Tuesday, July 25, 2017

‘உம்மிகளின் நபி’- ஒன்று


‘உம்மி நபி என்பதன் அர்த்தம் எழுத வாசிக்கத் தெரியாத நபி என்று வரும். அல் குர்ஆனில் அல்லாஹ் எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்திலிருந்து வேதங்களைக் கற்றுக் கொடுக்க அவர்களில் இருந்தே ஒரு நபியை அனுப்பியிருக்கிறேன் என்று கூறுகிறான். அதனால், எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த அந்த நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்.’
நபிகளாரைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் என்று அறியப்படுகின்ற சிலர் இப்படித்தான் புலம்புகிறார்கள். இஸ்லாமிய கலாசாலைகளிலும் இப்படித்தான் போதிக்கிறார்கள்.
இறை வேதங்களின் முழுமையான அறிவு கொடுக்கப்பட்ட ஒரேயொரு மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களாகும். வேதங்கள் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் நபிகளாரை இப்படி சொல்வதில்லை.
சூறா நம்ல் அல் குர்ஆனின் இருபத்து ஏழாவது அத்தியாயம். அதில் அற்புதமான கதையொன்று சொல்லப்படுகிறது. அறிவில் அல்லது ஞானத்தில் ஒரு பகுதி மாத்திரம் கொடுக்கப்பட்ட ஒரு பேரறிஞரின் கதையது. கதையை விளக்கமாகத் தெரிந்துக் கொள்ள அல் குர்ஆனை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.
நபி ஸுலைமான் (அலை) அவர்களின் அரச சபையில் சக்திவாய்ந்த ஜின்களும், மனிதர்களில் இருக்கும் அறிஞர்களும் வீற்றிருப்பார்கள். நான் பேசுகின்ற அந்த அறிஞர் நபி சுலைமான் (அலை) அவர்களின் அவையில் இருப்பவர்களில் முக்கியமானவர்.
ஹூத் ஹூத் பறவை நபி ஸுலைமான் (அலை) அவர்களிடம் பல்கீஸ் இராணியின் இராஞ்சாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்த செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கும். விளக்கங்கள் அவசியமில்லை.
ஸுலைமான் (அலை) பல்கீஸ் இராணிக்கு தூதனுப்புகிறார்கள். அவள் அதனை ஏற்றுக் கொண்டு நபி சுலைமான் (அலை) அவர்களை சந்திக்க வருகிறாள்.
இந்நேரத்தில் நபி ஸுலைமான் (அலை) அவர்களின் அரச தர்பாரில் நடைபெற்ற ஒரு சம்பவம் சம்பந்தமாக அல் குர்ஆனில் விளக்கப்பட்டிருக்கிறது.
நபி ஸுலைமான் (அலை) தனது அரச பிரதானிகளை விளித்து இப்படி கேட்கிறார்கள்.
‘பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.’ (27:38)
‘ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.’(27:39)
‘இறைவேதத்தின் ஞானத்தில் ஒரு பகுதியைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார்.(27:40)
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இந்த அற்புதத்தை செய்த அறிஞரின் பெயர் ஆசிப் இப்னு பர்கியா. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சக்தி மகத்தானது. அற்புதங்களை நிகழ்த்தவல்லது.
அந்த அறிஞருக்கு ஞானத்தில் சொற்ப அளவைக் கொடுத்திருந்ததாக அல் குர்ஆன் சொல்கிறது. கொஞ்சம் கவனமாக மீட்டிப் பாருங்கள். ஞானத்தில் மிக சொற்ப அளவைப் பெற்றிருந்த ஒரு அறிஞர் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு இராஜாங்கத்தின் அரியாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கொண்டுவருகிறார். அப்படியானால், அல்லாஹ்வின் ஞானத்தை முழுமையாகப் பெற்றிருந்த அல்லது ஞானத்தின் மூல ஊற்றான நபிகளார் எத்தகைய திறமைகளுடன், வல்லமைகளுடன் இருந்திருப்பார்.
சாதாரணத் திறமையான எழுத்தும், வாசிப்பும் சாமான்ய அறிவுனுள் அடங்கி விடுகின்றன. அனைத்து அறிவுகளும் ஞானத்தினுள் அடங்கி விடுகின்றன. பிரபஞ்சங்களின் அனைத்து இரகசியங்களையும், ஞானங்களையும் இறைவனால் நேரடியாகக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்த இறுதி நபிகளாருக்கு எழுதப்படிக்கத் தெரியாதா?
அல் குர்ஆனைக் கற்றுக் கொண்டிருக்கிற நுண்ணறிவுள்ள இஸ்லாமிய மாணவர்கள் இந்தக் கதையில் இருக்கும் அற்புதமான போதனையை புரிந்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கலந்துரையாடல்கள் கண்ணியத்துடன் வரவேற்கப்படுகின்றன.
தேடல்கள் இன்னும் தொடரும்- இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment