காலையில் மனைவி சொன்னாள் "தெருக் கோடியில் இருந்த மாடி வீட்டு மனிதனை இரவில் இனந்தெரியாத யாரோ வந்து கண்ணைக் கட்டி அழைத்து சென்றார்களாம்...."
'ஓஹ் ..அந்த கம்யூனிசவாதியா?....' நான் நினைத்தேன். 'இறைவனே இல்லை என்று சொன்ன அவனுக்கு அது வேண்டும்!'
அந்தக் கடத்தல் என்னைப் பாதிக்காததால் நான் மெளனமாக இருந்தேன்.
ஒரு வாரத்தில் காலையில் மனைவி மீண்டும் சொன்னாள்."இம்முறை மூன்று வீடுகள் தங்கியிருந்த எதிர்க் கட்சி அரசியல் வாதியை இரவில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்களாம் ..."
'ஓஹ்..அந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியா.......' நான் நினைத்தேன்.'தேவை இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கும் அவனுக்கும் அது வேண்டும்.'
அந்தக் கடத்தலும் என்னைப் பாதிக்காத காரணத்தால் நான் மௌனித்து ஒதுங்கிப் போனேன்.
சில நாள்களுக்கு பின்னர் ஒரு நாள் காலையில் மனைவி சொன்னாள்"எங்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் எப்பொழுதும் பொதுநலத்தையே பேசுகின்ற மனிதரை நேற்றிரவு வந்த சிலர் கடத்திப் போனார்களாம்..."
"ஓஹ்... அந்தப் பொதுநலவாதியையா' நான் நினைத்தேன்.'அவருக்கு அது வேண்டும்.எப்பொழுதும் தேவை இல்லாமல் மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டுக் கொண்டே இருந்ததற்கு இது வேண்டும்'
மற்றவர்களின் விடயத்தில் தலையிடாத நான் பேசாமல் இருந்தேன்.
சூழ் நிலைகள் இவ்வாறு மோசமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் நாம் நிம்மதியுடன் இருந்தோம்.
ஒரு நாள் நடு நிசி.
என் வீட்டு கதவு தட்டப் பட்டது.
இனந்தெரியாத அதே நபர்கள் என்னைக் கடத்திப் போக வந்திருப்பது தெரிந்தது.
பேசுகிறவர்கள் எல்லாம் கடத்தப்பட்டாகிவிட்டது.
இப்பொழுது எனக்காக பேச யாருமே இல்லை.
இது எமது நண்பர் ஒருவர் ரசித்து சுவைத்த வேற்று மொழி கவிதை ஒன்றின் தமிழ் மொழி கருத்து வடிவம்.
அவரை தொடர்பு கொண்டு இந்தக் கவிதையைப் பற்றிக் கேட்டபொழுது கவிதையின் பிறந்தகத்தை மறந்து கருத்தை மட்டும் நினைவில் கொண்டிருந்தார்.
இதனை நாம் இங்கே சொல்லக் காரணம் உண்டு.
சில வருடங்களுக்கு முன்னர் P.J.இலங்கைக்கு பிரசங்கம் செய்ய வந்திருந்தார்.
தவ்ஹீது வாதியான அவரை ஹுப்புல் அவ்லியாவான நாம் அரசியல் செல்வாக்கை உபயோகித்து மாற்று மதத்தவர்களைக் கொண்டு துரத்தியடித்தோம்.
'அப்பாடா......தவ்ஹீத்வாதியை விரட்டி விட்டோம்....' எங்களது செய்கைக்கு நாமே நியாயம் சொன்னோம் 'காபிர்களைக் கொண்டும் அல்லாஹ் இஸ்லாத்தைப் பாதுகாக்கிறான்...'
பிரபலமான தலைமைத்துவ பிரச்சாகரும், மாற்று மதத்தவர்களிடையே நன்கு செல்வாக்கு செலுத்தக் கூடியவருமான ஒரு உலமா திடீரென நம்ப முடியாத விதத்தில் மரணமானார்.
அவரது மரணத்தின் மர்மம் குசு குசுக்கப் படுகிறதே தவிர யாரும் பேசுவதாக தெரியவில்லை.
'அது எங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.' நாம் எங்களது அமைதிக்கு காரணம் சொன்னோம் 'தவ்ஹீத் வாதிகளுக்கு அவர் எதிரானவர்.'தவ்ஹீத்வாதிகளான நாம் மெளனமாக இருந்து விட்டோம்.
இன்னுமொரு நாள்.
தெஹிவளைப் பள்ளியில் ஒரு ரகளை.
பௌத்த பிக்குகள் அணி திரண்டு தொழுகைக்கு தடையாக இருந்தார்கள்.
தவ்ஹீத் கருத்தியலில் இருந்த அந்தப் பள்ளிக்கு எதிரான பௌத்தர்களின் இந்த செய்கை ஹுப்பு பார்ட்டிகளான எமக்கு சந்தோஷத்தை தந்தது.
தேநீரை சுவைத்தவாறு நாம் சொன்னோம்."காபிர்களைக் கொண்டு தவ்ஹீத்வாதிகளை விட்டும் அல்லாஹ் இஸ்லாத்தைப் பாதுகாப்பான் என்பதற்கு இது நல்ல உதாரணம்."
சென்ற வாரம் புதிதாக ஒரு செய்தி.
செய்தி கேட்ட தவ்ஹீத்வாதிகளான எங்கள் மனத்தில் மகிழ்ச்சி.
"கபுறு வணக்கத்துக்கு எதிரான இஸ்லாத்தை அல்லாஹ் காபிர்களைக் கொண்டே கபுரை உடைக்கப் பண்ணி காபிர்களைக் கொண்டு இஸ்லாத்தைக் காப்பாற்றுகிறான்."
ஒட்டு மொத்த முஸ்லிம்களை இலக்கு வைத்த இஸ்லாத்தின் எதிரிகளின் இலாவகமான காய் நகர்த்தல்களில் என்றோ ஒரு நாள் இலங்கை ஒரு பொஸ்னியவாக அல்லது குஜராத்தாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.(அல்லாஹ் எங்கள் அனைவரையும் அத்தகைய கொடூரமான சோதனையை விட்டும் பாதுகாப்பானாக..!)
அன்றைய தினம் இஸ்லாத்தின் எதிரிகளின் கண்களில் அவர்கள் எங்களை முஸ்லிம் என்றுதான் பார்ப்பார்களே தவிர இவன் தவ்ஹீத்வாதி...இவன் ஹுப்புல் அவ்லியா..இவன் ஷியா...இவன் சுன்னி... என்ற எங்களது அடிமட்ட வித்தியாசங்களைப் புரிந்துக் கொண்டு எமக்கு எதிரான செய்கைகளை செய்யப் போவது இல்லை.
எங்களுடைய காலங்களில் நாம் பொஸ்னியா என்றும், குஜராத் என்றும் வடு மாறாத கொடூரமான இழப்புகளைக் கண்டுக் கொண்டோம்.
அவ்வாறான ஒவ்வொரு இழப்புகளின் பின்னாலும் நாம் எங்களது இயக்க கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா?
நாம் அனைவரும் ஒரே அல்லாஹ்வை எதுவித மறுப்புமின்றி விசுவாசிக்கிறோம்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்ற கருத்திலும் எங்களுக்கிடையில் கருத்துமுரண் பாடு இல்லை.
எங்களிடையே கருத்து முரண்பாடுகளை உருவகித்து எம்மை பிளவு படுத்தியவர்கள் எங்களை ஆட்சி செய்த வழிதவறிய எங்களது ஆட்சியாளர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கிய எங்களது மதகுருமார்களும் என்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறான ஒவ்வொரு இழப்புகளின் பின்னாலும் நாம் எங்களது இயக்க கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா?
நாம் அனைவரும் ஒரே அல்லாஹ்வை எதுவித மறுப்புமின்றி விசுவாசிக்கிறோம்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்ற கருத்திலும் எங்களுக்கிடையில் கருத்துமுரண் பாடு இல்லை.
எங்களிடையே கருத்து முரண்பாடுகளை உருவகித்து எம்மை பிளவு படுத்தியவர்கள் எங்களை ஆட்சி செய்த வழிதவறிய எங்களது ஆட்சியாளர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கிய எங்களது மதகுருமார்களும் என்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே, எங்களின் வேற்றுமைகளுக்கு நாமே இடம் கொடுத்து அதன் மூலம் நமது பலவீனங்களை பகிரங்கப் படுத்தி எதிர்காலத்தில் எங்களின் எதிரிகளின் முன் நிபந்தனையற்ற சரணாகதிக்கு களம் அமைக்காது தவிர்ந்துக் கொள்வோமாக.
எங்களுக்கிடையேயான பிளவுகள் திடீரென ஒரு நாள் எங்களை இலக்கிடும் எங்களது எதிரிகளின் முன்னால் எம்மை நிபந்தனை அற்ற சரணாகதிக்கு வழியமைத்து அவர்களின் முன்னால் முழங்காலிடச் செய்யும்.
நினைவில் கொள்வோம்.
அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு.
No comments:
Post a Comment