அஹ்லுல்பைத் Headline Animator

Monday, April 4, 2011

தொடரும் சாபம்....மீண்டும் பலி கடா அன்னை ஆயிஷா (ரலி) .......?






தொடரும் சாபம்....மீண்டும் பலி கடா  அன்னை ஆயிஷா (ரலி) .......?



மார்ச் மாத இருபத்து ஐந்தாம்  திகதி வெள்ளிக்கிழமை , வழமைப் போல அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான ஆக்ரோசமான ஒரு ஜும்மாஹ் பிரசங்கம் கொள்ளுப்பிட்டி ஜும்மாஹ் மஸ்ஜிதில் இருந்து வானலையில் அஞ்சல் செய்யப் பட்டது. 

பிரசங்கம் நிகழ்த்திய கதா நாயகன் வேறு யாருமில்லை, நாம் பெரு மதிப்பு வைத்து இருந்த காத்தான் குடி யஹ்யா மௌலவி தான் அன்றைய தினம் அஹ்ளுல்பைத்களின் 'வில்லனாக ' புதிய அவதாரம் எடுத்தார்.

அன்றைய தினம் அவரது பிரசங்கத்தை கேட்ட பொது மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை.

லிபியாவிலும் மத்திய கிழக்கிலும் கடுமையான யுத்தம் நடைபெறுகின்ற ஒரு அல்லோல கல்லோல நிலையில் , செய்வது அறியாது இலங்கை மக்கள் தடுமாறிப் போய் தவித்துக் கொண்டு இருந்த தருணம் அது.

அன்றைய தினம், கொள்ளுபிட்டி ஜும்மாஹ் மஸ்ஜிதில் அமெரிக்காவினதும், மேற்கினதும் இந்த அநியாயத்துக்கு எதிராக ஒரு பேரணி நடாத்த கொழும்பு மக்கள் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்.



ஆனால், யஹ்யா மௌலவியோ அன்றைய தருணத்துக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத வகையில்,  அஹ்லுல் பைத்களும், சஹாபாக்களும் ஒரே தராதரத்தில் உள்ளவர்கள் என்ற கருத்தியலில் அவரது ஜும்மாஹ் பிரசங்கத்தை நிகழ்த்தினார்.

அவர் நிகழ்த்திய பிரசங்கம் அன்றைய தினம் மக்கள் ஜும்மாவில் எதிர்பார்த்த செய்திகளுக்கு நேர் முரணாகவே ஒலித்தது. 

சஹாபாக்கள் அனைவரும் சுவர்க்கத்துக்கு நன்மாரயணம் கூறப்பட்டவர்கள், எனவே அவர்களை நாம் மதிக்க வேண்டும்.அவர்களிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை நாம் கருத்தில் எடுக்கக் கூடாது.அவர்கள்தான் எங்களுக்கு அல் குரானை தந்தவர்கள் .அவர்கள்தான் நபி (ஸல் ) அவர்களின் சுன்னாக்களை படித்து தந்தவர்கள் . அவர்கள் எல்லோரும் ஒரே தராதரத்தில் உள்ளவர்கள்......................அலி என்றாலும் முஆவியா என்றாலும் ஒரே தராதரத்தில் உள்ளவர்கள்..............
என்றவாறு அவரது உரை அமைந்து இருந்தது.

'இன்றைய தினம் இவர் இதனை ஏன் சொல்கிறார்?' என மக்கள் குழம்பிப் போனார்கள்.

'பேரணிக்கு வந்த மக்களின் கவனத்தை திசை திருப்ப, யாரோ செய்த உத்தியாக இது இருக்கலாம்' என்று சிலர் நினைத்தார்கள்.

இந்த ஜும்மாஹ் பிரசங்கத்தில் எம்மை மிகவும் கடுமையாக பாதித்த ஒரு விடயத்தை இன்று எமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்.

அன்னை ஆயிஷா (ரழி)பற்றி மிகவும் 'அவதூறான ஒரு சொல்லை ' அன்றைய தினம் யஹ்யா மௌலவி ஜும்மாஹ் மேடையில் கூறினார்.

அவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை, பல ஆண்களுடன் சரளமாக தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை எல்லா இலக்கியங்களும் ஒரு சொல்லில் இனம் காட்டுமே, அத்தகைய ஒரு வார்த்தையை  உபயோகித்து- சிலர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை இப்படியும் படு மோசமாக கூறுகிறார்கள் என்று அப்பட்டமான வதந்தி ஒன்றை கட்டவிழ்த்து விட்டார்.

அவர் அந்த வார்த்தையை தான் பேசுவது போல சொல்லவில்லை. ஆனால், பிறர் அப்படி சொல்வதாக சொல்லி சொன்னார்.

இலங்கையில் அல்லது தமிழ் பேசும் மக்களில் யாரும் அவர் சொன்னது போல சொன்னதாக எமக்குத் தெரிய வில்லை.

அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களில் யாரும் அப்படி சொன்னதாக எம்மால் அறியவும் முடிய வில்லை.

ஆனால், முஸ்லிம்களின் எதிரிகளின் வெறும் வாயை மெல்லுவதற்கு    அன்னை ஆயிஷா (ரலி) பற்றிய விடயங்கள் நல்ல தீனியாக  இன்னமும் இருந்து வருகின்றன.

 அதற்கு இடம் கொடுத்தவர்களும், தளம் அமைத்து விழித்தவர்களும்  எங்களது கண்ணியமிக்க உலமாக்கள் என்கிற விடயம் வேதனையான உண்மையாகும்.

அந்த ஒரு வார்த்தை ஆயிரம் தப்பான கணிப்புகளை , அதனை கேட்கும் ஒவ்வொருவர் மனத்திலும் நிறைக்கும்.

அது அவ்வளவு நஞ்சு.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர்  மட்டுமல்ல, அவர்கள் அல்லாமல் வேறு நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணைப் பற்றியாவது அத்தகைய மோசமான வார்த்தைப் பிரயோகத்தை சரியான சாட்சியங்கள் இன்றி எங்களது வாயினால் காவிக் கொண்டு சொல்லித் திரிய வேண்டாம் என அல் குரான் எங்களை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.

இது தவிர, அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி மிகவும் மோசமாக அக்கால சஹாபாக்களில் இருந்த முனாபிக்கான சஹாபாக்களில் சிலர் ,'இவர் அப்படி சொன்னார் அல்லது அவர் இப்படி சொன்னார்'  என்ற ரீதியில் ஒருவருக்கு ஒருவராக சொல்லிக் கொண்டு திரிந்த வேளையில் அல் குரான் ஆயத் ஒன்று இத்தகைய கருத்துக் காவிகளை எச்சரித்து இவ்வாறு அருளப் பட்டது.

"இப் பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து (சொல்லிக்) கொண்டு , உங்களுக்கு (திட்டமாக ) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள்.ஆனால், அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய (பாவமான) தாக இருக்கும்"
(அல் குரான்; 24 : 15  )

சஹாபாக்களில் மறைந்து இருந்த முனாபிக்கான சஹாபாக்களைக் கூட
நல்ல சஹாபாக்கள் என்று எங்களது மத்தியில் நிறுவுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யும் யஹ்யா மௌலவியின் செய்கையில் அத்தகைய தவறான தளத்தில் இருந்த சஹாபாக்களின் செயல் பாடுகள் மீண்டும் ஒரு முறை அந்த சஹாபாக்களின் 'சுன்னாவாக'  அன்றைய ஜும்மாவில் அரங்கேறியது என்னவோ உண்மைதான்..

சஹாபாக்களின் காலத்தில், நயவஞ்சக சஹாபாக்கள் குழுவினர் அன்னை ஆயிஷா (ரலி)யின் மீது அபாண்டமாக சுமத்திய அதே அவதூறுகளை மீண்டும் நினைவு படுத்தும் வகையிலான அந்த வார்த்தைப் பிரயோகத்தை இந்த முறை எமது மதிப்புக்குரிய உலமா அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களின் பெயரால் மீண்டும் ஜும்மாஹ் பிரசங்கத்தில் கூறியதை எங்களால் அலட்சியப் படுத்திக் கொண்டு இருக்க முடியாது.

அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி அவர் உபயோகித்த வார்த்தை
அல்லாஹ் 'மன்னிக்காத' பெரும் பாவங்களில் ஒன்று.

இதோ  இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம் அவரிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்.

********"அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி மோசமாக பேசிய முஸ்லிகள்
யார்?      அவர்கள் அப்படி எப்பொழுது சொன்னார்கள்? எங்கே வைத்து சொன்னார்கள்?"

********"நாம் நேசம் வைக்கும் எங்களது அஹ்லுல் பைத்களில் அதாவது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்களில், யாராவது ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி தவறாக எதாவது சொல்லி இருக்கிறார்களா?"

*********'"அல்லது , நாம் எங்களது இமாம்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ள அஹ்லுல் பைத்களின் இமாம்களில் யாராவது ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி தவறாக ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்றால் எப்பொழுது? எங்கே வைத்து?"


சஹாபாக்களில் இருந்த முனாபிக்கான சஹாபாக்கள் குழுவினருக்குப் பின்னர், உமைய்யாக்களின் ஆட்சிக் காலத்திலும், அப்பாசியர்களின் ஆட்சிக் காலத்திலும் சில அத்து மீறல்கள் அன்னை ஆயிஷா (ரலி)யின் பெயரால்
நடந்து உள்ளன.

அத்தகைய செய்திகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு , அதே தவறுகள் இன்னமும் நடந்துக் கொண்டே இருக்கின்றன.

 மதிப்புக்குரிய யஹ்யா மௌலவி அவர்கள்   எதற்காக நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி தேவை இல்லாமல் இவ்வாறு அவதூறு கற்பிக்க வேண்டும்?

"எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை) நிரூபிக்க நான்கு சாட்சிகளை கொண்டு வர வில்லையோ , அவர்களை நீங்கள் என்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.- நிச்சயமாக அவர்கள் தீயவர்கள்"
(அல் குரான்; 24  ; 4 )

அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி சஹாபாக்களில் இருந்த முனாபிக்கான சஹாபாக்கள் அவதூறு பேசத் துவங்கிய வுடன் அவர்களது வாயை முழுமையாக அடைக்கும் வகையில் இந்த அல் குரான் ஆயத் அருளப் பட்டது.

மதிப்புக்குரிய யஹ்யா மௌலவி தனது பிரசங்கத்தில் அன்னை ஆயிஷா (ரலி)யைப் பற்றி சிலர் மோசமான முறையில் பேசுவதாக அல்லது எழுதுவதாக சொன்னார்.

அவர் சொல்லுவது உண்மை என்றால் அவர்களை இனம் காணுவது எங்கள் சமூகத்தினது அவசர தேவைகளில் ஒன்றாகிறது.

அந்தக் கூட்டத்தினரை நாம் ஒன்றாகவே தேடுவோம்.

சரி , இப்பொழுது சொல்லுங்கள்?

அப்படி யார், எப்பொழுது பேசினார்கள்?

அஹ்ளுல்பைத்கள் மீது அன்பு கொள்ளாத ஒருவன், ஒருபோதும்  சுவனம் செல்லப் போவது இல்லை.

ஏனெனில், அஹ்லுல் பைத்களின் மீது சலவாத் சொல்லித் தொழாவிட்டால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.

தொழுகை ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில் , ஒருவன் சுவனம் செல்வான் என்பது சாத்தியம் இல்லாத விடயம்.

இது நாம் வெளியே  கட்டாயம் சொல்ல வேண்டிய உண்மை.

ஈமானின் ஆறு நம்பிக்கைகளில் சஹாபாக்களை ஈமான் கொள்ளுவது கட்டாயம் இல்லை.

சஹாபாக்கள் அனைவரும் சுவனத்துக்கு உரியவர்கள் என்று நம்புவது  ஈமானின் சின்னதொரு அம்சமா? என்றால் , அதுவும் இல்லை.

அஹ்லுல் பைத்களின் அன்பு வைக்காதவன் முனாபிக்காவான்.அதனால், அஹ்ளுல்பைத்களின் மீது அன்பு வைப்பது ஈமானின் ஒரு அம்சமாகிறது.

ஏனெனில், சஹாபாக்களில் அதிகமான முனாபிகீன்களும், அதிகமான இணை வைப்பாளர்களும் இருப்பதாக அல் குரான் அல் ஹதீத் ஆதாரங்கள் நிறையவே எமக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

அல் குரானில், சஹாபாக்களில் இருந்த முனாபிகீன்களைப் பற்றி சூரா முனாபிகீன் என்று ஒரு அத்தியாயமே அருளப்பட்டு, நாம் அவர்களைக்   கொண்டும் எச்சரிக்கப் படுகின்றோம்.

இத்தகைய முனாபிகீன்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டு அவர்களுடனேயே ஒன்றாக இருந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் அஹ்லுல் பைத்களின் மீது நேசம் வைக்காத சஹாபாக்கள்.

நபி (ஸல்) அவர்களை கண்டவர்கள் அனைவரும் சஹாபாக்கள் என்ற ரீதியில் இவர்களும் சஹாபாக்கள்தான்.

 சூரா முனாபிகீனில் சொல்லப் பட்ட சஹாபாக்களும் அஹ்லுல் பைத்களும் சமமாவார்களா?

இல்லையே?

"உங்களை சுற்றியுள்ள கிராமப் புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலை பெற்று விட்டவர்களும் இருக்கிறார்கள்.- (நபியே) அவர்களை நீர் அறிய மாட்டீர்.நாம் அவர்களை நன்கறிவோம்.வெகு சீக்கிரத்தில் நாம் அவர்களை இரு முறை வேதனை செய்வோம்.- பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின் பால் தள்ளப் படுவார்கள்"
(அல் குரான்; 9  : 101 )

கடுமையான வேதனை அளிக்கப் படும் என்று இங்கே சஹாபாக்கள் நன்மாராயம் கூறப் படுகின்றார்கள்.

இந்த அல் குரானிய வசனங்களில் இருந்து சஹாபாக்கள் அனைவரும் நல்லவர்கள், வல்லவர்கள், நாளும் தெரிந்தவர்கள், சுவனத்துக்கு எம்மை கொண்டு சேர்ப்பவர்கள்,நரகத்தை விட்டும் எம்மை பாது காப்பவர்கள் என்று தப்பாக அர்த்தம் கொள்ள முடியாது என்பது தெளிவு.

சஹாபாக்களிலும் நாம் நிதானத்தை கை கொள்ளவேண்டும் என்று இந்த அல் குரானிய வசனங்கள் எம்மை எச்சரிக்கின்றன.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் உள்ள இந்த ஹதீத்களை கவனியுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

நான் உறங்கிக் கொண்டு இருந்தேன்.

அப்போது நான், (கனவில்) அல் கவ்சர் தடாகத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்போது எனது சஹாபாக்களில் ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

எனக்கும், எனது சஹாபாக்களின் அந்த  குழுவினருக்கும் இடையே ஒரு வானவர் தோன்றி அந்தக் குழுவினரை நோக்கி "வாருங்கள்" என்று அழைக்கிறார்.

உடனே நான் அந்த வானவரிடம்"எங்கே இவர்களை அழைக்கிறீர்கள்?" என்றேன்.

அவர் " அல்லாஹ்வின் மீதாணையாக!  நரகத்திற்கு" என்றார்.

நான்"இவர்கள் என்ன செய்தார்கள்" என்று கேட்டேன்.

அவர் " உங்களுக்குப் பின்னால், இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறி சென்று விட்டார்கள்" என்றார்.

பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு வானவர் தோன்றி ""வாருங்கள்" என எனது அந்த சஹாபாக்களை அழைக்கிறார்.

நான் "இவர்களை எங்கே அழைக்கிறீர்கள்" என்றேன்.

அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்கு தான்."என்றார்.

நான் "இவர்கள் என்ன செய்தார்கள்" என்றேன்.

அவர் "இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய் விட்டார்கள்.' என்று பதிலளித்தார்.

அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பிக் கொள்வார்கள் என நான் கருத வில்லை"

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி:  பாகம் ஏழு ஹதீத் - 6587  )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

மறுமை  நாளில் என் சஹாபாக்களில் சிலர் என்னிடம் அல் கவ்சர் தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் தடாகத்தை விட்டும் விரட்டப் படுவார்கள்.

உடனே நான் "இறைவா! இவர்கள் என் தோழர்கள்" என்பேன்.

அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால், இவர்கள் செய்தது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்கள்" என்று சொல்வான்.

இதை நபித் தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஸுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ,"அவர்கள் ஒதுக்கப் படுவார்கள்" என்றும் , அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விரட்டப் படுவார்கள்" என்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஆதாரம் புஹாரி:  பாகம் ஏழு ஹதீத் - 6586  )


நபி (சொல்) அவர்களுடன் ஒன்றாக இருந்த சஹாபாக்களில் நிறைய பேர் நரகத்துக்கு நன்மாராயனம் சொல்லப் பட்டவர்கள் எனபது இப்பொழுது விளங்கியிருக்கும்.

இது புகாரி கிரந்தத்தில் பதிவாகி இருக்கின்ற ஹதீத்.

இதே ஹதீத் முஸ்லிம் கிரந்தத்திலும், ஏனைய ஷகீக் ஷித்தாக்களிலும் பதிவாகி இருக்கிறது.

சஹாபாக்கள் அனைவரும் சுவனவாதிகள் என்று உறுதியாக சொல்கின்ற ஒருவர், புகாரி, முஸ்லிம் ஹதீத் கிரந்தங்களை நிராகரிக்க வேண்டும்.

ஆனால் , நாம் சொல்லுகின்ற அஹ்லுல் பைத்களின் நிலை அப்படியானது அல்ல.

அவைகள் நிஜமான சத்தியங்கள்.

மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகள்.

இப்பொழுதும், எப்பொழுதும் அல்லாஹ் இருக்கிறான், இருந்துக் கொண்டே இருப்பான்.

உலகம் அழியும் நாள் வரை அல்லாஹ்வின் வேதம் அல் குரான் இருந்துக் கொண்டே இருக்கும்.

அல் குரான் இருக்கும் வரை, அஹ்லுல் பைத்களின் முக்கியத்துவம் புனித அல் குரானில் எடுத்துச் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கும்.

நாங்கள் இருக்கும் காலத்தில் அல் குரான் இருக்கிறது.அல் குரானில் அஹ்லுல் பைத்களின் முக்கியத்துவமும், நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறியதாவது;


ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டக சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப்  போர்வை அணிந்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

அப்போது அவரது பேரன் ஹசன் பின் அலி (அலை) அவர்கள் வந்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன்(அலை) அவர்களை தமது போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு ஹுசைன் (அலை௦) அவர்கள் வந்தார்கள். அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு மகள் பாத்திமா (அலை) அவர்கள் வந்தபோது அவர்களையும் ,  அவருக்குப் பின்னால் வந்த அலி (அலை) அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் "................(நபியின்) வீட்டையுடயவர்களே ! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். ( அல் குரான்-33 :  33  )"  என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
(ஆதாரம்; ஸஹிஹ்  முஸ்லிம் - நான்காம் பாகம் 4807 வது ஹதீத்.)          

அஹ்லுல் பைத்கள் யார் என்பதற்கு நாம் மேலே சொன்ன ஹதீத் போதுமான ஆதாரமாகும்.

முஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி உள்ள ஒரு நீண்ட ஹதீதில் இப்படி வருகிறது;

இதன் அறிவிப்பாளர் யசீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களாவார்கள்.

"....................................................ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கும்' எனும் நீர் நிலை அருகே எங்களிடையே நின்று உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்."மக்களே கவனியுங்கள்! நானும் ஒரு மனிதனே.என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது.அவரது அழைப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.

நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன்.அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும்.அதில் நேர் வழியும் பேரொளியும் உள்ளது.ஆகவே அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக் கொள்ளுங்கள்." என்று கூறி , அல்லாஹ்வின் வேதத்தின் படி வாழுமாறு தூண்டினார்கள்.அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.

பிறகு, "என் குடும்பத்தார் ஆவார்கள். 

என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு உங்களுக்கு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். 

என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு உங்களுக்கு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். 

என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு உங்களுக்கு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என்று மூன்று முறை சொன்னார்கள்................................."
(ஆதாரம்; முஸ்லிம் பாகம் நான்கு; 4782  வது ஹதீத்.)

அல்லாஹ்வின் வேத நூலும் , நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் ஒரே தராதரத்தில் ,இரண்டு கனமான பொருட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு உள்ளதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் வேத நூலுக்கான சரியான விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் இருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதன் நிஜமான கருத்தாகும்.

நாங்கள் எங்களது உலமாக்களின் தவறான வழிக் காட்டுதலில், அல்லாஹ்வின் வேத நூலை ஏற்றுக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களான அஹ்லுல் பைத்களை நிராகரித்து விட்டோம்.

இனி இந்த ஹதீதை கவனியுங்கள்.

அபூதர் கிப்பாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

ஒருநாள் மதியவேளை நாம் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டு இருந்தோம்.

அப்பொழுது ஒரு வறியவர் வந்து எங்களிடம் உதவி கேட்டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் எவரும் அவருக்கு எதையும் கொடுக்க வில்லை.

அம்மனிதர் வானை நோக்கி கைகளை உயர்த்தி " இறைவா! நீயே சாட்சி.நபியின் பள்ளிவாசலில் ஒருவரும் எனக்கு எதையும் தரவில்லை" என முறையிட்டார். 

அப்பொழுது தொழுகையில் 'ருகூவில்' இருந்த  அலி (ரலி) அவர்கள் அம்மனிதரை நோக்கி விரலை நீட்டினார்.

அந்த விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி எடுத்துக் கொண்டு அம் மனிதர் அகன்றார்.

இதனை அவதானித்துக் கொண்டு இருந்த நபி (ஸல்) அவர்கள் விண்ணை நோக்கி தலை உயர்த்தி பின் வருமாறு மொழிந்தார்கள்
."இறைவா! என் சகோதரர் மூஸா உன்னிடம் 'என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசக் கூடியவர்.  அவரை நீ எனக்கு உதவியாக அனுப்பி வை.' என்று கேட்டார்கள். நானும் உன்னுடைய நபிதான்.என் இருதயத்தை விரிவாக்கியருள். என் பணிகளை எளிதாக்கியருள். அலியை எனது பிரதி நிதியாகவும்,  உதவியாளராகவும் ஆக்கியருள்" என பிரார்த்தித்தார்கள்.

அபூதர் தொடர்கிறார்கள்" நபிகளார் தம் வார்த்தைகளை முடிப்பதற்கு முன் ' 'நிச்சயமாக உங்கள் விவகாரங்களில் உங்களது அதிகாரிகள் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும், இன்னும் எவர்கள் (உண்மையாகவே) விசுவாசங் கொண்டு , தொழுகையை கடைபிடித்து , ருகூவில் சக்காத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்கள்தாம்'  (அல் குரான் 5  :  55  ) என்ற திரு வசனம் இறக்கி அருளப்பட்டது. "

இஸ்லாமிய வரலாற்றில் 'ருகூவில்' தர்மம் செய்தவர்  என்கிற சிறப்பு இமாம் அலி அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
(ஆதாரம்- அல் தூர் அல் மன்தூர்' - பாகம் இரண்டு)

நாம் பின்பற்றுவதற்கும் எமது தலைமைத்துவத்துக்கும் உரிய அதிகாரிகளாக அல்லாஹ்வும், அவனது ரசூலும், அஹ்லுல் பைத்களும் மட்டுமே என்பது இதில் இருந்து புலனாகின்றது.


இப்பொழுது சொல்லுங்கள்...

நரகத்துக்கும் உரித்தான சிலர் சஹாபாக்கள் மத்தியில் இருந்து இருக்கிறார்கள் என்று அல் குரான் அல் ஹதீத் அதுவும் புஹாரி ஹதீத் ஆதாரங்கள் மிக தெளிவாக சொல்லிக் கொண்டு இருக்க , அஹ்லுல் பைத்களுடன் இவர்களை நாம் ஒன்றாக இணைத்து ஒரே தராதரத்தில் வைத்து எதற்காக குழப்பிக் கொள்ள வேண்டும்?




No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad