முகைரா இப்னு சுபாவினதும் , அமீர் முஆவியாவினதும் இரகசிய நடவடிக்கைகள் யசீதின் தலைமைத்துவத்துக்கு வழியமைத்து கொடுத்தது.
இராக், சிரியா உட்பட வேறு பல இடங்களில் மக்கள் யசீதுக்கு ஆதரவாக பைஆத் செய்தனர்.
இப்பொழுது 'ஹிஜாஸ்' மாத்திரம் தான் பாக்கி.
ஹிஜாஸில் யசீதை துணிகரமாக எதிர்க்கக் கூடிய பலர் இருந்தனர்.
அவர்களை எதிர்கொள்ள அமீர் முஆவியா ஹிஜாஸ் நோக்கி கிளம்பினார்.
மதீனாவுக்கு வெளியே கூடாரம் தரித்த அமீர் முஆவியா இமாம் ஹுசைன், ஹசரத் இப்னு ஜுபைர் (ரலி), ஹசரத் இப்னு உமர் (ரலி), ஹசரத் அப்துல் ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி) ஆகியோரை சந்தித்தார்.
அவர்கள் அனைவரும் யசீதின் தலைமைத்துவத்துக்கு தமது எதிர்ப்பை மிகக் கடுமையாக தெரிவித்தனர்.
அவர்களது நிலைமையின் காரணமாக அமீர் முஆவியா அவர்களுடன் மிகக் கடுமையாக நடந்துக் கொண்டார்.
அமீர் முஆவியாவுடன் முரண் பட்ட அந்த நான்கு பெருந் தகைகளும் மதீனாவில் இருக்கப் பிடிக்காமல் மக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
அந்த மூத்த சஹாபாக்களை இழந்த நிலையில் , மதீனா மிக இலகுவாக அமீர் முஆவியாவின் கட்டுப் பாட்டில் வந்தது.
அதன் பின்னர் அமீர் முஆவியா மக்காவுக்கு சென்றார்.
மக்காவுக்கு வெளியே கூடாரம் தரித்த அமீர் முஆவியா அந்த நான்கு சான்றோர்களையும் மீண்டும் சந்தித்தார்.
மதீனாவில் நடந்த சந்திப்புக்கு நேர் மாற்றமானதாக இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.
அமீர் முஆவியா இம் முறை இந்த மூத்த சஹாபாக்களுடன் மிகவும் பெருந்தன்மையாகவும், தயாள உள்ளத்தோடும் நடந்துக் கொண்டார்.
அதன் பின்னர் அமீர் முஆவியா அந்த நால்வரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மக்காவினுள் நுழைந்தார்.
மக்காவில் வைத்து அந்த நால்வரையும் தனித் தனியாக சந்தித்து தமது மகன் யசீதுக்கு 'பைஆத் ' செய்யும் படி மிகவும் விணயமாக கேட்டுக் கொண்டார்.
அவரது வேண்டுதலுக்கு ஹசரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) பதில் சொன்னார்கள்.
"நீங்கள் மூன்று விடயங்களில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்"
"என்ன?" என்று முஆவியா கேட்டார்.
"நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி யாரையும் முஸ்லிம் உம்மாவின் பொறுப்பாளராக நீங்கள் நியமிக்க வேண்டாம். மக்கள் அபூபக்கரை தெரிவு செய்ததைப் போல தாங்களே தங்களுடைய தலைவரை தெரிவு செய்துக் கொள்வார்கள்."
"அடுத்தது என்ன?" அமீர் முஆவியா கேட்டார்.
"ஹசரத் அபூபக்கருடைய வழிமுறையைப் பின்பற்றுங்கள்.அவர் ஹசரத் உமர் (ரலி) அவர்களை முஸ்லிம் உம்மாவின் பொறுப் பாளராக நியமித்தார்.அபூபக்கருக்கும் உமருக்கும் இடையில் வெகு தூரத்துக்கு எதுவித சொந்தப் பந்தங்களும் இருக்க வில்ல"
"வேறு என்ன?" அமீர் முஆவியா மீண்டும் கேட்டார்.
"இந்த இரண்டு வழிமுறைகளிலும் நீங்கள் திருப்தி காணவில்லை என்றால் ஹசரத் உமரின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.அவர் நியமித்த ஆறு பேர் கொண்ட சூரா குழுவில் அவர் மகன் இடம் பெறவில்லை"
மற்ற மூவரிடம் அமீர் முஆவியா இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொது அவர்கள் இப்னு ஜுபைரின் கருத்தே தமது கருத்தாகும் என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டனர்.
அமீர் முஆவியா, கோட் பாதர் முஆவியாவாக இப்பொழுது மாறினார்.
"நல்லது" கடுமையான தொனியுடன் அமீர் முஆவியாவின் குரல் ஒலித்தது."இத்தனை நேரம் நான் நீங்கள் சொன்னதை எல்லாம் பெருந்தன்மையோடு , பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக , இனி எனக்குப் பதில் கூறும் விதத்தில் ஒரு வார்த்தைக் கூட உங்கள் வாயிலிருந்து வெளி வாரக் கூடாது."
அந்த மூத்த சான்றோர்களை கடுமையாக பார்த்தபடி அவர் தொடர்ந்தார்."என் கட்டளையை மீறி நீங்கள் ஏதாவது சொன்னால், அடுத்த சொல் சொல்லுவதற்கு வாய்ப்பே இருக்காது. அதற்கு முன்பே வாள் உங்களது தலையை கொய்து விடும்"என்று கூறிய அமீர் முஆவியா தனது மெய்க் காப்பாள தலைவனை அழைத்தார்.
"இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஆளை நியமித்து விடு.என்னை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இவர்களில்யாரும் ஒரு வார்த்தை பேசினாலும் அவருடைய தலையை சீவி விடும் படி அவனுக்கு சொல்லிவிடு"
அதன் பின்பு அமீர் முஆவியா அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பள்ளி வாசலுக்கு வந்து மக்களிடம் அறிவித்தார்." இவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் தலைவர்கள்.தலை சிறந்த சான்றோர்கள். இவர்களின் ஆலோசனையைப் பெறாமல் எந்த வேலையும் நடப்பது கிடையாது. இப்பேற்பட்ட இவர்கள் அனைவரும் யசீதுக்கு பைஆத் செய்து விட்டார்கள்.ஆகவே நீங்களும் பைஆத் செய்து விடுங்கள்."
பொது மக்கள் நம்பி விட்டார்கள்.
அவர்கள் யசீதை நிராகரிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
மக்காவாசிகள் அமைதியாக யசீதுக்கு பைஆத் செய்தார்கள்.
(ஆதாரம்; இப்னு அசீர் மூன்றாம் பாகம் பக்கம் 252 )
"மாபியா" பாணியில் நாம் போற்றும் அமீர் முஆவியா தனது மகனை முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்துக்கு இட்டுச் சென்ற அழகைக் கவனியுங்கள்.
இன்றைய மாபியா கோட் பாதர்கள் அமீர் முஆவியாவின் சுன்னாவைத்தான் பின்பற்றுகிறார்கள் போலும்.
இது எமக்கு பெருமையான செய்தி. இல்லையா?
1 comment:
ஆமாங்க. உலகை ஆட்டிப் படைக்கும் கொலைகார கொள்ளைக்காரக் கும்பல்கள் முஆவியா என்ற எமது முஸ்லிம் ஒருவரைத்தான் தமது நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது எமக்கெல்லாம் எவ்வளவு பெருமையான விஷயம். இந்தக் கும்பல்கள் செய்கின்ற பணிகள் அனைத்திலும் நம்மட முஆவியாவுக்கும் பங்கு போய்ச் சேரும் என்பதை நினைக்கையில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. முஆவியா உண்மையிலே பெரியாள்தான்.
Post a Comment