நன்றி : கைபர் தளம்.
by: Abu Sayyaf அந்த துடிப்பான லிபிய இளைஞன் கத்தினான். “யூ சிட்”. இது நான் ஆத்திரத்தில்அரபியில் கத்தும் “ஹராமி”யின் இன்னொரு ஆங்கில வடிவமாக இருக்கலாம். மீண்டும் அவன் கத்தினான் “பக் யூ”. ஆனால் நான் அரபியில் ஒரு போதும் இப்படிய கத்தியது கிடையாது. ஒருவன் எனது அலைபாயும் முடியை பிடித்து வேகமாக இழுத்தான். அவன் கரத்தில் SEIKO கடிகாரம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு லிபிய குடிமகனும் நல்ல ரக சீக்கோ கைகடிகாரம் கட்ட வேண்டும் என நான் எடுத்த தீர்மானத்திலேயே இன்று இவர்கள் கைகளில் கூட அது ஆடி நிற்கிறது.
வயிற்றில் ஓங்கி உதைத்தார்கள். சுருண்டு விழுந்தேன். மீண்டும் தலைமுடியை பிடித்து இழுத்து பிக்அப் ரக வாகனத்தில் வீசினார்கள். உருண்டு கிடந்தேன் ஒரு புளுப்போல. வாயில் உப்பு சுவை உவர்த்தது. எனக்கு தெரியும் அது இரத்தம் என்று. லிபிய மண்ணின் இரத்தம் என்று.
அவர்கள் பார்வையில் கொலை வெறி தெரிந்தது. நரகத்து நாயாகவே என்னை பார்த்தார்கள். தங்கள் கலஷ்னிகோவ்களை மேலுயுர்த்தி பயர் பண்ணினார்கள். இறைவனின் பெயரை சொல்லி கோஷமிட்டார்கள். நான் பள்ளிவாசலில் மட்டும் சொல்ல அனுமதித்ததை இவர்கள் இன்று பாதையிலும் சொல்வது தான் விடுதலையா?
சரியாக சொன்னால் அவர்கள் ஒபாமாவின் பெயரை சொல்லி கத்த வேண்டும். நெதன்யாஹுவின் பெயரை சொல்லி கத்த வேண்டும். நியூயோர்க்கின் இலுமினாட்டிகளின் பெயரை சொல்லி கத்த வேண்டும். துருக்கியின் தலைவர்களின் பெயரை சொல்லி கத்த வேண்டும். ஆனால் அவர்கள் இறைவனின் பெயரை சொல்லி கூப்பாடிட்டனர். இது இறைவனின் ஆட்சிக்கான போரல்லவே. இது இறைவனின் சட்டங்களை நிலை நிறுத்துவதற்கான சண்டையல்லவே. பிறகெதற்கு இறைவனின் பெயரை முழங்குகிறார்கள். எனக்கு பாவமாக இருந்தது. ஒவ்வொரு லிபியனும் ஏமாற்றப்பட்டுள்ளதை நினைக்கையில்.
“கொலை செய்”. “கொலை செய்” என ஆரவாரித்தனர். “லிபியா வாழ்க” என முழங்கினர். லிபியா வாழத்தான் போகிறது. கிறிஸ்தவத்தின் அடிமை தேசமாக. பென்டகனின் பெட்டி பாம்பாக. பாலைவனத்தின் மேல் எங்கள் இரத்தத்தை தெளித்து பாலைவனத்தின் கீழ் எங்கள் எண்ணையை எடுக்கும் சிலுவை தேசங்களின் தந்திரம் புரியாமல் மீண்டும் முழங்கினர் “லோங் லைப் போ லிபியா” என்று.
எனக்கு நிச்சயமாக தெரியும். இவர்கள் என்னை படுகொலை செய்யப்போகிறார்கள் என்று. இந்த வரலாற்று கொலையின் பக்கங்கள் கடினமானவை. சுயநலமிக்கவை. சதாம் ஹுஸைனை கொலை செய்த போது நான் ஹவானாவின் சுருட்டை புகைத்தவாறு அவன் தொங்குவதை பார்த்தேன். போட்டியாளன் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில். எம் தலைவர்களின் மரணங்களின் பின்னால் உள்ள மௌனங்கள் எம் மரணங்களின் முன்னால் உள்ள மௌனங்களை விட கொடுமையானவையல்ல. நிச்சயமாக புரிகிறது. எல்லோமே.
இஸ்லாத்திற்கு சவால் விட்டவன் நான். பசுமை புரட்சியை வழி நடாத்தியவன். எனது “கிறீன் புக்”கை அல் குர்ஆனிற்கும் மேலாக மதித்தவன். இஸ்லாத்தை மஸ்ஜிதுகளின் சுவர்களிற்குள் அதுவும் எனது உளவு பிரிவின் இமாமத்தின் கீழ் மட்டும் செயற்படுத்த அனுமதித்தவன்.
மரணம் நெருங்கி வரும் வேளையில் பல உண்மைகள் புரிகின்றன. “தாகூத் என்றால் பிர்அவ்ன்” என்ற உண்மை புரிகிறது. “தாகூத் என்றால் நம்ரூத்” என்ற உண்மை புரிகிறது. “தாகூத் என்றால் கேர்ணல் கடாபி” என்ற உண்மையும் புரிகிறது.
ஹசன் அல் பன்னாவை மண்டையில் போட சொன்ன ஜமால் அப்துல் நாசரை நான் ஹீரோவாக பார்த்தவன். அவர் கரங்களை தொட்டு பெருமிதம் அடைந்தவன். இஹ்வான்களை சித்திரவதை செய்த அன்வர் சதாத் என் ஆருயிர் நண்பன். என்னுடன் சேர்ந்து இஸ்லாத்திற்கு சவக்குழி வெட்டியவன் தான் ஹுஸ்னி முபாரக். நாளை இவர்களுடன் இது பற்றி சட் பண்ண வேண்டும். எமது முட்டாள்தனங்களை சுய விசாரணை செய்ய வேண்டும்.
முதல் வெடி என் அடிவயிற்றில் விழுந்தது. சுட்டவன் ஒரு இளைஞன். வளமான லிபியாவில் வளர்ந்தவன். எதற்காக சுட்டேன் என்று தெரியாமல் சுட்டான். மீண்டும் இன்னொரு வெடி வலது மார்பின் கீழ் வீழ்ந்தது. இம்முறை சுட்டவன் வேறொருவன். இவனது தந்தை எனது இராணுவத்தில் பிரிகேடியராக இருந்தவன். இவனை நன்றாகவே எனக்கு தெரியும்.
மரண வலி மெல்ல ஆரம்பமானது. மூச்சு திணற ஆரம்பித்தது. என் கண்கள் கீழ் நோக்கி பணிந்தன. எனது உடலில் இருந்து வழியும் ஒவ்வொரு இரத்த துளியிலும் எனது லிபியா பற்றி கனவுகள் அணிவகுத்து நின்றன...
நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு, இலவச மின்சாரம், இலவச மருத்துவம் இப்படி எத்தனையோ செய்துள்ளேன் இவர்களிற்கு. எகிப்திய பெண்களின் தொப்புள் தெரிய ஆடும் “பெலி” நடனத்தை ஒவ்வொரு நாளும் கண்டு களிக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்தவன் நான். சவுதி அரேபியாவில் அப்துல்லாஹ் செய்தவற்றைத்தானே நானும் செய்தேன். பிறகெதற்காக இவர்கள் என்னுடன் சண்டையிட்டனர்?.
“சொந்த மக்களை கொன்று குவித்தவன்” என்பதே என் மீதான குற்றச்சாட்டு. இதை ஒரு பெங்காஸி லிபியன் சொன்னால் பரவாயில்லை. கலிபோர்னியாவின் யூதனல்லவா சொல்கிறான்.அதையல்லாவா இவர்கள் நம்புகிறார்கள். “சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே”என்று சொல்லி சுட்டிருந்தால் ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு கட்டத்தில் நானும் நிறுத்தியிருப்பேன் என் ஆட்டிலறிகளை. ஹாகீமியத்திடம் மண்டியிட்டிருப்பேன் என் பச்சை புத்தகங்களுடன். இவர்கள் அவ்வாறு போராடவில்லையே.
பென்டகன் வரைந்த சண்டைக்காட்சிகளில் அல்லாவா இவர்கள் நடிக்கிறார்கள், தாங்கள் செத்து போவதும் தெரியாமல். அதனால் தான் நான் சுட்டேன். லிபிய பாலைவெளிகளில் ஒட்டகத்தின் காலடையாளம் மட்டும் தான் இருக்க வேண்டும். சிலுவையின் நிழல்கள் அல்ல. இதற்காகத்தான் நான் பலை மண்ணை இரத்த சகதியாக மாற்றினேன்.
ஸியோனிஸ்ட்கள் எனது மண்ணின் எல்லை வரை வந்து ஆயுதம் வழங்குகிறார்கள். அதை ஏந்தி வந்து இவர்கள் சுடுகிறார்கள். மல்பரோ சிக்கரட்டும், டீச்சர்ஸ் விஸ்கியும் அருந்துகிறார்கள். சுதந்திர போராளிகள் என்று பிரகடனம் செய்கிறார்கள். பார்த்துகொண்டு சும்மா நிற்கவா?.
முழு ஆபிரிக்காவையும் ஒரு தேசியமாக மாற்றும் எனது கனவு நனவானால் இந்த உலகின் பெரிய சாம்ராஜ்யம் கறுப்பர்கள் சாம்ராஜ்யம். அதன் சக்கரவர்த்தி நான். யூத சாம்ராஜ்யம் அமைக்க செயற்படும் சக்திகள் இதனை அங்கீகரிக்குமா?. அதனால் தான் என்னுடன் சண்டையிட்டனர். மனிதாபிமானத்திற்கான போர் என்றார்கள். சுட்டனர். செத்தனர். சுட்டேன். செத்தார்கள்.
எனது வெற்றுடலை இழுத்து சென்று ஒரு இறைச்சி பதனிடும்சாலையில் போட்டுள்ளார்கள். இவை எனது கடைசி கணங்கள். மரண ஞானம் என்ற ஒன்று வருகிறது. அது......... இஸ்லாத்திற்கு குழி தோண்டிய ஒருவனை ஒழிக்க இஸ்லாத்தின் விரோதிகள் அவனிற்கு குழி தோண்டியுள்ளார்கள் என்பதே. பாவம் என் மக்கள். பென்டகனின் கழிவறை குழாய்கள் அல்லவா இவர்கள் மூளைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
எனக்கு புரியாத ஒரு விடயம் இருக்கிறது. நான் இஸ்லாத்திற்கு என்ன அநியாயம் எல்லாம் செய்துள்ளேன் என்பது எனக்கு தெளிவாகவே தெரியும். அது யூசுப் கர்ளாவிக்கும் தெரியும். ஆனால் இவர்களிற்கு நான் என்ன பாவம் செய்தேன் என்பதே தெரியவில்லை. அதையும் நாளை அமெரிக்கா ஒரு அறிக்கையாக கட்டாரின் சிம்மாசனத்தில் வைத்து வாசிக்கும்.
கடைசியாக இரண்டு விடயங்கள். ஒன்று கவலையானது. இரண்டாவது சற்று ஆறுதலளிப்பது. முன்னையது, எனது தேசத்தை இனிவரும் முஜாஹித்கள் காப்பாற்றுவார்களா? என்ற ஏக்கம், பின்னையது என்னை சுட்ட பிஸ்டல் Eagle Desert வகையை சார்ந்தது. என்னை சுட்ட ரைபிளும் A.K.47. இரண்டுமே ரஷ்ய தயாரிப்புக்கள். கேவலம் அமெரிக்க M16 துப்பாக்கியின் ரவைகள் என் உடலை துளைக்கவில்லையல்லவா?..........!!
No comments:
Post a Comment