Wednesday, June 29, 2011

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............


இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு மாலைப் பொழுதில் எமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றோம்.

அவரின் தாயாரும் , அவரது சிறிய தாயாரும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

அவர்களின் முகத்தில்  ஒரு பதட்டமும், அதை மீறிய மகிழ்ச்சியும் தெரிந்தது.

நாம் கேட்டோம் "என்ன உம்மா விசேசம்?"

நண்பரின் தாயார் சொன்னார்" நாளை ரஜப் இருபத்து ஏழு!"

எமக்கு ஒன்றும் புரியவில்லை.

"ரஜப் இருபத்து ஏழில் என்ன விசேசம்?"

"அன்று மிஹ்ராஜ் நோன்பு நோற்க வேண்டும்" அவரது குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது."அதுக்குத்தான் நாம் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்"

நாம் நண்பரின் பெயரை கூறிக் கேட்டோம்"அவர் நோன்பு பிடிப்பாரா?"

"இல்லை" அந்தத் தாயார் வருத்தத்துடன் சொன்னார்."அவர்தான் தௌஹீத் ஜமாத்தில் இருக்கிறாரே. அவர் இது 'பிதுஆத்' என்று கூறுகிறார்."

"அப்படியென்றால் வீட்டில் யார் ...யாரெல்லாம் நோன்பு பிடிப்பீர்கள்?" நாம் கேட்டோம்.

"நாங்கள் ..வயசாலிகள் மட்டும்தான்."



"நோன்புதான் எப்பொழுதும் பிடிக்க முடியுமே?" நாம் கேட்டோம் "மிஹ்ராஜ் தினத்தில் அதென்ன விசேஷமான நோன்பு?"

"நாங்கள் எங்களது சின்ன வயதில் இருந்தே மிஹ்ராஜ் நோன்பை பிடிப்பதற்கும் அந்த தினத்தில் அதிகமான சுன்னத்தான தொழுகைகள் தொழுவதற்கும் எங்களது பெற்றோரால் பழக்கப் படுத்தப் பட்டு இருக்கிறோம்"


"வேறு  நாள்களில் அந்த அமல்களை செய்வதில் தவறில்லை." நாம் சொன்னோம் "மிஹ்ராஜ் தினத்தில் மட்டும் அப்படி விசேஷமாக செய்வதுதான் 'பிதுஆத்' " என்றோம்.

அவர் நக்கலாக சிரித்தார்."மிஹ்ராஜ் தினத்தில் என்ன விசேஷம்?" அவர் எம்மிடம் திருப்பிக் கேட்டார்.

"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்" நாம் சொன்னோம்.

"அதாவது , நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இல்லையா?"

"ஆம்!."

"அல்லாஹ்விடம் எம்மை நெருக்கமாகக உதவும் 'அமல்' என்ன?" இது அந்தத் தாயாரின் கேள்வி.

"தொழுகை" இது எங்களது பதில்.

"தொழுகை நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான தொடர்பு கொள்ளும் சாதனமே தவிர அது அல்லாஹ்விடம் எம்மை நெருக்கமாக்கி வைக்காது" இது அந்தத் தாயாரின் பதில்.

"அப்படியென்றால் அல்லாஹ்விடம் எம்மை நெருக்கமாக்கி வைக்கும் அமல் என்னவென்று எமக்குத் தெரியாது" வாக்குவாதங்களைத் தவிர்ப்பதற்காக நாம் சொன்ன பதில் இது.

"நோன்பு" அந்தத் தாயார் கொஞ்சம் பெருமிதத்துடன் சொன்னார்."நோன்புக்கு கூலி கொடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வுடையது." நமக்குத் தெரியாத ஒரு ரகசியத்தை எமக்கு சொல்லிக் காட்டும் தோரணையில் அவர் சொன்னார்."நோன்புதான் நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைக்கும் ஒரே அமல்."


"உங்களுக்கு யார் இதை சொல்லித் தந்தது ?" நாம் கேட்டோம்.

"என்னுடைய தந்தை" மண்ணறையில் இருக்கும் அவரது தந்தையை ஒரு கணம் அவர் நினைத்துப் பார்த்ததை அவரது விழியோரம் சட்டென்று நிறைந்த கண்ணீர் நமக்கு எடுத்து சொன்னது.

அவர் சில கணங்கள் மௌனமாகிப் போனார்.

மௌனத்தின் இறுக்கத்தைக் குறைக்க நாம் கேட்டோம்."உங்களது தந்தைதானா மிஹ்ராஜ் தினத்தைக் கொண்டாட உங்களுக்கு சொல்லித் தந்தது?"

"ஆம்" என்ற அவர் தொடர்ந்தார்" தம்பி முன்னர் எல்லாம் மிஹ்ராஜ் தினம் என்றவுடன் எங்களது வீட்டில் இதை விட விசேசம். எங்களது வீட்டுக்கு நிறைய உறவினர்கள் வருவார்கள்.என்னுடைய தந்தை சுற்று வட்டாரத்துக்கு எல்லாம் அரிசி, மா எல்லாம் வாங்கி பங்கிடுவார். நாம் நோன்பு நோற்போம். அதிகமான சுன்னத்தான தொழுகைகள்  தொழுவோம்." என்றார்.

"இப்பொழுதெல்லாம் யாரும் அப்படி செய்வதாக தெரிவதில்லையே?" இது நாம்.

"தம்பி...நபி (ஸல்) அல்லாஹ்விடம் நெருங்கி போனது போல நாமும் அல்லாஹ்விடம் நெருங்க நோன்பு பிடிக்கிறோம்..... அல்லாஹ் நமக்கு பரிசாக கொடுத்த தொழுகையை அன்று நாம் அதிகமான சுன்னத்தான தொழுகை தொழுது நினைவு படுத்துகிறோம்."

அந்தத் தாயாரின் கூற்றில் பொதிந்திருந்த சத்தியம் எம்மை மௌனமாக்கி விட்டது.

இப்பொழுது நாம் மௌனித்துப் போனோம்.



எங்களது தலைவர்களது தவறான வழிக் காட்டலினால் திசை மாறிப் போன எங்களது நிலைமையின் பயங்கரம் உணர்ந்ததாலோ என்னவோ எங்களது நெஞ்சு கனத்தது.

பிதுஆத்...பிதுஆத் என்று சொல்லி சொல்லி நாம் இழந்துபோன சந்தோசங்கள் எத்தனை எத்தனையோ.

நோன்பு நோட்பதட்கும், அதிகமான சுன்னத்தான நல் அமல்கள் செய்வதற்கும் மிஹ்ராஜ் மிகவும் பொருத்தமான நாள்தான்.

மிஹ்ராஜ் தினத்தின் நினைவுகளில் நிறையவே சோகங்களும் அந்த சோகங்களை மீறிய சந்தோசங்களும் இழைந்து இருப்பது புரிந்தது.

நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்பு அரண்களாக இருந்த அன்னை கதீஜா (அலை) அவர்களினதும் பெரியவர் அபூதாலிப் (ரலி) அவர்களது மறைவுடன் நபி (ஸல்) தனித்துப் போனார்.

அதன் பின்னர் அவர் தாயிப் நோக்கி அந்த மக்களின் ஆதரவை நாடிசென்று நாதியின்றி நின்ற பொழுது , கருணை இல்லாத தாயிப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை இரத்தம் சொட்டும் அளவுக்கு கல்லால் அடித்து துரத்தியது வரலாறு.


மிகவும் சோகத்துடன் இருந்த நபி (ஸல்) அவர்களை அன்று இரவே அல்லாஹ் விண்ணுலகுக்கு அழைத்து கௌரவித்தது ரஜப் இருபத்து ஏழில் தான் நடைபெற்றிருக்கிறது.

அல்லாஹ்வின் மீதும் அவனது  ரசூல் மீதும் உண்மையான   அன்பு வைத்து இருப்பவர்களுக்கு இந்த நாள் முக்கியமானதுதான்.

நோன்பு நோற்று அல்லாஹ்விடம் நெருங்குவதட்கும், அதிகமான சுன்னத்தான நல் அமல்களை செய்வதற்கும் இந்த நாள் பொருத்தமானதுதான்.

எங்களது மார்க்க அறிஞர்களின் பிதுஆத்துக்கான எழுச்சிமிக்க எங்களது போராட்டங்களின் விளைவாக நாம் இந்த நாளையே சுத்தமாக மறந்துப் போய் விட்டோம்.

அந்தத் தாயாரின் தந்தை ஒரு நல்ல மனிதர்தான்.

அவரது மிஹ்ராஜ் தின வழிக் காட்டல்களை அவரது வயோதிக மகள் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நினைவு படுத்தி செயல் படுத்துகிறார்.

ஆனால், அவரது குழந்தைகள்?

அவர்கள் பிதுஆத்துக்கு எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் மிஹ்ராஜ் தினத்தின் நினைவுக் குறிப்புக்களையே சுத்தமாக மறந்துப் போகிறார்கள்.

அப்படியென்றால் அவர்களது குழந்தைகளின் நிலை?

நினைத்துப் பார்க்கவே நெஞ்சு கூசியது.

இந்த நினைப்புக்களுடன் இணையத்தை தட்டினோம்.

உலகில் மிஹ்ராஜ் தின நிகழ்வுகள் எதாவது தட்டுப் படுகிறதா என தேடினோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

உலகிலே சில நாடுகளில் மக்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகலமாக நினைவு படுத்துவது தெரிந்தது.


நோன்புடனும், சுன்னத்தான தொழுகைகளுடனும்  , இரவிலே வீடுகள் தோறும் அலங்கார விளக்கு தோரனைகளுடனும் அவர்களது கொண்டாட்டங்கள் நடந்துக் கொண்டிருந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நாமும் மிஹ்ராஜ் தினத்தைக் கொண்டாடும் மக்களுடன் ஒன்றிணைந்து மிஹ்ராஜ் தின கொண்டாட்டங்களுடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டோம்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

No comments:

Post a Comment