அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, February 16, 2011

"ஹிஜ்ரா' ' கலண்டரில்' மாற்றங்கள் செய்த ஹசரத் உமர் (ரலி) அவர்கள்."


"ஹிஜ்ரா' ' கலண்டரில்' மாற்றங்கள் செய்த ஹசரத் உமர் (ரலி) அவர்கள்."


"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு இல்லாத நிலையில் இருக்க வில்லையா ?"

கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்.- அவனை நாம் சோதிப்பதற்காக , அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்"

நிச்சயமாக நாம் அவனுக்கு வழியை காண்பித்தோம்.நன்றி உள்ளவனாக இருக்கின்றான். அல்லது நன்றி அற்றவனாக இருக்கின்றான்"
(அல் குரான் 76   :   1  முதல் -   3  வரையான ஆயாத்துகள்)             

இது ரபியுல் அவ்வல் மாதம்.

இந்த மாதத்தில் எமது சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களிடையே ஒரு போட்டா போட்டி நடைபெறும்.

சிலர் நபி பிறந்த தினத்துக்கு விழா எடுப்பார்கள்.

இன்னும் சிலர் அப்படி விழா எடுப்பதை கடுமையாக விமர்சிப்பார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று 'இந்த மாதம் இதே தினம் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகை விட்டும் மறைந்தார்கள்.ஆகவே , இப்படி விழா எடுப்பது அவரது மறைவை நாம் கொண்டாடுவது போல இருக்கும்' என்று சொல்வார்கள்.



இன்னும் சிலர் இது 'பிதுஅத்'  , நபி வழிமுறைக்கு முரணானது. ஷிர்க் என்பார்கள்.

இலங்கையில் புத்த மதத்தவர்களிடம் ஒரு நம்பிக்கை காலா காலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

அவர்கள் புத்த பெருமான் பிறந்ததும், அவர் நிர்வாண நிலை அடைந்து முக்தி பெற்றதும் , அவர் உலகை விட்டும் மரணித்ததும் ஒரே நாளில் என்று நம்பி அந்த நாளை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

நாம் இதில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் பிறந்ததும், உலகை விட்டும் மறைந்ததும் ஒரே நாளில் என்று நம்ப வைக்கப் பட்டு இருக்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் சபர் மாதம் உலகை விட்டும் மறைந்தார்கள் என்பதற்கு வலுவான  ஆதாரங்கள் எம்மிடம் இருந்தாலும் , எமது நம்பிக்கைகளில் ஏன் இந்த குளறுபடிகள்?

அதற்கு பின்  புலமாக  மிக 'பயங்கரமான' ஒரு அரசியல் கதை இருக்கிறது.

'ரபீஉல் அவ்வல்' மாதத்தின் சிறப்பான நிகழ்வுகளில் நபிகளாரின் பிறந்த தினமும் ஒன்று.

ஆனால், இந்த மாதத்தில் நடைபெற்ற மிக முக்கியமான இன்னுமொரு நிகழ்வைப் பற்றி யாரும் மருந்துக்குக் கூட பேசுவது இல்லை.

இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தின் முதல் நாள் அன்று தான் நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
(ஆதாரம்- 'பிஹார் அல் அன்வார்', 'வபா அல் வபா','தாரிக் அல் தபரி,'

அதன் காரணமாக இஸ்லாமிய காலக் குறியீட்டின்   'முதல்' மாதம் என்கிற பெருமையும் இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்துக்கே உரித்தாகும்.

இஸ்லாமிய எழுச்சியின் பிரதான திருப்பு முனை 'ஹிஜ்ரா'வாகும்.

முஸ்லிம்களுக்கு முழு சுதந்திரத்தை 'ஹிஜ்ரா' கொடுத்தது.

இஸ்லாமிய கருத்துக்களை   மக்கள் மயப் படுத்துவதற்கு பூரண சுதந்திரத்தை 'ஹிஜ்ரா'விற்குப் பிறகே முஸ்லிம்கள் பெற்றார்கள்.

இஸ்லாமிய அரசையும், இஸ்லாமிய இராணுவத்தையும்  'ஹிஜ்ரா'விற்குப் பிறகே முஸ்லிம்களால் ஸ்தாபிக்க முடிந்தது.

இந்நிலையில் 'ஹிஜ்ரா' முக்கியமானது என்பதில் எதுவித கருத்து முரண்பாடும்  இல்லை.

எனவே ஹிஜ்ராவைக் கொண்டு எமது காலக் குறியீடு அமைவதில் எதுவித சந்தேகமும் இல்லை.

அல் குரானில் காலத்தைப் பற்றி நிறைய ஆயத்துக்கள் உள்ளன.

'அல் பலக்' அதிகாலை, 'அல் அசர்' காலம், 'அல் கத்ர்' கண்ணியமிக்க இரவு, 'அல் லுகா'முற் பகல்', 'அல் லைல்' இரவு', காலத்தின் சுழற்சிக்கு மிகத் தேவையான- 'அஷ் ஷம்ஸ்' சூரியன், அல் பஜ்ர்' விடியக் காலை, 'அதி காலை தோன்றும் 'அத் தாரிக்' விடி வெள்ளி, காலத்துக்கு அவசியமான- 'அல் புரூஜ்' கிரகங்கள்,மீன்டும் ஒருமுறை- அத் தஹ்ர்' காலம், 'அல் கியாமா' மறுமை நாள்,வாரத்தை நினைவு படுத்தும்- 'அல் ஜும்மா' வெள்ளிக் கிழமை,'நாள்களை கணக்கிட- 'அல் கமர்' சந்திரன்,'இரவில் மட்டும் தோன்றும் - 'அன் நுஜும்' நட்சத்திரம், என்று காலங்கள் சம்பந்தமான சூராக்கள் அல் குரானில் நிறையவே உண்டு.

இவைகள் மனிதனுக்கு காலத்தின் முக்கியத்துவத்தை பறைசாட்டுகின்றன.

இவை இல்லாமல் புனித மாதங்கள் பற்றியும் அல் குரானில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றன.

உலகம் படைக்கப்    பட்ட நாளில் இருந்து காலத்தின் கணக்குகள் ஆரம்பமாகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட அவனது ஜீவிய காலம் மிக பெறுமதியானது.

வாழ்க்கையின் அடுத்த நகர்வை நோக்கி செல்லும் பரீட்சையில், அவனுக்கு வழங்கப் பட்ட காலத்தில் அவனுக்கு எதுவித அதிகாரமும் வழங்கப் பட வில்லை என்பதே வேதனையான நிஜம்..

என்றாலும், செயல் சுதந்திரம் அவனுக்கு முற்றாக வழங்கப் பட்டுள்ளது.

அவன் நன்மை செய்யலாம். அல்லது தீமை செய்யலாம்.அல்லது ஒன்றுமே செய்யாமல் வெறுமனே இருக்கலாம்.

அவன் செயல் பட்டாலும் அல்லது செயல் படாமல் இருந்தாலும் காலம் நகர்ந்துக் கொண்டே இருக்கும்

எது எப்படி இருந்தாலும் இழந்து போன காலத்தை மட்டும் எந்த மனிதனாலும் மீளப் பெற முடியாது.

உலகத்தில் உள்ள அனைத்து வஸ்த்துக்கள் மீதும் காலத்துக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது.

அரசனானாலும், ஆண்டியானாலும் காலத்துக்கு மாறாக திகழ முடியாது.

காலத்தின் முதலாவது ஆளுமை பருவ  காலங்களில் தொடங்குகிறது.

வெயில்  காலம், மழை காலம்,  வசந்த காலம், பனிக் காலம் என இந்த உலகில் காலம் செல்வாக்கு செலுத்துகிறது.

குளிர் காலத்தின் குளிரில் இருந்து தப்பவும், வெயில் காலத்தில் அதன் வெம்மையில் இருந்து தப்பவும் நாம் படும் பிரயத்தனங்கள் பிரசித்தம்.

பகல் காலம் வந்தால் இருள் இல்லை. இருள் வந்தால் பகல் இல்லை.

மனித வாழ்வில் கூட குழந்தை,இளைஞன், வாலிபன், முதியவன், வயோதிகன், தளர்ந்து போன கிழவன் என காலம்  நம்மில் செல்வாக்கு செலுத்துகிறது.

மனிதனால் காலத்தின் கோலத்தால் நடை பெறுகின்ற இந்த மாறுதல்களை தடுத்துக் கொள்ள முடியாது.

அதேபோல, தான் விரும்பிய ஒரு நிலையில் தொடர்ந்து நிலைத்து இருக்கவும் முடியாது.

எனவே,  மனிதன் நல்ல பிள்ளையாக காலத்துக்கு இணங்கி நடக்க வேண்டுமே தவிர காலத்தை அவனது இணக்கத்துக்கு ஒருபோதும் அவனால் கட்டுப் படுத்த முடியாது.

எமக்கு வழங்கப் பட்ட காலமாகிய எங்களது வாழ்  நாள் எமக்கு அல்லாஹ்வால் அருளப் பட்ட மிகப் பெரிய மூலதனமாகும்.

இந்த நிலையில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் (ஸல்) அவர்கள் இஸ்லாமியர்களான எமக்கு காலத்தையும், காலக் குறியீட்டையும் பற்றி அலட்சியமாக இருந்து இருப்பார்களா?

இஸ்லாமிய காலக் குறியீட்டின்  நிஜமான 'நிர்மாணகர்த்தா' யார்? இஸ்லாமிய காலக் குறியீடு  எப்பொழுது அமுலுக்கு வந்தது?

எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இஸ்லாமிய காலக் குறியீட்டின் 'பிதா மகன்' உமர் (ரலி௦ ஆவார்கள்.

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் காலக் குறியீட்டின் அவசியத்தை உணர்ந்த ஹசரத் 'அபு மூஸா அல் அஸ் அரீ '(ரலி)  அவர்கள் அப்போதைய கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில் அவர் காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஹசரத் உமர் (ரலி) அவர்களுக்கு தெரியப் படுத்துகிறார்.

அதுவரை காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அலட்சியமாக இருந்த ஹசரத் உமர் (ரலி) அவர்களுக்கு அக் கடிதத்தை கண்டவுடன்தான் 'காலக் குறியீட்டின்' அவசியம் புரிகிறது.

உடனே அவர் சஹாபாக்களை ஒன்று கூட்டி இது சம்பந்தமாக 'மசூரா' செய்கிறார்கள்.

சஹாபாக்களின் சங்கடங்களை  உணர்ந்த இமாம் அலி ஹிஜ்ராவைப் பற்றி பிரஸ்தாபிக்க எல்லோரும் ஏகமனதாக அதனை ஏற்றுக் கொள்ள ஹிஜ்ரா வருஷம் 'ஹிஜ்ரி ' பதினாறாம் ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது.

ஆதலால் 'ஹிஜ்ரா' வருஷத்தின் ஸ்தாபகர்  என்கிற  பெருமை ஹசரத் உமர் (ரலி) அவர்களுக்கு போய் சேருகிறது.
(ஆதாரம்- 'தாரிக் அல் யாகுபி', 'அல் தந்பிஹ் வல் இஷ்ரப்' )

அபு மூஸா அல் அஸ் அரி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறை   தெரிந்த ஒருவருக்கு இந்தக் கதைகளில் உள்ள 'அபத்தம்' புரிந்து போகும்.

யாராவது கொடுக்கும் 'இற்றக் கயிற்றை' விழுங்கும் ஆசாமி இந்த அபு மூஸா அல் அஸ் அரி (ரலி) அவர்கள் எனபது பிரசித்தம்..

ஹசரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் நடை பெற்ற 'ஹிஜ்ரா' வருஷ குளறு படிக்கு இந்த ஆசாமியை நன்கு உபயோகித்துள்ளார்கள் எனபது மட்டும் நிஜம்.

இமாம் அலி அவர்களுக்கும், இஸ்லாத்தை முழுவதுமாக குழி தோண்டி புதைத்த இஸ்லாமிய முதல் சர்வாதிகார மன்னர் முஆவியாவுக்கும் இடையே நடை பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் இந்த ஆசாமியின் செய்கையின் மூலம் இஸ்லாத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் ஏராளம். ஏராளம்.

ஆனால், பிரபலமான பல வரலாற்று ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்துக்களின் அடிப்படையில் 'ஹிஜ்ரா' வருஷத்தின் நிஜமான நிர்மானகர்த்தா   அல்லாஹ்வின் ரசூல்   நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள் என்பது எம்மை கொஞ்சம் தூக்கிவாரிப் போடும் செய்தியாகும்.  .   .
(ஆதாரம்- 'தாரிக் அல் தபரி', 'வபா அல் வபா', 'பிஹார் அல் அன்வார்')

அவர்களின் இந்தக் கருத்துக்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களால் எழுதப் பட்ட கடிதங்கள், நிருபணங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் ஆகியவைகளை  குறிப்பிடுகிறார்கள்.

மதீனாவில் வாழ்ந்த யூதர்களின் ஒரு கோத்திரமான முஃனாவுடன் நபி (ஸல்) அவர்கள் கையொப்பமிட்டு செய்து கொண்ட உடன்படிக்கை இப்படி முடிகிறது. "இதனை எழுதியவர் அலி இப்னு அபி தாலிப் -ஹிஜ்ரி ஒன்பதாம் வருடம்.".

நஜ்ரான் தேசத்து கிறிஸ்தவ மக்களுடன் செய்யப் பட்ட ஒப்பந்தத்தில் இப்படி  இருக்கிறது."
"நபி (ஸல்) அவர்களின் கட்டளையின் பிரகாரம் அலி இப்னு அபிதாலிப்  ஹிஜ்ரி ஐந்தாம் வருடம் இதை எழுதினார்கள்"

இன்னும் சில ஆவணங்கள் ஹிஜ்ரி வருடத்துடன் திகதி மாதங்களைக் குறிப்பிட்டும் பதியப் பட்டு உள்ளன.

அபு சஈத் அல் குதரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"ரமழான் மாதம் நோன்பு நோற்பது 
'கிப்லாவின்' திசை திருப்பப் பட்ட ஹிஜ்ரி பதின் எட்டாவது மாதம் எம் மீது கட்டாய கடமையாக ஆக்கப் பட்டது"
(ஆதாரம்- 'தாரிக் அல் க்ஹமிஸ்' )

சுபியான் இப்னு காலிதுக்கு எதிராக அனுப்பப் பட்ட படையினருக்கு தலைமை தாங்கி சென்ற அப்துல்லா இப்னு உனைஸ் எழுதுகிறார்கள் "நான் மதீனாவை விட்டும் ஹிஜ்ரிக்குப் பின் பதின்   ஐந்தாம் மாதம் முஹர்ரம் ஐந்தாம் திகதி  திங்கட்க் கிழமை    வெளியேறினேன்."
(ஆதாரம்- அல் மகாசி)

பனு பகர் உடைய கிளைக் கோத்திரமான குர்தா கோத்திரத்துக்கு எதிரான செயல் முறைகளை நிர்ணயித்த முஹம்மத் இப்னு மஸ்லாமாஹ் எழுதுகிறார்கள்" நான் மதீனாவை விட்டும் ஹிஜ்ராவுக்குப் பிறகு ஐம்பதாவது மாதம் முஹர்ரம் பத்தாம் நாள் வெளியேறி முஹர்ரம் கடைசி இரவில் பத்தொன்பது நாள்களுக்குப் பிறகு திரும்பினேன்."
(ஆதாரம்- அல் வாகிதி)

காலம் மனிதனில் செலுத்தும் செல்வாக்கை கவனிக்கும் பொழுது அல்லாஹ்வும் அவனது ரசூலும் (ஸல்) காலக் குறியீட்டைப்  பற்றி அலட்சியமாக இருந்து இருப்பார்கள் என்று எவராலும் கருத முடியாது.

ஆச்சரியமாக , அல் குரான் சூறா தவ்பாவின் நுற்றி எட்டாவது ஆயாத் 'ஹிஜ்ரா' வருடத்தின் ஆரம்பத்தை எமக்கு எடுத்து சொல்கிறது.

இந்த சூறா ஹிஜ்ரி ஒன்பதாம் வருடம் அருளப் பட்டது  என்பதை கவனத்தில் கொள்ளவும்.

".........................................நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பய பக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது.அதில் நீர் நின்று (தொழவும்,  தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மை உடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள்.அல்லாஹ் தூய்மை உடையோரையே விரும்புகிறான்."

ஆரம்ப தினம் என்று இங்கே குறிப்பிட்டது 'ஹிஜ்ராவின்' ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்ற மாதம் எனபது தப்சீருடைய உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.

பத்ஹுல் பாரி, உம்மதுள் காரி ஆகிய விரிவுரை கிரந்தங்களில்...."குபாவில் நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் குறித்து "ஆரம்ப நாளில் இருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப் பட்ட பள்ளி வாசல் .......'என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.இங்கே ஆரம்ப நாள் எனபது ஹிஜ்ராத்துக்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது.இதன் மூலம் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப் படுகின்றது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள் .. ..." என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இனி புஹாரியில் உள்ள இந்த ஹதீதுகளைக்  கவனியுங்கள்.

சஹ்ல் பின் சஆத்  (ரலி)  அவர்கள் கூறியதாவது:

"மக்கள் நபி (ஸல்) அவர்கள் இறை தூதராக நியமிக்கப் பட்டதில் இருந்தோ அவர்களுடைய மறைவிளிருந்தோ நாட் கணக்கை கணக்கிட வில்லை. மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் வந்த நாளில் இருந்தே கணக்கிட்டார்கள்.  .
(ஆதாரம் - புஹாரி நான்காம்  பாகம் 3934   வது ஹதீத்)

அபு பக்ரா நுபயு பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

"வானங்களும் பூமியும் படைக்கப் பட்ட நாளில் இருந்த நிலைக்கு காலம் திரும்பி விட்டது.வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும்.அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.

மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை  அவை துல்  கஅதா, துல்  ஹஜ்,  மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும்.

மற்ற புனித மாதம் ஜூமாதல் ஆகிராவுக்கும் ஷஹபான் மாதத்திற்கும் இடையில் உள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(ஆதாரம் - புஹாரி ஐந்தாம் பாகம் 4406   வது ஹதீத்)

மிக நீண்ட இந்த ஹதீதில் " இதோ ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு நான் சொன்ன செய்திகளை அறிவித்து விடுங்கள்.ஏனெனில்,இந்த செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடம் இருந்து இதை கேட்டாரோ அவரை விட நன்கு பாதுகாப் பவராயிருக்கலாம்." என்றும் ஒலிக்கிறது.

இது இன்னுமொரு ஹதீத்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"வானங்களும் பூமியும் படைக்கப் பட்ட நாளில் இருந்த நிலைக்கு காலம் திரும்பி விட்டது.வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும்.

அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.மூன்று மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரக் கூடியவை.

அவைகள்; துல் கஅதா, துல் ஹஜ், மற்றும் முஹர்ரம் ஆகியவைகளாகும்.

மற்றது  ஜுமாதாஸ் ஷானிக்கும் ஷஹபான் மாதத்திற்கும் இடையில் உள்ள ரஜப் மாதமாகும்.

இதை அபு பகரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்- புஹாரி முன்றாம் பாகம்     3197  வது ஹதீத்)              . .

அல் குரான் , அல் ஹதீத் ஆதாரங்களின் படியும், ஏனைய வரலாற்று ஆதாரங்களின் படியும் 'ஹிஜ்ரா' காலக் குறியீட்டின் நிஜமான நிர்மானகர்த்தா நபி (ஸல்) அவர்கள் தான் எனபது இப்பொழுது வெள்ளிடை மலை.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்து ஹிஜ்ரா காலக் குறியீட்டுக்கும் எங்களது வழக்கில் உள்ள ஹிஜ்ரா காலக் குறியீட்டுக்கும் இடையில் வித்தியாசம் தெரிகிறதே?

என்ன வித்தியாசம் என்று புரிகிறதா?

எங்களது தற்போதைய காலக் குறியீட்டில் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த  துல் கஅதா , துல் ஹஜ் , முஹர்ரம் ஆகிய மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக வரவில்லையே?

மாறாக, முஹர்ரம் முதலாவது மாதமாகவும்,அதன் பிறகு பத்து மாதங்களின் பின்னால் பதின் ஒன்று, பன்னிரெண்டாவது மாதங்களாக துல் கஆதாவும், துல் ஹஜ்ஜும் வருகிறதே.

முஸ்லிம்களின் முதல் மாதம் 'ரபீஉல் அவ்வல்'.

அய்யாமுல் ஜாஹிலிய்யா  அரபிகளினதும், குறைஷி காபிர்களினதும் முதல் மாதம் 'முஹர்ரம்'.

அறியாமைக் கால சம்பிரதாயங்களுக்கு மாற்றமாக செயல் படும் நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்துக்குப்  பதிலாக, 'ரபீஉல் அவ்வலை' எமக்கு எமது காலக் குறியீட்டின் முதல் மாதமாக ஏற்படுத்தித் தந்தார்கள்.


".........இரண்டாம் கலீபா உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித் தோழர்களின் ஆலோசனையின் பெயரில் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் 'முஹர்ரம்' என்று தீர்மானிக்கப் பட்டது."
(பத்ஹுல் பாரி, உம்மதுள் காரி)


வழமை போல நபி (ஸல்) அவர்களது கட்டளைகளுக்கு மாற்றம் செய்த ஹசரத் உமர் (ரலி) 'ரபீஉல் அவ்வலுக்குப்' பதிலாக அறியாமைக் கால சம்பிரதாயத்தின் படி 'முஹர்ரத்தை' எமது முதல் மாதமாக பிரகடனம் செய்கிறார்கள்.

ஹசரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் அவர்கள், அவர்களது ஆலோசகர்களை ஒன்று திரட்டி ஹிஜ்ராவின் முதல் மாதம் ரபீயுல் அவ்வலுக்குப் பதிலாக அறியாமைக் காலத்தில் அராபியரின் வழக்கில் இருந்த முஹர்ரம் மாதத்தை ஹிஜ்ரா வருடத்தின் முதல் மாதமாக அறிவித்தார்.
(ஆதாரம்- 'மனாகிப்', 'அல் ஷகீக் மின் சிராத் அல் நபி அல் அசாம்')

அவர் எதற்காக இப்படி செய்தார்?

இதற்கான அரசியல் காரணங்கள் நிறையவே உண்டு.

(இன்ஷா அல்லாஹ்) அவைகளை  இன்னுமொரு அத்தியாயத்தில் விரிவாக கவனிப்போம்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad