" முஸ்லிம் உம்மத்தின் காலத்தின் தலைமைத்துவம் - இமாம் மஹ்தி (அலை) "
இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு பற்றி எங்களது இமாம்களின் பதிவுகள் சிலவற்றை சுருக்கமாக கவனிப்போம்.
அபு அல் பலாஹ் ஹன்பலி என்பவர் ஹன்பலி மத்ஹபின் இமாம்களில் ஒருவர்.
அவரது 'ஷதாரத் அல் தஹாபிலும்' , 'தஹாபி இன் அல் இப்ர பி கபர் மின் காபரிலும்' பதிந்துள்ள பதிவு இவ்வாறு ஒலிக்கிறது.
"அலவி ஹுசைனில் இருந்து இமாம் ஜாபர் சாதிக்கும் இமாம் ஜாபர் சாதிக்கின் மகன் மூஸா காசிமும் அவரது மகன் அலி ரிதாவும் அவரது மகன் ஜவேதும் அவரது மகன் அலி ஹாதியும் அவரது மகன் ஹசன் அஷ்கரியும் அவரது மகன் முஹம்மத் ஹசன் அஸ்கரியுமாவார்.
அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் இவரை கலாப் ஸாலிஹ் ,ஹுஜ்ஜத், மஹ்தி, முந்தஜார் (எதிர்பார்க்கப் படுபவர்), ஷாஹிப் அல் ஷமான் (நிகழ காலத்தின் இமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள்.- என்று பதிந்துள்ளார்கள்.
இப்னு ஹாஜர் ஷாபி மத்ஹபில் ஒரு பிரபலமான இமாம். அவர் தனது 'சவாய்க் அல் முஹார்ரிகா' என்ற கிரந்தத்தில் இமாம் ஹசன் அஸ்கரி உடைய வாழ்க்கை வரலாறை எழுதும் பொழுது "இமாம் ஹசன் அஸ்கரி அவர்கள் தனது ஐந்து வயது நிரம்பிய மகனான 'அபுல் அல் காசிம்' அவர்களை தனித்து விட்ட நிலையில் இந்த உலகை விட்டும் மறைந்தார்கள். அவரது மகனை மக்கள் 'ஹுஜ்ஜத்' என்றும், 'முஹம்மத்' என்றும் அழைத்து வந்தார்கள்". என்று பதிந்துள்ளார்கள்.
முஹம்மத் அமின் பக்தாதி சுன்னத் வல் ஜமாஅத்தினரால் எற்றுக்கொள்ளபப்ட்ட அண்மைக்கால இமாம்களில் ஒருவர்.அவர் தனது 'சாபைக் அல் தஹாப்' என்ற கிரந்தத்தில் "முஹம்மத் என்று அழைக்கப் பட்ட மஹ்தி ஐந்து வயது நிரம்பும் பொழுது அவரது தந்தை மரணமானார்" என்று எழுதியுள்ளார்கள்.
'வாபாயத் அல் அயான்' என்கிற வரலாற்று வாழ்க்கை தொகுப்பை தொகுத்த இப்னு கஹல்லிகன் மிகவும் பிரபலமான இன்னுமொரு சுன்னி இமாம். சுன்னிகளின் அனைத்து மத்ஹப்களும் இவரை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இருப்பது இவரில் இருக்கின்ற இன்னுமொரு விசேஷம்.
எல்லா மத்ரசாக்களிலும் இவரது நூலை தங்களது பாடங்களின் ஆதாரத்துக்கு உள்ள அத்தாட்சியாக எடுத்தாள்வார்கள்.
அவரது தொகுப்பில் இமாம் மஹ்தி (அலை) பற்றி அவர் இப்படி சொல்கிறார். "அபுல் அல் காசிம் முஹம்மத் பின் அல் ஹசன் அல் அஸ்கரி அவர்களை தங்களது பன்னிரெண்டாவது இமாமாக அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒருமித்து நம்புகிறார்கள். அவர்கள் தாங்கள் எதிபர்த்திருந்த இமாம் மஹ்தி இவர்தான் என உறுதியாக் விசுவாசிக்கிறார்கள்".
முஹியத்தீன் இப்னு அரபி என்பவர் இன்னுமொரு பிரபல சுன்னி இமாம்.
இவர் மிகவும் கடுமையான சூபிக்களில் ஒருவர். சூபி தரீக்காக்களில் உள்ளவர்கள் இவரது கூற்றை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த மகான் தனது 'புதுஹத் மககிய்யாவில்' இப்படி பதிந்துள்ளார்.
"உலகத்தில் அதர்மமும், அநீதியும், அல்லாஹ்வுக்கு எதிரான கொள்கைகளும் ஆடசியும் நிறையும் பொழுது இமாம் மஹ்தி தோற்றம் பெறுவார். அவர் இந்த உலகில் மீன்டும் நீதியையும், தர்மத்தையும், அல்லாஹ்வின் இறையாட்சியையும் நிலை நிறுத்துவார்.
அவர் நபி மகள் பாத்திமா (அலை) உடைய வம்சாவளியில் தோன்றுவார்.
அவரது பாட்டனார் இமாம் ஹுசைன் (அலை) ஆகும்.
அவர் இமாம் ஹசன் அஷ்கரியின் மகனாவார்.ஹசன் அஸ்கரி இமாம் அலி நாகியின் மகனாவார்.இமாம் அலி நாகி இமாம் முஹம்மத் தகியின் மகனாவார். இமாம் முகமத் தகி இமாம் அலி ரிதாவின் மகனாவார். இமாம் அலி ரிதா இமாம் மூஸா காசிமின் மகனாவார். இமாம் மூஸா காசிம் இமாம் ஜாபர் சாதிக்கின் மகனாவார். இமாம் ஜாபர் சாதிக் இமாம் முஹம்மத் பாகிரின் மகனாவார். இமாம் முஹம்மத் பாகிர் இமாம் ஜைனுல் ஆபிதீனின் மகனாவார். இமாம் ஜைனுல் ஆபிதீன் இமாம் ஹுசைனின் மகனாவார். இமாம் ஹுசைன் இமாம் அலி பின் அபூதாலிபின் மகனாவார்."
இமாம் அபு ஹனிபாவின் மாணவர்களில் ஒருவர் இமாம் முஹம்மத் பின் யூசுப்.
இவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். இவரது நூல்கள் அநேகமாக எல்ல மதரசாக்களிலும் பாட நூலாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவர் தனது ' கிதாயதுல் தாலிப் என்ற கிரந்தத்தில் இமாம் ஹசன் அஸ்கரி (அலை) அவர்களின் மறைவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "இமாம் அலி அஷ்கரி மறையும் பொழுது முஹம்மத் என்கிற சிறுவரைத் தவிர அவருக்கு வேறு பிள்ளைகள் இருக்கவில்லை. அவரது குழந்தை தான் இமாம் முன்திசார் (எதிர்பார்க்கப் பட்ட இறுதி இமாம்) ஆகும்" என்று பத்நிதுள்ளார்.
இப்னு ஸாபாக் மாலிகி என்பவர் மாலிகி மத்ஹபின் ஒரு பிரபல இமாம்.
அவர் தனது 'புஸுள் அல் முஹிம்மா' (முக்கியமான செய்திகள்) என்கிற நூலில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பற்றி இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்.
"அஹ்லுல் பைத் ஆதரவாளர்களின் பன்னிரெண்டாவது இமாம் அபு முஹம்மத் ஹசன் காசிமின் மகன் அபு அல் காசிம் முஹம்மத் ஆவார்.இவரை ஹுஜ்ஜத், கலாப் ஸலிஹ் என்றும் அழைப்பார்கள்" என்று கூறி இமாம் மஹ்தி (அலை)அவர்களின் வழிமுறைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் சபலன்ஜி ஷாபி மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவர்.இவர் தனது 'நூர் அல் அபஸார்' என்கிற கிரந்தத்தில் "முஹம்மத் என்பவர் ஹசன் அஷ்கரியின் மகனாவார்.இவரது தாயார் நர்ஜிஸ் அல்லது சாய்கால் அல்லது சவ்சான் என்று அழைக்கப் பட்ட அடிமைப் பெண்களில் ஒருவர்.அவர்களது வழிமுறை அபுல் காசிமில் இருந்து வருகிறது.அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இவரை ஹுஜ்ஜத், மஹ்தி, கலாப் ஸாலிஹ், காய்ம்,முந்தசார், ஷாஹிப் அல் ஸமான் (நிகழ காலத்தின் இமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள். என்று எழுதியுள்ளார்கள்.
சூபி தரீக்காக்களினால் ஏற்றுக் கொல்லப்பட்ட இன்னுமொரு இமாம் அப்துல் வாஹாப் அஷ் சஹாரானி. அவர் தனது 'யவாகித் வா அல் ஜவாகிர்' என்ற கிரந்தத்தில் "மஹ்தி இமாம் ஹசன் அஷ்கரின் மகனாவார்.அவர் ஷஹ்பான் மாதம் பதினைந்தாம் இரவு ஹிஜ்ரி வருடம் இருநூற்றி ஐம்பைத்து ஐந்தில் பிறந்தார்.தற்பொழுது மறைந்த நிலையில் இருக்கின்றார். இப்பொழுது ஹிஜ்ரி ஒன்பதாயிரத்து நூற்றி ஐம்பைத்து ஏழு.சுமார் எழுநூற்று மூன்று வருடங்களாக மறைந்துள்ள இவர் ஈசா (அலை) வருவதற்கு முந்திய காலப் பகுதியில் மீன்டும் தோற்றம் பெறுவார்".என்று சுமார் நானூற்று எழுபத்து ஐந்து வருடத்துக்கு முன்னரேயே எழுதி உள்ளார்.
இது எப்படி சாத்தியம்?
அல் குர் ஆனில் 'குகை' வாசிகளின் சரித்திரத்தில் இது போன்றே ஏழு அல்லது ஒன்பது இளைஞர்கள் சுமார் முந்நூறு அல்லது அதற்கும் அதிகமான காலங்கள் உயிரோடு இருந்த சம்பவம் பிரஸ்தாபிக்கப் பட்டிருப்பதை கவனியுங்கள்.
அதே போல உஜைர் (அலை) அவர்கள் சுமார் நூற்றி ஐம்பது வருடங்கள் தூங்கி விழித்து தனது சகோதரனை காண வந்த சமயம் இவர் இளைஞராகவும் இவரது சகோதரன் முதியவராகவும் இருந்த சம்பவமும் அல் குர் ஆனில் உள்ளது.
இதனை விடவும் நபி ஈசா (அலை)அவர்கள் இன்று வரை உயிருடன் இருப்பதை நாம் விசுவாசிக்கிறோம்.
கிழ்ர் (அலை) அவர்கள் பற்றிய சரித்திரமும் இதை போன்றதே.
ஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பும் மறைவும் சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் அஹ்லுல் பைத்களின் எதிரிகளினால் திட்டமிட்ட முறையில் சிதைக்கப் பட்டன.
இதனால், எமக்கு அந்த சம்பவங்களின் நம்பகத் தன்மையில் சந்தேகமும், நம்பிக்கை இன்மையும் தோன்றி உள்ளன.
ஏனெனில், நாம் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான கருத்து சூழலிலேயே பிறந்தோம்.அதிலேயே வளர்ந்தோம்.அந்த நம்பிக்கைகளிலேயே இறந்தும் போகிறோம்..
இமாம் மஹ்தி (அலை) அவர்களின் தலைமைத்துவத்தையும், அவர்கள் எங்கள் காலத்து இமாம் என்கிற நம்பிக்கையில் பிறக்கின்ற ஒரு தலைமைத்துவத்தில் பிறக்கின்ற கட்டுப் படும் அழகையும் கவனியுங்கள்.
இமாம் மஹ்தி (அலை) அவர்களை இமாமாக ஏற்றுக் கொண்டுள்ள அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களிடம் நீங்கள் "உங்களுடைய இமாம் யார்?" என்று கேட்டால் அவர்கள் அனைவரும் எதுவித தயக்கமும் இன்றி "இமாம் மஹ்தி" என்று ஒருமித்து பதில் கூறுவார்கள்.
"அப்படி என்றால் இப்பொழுது உங்களை வழி நடாத்தும் உங்களது மார்க்க அறிஞர்கள் யார்?" என்று மீன்டும் ஒரு கேள்வியை நாம் கேட்டால் "அவர்கள் அனைவரும் இமாம் மஹ்தி (அலை) உடைய பிரதிநிதிகள் " என்று அவர்களிடம் இருந்து பதில் வரும்.
இந்த நிலையில் நாம் எல்லோரும் ஒருமித்து ஏற்றிருக்கிற இமாம் மஹ்தி (அலை) தோற்றம் பெற்றால் அஹ்லுல் பைத்களின் பிரதிநிதிகளான அவர்களது மார்க்க அறிஞர்கள் அவரது தலைமையில் ஒன்று படுவார்கள். அதே போல அந்த அறிஞர்களின் பின்னால் இருக்கின்ற மக்களும் ஒரு குடையின் கீழ் ஒன்று படுவார்கள்.
ஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களை சரியாக அறியாத சுன்னி முஸ்லிம்களான எங்களது நிலை என்ன?
அஹ்லுல் பைத் ஆதரவாளர்களின் கூட்டத்தில் ஒரேயொரு இமாம்.
அவர்தான் இமாம் மஹ்தி (அலை).
மற்ற அனைத்து அறிஞர்களும் இமாம் மஹ்தி (அலை) உடைய பிரதிநிதிகளே தவிர 'இமாம்' என்கிற தலைமைத்துவப் பட்டம் அவர்களுக்கு வழங்கப் படுவது இல்லை.
ஆனால், சுன்னிகளான எமக்கு எத்தனை இமாம்கள்?. எத்தனை பிரிவுகள்?
இஸ்லாம் புத்தகம் எழுதுபவர்கள் எல்லாம் எமக்கு இமாம். இஸ்லாம் பேசுகிறவர்கள் எல்லாம் எமக்கு இமாம்..
பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துபவர்கள் எல்லாம் எமக்கு இமாம்.
எங்களது இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் எமக்கு இமாம்.
எங்களது உலமாக்கள் எல்லாம் எமக்கு இமாம்.
இஸ்லாமிய சர்வகலாசாலை பேராசிரியர்கள் எல்லாம் எமக்கு இமாம்.
இந்த இமாம்களை எல்லாம் எங்களது இமாம்கள் என்று நம்பி வாழ்ந்து மரணித்தபிறகு இன்னொரு பெரும் சோதனை எங்களது மையத்துக்கு வருகிறது.
அது என்ன?
மரணித்து மையத்தை கப்ரில் வைத்து தல்கீன் ஓதும் போது அந்த மையத்தின் இமாமாக இருந்த இமாம் உடனே தான் தப்பிக் கொள்வதற்காக அந்த மையத்துக்கு ஒரு பொய்யை சொல்லிக் கொடுப்பார்."முன்கர் , நகீர் என்ற மலக்குகள் வந்து உங்களிடம் உங்களது இமாம் யார்? என்று கேட்பார். அதற்கு நீங்கள் "அல் குரான் எனது இமாம்' என்று சொல்லுங்கள்????"
தப்பித் தவறி இமாம் மஹ்தி (அலை) எங்கள் மையத்தின் இமாமாக இருக்க, எமது மையம் இப்படி பதில் சொன்னால் எமது கதி என்னவாகும்?
நாங்கள் மனதார நம்பிய எமது இமாமே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட , நாங்கள் எங்கே ஓடுவது?
எவ்வளவு பெரிய அநியாயத்தில் எங்களது சமூகம் சிக்கி சீரழிந்து கிடக்கிறது எனபது புரிகிறதா?
இந்த அபாயத்தில் இருந்து நாம் எப்படி தப்புவது?
"ஹுதைபா அல் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.அது என்னை தீண்டி விடுமோ என்று அஞ்சியதே அதற்குக் காரணம்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக்கால மாச்சரியத்திலும் தீமையிலும் முழ்கிக் கிடந்தோம்.அப்போது அல்லாஹ் இஸ்லாம் என்ற இந்த நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான்.இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை இருக்கிறதா? எனக் கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஆம். இருக்கிறது!" என்றார்கள்.
நான்"அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை இருக்கிறதா?" எனக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை இருக்கும்" என்று பதில் சொன்னார்கள். நான் "அந்த கலங்கலான நிலை என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் "ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை இல்லாததை கடை பிடிப்பார்கள். எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு வழி காட்டுவார்கள்.அவர்களில் நீ நன்மையையும் காண்பாய். தீமையையும் காண்பாய்" என்றார்கள்.
நான் "அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?" எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்.நரகத்தின் வாசல்களில் நின்றுக் கொண்டு அதற்கு அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள்.அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எரிந்து விடுவார்கள்." என்று பதிலளித்தார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களை எங்களுக்குத் தெரிவியுங்கள் "என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் நம் இனத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.நம் மொழிகளையே பேசுவார்கள்" என்று பதில் அளித்தார்கள்.
நான் " அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்கு கட்டளையிடுகிறீர்கள்" எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் " நீ முஸ்லிம்களின் ஜமாத்தையும் அதன் இமாமையும் பற்றிப் பிடித்துக் கொள்" என்று பதில் அளித்தார்கள்.
அதற்கு நான் "அவர்களுக்கு ஒரு ஜமாஅத்தோ இமாமோ இல்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்களை விட்டும் நீ ஒதுங்கி விடு.ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்க இறப்பு உன்னை தழுவினாலும் சரி." என்று பதில் அளித்தார்கள்.
(ஆதாரம் ; முஸ்லிம் - பாகம் மூன்று ஹதீத் இலக்கம் 3764 )
2 comments:
தகவலுக்கு நன்றி, பன்னிரண்டாவது இமாம் என்பது ஷியாக்களின் கொள்கை
என்றுதான் மெத்தனமாக இருந்தேன். நம்மவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்
என்பதை அறிந்து ஆச்சர்யம்.
எமது இணைய நண்பர் 'அரபுத் தமிழனுக்கு,
உங்களது அன்பான கருத்துக்களுக்கு நன்றி.
பன்னிரெண்டு இமாம்களைப் பற்றி புகாரி, முஸ்லிம் ஹதீத் கிரந்தங்களிலும் ஆதரங்கள் உள்ளன.
இன்ஷா அல்லாஹ் விரைவில் அந்தத் தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றோம்.
Post a Comment