அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, January 9, 2011

வெள்ளி தோறும் தவறும் ஒரு பொன்னான தருணம்
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு -


ஒரு வௌ்ளிக் கிழமை!


ஜும்ஆ தொழுகைக்கு கொள்ளுப்பிட்டி பள்ளி வாசலுக்கு சென்றிருந்தேன்.


அன்று


மிகவும் அற்புதமான ஒரு பிரசங்கம்.


முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய, அவரது தனித்தன்மை, முக்கியத்துவங்கள் என்பவற்றை தெளிவாக விளக்குகின்ற அற்புதமான பிரசங்கம்.


அதைப் போன்றதொரு பிரசங்கத்தை நான் இன்றுவரை கேட்டது இல்லை.


ஜும்ஆவுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் வாய் பிளந்து, விழி பிதுங்கி ஆடாமல் அசையாமல் அந்த பிரசங்கத்தில் லயித்து போய் இருந்தார;கள்.


நானும் கூடத்தான்.


பிரசங்கத்தில் சில கட்டங்களில் மக்கள் முகத்தில் மலர்ச்சி! சில கட்டங்களில் அதிர;ச்சி! சில கட்டங்களில் கண்களில் கண்ணீர் என்று எங்களை பலவகையான உணர்வுகளில் அலைக்கழித்தார் அந்தப் பிரச்சாகரிர். அந்தப் பிரச்சாகரின் முகத்தில் அற்புதமான ஒரு ஒளி வீசியது.சாம்பல் நிற குர்தா அணிந்திருந்தார;.


அந்த குர்தாவுக்கு மேலால் கறுப்பு நிற ஜுப்பா போட்டிருந்தார். தலையில் கறுப்பு நிற தலைப்பாகை அவரது தோற்றத்துக்கு இன்னும் வசீகரத்தைக் கொடுத்தது.


முதலாவது குத்பாவை முடித்து அமர்ந்தார்.


ஆணி அடித்தது போல அசையாமல் அமர்ந்திருந்த மக்கள் இப்பொழுதுதான் மெதுமெதுவாக அசைந்து இலாவமாக அமரத் தொடங்கினர்.


மயான அமைதி!


காதுகளில் ஒரு நீர் வீழ்ச்சியின் ரீங்காதாரத்தைப் போல கேட்டுக் கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய புகழுரைகள் திடீரென நின்று விட்டாலும் - எல்லோருடைய மனத்திலும் நிறைந்து போன அந்த உரைகள் அந்த மயான அமைதியிலும் - மீண்டும் - மீண்டும் காதுகளில் ரீங்கரித்தன.


ஹஸரத் இரண்டாவது குத்பாவுக்காக எழுந்தார்.


இரண்டாவது குத்பாவை ஓதத்துவங்கினார்.


நான் மிக ஆவலுடன் இரண்டாவது குத்பாவின் ஒரு கட்டத்துக்காக காத்திருந்தேன். அது ஒரு


அற்புதமான கட்டம்.


எல்லோரும் மிக எளிதாக அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்ததாக எமது நன்மை தட்டுகளில் ஒரு கனமான நன்மையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான தருணம்.


நான் காத்திருந்தேன்.


என்னைப் போல் பலரும் அந்த அற்புதமான தருணத்துக்கு தவமிருந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.


ஹஸரத் இரண்டாவது குத்பாவில் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.


இரண்டாவது குத்பாவில் ஓத வேண்டிய, சொல்ல வேண்டிய வாக்கியங்களை அரபு மொழியில் அழகாக ஓதினார். விளக்கினார்.


ஷிஆ, சுன்னி வேறுபாடுகளைக் களைந்து, தௌஹீத், ஹுப்புள் அவ்லியா, தரீக்கா, தப்லீக் ஜமாஅத் ஆகிய வேறுபாடுகளையும் களைந்து எல்லோரும் ஏகமனதாக ஏற்றிருக்கின்ற அத்தஹிய்யாத்தில் நாம் ஓதுகின்ற ஸலவாத்தே இப்றாஹிமிய்யாவை ஹஸரத் ஓதினார்.


ஆனால் -


நானும் என்னைப் போன்றவர்களும் எதிர்பார்த்திருந்த தருணத்தை அல்லது வாய்ப்பை எமக்குத் தராமலேயே அவர் ஜும்ஆ பிரசங்கத்தை முடித்து எமக்கு மிகவும் ஏமாற்றமாகிப் போனது.


அப்படி அவர் எதைத்தான் தவற விட்டார;?


இரண்டாவது குத்பாவில் ஒரு இறைவசனம் காலம் காலமாக மிகவும் பேணுதலாக ஓதப்பட்டு வருகிறது.


அந்த இறை வசனத்தில் அல்லாஹுசத்தஆலா ஒரு காரியத்தை செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிடுகின்றான்.


அல்லாஹ் எமக்கு கட்டளையிடுவதாக அந்த இறை வசனத்தை ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தும் உலமா எமக்கு அறிவித்தவுடன் அந்த கட்டளைக்கு உடனடியாக அடிபணியும் வாய்ப்பையும் அந்த ஜும்ஆவில் அல்லாஹுத்தஆலா எமக்கு அமைத்துத் தந்துள்ளான்.


ஆனால் -


தூரதிஷ்டவசமாக ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தும் மதிப்பிற்குரிய உலமா அந்த இறை வசனத்தை ஓதத் தவறினால் - அல்லது ஓதா விட்டால் எம்மால் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் நன்மையை பெறுகின்ற பொன்னானதொரு வாய்ப்பை நாம் இழந்து விடுகின்றோம்.


அந்த இறைக் கட்டளையும், அந்தக் கட்டளைக்கு அடிபணியும் வாய்ப்பும் தான் என்ன?


இனி -
ஹஸரத் ஓதத் தவறிய, அல்லது ஓதாமல் விட்ட அந்த குர்ஆன் ஆயத்தை கவனியுங்கள்.


“இந்த நபியின் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்கின்றான். மலக்குகளும் அவர்மீது ஸலவாத் சொல்கின்றனர். முஃமின்களே! நீங்களும் அவர்மீது ‘ஸலவாத்’ சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
(33 : 56)


இந்த அல்குர்ஆனின் புனித வசனத்தை தொன்று தொட்டு இரண்டாவது குத்பாவில் உலமாக்கள் ஓதி வந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த நிஜம்!


இந்த ஆயத்தை அவர் ஓதிய அடுத்த வினாடி - பள்ளியில் அமர்ந்திருக்கின்ற அனைவரும் உடனே எம் பெருமானானர; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ‘ஸலவாத்’ சொல்ல துவங்கி விடுவார்கள்.


இங்கே அல்லாஹ்வின் ஒரு கட்டளையை கௌரவத்துக்குரிய உலமா எமக்கு அறிவிக்க - உடனே அதனை ஏற்று ஸலவாத் சொல்கின்ற அனைவரும் அல்லாஹ்வின் அந்த கட்டளைக்கு அடிபணிந்த நன்மையை பெற்றுக் கொள்கின்றார்கள்.


எவ்வளவு அருமையான செயல்திட்டம்


ஆனால் -


இன்று, இந்த அரிய காட்சியை எம்மால் குத்பாக்களில் காண முடிவது இல்லை.


நவீன வாதத்துக்கு பலியாகிப் போன அல்லது மூதாதையரின் செயல்களுக்கு முரணான முறையில் நடக்க விரும்புகின்ற உலமாக்கள் தங்களது குத்பாக்களில் இந்த புனித அல்குர்ஆன் ஆயத்தை ஓதுவதைத் தவிர்த்து -


நிறைவான முறையில் நபி (ஸல்) அவர்கள் மீது ‘ஸலவாத்’ மட்டும் குறைவின்றி கூறிவிடுகிறார்கள்.


அன்று கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பிரசங்கத்தின் தோரணையும், இரண்டாவது குத்பாவில் அந்த வசீகர உலமா விட்ட தவறையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.


ஜும்ஆ தொழுகை தொழுதாகி விட்டது.


அல்ஹாஜ் முனவ்வரும், சகோதரர் ரீஸாவும் மும்முரமாக அந்த குத்பா உரையை வானொலியில் அஞ்சல் செய்யத் தொடங்கி இருந்தனர்.


அந்த உலமாவும் அவரது ஓய்வு அறைக்கு சென்றிருந்தார்.


அவருடன் கூடவே நிறைய பேர் அவரது அறைக்கு சென்றனர். நானும் அவர்களைத் தொடர்ந்தேன்.


அந்த உலமாவின் அறைக்கு அவருடன் கூடவே வந்தவர்களில் அநேகர் அவரை நன்கு தெரிந்திருந்தவர்கள்.


நான் மட்டும் புதியவன்.


உலமா என்னைப் பார்த்து வசீகரமாக முறுவலித்தார். அதே சமயம் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டும் இருந்தார்.


எல்லோரும் விடைபெறும் வரை நான் காத்திருந்தேன்.


சிறிது நேரத்தில் எல்லோரும் சென்றுவிட, நானும் அந்த உலமாவும் தனித்து விடப்பட்டோம்.


சுமுகமான அறிமுகப் படலம் தொடர்ந்தது.


அவரது பிரசங்கத்தின் அருமையையும், ஆழத்தையும் எடுத்து சொல்லி அவ்வாறான பிரசங்கம் செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.


என்னுடைய பாராட்டை மிகவும் பணிவுடன் அவர் ஏற்றுக் கொண்டார்.


அதன் பின்னர; - நான் எனது மனத்தில் துறுத்திக் கொண்டிருந்த நெருடலை மெதுவாக அவரிடம் ஒப்புவித்தேன்.


என்னை ஆழமாக நோக்கிய அவர் “நான் இரண்டாவது குத்பாவில் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ‘ஸலவாத்’ சொன்னேனே?” என்றார்.


நான் அவரிடம். “ஆம்! ஸலவாத் சொன்னீர்கள்! ஆனால், அந்த ‘ஆயத்தை’ ஓதவில்லையே?” என்றேன்.


“அந்த ‘ஆயத்’ முக்கியம் இல்லை! ஆனால், ‘ஸலவாத்’ ஓதுவதுதான் அவசியம்” என்று அவர; எனக்கு பதில் தந்தார;.


“நீங்கள் கூறுவது சரி” என்று சொன்ன நான் “ஆனால், அந்த ஆயத்தை ஓதி விட்டு அதன் பின்பு நீங்கள் ‘ஸலவாத்’ சொன்னால், அந்த ஆயத்தை கேட்டுவிட்டு அதற்கு கட்டுப்பட்ட நிலையில் நாங்களும் ‘ஸலவாத்’ சொன்னால் - நாங்கள் அக்கட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்த மாதிரியான ஒரு சூழல் உருவாகின்றது அல்லவா?” என்று அவரைக் கேட்டேன்.


சில கணங்கள் மௌனமாக ஆழமாக சிந்தித்த அந்த உலமா - “ஆம்! நீங்கள் சொல்வது சரி! நான் அந்த ஆயத்தை ஓதினால் அவ்வாறான ஒரு கட்டம் உருவாகின்றது” என்றார்.


உங்களுக்கும், எனக்கும் பரிச்சயமான - உண்மையை உடனே ஏற்றுக் கொண்ட அந்த உலமா வேறுயாருமில்லை!


அவர;தான் காத்தான்குடி மக்களாலும், இலங்கை மக்களாலும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற காத்தான் குடியை பிறப்பிடமாகக் கொண்ட யஹ்யா மௌலவி ஆவார்.
இந்த சம்பவத்தின் நம்பகத்தன்மையை யஹ்யா மௌலவியை அறிந்தவர்களால் விசாரித்து உணர்ந்து கொள்ள முடியும்.


அது மட்டுமன்றி காத்தான் குடி யஹ்யா மௌலவி கிழக்கிழங்கை ஜம்மிய்யாவினதும், இலங்கை ஜம்மியதுல் உலமாவினதும் மூத்த மிக முக்கிய உறுப்பினர்.


பழையதொரு சம்பவத்தின் இனிமையான நினைவுகளை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள காரணமும் இருக்கிறது -


ஏனெனில் -


சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு ஹனபி பள்ளிக்கு ஜும்ஆவுக்கு சென்றிருந்தேன். உலமா - உருது மொழியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.


அது அதிகம் அதிகம் ஸலவாத் கூறப்படுகின்ற பள்ளி வாசல் என்பது உங்களுக்குத் தெரியும்.


ஆனால் -


அன்றைய இரண்டாம் குத்பாவிலும் நாம் மேலே எடுத்து சொன்ன ஆயத் அலட்சியப்படுத்தப்பட்டதை கவனித்தேன்.


சென்ற மாதம் தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு குத்பாவுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.


ஆங்கில மொழியில் சரளமாகவும், மிகவும் தெளிவாகவும் ஒரு இளம் உலமா உரையாற்றினார்.


அவரது உரையில் அடிக்கடி அவர் ‘அல்லாஹு அக்பர்!’ ‘அல்லாஹு அக்பர்!’ எனக் கூறியது மிகவும் வசீகரமாக இருந்தது.


ஆனால் பரிதாபம் -


இரண்டாவது குத்பாவில் நாம் தவமிருந்த அந்த அல்குர்ஆன் ஆயத்தை ஓதும் தருணத்தை தவிர்த்ததன் மூலம் எமக்கு அந்த அரிய வாய்ப்பை தடுத்து விட்டார்.


சென்ற வாரம் ஜும்ஆ தொழுகையை கொழும்பு மெராய்ன் டிரைவ் பள்ளி வாசலில் தொழும் வாய்ப்பு கிடைத்தது.


ஹம்பாந்தோட்டையை சேர்ந்த ஒரு மலே இளம் உலமா பிரசங்கம் செய்தார;.


அருமையான பிரசங்கம்


ஆனால் அவரும் இரண்டாவது குத்பாவில் அந்த ஆயத்தை ஓதவில்லை.


விளைவு -


நாம் மீண்டும், மீண்டும் அந்த பொன்னான வாய்ப்புக்களை இழந்து வருகிறோம்.


இந்த செய்கை ஒரு வகையான அழகான மோசடி என்று நான் எண்ணுகிறேன்.


இன்னொரு வகையில் சொன்னால் இது எங்களது உரிமை மீறலும்கூட.


நாம் அனைவரும் மரணத்தின் பின்னர் எமக்கு ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை மிகவும் தீவிரமாக விசுவாசித்து இருக்கிறோம்.


சங்கடங்களில் மாட்டிக் கொண்ட மனிதன், அதில் இருந்து தப்புவதற்காக எவ்வகையான உத்தியையும் உபயோகிக்க தயங்கமாட்டான் என்பது நாம் அறிந்த நிஜமாகும்.


குத்பாக்களில் தவறிப்போன இந்த தருணங்கள் அவனுக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்று மறுமையில் அவன் தப்பித் தவறி உணர்ந்தால்,


இந்த தருணங்கள் தவறி விடுவதற்கு காரணமாக இருந்த உலமாக்களில் நிலை மிகவும் பயங்கரமாகவும், சங்கடமாகவும் இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.


ஏனெனில் -


நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை இப்படி சொன்னார்கள்.


“ஆதமின் மகன் சிலபோது சில வார்த்தைகளை சொல்கிறான். அவன் அதைப்பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வது இல்லை. ஆனால், அந்த வார்த்தையானது இறைவனுக்கு மிகவும் திருப்தியை கொடுத்திருக்கும். அதன் காரணமாக அவன் அந்த வார்த்தையை சொன்னதினால் மேலான சுவனத்தை அடைந்து கொள்வான்.


“ஆதமின் மகன் சிலபோது சில வார்த்தையை சொல்வான். அதைப் பற்றி அவன் அவ்வளவு அலட்டிக் கொள்வது இல்லை. ஆனால் அவன் அலட்சியமாக கருதிய அந்த வார்த்தை இறைவனுக்கு சினத்தை ஏற்படுத்தி விடும். அதன் காரணமாக, அந்த வார்த்தையை சொன்னதற்காக அவன் சேருமிடம் நரகமாக இருக்கும்”


ஆக்கம் :- அப்துல் றஸ்ஸாக்

நிறைவு

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad