அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, May 22, 2022

'அல்லாஹ்வின் அருளால், முஸ்லிம் வியாபாரிகள் முடுக்கிக்கொண்டு இடத்தை தேடுபவர்கள் அல்ல ................!


நேற்றைய முகநூல் பதிவுகளில் சில, டி.வி சீரியல்களை ஆவலுடன் அலசுகின்ற வயதான தாய்மார்களின் அடுப்படி போல கிசு கிசுகிசுத்தது. அதன் வீச்சு பல நல்ல உள்ளங்களையும் களங்கப் படுத்தி  நாறடித்தது. அறிஞர்கள் என்று அறியப்படுகின்ற இஸ்லாமிய பிரபல புனிதர்களுக்கு வெல்லம்பிட்டி முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு கையைத் துண்டிக்கும் மார்க்கத் தீர்ப்பைவழங்கும் அதிகாரத்தைக் கொடுத்து  அதிசயிக்க வைத்தது. அவர்களை நம்பி ஏமாந்த சிலரை பின்னூட்டலில் கல்லெறிந்து மகிழ அனுமதித்தது. சில பகிர்வுகளில்  இயேசு நாதர் தீர்ப்பளித்த விபச்சாயையும்  நினைவில் கொணர்ந்தது. இன்னொருபுறம் மனித சட்டங்களுக்கு சவால் விடுத்த இயேசுவின் தீர்ப்பையும்  முகநூல் விசைப்பலகை போராளிகளுக்கு தீர்ப்பளித்து நகைத்தது.


என்னுடைய நண்பர்களில் அதிகமானவர்கள் சிறந்த சாமார்த்தியசாலிகள். இலங்கை அரசு கொரோனா ஜனாசாக்களை எரியூட்டிய காலங்களில்  அவர்களின் உறவினர்களும் கொரோனாவினால் மரணித்தார்கள். ஆனால், எனது நண்பர்களோ பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த கொரோனா மரணங்களையும் சந்தடியில்லாமல், யாருக்கும் எவ்வித  பாதிப்புமில்லாமல் பொது கல்லறைகளில் துயில வைக்கும் வித்தை தெரிந்தவர்கள். எதிர்ப்படுகின்ற இன்னல்களை சிரிப்புடன் சத்தமில்லாமல் கடந்து செல்லும் பாங்கை அறிந்தவர்கள். 


பாதிக்கப்பட்ட என்னுடைய வியாபார நண்பரை முழுதாக புரிந்துக்கொள்ள   கிழக்கிலங்கை விவசாயி நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன். அதிசயித்துப் போவீர்கள்.


என்னுடைய கிழக்கிலங்கை நண்பர் ஒரு விவசாயி. பல ஏக்கர் விளை நிலங்களுக்கு உரிமையாளர். அறுவடை செய்ய இயந்திரம் வாரும்ஜ் முன்னர் ஊர் மக்களுடன் ஒன்றாக சேர்ந்து ஆடிப்பாடி விவசாயம் செய்து வந்தார். 


கதிர் அறுக்கும் இயந்திரம்  வந்தது. விவசாயி விவசக்கராத்து ஹாலை ஊகித்துக் கொண்டார். பல இயந்திரங்களை வாங்கிப்போட்டார். இந்தியாவிலிருந்து இயந்திரங்களை இயக்கம் பணியாளர்களை வேலையில் நியமித்தார். இலங்கையின் கிழக்கு, மேற்கு, தெற்கு என்று எல்லா இடங்களிலும் அறுவடைக்கு முன்னின்றார். விவசாயத்தில் புரட்சி செய்ததாக கொண்டாடப்பட்ட  அந்த இரும்பு யந்திரங்கள்  பல ஏழைகளின் தொழிலுக்கு உலை வைத்தன. பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயிகளின் வாழ்வுக்கு தீ வைக்கும் காரியங்களையும் திட்டங்களையும் வகுத்தன. விளைவுகளின் பயங்கரத்தை நண்பர் புரிந்துக் கொண்டார். உடனே தன்னிடமிருந்த அத்தனை இரும்பு இயந்திரங்களையும் வந்த விலைக்கு விற்றுத் தீர்த்தார். கிடைத்த பணங்களைக் கொண்டு கொழும்பில் மூன்று, நான்கு பேர்ச்சுகளில் வீடுகளை குறைந்த விலைக்கு வாங்கிப்போட்டார். இன்னொரு தொழிலுடன் கொழும்பில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிலநாள்களில் சொந்தமாக சொன்னதொரு தொழிலை துவங்கினார். இப்பொழுது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொகையை மாதாந்த வாடகையாக பெறுகிறார். நெளிவு சுளிவுகளுடன் சுய வியாபாரத்தையும்  செய்துக் கொண்டிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபடுகின்ற தோற்றுப்போன விவசாயிகளைப் பார்க்கும் பொழுது வெற்றியடைந்த ஒரு விவசாயியின் வெற்றிப் புன்னகை அவரது முகத்தில் பிரகாசிக்கும். பார்த்திருக்கிறேன். சொல்லியுமிருக்கிறேன்.


சில தினங்களுக்கு முன்னர் கிருலப்பனையில் எரிவாயுக்காக ஒரு பெரிய போராட்டம். மக்கள் வீதியில் இறங்கி  வீதியை மறித்து நின்றார்கள். கலகத்தை அடக்க வந்த போலீஸாரை  எதிர்த்து நின்றார்கள். எரிவாயு ஏஜெண்டை சுற்றிவளைத்தார்கள்.


இறுதியில் அங்கு விசேசமாக தருவிக்கப்பட்ட லாரியில்  எரிவாயு தருவிக்கப்பட்டது. போராளிகளுக்கு  விநியோகிக்கப்பட்டது. எரிவாயு கிடைக்காத ஏனையோர் போராட்டத்தை தொடர்ந்தார்கள். எரிவாயுக்காக காத்திருந்தார்கள். தொலைக்காட்சிகளில் போட்டி போட்டிக் கொண்டு  நேரலையாக, பிரேக்கிங் நியூசாக இந்தப் போராட்டத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள்.


அன்று மாலை விவசாய நண்பர் என்னைக் காண வந்திருந்தார். ஆட்டோவில் இரண்டு சிலிண்டர்கள் இருந்தன. விடைபெறும் பொழுது கேட்டேன் "கேஸ் சிலிண்டர்களுடன் எங்கு செல்கிறீர்கள்?"


புன்னகையுடன் சொன்னார். "கேஸ் வாங்கத்தான்." 


"எங்கே வாங்கப்போகிறீர்கள்?" கிண்டலாக கேட்டேன்.


"கிருலப்பனை ஏஜென்டிடம்."


"கிருலப்பனை ஏஜென்டா?" அதிர்ச்சியுடன் கேட்டேன்.


"ஆம்...அங்குதான். அங்கு எனக்காக  இரண்டு சிலிண்டர்களை எடுத்து வச்சிருக்கான். கொஞ்சம் அதிகமாக பணம் கொடுக்கணும். கொழும்பில்  பால் மா ஆகட்டும், மருந்துகளாகட்டும், பெற்றோல் டீசலாகட்டும் அத்தனையையும் கொஞ்சம் அதிகமான பணத்தைக் கொடுத்தால் பெற்றுக்கொள்ள முடியும். மற்றது,  இப்பொழுது இலங்கையில் விலை நிர்ணயம் என்று ஒன்றில்லையே?ஆறுமணிக்குப் பிறகு வர சொன்னான்."


"எரிவாயு போராட்டக்காரர்களையும், பொலிஸாரையும்  மீறி எப்படி எடுக்கப் போகிறீர்கள்?"


"சுலபம். அங்கு ரெண்டு சிலிண்டர்களில் மூடியை கழற்றி வச்சிருக்கான். இதைக் கொண்டுபோய்க் கொடுத்து மூடி கழற்றி இருக்கும் சிலிண்டர்களை கொண்டு வரப்போகிறேன். பார்க்கிறவர்கள் கேஸ் இல்லாததால் வெற்று சிலிண்டர்களுடன் நான் தோற்றுப் போய் வருவதாக நினைப்பார்கள். எனக்கு வெற்றி பெற்றோம் என்ற பெயர் அவசியமில்லை. சிலிண்டரில்  மூடி அவசியமில்லை. எரிவாயுதான் முக்கியம்."


அத்ர்ச்சியுடன் நின்றிருந்த என்னிடம் அவர் இப்படி சொன்னார்.


"பயாஸ்....நாம முடிக்கிக்கிட்டு போவதற்கு எடத்த தேடுற பார்ட்டி இல்ல."


எரிவாயு இல்லாமல் போராடும் மக்களை அலட்சியப்படுத்தி அசால்டாக வெற்றிவாகை சூடும் சாமர்த்தியம் தெரிந்த அற்புதமான விவசாயி. இல்லையா?


ஒரு முஸ்லிம் விவசாயியே இப்படி என்றால் என்னுடைய முஸ்லிம் வியாபாரி?


அவர் அக்குரனையை சேர்ந்தவர். வெற்றிகரமான வியாபாரி. கொரோனா என்றும், பொருளாதார நெருக்கடி என்றும் மக்கள் கஷ்டங்களை புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் 'அல்ஹம்துலில்லாஹ்.....அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. நானும் மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


அவர் ஒரு பேக்கரியின் உரிமையாளர். அங்கு  பல ஊழியர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். வெல்லம்பிட்டியில் இருக்கின்ற பேக்கரிகளில் அவரது பேக்கரியில்தான் மிக நியாயமான விலையில் தரமான தின்பண்டங்களை வாங்க முடியும். காலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு அவரது பேக்கரி ஒரு நிம்மதி. குறைந்த விலையில் நிறைவான உணவை பெற்றுக்கொள்ள தூரத்தில் இருந்தும் பலர் அங்கு வருவதை நான் கண்டிருக்கிறேன்.


அவரது பேக்கரியில் பல எரிவாயு சூளைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் ஐந்து அல்லது ஆறு எரிவாயு சிலிண்டர்கள் அவருக்குத் தேவை. ஒருமுறை லாரியில் வந்திறங்கிய சிலிண்டர்களைக் கண்டு வியந்திருக்கிறேன். 


கொரோனா பொருட் பற்றாக்குறை அவரை பாதிக்கவில்லை. அவரது நிறுவனத்தையும் பாதிக்கவில்லை. வெல்லம்பிட்டியில் பல பேக்கரிகளினால் இந்த தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவைகள் மூடப்பட்டன.


ஏனைய நிறுவனங்கள் மூடுப்பட்ட நிலையில் இவருடைய நிறுவனம் மட்டும் கம்பீரமாக உயிர்ப்புடன் ஜீவிக்கும் காரணத்தை அவரிடமே கேட்டேன்.


"பயாஸ்...... மற்ற பேக்கரிகள் மூடுபட்டவுடன் எனக்கு வியாபாரம் அதிகரிக்கத் துவங்கியது. உற்பத்தி பொருட்கள் போதவில்லை. நான் ஒரு காரியம் செய்தேன். மேலதிகமாக ஒருவரை வேலைக்கு நியமித்தேன்.  ஒரே செலவில், ஒருவரின் சம்பளத்தில் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த  அந்த ஊழியரின் நியமனம் உதவியது. நாளொன்றுக்கு செலவாகும் அதே செலவில், ஒரு  ஊழியரின் சம்பளத்தின் மூலம் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த முடிந்தது.அடிக்கடி தட்டுப்பாடாகும்  கேஸ் சிலிண்டர்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள சில தரகர்களை கண்டுபிடித்தேன். ஒரு சிலிண்டருக்கு ஒன்பதாயிரம் ரூபா வீதம் கொடுத்து வந்தேன். அந்தத் தரகர்கள் சிலிண்டர்களின் இருப்பைக் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்."


இன்றைய முகநூல் பதிவுகளைக் கண்டதன் பின்னர் அவருக்கு அழைப்பை எடுத்தேன்.


"ஒன்றுமில்லை பயாஸ்...... சம்பவம் நடைபெற்றநேரத்தில் நான் அங்கிருக்கவில்லை. ஊரிலிருந்தேன். வேலை செய்கின்ற ஊழியர் ஒருவர் நண்பர்களுடன் குடிக்க சென்றிருக்கிறார். அங்கு ஒருவர் இவரிடம் மூடுபடாத பேக்கரியின் இரகசியத்தை கேட்டிருக்கிறார். இவரோ எங்களது பொஸ் திறமையானவர். அவர் எப்பொழுதும் கேஸ் சிலிண்டர்களின் இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அதனால், எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை'  என்று பெருமை பேசி இருக்கார். கேள்வி கேட்டவரும் எனக்கொரு சிலிண்டரை பெற்றுத்தர முடியுமா? என்று இவரிடம் கேட்டிருக்கிறார். முடியும்  என்று நம்மவரும் வாய் சவடால் விட்டிருக்கிறார். உடனே மற்ற ஆள் பொலிசாரிடம் இப்படியொரு வியாபாரம் நடைபெறுவதாக முறைப்பாடு செய்திருக்கிறார். உடனே போலீசார் அடையாளம் குறிக்கப்பட்ட சில நாணயத் தாள்களைக் கொடுத்து சிலிண்டரை வாங்குமாறு இவருக்கு பணித்திருக்கிறார்கள். குடி போதையிலிருந்த நமது ஆளும் அவரது நண்பரை அழைத்து வந்திருக்கிறார். கடையில் பொறுப்பாக இருந்த மருமகனிடம் வந்த நமது ஆள் 'வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். ஒரு சிலிண்டர் தர முடியுமா?' என்று கேட்டிருக்கிறார். மருமகன் மறுத்திருக்கிறார். அவரும் விட்டபாடில்லை. கெஞ்சிக் கூத்தாடி சிலிண்டரைக் கேட்டிருக்கிறார். மருமகன் தரகரிடம் கூறி பெற்றுக் கொள்ள முடியுமென்று நினைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இவருக்கு உதவ நினைத்து ஒரு சிலிண்டரை கொடுத்திருக்கார். அவ்வளவுதான்....உடனே போலீஸார் கடையை சுற்றி வளைத்து உள்ளே நுழைந்து பரிசோதித்து உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை புரிந்து விட்டது. என்றாலும், அவர்கள் அனுப்பிய  இலக்கம் குறித்த நாணயத்தாள்கள் காசியரில் இருந்ததால் முறைப்பாட்டை அலட்சியம் செய்ய முடியாத நிலை. அதனால், இரண்டு சிலிண்டர்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு நடந்த விடயங்களை எழுதி சென்றிருக்கிறார்கள். இனி, நீதிமன்றம்தான் தீர்ப்பளிக்கும்"


"பிரச்சினை பெரிதா?"


சத்தமாக சிரித்தார். "பயாஸ்... நானொரு வியாபாரி.  இலங்கையின் போலீஸாரும் மடையர்கள் இல்லை. எங்களது பேக்கரியைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உணவுப் பண்டங்களுக்கு விலையைக் குறைத்து நாம் செய்யும் சேவையையும் அவர்கள் அறிவார்கள். மற்றது, கேஸ் சிலிண்டர்களை விற்று பிழைக்க வேண்டிய இக்கட்டில் அல்லாஹ் என்னை வைக்கவில்லை. அதனையும் போலீஸார் புரிந்துக் கொண்டார்கள். அதுபோதும். அல்ஹம்துலில்லாஹ்."


எனக்கு அக்கரைப்பற்று விவசாய நண்பர் நினைவில் வந்தார். கூடவே அவர் சொன்னதும் நினைவில் வந்தது.


'நாம முடிக்கிக்கிட்டு போவதற்கு எடத்த தேடுற பார்ட்டி இல்ல.'


Monday, April 22, 2019

தூக்கம் தொலைக்கும் நிஜங்கள்


தூக்கம் தொலைக்கும் நிஜங்கள்

தற்கொலைத் தாக்குதலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள்  விடுதலைப்புலிகள். ஆனால், இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை திட்டமிட்ட பயங்கரவாதிகள் விடுதலைப்புலிகளை விடவும் மிகவும் நேர்த்தியாக  இந்தத் தாக்குதல்களை  செய்து முடித்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் பலவீனமான முறையிலிருக்கும் முக்கியமான தளங்கள் தாக்குதலுக்கு இலக்கிடப்படுகின்றன. தாக்குதலின் பிறகு இரண்டு விதமான பாதிப்புகளை இலங்கை அனுபவிக்கப்போகிறது.

நியூஸிலாந்து கிறிஸ்ட்  சேர்ச்சுக்கான பழிவாங்களாக இதனைக் காட்டி முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டுபண்ணுவது. அதன் மூலம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலைமையை தோற்றுவிக்க இந்தத் தாக்குதல் போதுமானது.

பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு மிகவும் முக்கியத்துவம் பொருந்தியது.  இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டிக்காக்க மெது மெதுவாக வளர்ந்து வருகின்ற சுற்றுலா துறையில் பாதுகாப்பு இல்லாத நிலைமையை உருவாக்க இப்படியான தாக்குதல்கள் அவசியம்.

இரண்டாயிரத்து இரண்டாம் வருடம் தொடக்கம் இரண்டாயிரத்து பதினாறாம் வருடம் வரை இந்தோனேசியாவில் தொடராக நடந்து வந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கும் இன்று இலங்கையில்  தாக்குதல்கள் நடந்து முடிந்த முறைகளில் அசாதாரணமான ஒற்றுமை ஒன்றிருக்கிறது.
இந்தோனேசிய குண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் வல்லரசுகளின் பாதுகாப்பு உளவு நிறுவனங்களின் ஆதரவும், அவர்கள் முன்னெடுக்கும் நிகழ்ச்சி நிரல்களும் இருந்திருக்கின்றன என்பது இன்னொரு முக்கிய செய்தியாகும்.

இலங்கையின் பாதுகாப்பில் ஸ்திரத்தன்மையை சிதைப்பதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு உதவியில் தங்கியிருக்கும் நிலைமையை தோற்றுவிக்க முடியும். அதன் மூலம் சீனாவினதும், இந்தியாவினதும் செல்வாக்கிலிருக்கும் இலங்கையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்காவினால் முடியும்.

இப்படி செய்வதால் அமெரிக்காவுக்கு என்ன இலாபம் என்று நீங்கள் கேட்கலாம்?

மாலைதீவிலிருக்கும் அமெரிக்க படைத்தளமான ஜீக்கோ காஸியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு அனுகூலமாக இருக்கும் ஒரே இடம் இலங்கை. இந்த சின்னத்தீவு இலங்கையில் அமெரிக்காவுக்கு சவால்விடும் நாடுகளான சீனாவும், இந்தியாவும், ஈரானும் நல்லுறவை பேணி வருகின்றன. அதனால், அமரிக்கா ஆதரவு ஐஸிஸ் இலங்கையிலிருப்பது அமெரிக்காவுக்கு முக்கியம்.
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


Tuesday, July 25, 2017

‘உம்மிய்யீன்களின் நபி’ – மூன்று:



நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். அதற்கு சோடிக்கப்பட்ட சில காரணங்களையும் கூறுகிறார்கள். ‘நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருந்தால் நபியவர்களுக்கு எழுத்தறிவித்த அந்த ஆசான் நபிகளாரை விடவும் அந்தஸ்த்திலும் , மகத்துவத்திலும் உயர்ந்து விடுவார். 

உம்மிகளின் நபி – இரண்டு




அல்லாஹுத்தஆலா மனிதர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யுமாறு மனிதர்களை கட்டாயப்படுத்துவதில்லை. வற்புறுத்துவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. அப்படியான செய்கை அவனது மகத்துவத்துக்கு உகந்ததில்லை. 

‘உம்மிகளின் நபி’- ஒன்று


‘உம்மி நபி என்பதன் அர்த்தம் எழுத வாசிக்கத் தெரியாத நபி என்று வரும். அல் குர்ஆனில் அல்லாஹ் எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்திலிருந்து வேதங்களைக் கற்றுக் கொடுக்க அவர்களில் இருந்தே ஒரு நபியை அனுப்பியிருக்கிறேன் என்று கூறுகிறான். அதனால், எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த அந்த நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்.’

எண்பத்து மூன்று நினைவுகள்.........

எண்பத்து மூன்று நினைவுகள்..........
என்னுடைய வயதையொத்த நண்பர்கள் எண்பத்து மூன்றாம் வருட கருப்பு ஜூலையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த ஜூலை மாதத்தில் இலங்கை பூராவும் கலவரம் வெடித்திருந்தது. தமிழ் இந்து மக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டன. தீக்கு இரையாக்கப்பட்டன. அனைத்தயும் இராணுவம் தலைமையேற்று செய்தது. கலகக்காரர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களிலும் இலங்கையில் பட்டாசு வேடிக்கைதான். தமிழ் இந்துக்களின் சொத்துக்களை அழிப்பதிலும், பலவீனமான நிலையில் இருந்த அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதிலும், வசீகரமான பெண்களை குறிவைத்து வல்லுறவில் ஈடுபடுவதிலும் அந்தப் பெருநாட்கள் கழிந்தன. நாடே சீரழிந்துப் போனது. அரசு ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், வலிமையானவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நிலைமை மாறியிருந்தது. சிறுபான்மையின மக்கள் தங்களது பாதுகாப்பை அவர்களாகவே உறுதி செய்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா?

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா? அடிமைகளாக சந்தையில் விற்பதா?- அல் குர்ஆனின் போதனையும் நபிகளாரின் ஸுன்னாவும் என்னதான் சொல்கின்றன?

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad