அண்மையில் கொள்ளுபிடியில் நடந்த ஒரு ஜும்மாவின் தொடக்கத்தில் அதன் இமாம் அல்லாஹ்வைப் புகழ்ந்ததன் பின்னர் "அஸ்ஸலாத்து வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன் லா நபிய்ய பஹதா" என்று நபி (ஸல்) அவர்களின் பெயரைக் குறித்து சலவாத் சொல்ல வேண்டிய கட்டத்தில் இவ்வாறு சலவாத் சொன்னார்.
அவர் சொன்ன சலவாத்தின் அர்த்தம் "சலவாத்தும் ஸலாமும் எவருக்குப் பின்னர் வேறு ஒரு நபி இல்லையோ அவர் மீது உண்டாகட்டும்." என்று தமிழ் வடிவம் பெரும்.
இன்னொரு முறை கிழக்கிலங்கை மௌலவி ஒருவர் ஜும்மாவை தலைமை தாங்கி நடாத்தும் பொழுது , சலவாத் சொல்லப் பட வேண்டிய தருணத்தில் "வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா இபாதி ஹில்லதி நஷ்தபா " என்று சலவாத் சொன்னார்.
"சலவாத்தும் ஸலாமும் தேர்ந்து எடுத்துக் கொண்ட அடியார்கள் மீது உண்டாவதாக" எனபது இதன் பொருளாகும்.
இந்த இரண்டு செயல் முறைகளும் தவறானதாகும்.
ஏனெனில்,ஜும்மாவுடைய ஆரம்பம் எவ்வாறு அமைய வேண்டும் என்கிற ஒரு ஒழுங்கினை எங்களுடைய மத்ஹபுகளின் இமாம்கள் எமக்கு நிர்ணயித்து தந்து இருக்கிறார்கள்.
சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஒழுக்கமான முறைகள் ஜும்மாவில் கடைபிடிக்கப் பட்டு வந்துள்ளன.
இப்பொழுதும் கண்ணியமான உலமாக்களால் மிகக் கவனமாக கடை பிடிக்கப் படுகின்றன.
அதன்படி அராபிய மொழி வழக்கில் ஜும்மாவை பின்வருமாறு ஆரம்பிக்க வேண்டும்;
1 ) அல்லாஹ்வைப் புகழ்தல்.
2 ) நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் மீது அவர்களின் பெயரான 'முஹம்மத்' என்பதைக் கூறி ஸலவாத் சொல்லுதல்.
3 ) தக்வாவைக் கொண்டு வஸிய்யத் செய்தல்.
4 ) மூமின்களுக்காகப் பிரார்த்தித்தல்.
5 ) புனித அல் குரானின் எதாவது ஒரு ஆயத்தை ஜும்மாவில் இடம் பெறச் செய்தல்.
இந்த ஒழுங்குமுறை இரண்டு ஜும்மாவிலும் கட்டாயமாக பின்பற்றப் படுதல் வேண்டும்.
உம்தா, மகால்லி, பத்ஹுல் முஈன் ஆகிய ஸாபி மத்ஹபின் சட்டக் கிரந்தங்களில் ஜும்மாவுக்குரிய நிபந்தனைகளாக இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்கு முறைகள் முன்னர் பின்னரானாலோ, அல்லது இதில் ஒன்றாவது விடு பட்டாலோ அந்த பள்ளி வாசலில் தொழுத அனைவரினதும் ஜும்மா செல்லுபடி அற்றதாக மாறி விடும் அபாயம் உள்ளது.
அவர்கள் ஜும்மாவை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொழ வேண்டும். அல்லது ஜும்மா தொழுகையின் பின்னர் 'லுகர்' தொழ வேண்டும்.
இதுதான் பிக்ஹுடைய சட்டம். அதாவது, ஷரியத் சட்டம்.
ஸாபி மத்ஹபை இலங்கையில் நாம் பின்பற்றுவதால் இதுதான் இலங்கைக்கான எங்களது ஜும்மா சட்டம்.
இனி நாம் முன்னர் குறிப்பிட்ட அந்த இரண்டு இமாம்களினது இரண்டு சலவாத்களின் நிஜமான நிலை பற்றி கொஞ்சம் கவனிப்போம்.
முதலாவது இமாம்- "அஸ்ஸலாத்து வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன் லா நபிய்ய பஹதா" என்று நபி (ஸல்) அவர்களின் மீது சலவாத் சொன்னார்.
அந்த இமாம் ஜும்மாவின் ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் குறித்து கட்டாயமாக நபி (ஸல்) அவர்களின் மீது சலவாத் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.
ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை.
இதன் கருத்துக்கள் சுற்றி வளைத்து நபி (ஸல்) அவர்களைக் குறித்தாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான தொணியிலான சலவாத் அல்லது சலாமை எமக்கு சொல்லித் தர வில்லை.
அந்த வகையில் இந்த சலவாத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களது பெயரைக் குறித்து சலவாத் சொல்லப் படவேண்டும் என்று மக்களை வற்புறுத்தி வேண்டி நிற்கும் ஒரு தருணத்தில் கூறுவது முறையாகாது.
கிழக்கிலங்கை மௌலவியின் சலவாத் "வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா இபாதி ஹில்லதி நஷ்தபா " என்று கவர்ச்சியாக ஒலித்தது.
"சலவாத்தும் ஸலாமும் தேர்ந்து எடுத்துக் கொண்ட அடியார்கள் மீது உண்டாவதாக" எனபது இதன் பொருளாகும்.
"வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா இபாதி ஹில்லதி நஷ்தபா " எனபது புனித அல் குரானின் ஒரு புனிதமான ஆயத்.
அந்த ஆயத்தின் புனித தனத்துக்கும் கௌரவத்துக்கும் எதுவித குறைவும் எப்பொழுதும் ஏற்படப் போவது இல்லை.
அந்த புனித ஆயத்தை எம்மால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஓத முடியும்.
யாராலும் அதில் குறை காண முடியாது.
ஆனால், அந்த புனித அல் குரான் ஆயத்தை ஜும்மாவில் எம்மால் நபி (ஸல்) அவர்களுக்கு சலவாத் சொல்ல வேண்டிய கட்டத்தில் அந்த சலவாத்துக்கு பகரமாக இந்த ஆயத்தை ஓத முடியாது.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களது பெயரைக் குறிப்பிட்டு சலவாத் சொல்லப் படும் பொழுது அது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரமே சொல்லப் பட்டு அவரது தனித் தன்மையை மக்களுக்கு வெளிப் படுத்தத் உதவுகிறது.
ஆனால், இந்தப் புனித அல் குரானின் ஆயத்தானது உலகில் அல்லாஹ்வால் தேர்ந்து எடுக்கப் பட்ட அனைத்து நல்லடியார்களையும் ஒரேயடியில் ஒன்றாக உள் வாங்குகிறது.
இதன் அடிப்படையில் இந்த புனிதமான அல் குரான் ஆயத் எவ் வகையிலும் அந்த இடத்தில் ஓதுவதற்கு பொருத்தம் அற்றது.
மாறாக யாராவது இந்த புனிதமான ஆயத்தை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே சலவாத் சொல்ல வேண்டிய கட்டத்தில் சலவாத்துக்கு பதிலீடாக ஓதினால், அவரின் அத்தகைய செய்கயானது இந்த ஆயத்தின் புனிதத்தை கெடுத்து விடும் அபாயம் உள்ளது.
இது தவிர, நபி (ஸல்) அவர்களும் அவர்கள் மீது சலவாத் கூறப் படவேண்டிய இடங்களில் இந்த அல் குரான் ஆயத்தை ஓதுமாறு எம்மைப் ஒரு போதும் பணிக்க வில்லை.
ஆக, நபி (ஸல்) அவர்களே காட்டித் தராத ஒரு அமலை அல்லது எங்களது மத்ஹபுகளின் இமாம்களும் சரி காணாத ஒரு அமலை நாம் எமது இஷ்டத்துக்கு எடுத்து நடப்பது ஆரோக்யமான ஒரு விடயமல்ல.
அறியாமையின் காரணமாக அல்லது சரியான தெளிவுகள் இல்லாத காரணத்தால் நம்மில் சிலர் இப்படி நடந்தாலும் , இந்த சட்டத்தை மீறி அலட்சியமாக நடக்க யாருக்கும் உரிமை இல்லை.
"கருத்தை விட்டு விட்டு சொல் அழகில் மூழ்குபவர்கள் நாசமாகட்டும்" என்று ஒரு ஆதார பூர்வமான ஹதீத் , பல ஹதீத் கிரந்தங்களில் பதிவாகி இருக்கிறது.
ஆகவே, நாம் எமது சொற்களிலும் அதன் கருத்துக் களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிலும், நபி (ஸல்)௦ அவர்களின் மீது சொல்லும் சலவாத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
நடந்தவைகள் நடந்து முடிந்தவைகளாக இருக்கட்டும்.
இனி நடக்கப் போவதிலாவது நாம் எம்மைத் திருத்திக் கொள்வோமாக.
No comments:
Post a Comment