மிகப் பெரிய இரண்டாவது தவறு.

இவருடைய இந்த செயல்,  நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு நேர் முரணானது. 

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் இருந்து திரும்பி வரும் வழியில், கதீர் கும் என்கிற நீர் சுனையின் அருகே திடீரென தரித்து நிற்கிறார்கள்.

பின்னர், அவ்விடத்தில் அங்கிருந்த ஒட்டகங்கள் அனைத்தினதும்  இருக்கைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பிரசங்க (மிம்பர்) மேடை தயாரிக்கிறார்கள்.

அதன் பின்னர் அதன் மீது ஏறி நின்றுக் கொண்டு தனக்குப் பின்னால், மூமின்களின் தலைவராக இமாம் அலி (அலை௦) அவர்களுக்கு 'விலாயா' வழங்கி அவரை மூமின்களின்  தலைவராக தெரிவு செய்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவ தெரிவின் பின்னர்,  சஹாபாக்கள் ஒவ்வொருவரும் வந்து இமாம் அலியிடம்  பைஆத் செய்கிறார்கள்.

அதில், முதலாமவர் ஹசரத் உமர் (ரலி) அவர்களாவார்கள்.

இந்தத் தலைமைத்துவத்தை நபி (ஸல்௦) அவர்களின் மறைவுடன் நிராகரித்த உமர் (ரலி) இமாம் அலிக்கு எதிராக அபூபக்கரை இஸ்லாமிய உம்மாவின் கலீபாவாக பிரகடனம் செய்கிறார்கள்.  

அவரது இந்த தவறான, அதே சமயம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் முழு இஸ்லாமிய உம்மாவையும் பெரும் வழிக் கேட்டில் கொண்டு போகும் அபாயம் தொக்கி இருந்தது.

இதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் அப்பொழுது உயிருடன் இருந்த அனைத்து சஹாபாக்களுக்கும் இருந்தது.

ஆனால், அதிசயமாக சஹாபாக்களில் அநேகர் உமரின் (ரலி) இந்த முடிவை ஆட்சேபிக்க வில்லை. மாறாக ஆதரித்தார்கள்.

ஏனெனில், அந்த 'அனேக' சஹாபாக்களின் குடும்பத்தவர்களில் யாராவது ஒருவர் இஸ்லாத்தின் ஆரம்ப நாள்களில் இஸ்லாத்தை எதிர்த்த காரணத்தால் இமாம் அலியின் வாளுக்கு இரையாகி மரணித்துப் போன துர்பாக்கிய நிகழ்ச்சிகள் நடந்து உள்ளன. 

இதன் காரணமாக பழி வாங்கும் குரோத உணர்ச்சி செத்துப் போகாத அனைத்து சஹாபாக்களும் இமாம் அலியுடன் முரண்படுவதற்கு சரியான தருணம் வரும்  வரை காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

மறு புறம், இஸ்லாத்தின் கடும் பகைவர்களான பனு உமையாக்கள் இஸ்லாமிய தலைமைத்துவத்துக்கு யார் வந்தாலும் பரவாயில்லை, ஆனால் இமாம் அலியோ அல்லது பனு ஹாஸிம்களோ வரக் கூடாது  என்கிற ரீதியில் அவர்களது காய் நகர்த்தல்களைக் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

இத்தகை சாதகமான பின்புலங்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஒத்துழைக்க , அவர் மிகவும் வெற்றிகரமாக அபூபக்கர் (ரலி) யை இஸ்லாத்தின் முதலாவது கலீபாவாக நியமிக்கிறார்கள்.

அவரது இந்த தவறான செய்கையின் காரணமாக அவர் நபி மகள் பாத்திமா (அலை) அவர்களுடன் மிகக் கடுமையாக முரண் பட்டு அவருடன் மண முறுகல் கொண்டவராகவே இறுதி வரை இருந்திருக்கிறார்.

ஹசரத் அபூபக்கருடைய (ரலி) தலைமைத்துவத்தை பாத்திமா (அலை) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.மாறாக, ஹசரத் அபூபக்கரின் தலைமைத்துவத்தை நபி மகள் பாத்திமா (அலை) அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஏனெனில், அவரது தகப்பனார் மிகவும் கடுமையாக நிலை நிறுத்திய  , மானிட சமூகத்துக்கு அல்லாஹுத்தாலாவை சரியாக இனம் காட்டி, அவர்களை சுவனத்துக்கு இட்டுச் செல்லும் நேரிய  இஸ்லாம் அநீதமாக சீர் குலைந்து போகும் அபாயம் அபூபக்கரின்  (ரலி) தலைமைத்துவ தெரிவில் ஒளிந்து இருந்தது.

அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் சுவனத்தை இழந்து போகக் கூடிய அபாயகரமான தளத்துக்கு தள்ளப் படும் இரகசியம் அபூபக்கரின்  தலைமைத்துவத்தில் பதிந்து  இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அவரது பாசறையில் வளர்ந்த நபி மகள் பாத்திமா (அலை) முஸ்லிம் உம்மா எதிர் கொள்ளப் போகின்ற இந்த துரதிர்ஷ்ட அபாயங்களை உடனடியாக உணர்ந்துக் கொள்கிறார்கள்.

இதனால், இஸ்லாமியத் தலைமைத்துவம் அநீதமான முறையில் , தவறான ஒருவரின் கரங்களுக்கு போய் விட்டதான கருத்தியலில் பாத்திமா (அலை௦) அவர்கள் இறுதிவரை இருந்தார்.

அது நியாயமும் கூட.

எனவே, தொலைந்து போன  இஸ்லாமிய தலைமைத்துவத்தை மீள நிர்மாணிக்க ,இஸ்லாமிய தலைமைத்துவ எழுச்சிக்கான முதலாவது போராட்ட வீராங்கணையாக நபி மகள் பாத்திமா (அலை) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

எமது சில அறிஞர்கள் சொல்லுவது போல அவர் தனது கணவரின் உரிமைக்காகப் போராடினார் எனபது மிகவும் கண்டிக்கத்தக்க பிழையான வாதமாகும்.

நிஜத்தில் அவர் சுவனத்தை நிரந்தரமாக இழக்க காரணமாக இருக்கப் போகின்ற முஸ்லிம்களின் உரிமைக்காகவே போராடினார்.

முஸ்லிம் உம்மாவை நரகத்தை விட்டும் காப்பாற்றி சுவனத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தீவிரவாத  நகர்வே அவரது போராட்டத்தில் பிரதான காரணியாக இருந்தது.
பாத்திமா (அலை) அவர்கள் அப்போதைய புதிய இஸ்லாமிய அரசினால் சுவீகரிக்கப் பட்ட தனது குடும்ப சொத்துக்காக போராடினார் என்ற கூற்றும், அவரது கணவருக்கு உரிய தலைமைத்துவம் பறிக்கப் பட்டதற்காகப் போராடினார் என்ற கூற்றும் அவரது சுய  நலமில்லா போராட்டத்தை கொச்சைப் படுத்த அப்போதைய இஸ்லாமிய தலைமைத்துவத்தால் கிளப்பிப் பரப்பப் பட்ட அபாண்ட பழி சுமத்தல்களாகும்.

நபி (ஸல்) அவர்களது பாசறை இந்த உலக ஆதாயங்களை இலக்காகக் கொண்ட செயல் முறைகளைப் பயிற்றுவிப்பதாக இருக்க வில்லை.

அவர்களின் இறுதி இலக்கு மறுமையின் வெற்றியாக இருந்தது.

மறுமை வெற்றிக்கு வழிக் காட்டும் தலைமை இமாம் அலியின் வசம்  ஒப்புவிக்கப் பட்டு இருந்தது.

அந்த வகையில் பாத்திமா (அலை) அவர்களின் கணவர் இமாம் அலி மூமின்களின் இமாமாக அப்பொழுது இருந்தார்.

அவரது தலைமையை ஏற்றுக் கொள்ளும் நிலை ஒருவனை சுவனத்துக்கும், அவரின் தலைமைத்துவத்தை மறுப்பதானது அப்படி மறுப்பவனை நரகத்துக்கும் இட்டுச்செல்லும் என்கிற நிஜத்தை அந்த மாதரசி அறிந்து இருந்தார்.

இமாம் அலியுடைய நிலை , அவர் பாத்திமாவின் கணவர் என்கிற அந்தஸ்த்தை விடவும், மக்களின், அதுவும் மூமின்களின் இமாம் அவர் மட்டும் தான் என்கிற அவரது அந்தஸ்த்து மிக முக்கியமானதாகும்.

ஆகவே, பாத்திமா (அலை) அவர்கள் அப்போதைய அவரது இமாமுக்காக, அந்த இமாமின் தலமைத்துவத்துக்காக அக்காலை அரசியல் தலைவர்களுக்கு எதிராக போராடினார் என்பதே சரியான கருத்தாகும்.

ஏனெனில், அந்த தலைமையினை பின் துயரும் மக்கள் நேர் வழியிலும், அந்த தலைமயினை நிராகரிக்கும் மக்கள் வழி தவறியும் போகும் அபாயம் அப்பொழுது இருந்தது.

அவரது நியாயமான போராட்டத்தின் அந்தரங்க இரகசியத்தையும், சத்தியத்தையும் உணர்ந்த சில சஹாபாக்கள் நபி மகளின் பக்கம் இருந்தார்கள்.

நபி மகள் பாத்திமா (அலை) அவர்களுக்கு ஆதரவாகஅந்த சில சஹாபாக்களின்   பெண்கள் நபி மகளின் வீட்டில் அப்போதைய அரசுக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள்.

இந்த எழுச்சியின் வீரியத்தை உணர்ந்துக் கொண்ட அப்போதைய இஸ்லாமிய தலைமைத்துவம் நபி மகளின் வீட்டை தீ வைத்து கொளுத்துகிறது.

இத்தகைய போராட்டத்தின் ஒரு கட்டத்தில் நடை பெற்ற கை கலப்பில் கர்ப்பிணியாக இருந்த பாத்திமா (அலை)அவர்களின் வயிற்றில் அடிபட்டு அதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைகிறது.

நிச்சயமாக இந்த செயலின் பின்னணியில் பனு உமைய்யாக்களின் நயவஞ்சகர்கள் இருந்து இருப்பார்கள்.

மர்வான் இப்னு ஹகமுடைய பின்னாளைய சதிகளை நாம் கவனிக்கும் பொழுது உமையாக்கள் இந்த செயல்களின் பின்னால் இருந்து இருப்பார்கள் என்பது படிக்காத பாமரனுக்கும் விளங்கி விடக் கூடிய சத்தியங்களாகும்.

அத்துடன் , கூடவே இஸ்லாமிய இமாமின் தலைமைத்துவத்துக்கான இந்த எழுச்சியின் தீவிரத்தைக் குறைப்பதற்காக பாத்திமா (அலை௦) அவர்களின் குடும்ப சொத்துக்கள் புதிய இஸ்லாமிய அரசினால் உடனடியாக அரசுடமையாக்கப் படுகிறது.

இந்த செய்கையின் மூலம் ஒரு பொருளாதாரத் தடை அந்த போராளிப் பெண்ணின் குடும்பத்தவர்கள் மீது திணிக்கப் படுகிறது.

இந்த அநீதமான செய்கைக்கு ஆதாரமாக அப்போதைய முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களினால் மாத்திரமே அறிவிக்கப் படுகின்ற ஒரு ஹதீத் மக்களிடம் எடுத்து சொல்லப் படுகிறது.

புகாரி ஹதீத் கிரந்தத்தில் அந்த ஹதீத் இவ்வாறு பதியப் பட்டுள்ளது.

"பாத்திமா (அலை) அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நபி மார்களுக்கு வாரிசுகள் இல்லை. அதனால், எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது.நாங்கள் விட்டு செல்பவை எல்லாம் தருமம் செய்யப் படல் வேண்டும்." என்று சொல்லி இருக்கிறார்கள். என்று பதில் அளித்தார்கள்.

இதனைக் கேட்ட பாத்திமா (அலை) கோபமுற்று அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள்.

அபூபக்கருடன் (ரலி) கோபம் கொண்ட பாத்திமா (அலை) அவர்கள் தாம்  மரணிக்கும் வரை அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள்............................................"
(ஆதாரம் புகாரி; பாகம் : 03 ஹதீத் :  3091 )

நபி மார்களுக்கு வாரிசுகள் இல்லை என்று ஹசரத் அபூபக்கர் சொல்லும் இந்த ஹதீத் அல் குரானுக்கு நேர் முரணானது.

நபி சுலைமான் (அலை) அவர்கள் நபி தாவூத் (அலை) அவர்களின் வாரிசு என்று அல் குரான் சொல்கிறது.

நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாரிசு என்றும் அல் குரான் சொல்கிறது.

இதில் இருந்து நபிமார்களுக்கும் குடும்பங்கள் இருக்கிறது, அவர்களுக்கு வாரிசுகளும் இருந்து இருக்கிறார்கள் எனபது தெளிவு.

இந்த நிலையில் நபி மார்களுக்கு வாரிசுகள் இல்லை அவர்களுக்கு வாரிசு உரிமையும் இல்லை என்று கூறுவது தவறாகும்.

ஒரு வாதத்துக்காக ,அபூபக்கர் (ரலி) சொன்ன ஹதீத் சரியானது என்று எடுத்துக் அவரது செய்கையில் நியாயத்தை தேட முயல்வோம்.

அப்படி என்றால், நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் பொழுது அவர்களின் சொத்துக்களாக இருந்தவைகள் என்ன என்று ஆராய வேண்டியது நமது கடமையாகிறது.

விடைகளை புஹாரியில் தேடினோம்.

தேடல்களுக்கான விடைகள் புகாரி ஹதீத் கிரந்தத்தில் இவ்வாறு பதிவாகியுள்ளன.

"நபி (ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும்  தமது வெள்ளை கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்த போது) விட்டுச் செல்ல வில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை மட்டும் தருமமாக விட்டுச் சென்றார்கள்.
(ஆதாரம் புகாரி; பாகம் : 03 ஹதீத் :  3098  )

அல்லாஹ்வின்தூதர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின் போது திர்கமையோ, தீனாரையோ, அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுசெல்ல வில்லை.தமது வெள்ளை கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர."
(ஆதாரம் புகாரி; பாகம் : 03 ஹதீத் :  2739  )

இதே கருத்தியளிலான பல ஹதீத்கள் புஹாரி ஹதீத் கிரந்தத்தில் பல இடங்களில் பதிவாகியுள்ளன.

நபி (ஸல்) அவர்களின் சொத்துக்கள் இவைகளாக இருந்தன.

ஆச்சரியமாக அபூபக்கரவர்கள் (ரலி) இந்த சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் பாத்திமா (அலை) அவர்களின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய  அநியாயம்? 

நபி (ஸல்) அவர்களின் விட்டுச் சென்ற சொத்துக்களில்   ஒரு கழுத்தையும், சில ஆயுதங்களும், ஒரு தரிசு நிலமும் இருக்க அபூபக்கரவர்கள்  (ரலி) நபி மகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தது எவ்வகையிலும் நியாயம் இல்லாத செயல் என்று விளங்குகிறதல்லவா?

அவர்களுடைய இந்த செயல்களின் அந்தரங்கத்தை சுவனத்தின் பெண்களின் தலைவி நன்கு விளங்கிக் கொண்டார்.

அதன் காரணமாக பாத்திமா (அலை) அவர்கள் அபூபக்கர் (ரலி) யுடனும் உமர் (ரலி) யுடனும் கோபம் கொண்ட நிலையிலேயே அவருடைய இறுதி மூச்சு வரை இருந்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் ஒரு நாளிலே, அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் சமரசம் செய்துக் கொள்ளும் நோக்கில் நபி மகளை காண வருகிறார்கள்.

நபி மகள் பாத்திமா (அலை) அவர்கள் இருவரையும் சந்திப்பதற்கு விரும்பவில்லை.

அவர்கள் இருவரும் இமாம் அலியை அணுகி அனுமதி வேண்டி நின்றார்கள்.

இமாம் அலியின் சிபாரிசின் பெயரில் அவர்கள் இருவரையும் வேண்டா வெறுப்பாக , நபி மகளின் முகத்தை அவர்கள் பார்க்கக் கூடாது என்கிற நிபந்தனையில் நபி மகள் பாத்திமா (அலை) தன்னை சந்திக்க அனுமதி கொடுக்கிறார்கள்.

வீட்டினுள் வந்த அவ் விருவரிடமும் பாத்திமா (அலை) சுவரை பார்த்தவாறு கேட்கிறார்கள்"எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் நான் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்." நபி மகள் அவர்கள் இருவரிடமும் தொடர்ந்தார்கள்."பாத்திமாவின் திருப்தி எனது திருப்தியாக இருக்கிறது. அதே போல , பாத்திமாவின் கோபம் எனது கோபமாக இருக்கிறது. யாரெல்லாம் எனது மகள் பாத்திமாவை நேசிக்கிறார்களோ அது என்னை நேசிப்பது போலாகும்.பாத்திமாவை யார் திருப்தி படுத்து கிறாரோ அது என்னை திருப்தி படுத்தியது போலாகும்.அதே போல பாத்திமாவின் கோபம் எனது கோபமாகும்.யாரெல்லாம் பாத்திமாவை கோபம் கொள்கிறார்களோ அது என்னை கோபம் கொள்வது போலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பதை நீங்கள் கேட்டது இல்லையா?"

இருவரும் ஒருமித்து சொன்னார்கள்" ஆம்! நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அப்படி சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்."

உடனே நபி மகள் பாத்திமா " ஆதலால் நான் அல்லாஹ்வையும் அவனது மலக்கு மார்களையும் சாட்சியாக வைத்து சொல்கிறேன்! நீங்கள் என்னுடன் கோபம் கொண்டுள்ளீர்கள்.என்னை நீங்கள் மகிழ்ச்சி படுத்தவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்கிறேன்  ! மறுமையில் நான் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும் நாளில் உங்களுக்கு எதிராக எங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்" என்றார்கள்.

(ஆதாரம்;இப்னு குதைபாவின் அல் இமாமா வல் ஸியாசா;பாகம் : 01 பக்கம் : 20  )


இப்னு குதைபா சுன்னத் வல் ஜமாத்தினரின் மிக முக்கிய முஹத்திஸ்களில் ஒருவர்.மிகப் பிரபலமான   ஹதீத் கலை வல்லுனர். அல் குரான் விரிவுரையாளர்களிலும்  ஒருவர்.

இந்த சம்பவம் சம்பந்தமாக அநேக பதிவுகள் அவரது கிரந்தங்களில் இருக்கின்றன.


புஹாரி ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி இருக்கும் இந்த ஹதீதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"பாத்திமா (அலை) என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்கு கோபமூட்டியவர் எனக்கு கோபமூட்டியவர் ஆவார்."

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புகாரி; பாகம் : 03 ஹதீத் :  3714  )


இமாம் புஹாரி கூட நபி மகள் பாத்திமா (அலை) அவர்கள் அபூபக்கருடனும் (ரலி), உமருடனும் (ரலி) கோபத்துடன் இருந்த நிலையிலேயே இந்த உலகத்தை விட்டும் பிரிந்ததாக பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவங்களை பின்னணியில் வைத்துக் கொண்டு பின்வரும் அல் குரான் ஆயத்துக்களை கொஞ்சம் கவனமாக கவனிக்குமாறு உங்களை வேண்டுகிறோம்.

"(மூமின்களே!) அறிந்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப் படவும் மாட்டார்கள்."
(அல் குரான்; 10 ; 62 )

"அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பய பக்தியுடன் நடந்துக் கொள்வாரகள்."
(அல் குரான்; 10 ; 63 )
  
"அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.இதுவே மகத்தான பேரு வெற்றியாகும்"   
(அல் குரான்; 10 ; 64 )

"நிச்சயமாக எவர்கள் ; "எங்கள் இறைவன் அல்லாஹ்தான் " என்று கூறி , (அதன் மீது )  உறுதியாக நிலைத்து நிற்கிறார்களோ , நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து , "நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம்.- உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (என்று கூறியவாறு ) இறங்குவார்கள்"
(அல் குரான்; 41 ; 30 )

நாம் மேலே குறிப்பிட்ட அல் குரான் ஆயத்துக்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடியார்களின் தன்மையை விளக்குவதை அவதானிக்க முடியும். 

அதன் படி அல்லாஹ்வின் அருள் பெற்ற மூமின்கள் எதுவித அச்சமும் இல்லாதவர்களாகவே இந்த உலகத்தில் இருப்பார்கள்.அதே நிலையிலேயே இந்த உலகத்தை விட்டும் பிரிவார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் தன்னுடைய வாழ்  நாளில் தடம்  பிறழாமல் நடக்கின்ற சாதாரண பாமரன் ஒருவனுக்கே  எதுவித அச்சமும் இல்லாத உணர்வுகளை அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அருளி, அவர்களை எதுவித பயமும் இன்றி இந்த உலகில் வாழச் செய்து மரணிக்க செய்வதாக அல் குரானில் அல்லாஹுத்தாலா வாக்களித்து இருக்கிறான்.

அப்படி என்றால், சஹாபாக்களில் முக்கியமான ஹசரத் அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் தமது நிலை குறித்து எதுவித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை அல்லவா?
                    

ஆனால், நபி (ஸல்) அவர்களின் பாசறையில் நபி (ஸல்) அவர்களுடன் வலதும் இடதுமாக இருந்த ஹசரத் அபூபக்கரும், ஹசரத் உமர் (ரலி) ஆகியோர் தாம் மனிதனாகப் பிறந்தமைக்கு வருந்தி அல்லாஹ்வின் வேதனைக்குப் பயந்தவர்களாகவே இறுதிவரை இருந்து இருக்கிறார்கள்.

பாத்திமா (அலை) அவர்களுக்கு துன்பம் கொடுத்த ஒரு தவறே அவர்கள் செய்த அனைத்து நன்மைகளையும் விழுங்கி ஏப்பம் விடுவதற்கு போதுமானதாகும்.

ஏனெனில், சுவனத்தின் இளைஞர்களின்  தலைவர்களாக இமாம் ஹசனும் இமாம் ஹுசைனும் இருக்கிறார்கள்.

சுவனத்தில் வயோதிகர்களும் சிறுவர்களும் இல்லையே?

அதன் படி அவர்கள் சுவனத்தின் ஆண்கள் அனைவர்களினதும்    தலைவர்களாகும்.

மறு புறம் அன்னை பாத்திமா (அலை) அவர்கள் சுவனத்தின் அனைத்து பெண்களுக்கும் தலைவியாவார்கள்.

நாம் உலகத்திலேயே   இவர்களின் தலைமைத்துவத்தை நிராகரித்த நிலையில் மரணித்தால், எங்களால் மறுமையில் எப்படி இவர்களை எங்களது தலைவர்களாக இனம் காண்பது?

சுவனத்தின் தலைவர்களை வேதனை செய்தவர்களில் முதலாம் கலீபாவும், இரண்டாம்  கலீபாவும் முன்னணியில் இருந்து இருப்பதாக ஆதார பூர்வமான ஹதீத் கிரந்தங்களில் இருந்து நம்பகமான ஹதீத்கள் எமக்கு கிடைத்து இருக்கின்றன.

அது மட்டுமன்றி அந்த சுவனத்தின் அங்கத்தவர்கள் எங்களது கலீபாக்களுடன் கோபம் கொண்ட நிலையிலேயே இந்த உலகத்தை விட்டும் பிரிந்து சென்றுள்ளார்கள்.

இந்தத் தலைவர்களை எங்களது தலைவர்களாக ஏற்றுக் கொண்டு நாமும் சுவனத்துக்கு நன்மாரயணம் செய்த குடும்பத்தவர்களின் அதாவது , சுவனத்தின்  தலைவர்களினதும், தலைவியினதும்  பகைவர்களாக மாறுவது புத்திசாலித் தனமாகுமா?

அபூபக்கரின் தலைமைத்துவத்துக்கு எதிராக எங்கள் சுவனத்து தலைவி பாத்திமா (அலை) எழுந்து நின்று அந்தத் தலைமைத்துவத்தை மாற்ற முற்பட்டது எங்களதுநன்மைக்காகத்தான் என்கிற உண்மை இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

இனி, புகாரி ஹதீத் கிரந்தம் நான்காம் பாகத்தில் இமாம் புகாரியினால் பதியப் பட்டிருக்கும் இந்த ஹதீதைக் கவனியுங்கள்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது;

"உமர் (ரலி) அவர்கள் தனது இறுதி மரண வேதனையில் இருந்த போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவது போல இப்படி கூறத் தொடங்கினார்கள்.

'நம்பிக்கயாளர்களின் தலைவரே! இதைப் பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள்.நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமைக் கொண்டு அத தோழமையில் நல்ல விதமாக நடந்துக் கொண்டீர்கள், பிறகு அவர்கள் உங்களைக் கொண்டு திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே அவர்களைப் பிரிந்தீர்கள்.

பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களுடன் தோழமைக் கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்துக் கொண்டீர்கள்.பிறகு, உங்கள் மீது திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே அவர்களைப் பிரிந்தீர்கள்.

பிறகு, அவர்களுடைய மற்ற தோழர்களுடன் தோழமைக் கொண்டு அந்த தோழமையிலும் நல்ல விதமாகவே நடந்துக் கொண்டீர்கள்.அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால், நிச்சயம் அவர்கள் உங்களைக் கொண்டு திருப்தி கொண்டிருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்' என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதருடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை , அவர்கள் என் மீது பொழிந்த  அருட் கொடையாகும்.மேலும், அபூபக்கர் (ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை , அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியனவும் புகழுயர்ந்த அல்லாஹ் என் மீது பொழிந்த  அருட் கொடையாகும்.

ஆனால், என்னிடம் நீங்கள் காணும் பதற்றம் அல்லாஹ்வின் வேதனைப்   பற்றியதாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு பூமி நிறைய தங்கம் இருந்தால் கூட , கண்ணியமும் , உயர்வுமுடைய அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்னரேயே எனது தவறுகளுக்குப் பகரமாக அந்தத் தங்கத்தை பிணைத் தொகையாக தந்து விடுவேன்' என்று சொன்னார்கள்"
(ஆதாரம் புகாரி; பாகம் : 04 ஹதீத் :  3692  )

ஹசரத் உமரையும் அவரது தவறான தீர்மானங்களையும் நாம் புரிந்துக் கொள்ளவோ என்னவோ அல் குரானில் ஆச்சரியமாக இப்படி ஒரு ஆயத் இருக்கிறது

"எவர்கள் நிராகரித்து , நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ , அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும்  (அதனை) அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு;இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்"
(அல் குரான்; 3 ; 91 )

நாம் இந்த உலகத்தில் வாழப் போவது இன்னும் கொஞ்ச நாள்கள்தான்.

எங்களது எஞ்சிய நாள்களிலாவது அஹ்லுல் பைத்களுக்கு ஆதரவாளர்களாக நாம் மாறி அந்த அஹ்லுல் பைத் இமாம்களை எங்களது தலைவர்களாக ஏற்றுக் கொள்வோமாக.

அஹ்லுல் பைத் இமாம்களை இந்த உலகத்தில்  எங்களது தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எங்களுக்கு இல்லை என்றால்,  மறு உலகில் நாம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்த சுவனத்தின் தலைவர்களை சந்திக்கப் போகிறோம் என்று ஒரு கணம் சிந்தித்துப்  பாருங்கள்.

நாம் எங்களது உயிரினும் மேலாக நேசிக்கின்ற எங்களது வழி தவறிய தலைவர்களை விட்டும் விலகி, நேர் வழி நின்ற அஹ்லுல் பைத்களின் வழியில் செல்ல துணிகரமாக முடிவு செய்ய நாம் எம்மை தயார் படுத்திக் கொள்வோமாக.


எங்களது துணிகரமான அந்த தீர்மானத்தினால் இன்ஷா அல்லாஹ், இம்மையிலும் மறுமையிலும் பெரும் வெற்றி கொண்ட கூட்டத்தினராக நாம் மாறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

3 comments:

  1. பாத்திமாவை பெண் போராளியாக இனங்காட்டியதற்கு முதலில் நன்றி. நாம் கூட அவரை நபியின் மகள் அலியின் மனைவி ஹஸனின் தாய் கதீஜாவின் மகள் என்று மட்டுமே தெரிந்திருந்தோம்.
    இஸ்லாத்தின் வரலாற்றில் ஹிஜ்ரி 1400 வருடங்களிற்கு முன்பே பெண்கள் போராட்டவியலை கைக்கொண்டது வியப்பளிக்கிறது.
    இஸ்லாத்தின் முதல் ஆண் போராளி பற்றி எப்போது சொல்லப் போகிறீர்கள்?. - கைபர் தளம்

    ReplyDelete
  2. is thier any Proof for this evidence..??

    ReplyDelete
  3. i mean any Proof for this article....???

    ReplyDelete