உம்மத்தே முஹம்மதியாவை அதால பாதாளத்தில் தள்ளிய "சஹாபாக்களில்" இருவர்.
அமீர் முஆவியா உடைய மன்னராட்சி காலத்தில் கூபாவின் ஆளுநராக முகீரா பின் ஸுபா இருந்தார்.
முகீரா பின் ஸுபாவை பதவி நீக்கம் செய்ய அமீர் முஆவியா எண்ணியிருந்தார்.
விடயம் ஒற்றர்கள் மூலமாக முகீரா பின் ஸுபாவுக்கு எட்டியது.
தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று முகீரா யோசித்தார்.
உடனே அவர், அமீர் முஆவியாவின் மகன் யசீதை சந்தித்தார்.
"பெரும் பெரும் சஹாபாக்களும் குறைஷிக் குல பெரியவர்களும் உலகை விட்டும் பிரிந்து விட்டார்கள்.தங்களுக்காக பைத் வாங்கும் விடயத்தில் உங்களது தந்தை- அமீருல் முஸ்லிமீன்- ஏன் இவ்வளவு கால தாமதம் செய்கிறார் என்று எனக்குப் புரிய வில்லை?"
இப்படி பதவி ஆசையை மெதுவாக யசீதின் மனத்தில் முகீரா விதைத்தார்.
யசீத் தனது தந்தையிடம் , முகீராவின் பணிவான ஆசையினை விவரித்தார்.
அமீர் முஆவியா, உடனே முகீராவை அழைத்து இது பற்றி விசாரித்தார்.
"அமீருல் முஸ்லிமீன் அவர்களே! உஸ்மான் (ரலி) கொலை செய்யப் பட்டதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தன, எப்படி எல்லாம் இரத்தக் களறி ஏற்பட்டது
என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.எனவே, தங்களுக்குப் பிறகு எந்த வித கருத்து மோதல்களும் தலைத்தூக்காமல் இருக்க வேண்டுமானால், தங்களது காலத்திலேயே இளவரசர் யசீதை "வலீ" பொறுப்பாளராக நியமித்து பைஆத் பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது"
"அப்படியானால், இதற்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது?" வினவியது அமீர் முஆவியா.
"கூபாவாசிகளை நான் கவனித்து கொள்கிறேன்" என்று சொன்ன முகீரா, தொடர்ந்து "பசராவாசிகளை ஷியாத் கவனித்துக் கொள்வார்.அதற்குப் பிறகு இதனை எதிர்க்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்" என்றார்.
அமீர் முஆவியாவுக்கு முகீராவின் திட்டம் நல்லதாகவே பட்டது.
அவரும் முகீராவுக்கு 'பச்சை கொடி' காட்டினார்.
பின்னர் கூபா திரும்பிய முகீரா பத்து நபர்களை தயார் செய்தார்.
அவர்கள் ஒரு குழுவாக அமீர் முஆவியாவிடம் சென்று யசீதை ஆட்சி பொறுப்பாளராக மாற்றும் படி கோரிக்கை வைக்க வேண்டும், என்பதுதான் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை.
இதற்கு முகீரா அவர்களுக்கு தலா முப்பதாயிரம் திர்ஹம்களை கூலியாக வழங்கினார்.
பின்னர், இக் குழு முகீராவின் மகன் மூஸா பின் முகீராவின் தலைமையில் டமாஸ்கஸ் புறப்பட்டு சென்று தன்னுடைய பணியை வெகு சிறப்பாக நிறைவு செய்தது.
அதன் பின்னர் அமீர் முஆவியா மூசாவை தனியாக அழைத்து "அவர்களுடைய 'தீனை' அவர்களிடம் இருந்து உமது தந்தை எவ்வளவுக்கு வாங்கினார்?' என்று கேட்டார்.
"முப்பதாயிரம் திர்ஹம்களுக்கு" இப்படி மூஸா பதில் அளித்தார்.
"தங்களுடைய 'தீனை' இவ்வளவு குறைந்த விலைக்கா அவர்கள் விற்றார்கள்?' என்று ஆச்சரியப் பட்டார் அமீர் முஆவியா.
(ஆதாரம்- இப்னு அசீர் பாகம் மூன்று பக்கம் 249
அல்பிதாயா பாகம் எட்டு பக்கம் 79
இப்னு கல்தூண் பாகம் மூன்று பக்கம் 15 - 17 )
யசீதை முஸ்லிம்களின் ஆட்சியாளராக்குவது என்கிற எண்ணம் நல்ல 'நிய்யத்தின்' அடிப்படையில் , தூய எண்ணத்தின் அடிப்படையில் பிறக்கவில்லை.
ஒரு பெரிய சஹாபா அல்லது ஒரு பெருந்தகை தன்னுடைய சுய இலாபங்களை காப்பாற்றிக் கொள்ள இன்னொரு 'சஹாபாவை' அல்லது ஒரு பெருந் தகையின் சுய இலாபத்தை உசுப்பி விட்டார்.
இந்த இரண்டு சஹாபாக்களும் அல்லது பெரிய மனிதர்களும் 'உம்மத்தே முகம்மதியாவை ' எத்தகைய வீழ்ச்சியில் தள்ளுகிறோம் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட யோசித்து பார்க்கவில்லை.
ஏற்கனவே பாதாளத்தில் விழுந்து இருந்த 'உம்மத்தே முகம்மதியா' இந்த பெருந்தகைகளின் உலகாயுத மோகத்தின் சூழ்ச்சியினால் சரேலென அதால பாதாளத்தில் விழுந்து சிதறுண்டு போனது.
விழுந்த வேகத்தில் சிதறிப் போன உம்மத்தே முகம்மதியா இன்றுவரை எழும்ப முடியாமல் தத்தளிப்பது சரித்திரம்.
No comments:
Post a Comment