Thursday, May 16, 2013

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....அழித்துக் கொண்டிருக்கும்  வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

புனித அல் குர்ஆனும்  புனித பைபிளும் மனிதர்களின் நல்ல செயல்களுக்கு நல்ல மரத்தையும் கெட்ட செயல்களுக்கு கெட்ட மரத்தையும் உவமானமாக குறிப்பிடுகின்றன.

உதாரணமாக :



(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.[14:24] 

அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.[14:25]

இதென்ன ஜக்கூம் மரம்? என்று உங்கள் புருவம் சுருங்குவது எமக்குப் புரிகிறது.

ஜக்கூம் மரம் என்பது  நரகத்தின் நடுவில் நரகத்தின் உரிமையாளர்களின் உணவாக இருக்கின்ற பயங்கரமானதொரு நரகத்துக்கு மட்டுமே சொந்தமான மரம்.

புனித அல் குர் ஆனில் இதுசம்பந்தமான தெளிவான விளக்கங்கள் பரவலாக பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றன.

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?[37:62] 

நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.[37:63]

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.[37:64]

அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.[37:65]

நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.[37:66] 

பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.[37:67] 

அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.[37:68]

நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.[37:69]

ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.[37:70]

இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.[37:71]


இது போன்று இன்னும் பல இடங்களில் புனித அல் குர் ஆனில் ஜக்கூம் மரத்தைப் பற்றிய விளக்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

இனி,

இந்த ஜக்கூம் மரம் இஸ்லாம் மார்க்கத்தை அழித்த அல்லது அழிக்கின்ற அல்லது அழிப்பதற்கு துணை நிற்கின்ற வரலாற்று ஆவணமாக எவ்வாறு மாறி நிற்கின்றது.?

அதனை நமது இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ளத் தவறிப் போன மாயம் என்ன?

- இன்ஷா அல்லாஹ். நமது இன்றைய பதிவு இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கப் போகிறது.

நுபுவ்வத்தில் ஜக்கூம் மரம் சம்பந்தமான பிரஸ்தாபம் மக்கா காலத்திலேயே பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது.

கொடிய நரகத்தின் கொடூரம் சம்பந்தமாகவும்,ஜக்கூம் மரம் சம்பந்தமாகவும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் மக்கத்துக் குறைஷி மக்களிடையே பிரச்சாரம் செய்த பொழுது அபூ ஜஹ்ல் அதனைக் கேலி செய்யும் விதமாக பேரீச்சம் பழங்களை மக்களிடையே பகிர்ந்து .."முஹம்மது சொல்கின்ற ஜக்கூம் மரத்தின் பழங்கள் இவை" என்று எள்ளி நகையாடி இகழ்ந்திருக்கிறான்.

அதன் பின்னர் இது சம்பந்தமாக பரவலாக பேசப்பட்டாலும் ஹிஜ்ரி ஐந்து அல்லது ஆறாம் வருடம் இந்த ஜக்கூம் மரம் சம்பந்தமான, அது மக்களுக்கு  சொல்லும் விடயங்கள் குறித்த சில அதிர்ச்சித் தகவல்கள் மேலதிகமாக கசியத் துவங்கின.

அல் ஹகீம் தனது முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 480 இல் பதிந்திருக்கும் ஒரு பதிவை உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

ஓரிரவு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒரு கனவு காண்கிறார்கள்.

அக் கனவில் உமையா கோத்திர குடும்பத் தலைவன் இப்னு அல் ஆஸ் இப்னு உமையாவின் மகன் இப்னு அப்த் சம்சின் பேரன் ஹகம் பின் அபுல் ஆஸ் இப்னு உமையாவுடைய குடும்பத்தினர் -( உமையாக்ன் கோத்திரத்தினர் )-நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களது மிம்பரின் மீது குரங்குகளைப் போன்று தாவித் தாவிக் குதித்துக் கும்மாளமிட்டும், மக்களை பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்துக் கொண்டுமிருக்கக் கண்டார்கள்.

அக்கனவைக் கண்ட நாளிலிருந்து நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அவர்களது மரணம் வரும் வரை கடுமையான யோசனையுடனே இருந்திருக்கிறார்கள் .அது மட்டுமன்றி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதன் பின்னர் யாருடனும் புன்முறுவல் கூட பூத்ததில்லை என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

ஏனெனில், கனவு சொல்லும் செய்தியின் பயங்கரத்தின் கொடூரம்  அத்தகையதாக இருந்தது.

அக்கனவைக் கண்டதன் பின்னர் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு பின் வரும் அல் குர் ஆன் ஆயத் வஹி அருளப் பட்டது.

(நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! ) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.[17:60]

இந்த ஆயத் குறிப்பிடும் சபிக்கப் பட்ட மரம் குறிப்பிடும் குறிப்பு பனு உமையாக் கோத்திரத்தினர் சம்பந்தமானது என்று அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றிருக்கிறார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது மறைவின் பின்னர் பனு உமையாக்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இடத்தைக் கைப்பற்றி இஸ்லாத்துக்கு தீங்கு செய்வார்கள் என்ற முன்னறிவிப்பை அல்லாஹ் தனது நபிக்கு முன்னறிவித்தான் என்பது இதிலிருந்து புலனாகின்றது.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கண்ட கனவும்,அதன் பின்னரான அவரது செயல்களும் நபித்துவ தீர்க்கதரிசனத்துக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கின்றன.

ஒரு முறை அல் ஹகம் பின் அபுல் ஆஸ்-மர்வான் இப்னுஹகமின் தந்தை- நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் காண அனுமதி வேண்டி நின்றிருக்கிறான்.

அவனது குரலினைக் கொண்டு ஆளை அடையாளம் அறிந்த நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  "அவனை உள்ளே வர அனுமதியுங்கள்" என்று கூறி விட்டு "அல்லாஹ்வின் சாபம்  அவன் மீதும் நல்லவர்கள் அல்லாதஅவனது குடும்பத்தவர்கள் மீதும் உண்டாவதாக!அவனது குடும்பத்தில் சில நல்லவர்களே இருப்பார்கள்.அவனது குடும்பத்தவர்களின் தந்திரமான, ஏமாற்றுகின்ற,வஞ்சகமான தீயவர்கள் இந்த உலக வாழ்வில் வெற்றியடைவார்கள்.ஆனால்,அவர்களுக்கு நித்திய மறுமையில் ஒரு பங்குமில்லை." என்று சொன்னார்கள்.
ஆதாரம்: அல் ஹகீம் முஷ்ததார்க் -பாகம் நான்கு  பக்கம்  481.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:"பனு உமையாக்களின் அபுல் ஆஸுடைய குடும்பத்தினரில் முப்பது ஆண்கள் ஒன்றிணைந்தால் அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தினது சொத்தையும் சூறையாடி தங்களிடையே பங்கு வைத்துக் கொள்வார்கள்.மக்களை தமது அடிமைகளாக்கிக் கொள்வார்கள்.அல் குர் ஆனின் போதனைகளைத் திரித்து தமக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொள்வார்கள்."
ஆதாரம்:அல் ஹகீம் - முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 479

நபிகளாரின் காலத்தில் யாருக்காவது குழந்தை கிடைத்தால் அக் குழந்தையை நபிகளாரின் முன்னிலையில் பிரார்த்தணைக்காக கொண்டு வருவது அக்காலத்திய அராபியரின் வழக்கம்.

மர்வான் பின் அல்  ஹகம் அவ்வாறு நபிகளாரின் சமூகத்துக்குக் கொண்டு வரப் பட்ட பொழுது அக் குழந்தையைக் கண்ணுற்ற நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் " இந்த பல்லியை என்னை விட்டும் தூர எடுத்தெரியுங்கள்.இவனது தந்தையும் ஒரு பல்லி.சாபமும் சாபத்துக்கு ஆளானவனின் குழந்தையும்"என்றார்கள்.

ஆதாரம்:அல் ஹகீம் - முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 479

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"மர்வான் பிறப்பதற்கு முன்னரேயே அவனது தந்தை அல்லாஹ்வின் தூதரின் சாபத்துக்கு ஆளாகி விட்டான்.ஆதலினால்,அந்த சாபத்தில் மர்வானும் உள்வாங்கப் பட்டிருக்கிறான்"
ஆதாரம்:அல் ஹகீம் - முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 481

அப்துல்லாஹ் பின் ஸுபைர் கூறியதாக அஷ் ஷிபி அறிவிக்கும் ஒரு அறிவிப்பு இப்படி ஒலிக்கிறது:

"அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மர்வானின் தந்தை ஹகம் அல் ஆஷையும் அவனது மகன் மர்வானையும் சபித்தார்கள்"
ஆதாரம்:அல் ஹகீம் - முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 481

ஹதீஸ் கிரந்தங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததான  இத்தகைய நிகழ்ச்சிகள் சம்பந்தமான பதிவுகளும் இதனை நிகர்த்த அனேக பதிவுகளும்  பதியப் பட்டிருக்கின்றன.

அனைத்து ஹதீஸ் பதிவாளர்களும் இஸ்லாத்துக்கு எதிரான எதிர்ப்பை இரகசியமாகவும் பகிரங்கமாகவும்  வெளிப்படுத்தி இஸ்லாத்தை பூண்டோடு இல்லாதொழிக்க முயற்சித்த இஸ்லாத்தின் எதிரிகளாக பனு உமையாக்களைக் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும்.

அதற்கு ஆதாரமாக ஹகீம் அல்  ஹகீம் -தனது முஷ்ததார்க் கிரந்தத்தில் பனு உமையாக்களுக்கு எதிரான பதிவுகளைத் தாங்கியிருக்கும்  'அல் பித்தன் வெல் மலாஹிம்' என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கும் ஒரு குறிப்பை உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

" நான் இந்த அத்தியாயத்தில் இது சம்பந்தமான அறிவிப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற உண்மை  உண்மையைத் தேடும் ஆய்வாளர்களுக்கு புரிந்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய சமூகம் எதிர்கொண்ட இஸ்லாத்துக்கு எதிரான முதலாவது எதிர்ப்பு உமையாக்களின் எதிர்ப்பாகும்.இதனை பகிரங்கமாக எழுதாமல் இந்தப் புத்தகத்தை என்னால் முடிக்க முடியாதுள்ளது."
ஆதாரம்:அல் ஹகீம் - முஷ்ததார்க் -பாகம் நான்கு பக்கம் 481

புனித அல் குர் ஆன் குறிப்பிடும் சபிக்கப் பட்ட மரம் என்ற சொல்லாடல் பனு உமையாக்களைக் குறிப்பிடுவதாக பிரபலமான சுன்னத் வல் ஜமா அத் அறிஞர்களான ஷமர்கந்தி ,ஷஹ்லபி,ஆலூஷி,ஸுயூத்தி,இப்னு கதீர் ஆகியோர் தமது அல் குர் ஆன் விரிவுரைக் கிரந்தங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பஹ்ருர் ராஷி தனது த்ப்ஷீருள் கபீரில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாக பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்.

"அல்  குர் ஆன் குறிப்பிடும் சஜரதுள் மல் ஊணா என்கிற சபிக்கப் பட்ட மரம் பனு உமையாக்களைக் குறிக்கும் சொல்லாகும்"

'மல் ஊணா' என்ற அரபி வார்த்தையும் 'சகர' என்கின்ற வார்த்தையும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கின்ற வெவ்வேறான வார்த்தைப் பிரயோகங்களாகும்.

'மல் ஊண்' என்றால் சாபம் என்று பொருள் வரும். அதே போன்று 'சகர'  அல்லது ஜக்கூம் என்றசொல்லும் சாபம் ......சபிக்கப் பட்டது என்ற பொருளைத் தரும்.  
ஆதாரம்:பஹ்ருர் ராஷி - தப்சீருல்கபீர் -பாகம் 20: பக்கம் 237
                  அத் தூருள் மன்தூர்- பாகம் 5 பக்கம் 309
                  தப்ஷீர் தபாரி - பாகம் 11 பக்கம் 356
                  முஸ்ததார்க் ஹாகிம் -பாகம் 4 பக்கம் 480
                  தாரீக் பாக்தாத் கதீப் -பாகம் 3 பக்கம் 343
                  கன்சுல் உம்மால் முத்தாகி ஹிந்தி -பாகம் 6 பக்கம் 40
                   ஆலூஷி - பாகம் 15 பக்கம் 107
              
அல் குர் ஆன் குறிப்பிடும் நரகத்தில் இருக்கும் ஜக்கூம் மரம் பனு உமையாக்களையும் அவர்களின் வழித் துயரும் பக்த கோடிகளையும் குறிக்கும் சொல் என்ற விடயம் இப்பொழுது புரிந்திருக்கும்.

இந்த உண்மையைப் புரிந்துக் கொள்ளாமல் நமது நிகழ்கால அறிஞர்கள் பனு உமையாக்கள் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பித்த நிலையில் பனு உமையாக்கள் திரிபு படுத்தி சிதைத்துக் களங்கப் படுத்தியிருக்கும்  இஸ்லாத்தை நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நரகத்தின் கொடூர ஜக்கூம் மரத்துக்கு உவமானமான பனு உமையாக்களின் நிகழ்கால தலைவர்களை நாம் எவ்வாறு இனம் காண்பது?

சுலபம்.

நீங்கள் சந்திக்கும் இஸ்லாமிய அறிஞரிடம் அல்லது இஸ்லாமியத் தலைவரிடம் பனு உமையாக்களின் தலைவர்களின் அல்லது அமீர் முஆவியாவின் பெயரைக் கூறிப் பாருங்கள்.

அந்த அறிஞர்கள் அல்லது தலைவர்கள் அந்த பெயர் கூறக் கேட்டதும் "ரலியல்லாஹு அன்ஹு" என்று சுப சோபனம் கூறினால் அவ்வாறு கூறும் மார்க்க அறிஞர் அல்லது தலைவர் உமையாக்களின் இஸ்லாத்தின் பிரச்சாகரர்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் அத்தகைய அறிஞர்களும் தலைவர்களும் நரக படு குழியின் ஜக்கூம் மரத்தின் கனிகளை உணவாக உலக மக்களுக்கு பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்ற இரகசியத்தையும்  புரிந்துக் கொள்ளுங்கள்.

'நம் மத்தியில் அவ்வாறு நிறைய அறிஞர்கள் இருக்கிறார்களே? .......என்ன செய்வது?' என்று நீங்கள் முணு முணுப்பது நமக்குக் கேட்கிறது.

அவர்களை விட்டு விடுங்கள்.

ஜக்கூம் மரக் கனிகளை உலகத்திலேயே பகிர்ந்தளிக்கும் அவர்களின்  அத்தகைய செயல்களில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

4 comments:

  1. தவறாக நினைக்க வேண்டாம். சொர்க்கம் நரகம் என்று எதும்யில்லை.நியாயத்தீர்ப்பு நாள் என்று ஏதும்யில்லை..சொர்க்கத்தில் 72 கனனிப் பெண்கள் என்ற கதையெல்லாம் பொய்.அதுபோல் நரகத்தைப்பற்றிய வரணனைகளும் பொய்தான்.பொய்யேதான்.அல்லாவின் வழியை யாரும் கெடுக்க முடியாது. உங்கள் கருத்து விநோதமாக உள்ளது. அரேபியாவில் 1400 வருடங்களுக்கு முன் நடந்த மனித பித்தலாட்டுத்தனங்களுக்கு என்ன தீர்வு காண முடியும். எந்த தீர்வால் என்ன பயன் ஏற்படும் ? மனித நேயமிக்க நேர்மையான மன்னுயிரைத்தன்னுயிர் போல் நேசிக்கும் வாழ்வே அல்லாவுக்கு பரமபிதாவுக்கு ஈஸ்வரனுக்கு, பராபரத்திற்கு ...... உகந்தது. அதை மக்களுக்கு கல்வியோடு ஆன்மிக பயிற்சியாக அளிக்க வேண்டும். தர்மம் தலைகாக்கும்.அரேபிய கலாச்சாரக் குழப்பங்களை தாங்கள் ஏன் மறகக்க் கூடாது?

    ReplyDelete
  2. சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

    ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.
    புதைக்கப்பட்ட உயிர் அழுகிய நாறி சிதைந்து உருக்குலைந்து போய்விடுமே-அதற்கு யாரால் எதைக் கொண்டு வேதனை அளிக்க முடியும் ? சரி எரிக்கப்பட்ட உடலுக்கு கப்ரு வேதனை உண்டா ?

    ReplyDelete
  3. கேள்வி இங்கே.பதில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை.

    (அல்லாஹ்வின் அர்ஷ் எனப்படும் அரியாசனத்தை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களின் காது மடல்களுக்கும் அவர்களது தோள்களுக்கும் இடைப்பட்ட அளவு 700 ஆண்டுகளின் பயண தூரமாக இருக்கும்.)

    முஹம்மதின் காலத்தில் ஒட்டகம், குதிரை போன்றவைகளைத்தவிர வேறு வாகனங்கள் கிடையாது. அன்று அவர்கள் ஒரு நாளில் உத்தேசமாக 100 கிமீ பயணம் செய்ததாகக் கொண்டால், உடலின் குறிபிட்ட அந்த பகுதி மட்டும் 2,55,50,000 கிமீ தொலைவு இருக்கலாம். ஒளியின் வேகம் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்பதை ஏற்பதாக இருந்தால், அவ்வானவர்களின் இதர உடல் அளவுகளை உங்களது கற்பனைக்கே விடுகிறேன். அல்லாஹ்வின் உதவியாளர்களான இந்த வானவர்களுக்கு இறக்கைகளும் உண்டு. உண்மையா ?

    1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமிக்கு அதிக முறை வருகை புரிந்த வானவர் ஜிப்ரீல்/கேப்ரியேல் ஆவார். இவர்தான் வானவர் கூட்டத்திற்கு தற்பொழுதும் தலைவராக அறியப்படுகிறார்.

    அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

    நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.

    (முஸ்லீம்) உண்மையா ?
    மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

    ...இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.
    உண்மையா ?

    ReplyDelete

  4. மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

    'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

    இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம்.


    இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள்.
    'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன் 50:44)

    'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன் 70:43)

    அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
    பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

    'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)
    மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.

    'நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிவிட்டு 21:104 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    'கியாமத் நாளில் மக்கள் செருப்பணியாமலும், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிய போது 'அல்லாஹ்வின் திருத்தூதரே! ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கும் போது சிலர் சிலரைப் பார்ப்பார்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட நிலமை மிகவும் கடுமையானதாக இருக்கும்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    ReplyDelete