Tuesday, July 25, 2017

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா?

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா? அடிமைகளாக சந்தையில் விற்பதா?- அல் குர்ஆனின் போதனையும் நபிகளாரின் ஸுன்னாவும் என்னதான் சொல்கின்றன?
இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம். மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை. ஆண்டான் அடிமை இல்லை. இப்படி புரட்சிகரமான கருத்தை ஒரு குழுவினர் உலகில் முன் மொழிந்தார்கள்.அவர்களின் தலைவரின் பெயர் முஹம்மத் (ஸல்). அவரைப் பின் துயர்ந்தோர் முஸ்லிம்கள்.இந்த முஸ்லிம்களும், இந்தப் புரட்சியை செய்த குழுவினரை சிறை பிடித்து அடிமைகளாக வரிந்துக் கொள்ள அல்லது கொன்றொழிக்க இன்னொரு கூட்டத்தினரும் எதிரெதிரே சமருக்கு நின்றதை நாம் அறிவோம். அதுதான் பத்ர் யுத்தம் என்று அறியப்படுகிறது.
பத்ரில் இஸ்லாத்தின் எதிரிகளில் எழுபதுபேர் சிறைபிடிக்கப்படுகிறார்கள். உங்களுக்குத் தெரியும். அக்கால ஜாஹிலியா மரபியல் யுத்த கலாச்சாரத்தின் பிரகாரம் இந்த எழுபது பேர்களும் அடிமைகளாக மாறுகிறார்கள். அவர்களது சொத்துக்கள் அனைத்தும் இஸ்லாமிய அரசுக்கு உரித்தாகிறது. இது ஐயாமுல் ஜாஹிளியாவின் யுத்த சட்டம். இதனைத்தான் இஸ்லாமிய சட்டம் என்று நமக்கு சொல்லித் தந்தார்கள். அது தவறு. இஸ்லாம் அப்படி சொல்லவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா?
யுத்தத்தில் கைதிகளாக பிடிபட்டவர்களை இறைவன் அல் குர்ஆனில் முஸ்லிம்களின் ஆதரவில் இருக்கும் கூட்டம் என்று மரியாதையுடன் அழைக்கிறான். யுத்தக் கைதிகளை அவர்களுடன் கைதாகும் அவர்களின் உறவுகளை உங்களது வலக்கரம் சொந்தமானவர்கள் என்றுதான் அல்லாஹ் அல் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அதன் அர்த்தம் முஸ்லிம்களின் ஆதரவில் இருக்கும் கூட்டம் என்றுதான் வரவேண்டும். ஆனால், நாம் அவர்களை அடிமைகள் என்று அழைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். அல் குர்ஆனில் அல்லாஹ் அடிமைகளை அப்த் என்றும் அடிமைப் பெண்களை அமத் என்றும் அழைத்திருப்பதைக் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.
சரி.......இனி, பத்ரில் புரட்சிக் குழுவினரினால் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கப் போகிறது? மனிதர்களுக்கிடையில் அடிமைத்தனம் இல்லையென்று சொன்ன , அத்தகைய புரட்சிகரமான கருத்தை முன் மொழிந்த தலைவர் முஹம்மது (ஸல்) என்னதான் செய்யப்போகிறார்? அவர் கைதிகளை அடிமைகளாக கருதப்போகிறாரா? இல்லையா?
கைதிகள் அனைவரும் மதீனாவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
கைதிகளை சிறை வைக்கும் அளவுக்கு இஸ்லாமிய இராச்சியம் தயாராக இருக்கவில்லை. இஸ்லாமிய அரசு எதிர் கொண்ட பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. கைதிகளின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் என்ன செய்வது?
முதலில் நபிகளார் கைதிகளை தனது தோழர்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுக்கிறார். சிலரிடம் ஒருவரையும், வசதியுள்ளவர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் இவ்விருவராக, மூவராக, நால்வர்களாக பிரித்துக் கொடுக்கிறார். யார் யாரின் பொறுப்பில் கைதிகள் ஒப்படைக்கப்பட்டார்களோ அவர்களிடம் கைதிகளை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு உபதேசித்தார்.
தோழர்களும் நபிகளார் சொல்லிய பிரகாரம் செய்தார்கள். தங்களது நலனை விடவும் கைதிகளின் நலனில் அதீத அக்கறை காட்டினார்கள். தங்களது உரொட்டிகளை கைதிகளுக்குக் கொடுத்துவிட்டு வெறும் பேரீத்தப் பழங்களை இவர்கள் உணவாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஹசரத் முஸைப் இப்னு உமைரின் சகோதரர் அபூ அஸீஸ் பத்ர் கைதிகளில் ஒருவர். அவர் இப்படி சொல்கிறார். ‘என்னை ஒரு அன்ஸாரி சகோதரரின் பொறுப்பில் நபிகளார் ஒப்படைத்திருந்தார்கள். அந்த அன்ஸாரி சகோதரரின் வீட்டார் பேரீத்தம் பழங்களை சாப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு எனக்கு தங்களிடமிருந்த உரோட்டியை உண்பதற்கு வழங்குவார்கள். அதனைக் கண்டு வெட்கப்பட்ட நான் சங்கோஜத்துடன் உரோட்டியை உண்ண மறுத்து அதனை அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பேன். ஆனால், அவர்களோ அதனை தொடக்கூட மறுத்துவிடுவார்கள். தங்களது நலனை விட அவர்கள் எனது நலனில் காட்டிய அக்கறை மகத்தானது.’
சுஹைல் இப்னு அம்ர் என்பவரின் கதை இன்னும் பிரசித்தமானது. இவர் மக்காவிலிருந்த பிரபலமான மேடைப் பேச்சாளர். எவ்விதத் தவறுமின்றி வசீகரமாக பேசக் கூடியவர். இவர் நபிகளாரை தூற்றி நிறைய இடங்களில் பகிரங்கமாக பேசியிருக்கிறார். பத்ரில் இவரும் கைது செய்யப்படுகிறார். இவரது கீழ்த் தாடைப் பற்கள் இரண்டை உடைத்து விட்டால் அவரால் சிறப்பாக பேச முடியாது போகும். அதனால், அதனை செய்ய தனக்கு அனுமதி தறுமாறு ஹசரத் உமர் (ரலி) நபிகளாரிடம் கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த நபிகளார் ‘உமரே.......சுஹைல் இப்னு அம்ரை நான் முடமாக்கினால் அதற்குப் பகரமாக அல்லாஹ் என்னையும் முடமாக்குவான். நான் அவனது தூதர் என்ற விசேஷ சலுகைகள் எனக்கு இல்லை. அல்லாஹ்வின் நீதி அனைவருக்கும் ஒன்றுதான்.’ என்கிறார்.
பத்ர் கைதிகளில் ஒருவரான அப்பாஸ் நபிகளாரின் நெருங்கிய உறவினர். திடகாத்திரமானவர். மேலாடை இல்லாத நிலையில் அவர் இருந்தார். அவரது உயரத்துக்கு நிகரான யாருமே முஸ்லிம்களில் இருக்கவில்லை. அப்பாசின் ஆகிருதிக்கு நிகராக அப்துல்லாஹ் இப்னு உபை இருந்தான். இவன் நயவஞ்சகர்களின் தலைவன். அவன் தனது மேலாடையை களைந்து அப்பாஸுக்கு வழங்கினான். அந்த நன்றிக்காக அவனது மறைவின் பின்னர் தனது மேலாடைகளை அவனுக்கு கபனிடுவதற்கு நபிகளார் வழங்கி கௌரவித்தார்கள்.
(ஆதாரம்: சீறத்துன் நபி- அல்லாமா ஷிப்லி நூமானி
ஹாகிம் அல் முஸ்தத்ரக்- இமாம் ஹாகிம்.
தாரீக் அத் தபரி- இமாம் தபரி.)
சில நாள்களில் நபிகளார் கைதிகளை உபகாரமாக விடுதலை செய்து விடுமாறு பணித்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால், சஹாபாக்களில் சிலர் அதனை ஏற்காமல் மறுத்து நடந்திருப்பது போலவும் தெரிகிறது. நபிகளார் கைதிகளை விடுதலை செய்யச் சொல்ல, தோழர்கள் அவ்விதம் செய்யாமல் ஜாஹிலியாக்கால யுத்த மரபின் பிரகாரம் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொண்டு கைதிகளை விடுதலை செய்திருக்கிறார்கள் போலும்.
சஹாபாக்களின் அந்த செய்கையைக் கண்டித்துத்தான் அல் குர்ஆனில் வஹி அருளப்பட்டது.
“அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.” [8:68]
பத்ர் கைதிகள் அனைவரும் நட்ட ஈடு பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் காலை நபிகளார் ஒரு மரத்தடியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தார்கள். அதனை அவதானித்த ஹசரத் அபூபக்கர் (ரலி) காரணம் கேட்டிருக்கிறார்.
‘எனது தோழர்கள் சிலரின் அதிகமான பேராசையின் காரணமாக அல்லாஹ்வின் தண்டனை இந்த மரத்தை விடவும் அன்மியதாக நம்மை அண்மித்து விட்டு சென்றிருக்கிறது.’ என்று நபிகளார் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
(ஆதாரம்: சீறத்துன் நபி- அல்லாமா ஷிப்லி நூமானி
ஹாகிம் அல் முஸ்தத்ரக்- இமாம் ஹாகிம்.
தாரீக் அத் தபரி- இமாம் தபரி.)
யுத்தக் கைதிகளை நட்ட ஈட்டுப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்ததையே அல்லாஹ்வும் அவன் தூதரும் கண்டித்திருக்க, யுத்தக் கைதிகளை கொலை செய்ய அல்லது முஸ்லிம்களின் அடிமைகளாக வரிந்து அதன் மூலம் உலக இலாபங்களை அடைந்துக் கொள்ளும் அனுமதியை, அதிகாரத்தை முஸ்லிம்களுக்கு அனுமதித்தவர்கள் யார்?
இருந்தால் காட்டுங்கள். தலை சாய்த்து ஏற்றுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment