அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, November 12, 2011

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????
துல் ஹஜ் மாதம் முஸ்லிம்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.


இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான நாயகன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.


இதே மாதத்தில் ஒரு நாளில்தான்  ஆபிரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினரை அபாபீல் என்கிற சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் அழித்து ஒழித்தான்.


அதே போல, இஸ்லாமிய தலைமைத்துவ   நியமன நன் நாள் பற்றிய இந்த சம்பவம் கூட ஹிஜ்ரி பத்தாம் வருடம் துல் ஹஜ் மாதம் பிறை பதினெட்டில் தான் நடைபெற்றிருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்'  என்ற இடத்தில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்கள் இன்றும் கொண்டாடி வரும் இந்த பெரு நாளுக்கான சம்பவம் நடை பெற்றதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

இப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள் எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.

ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து திடீரென அல்லாஹ்வின்  புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.

""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன்  தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5   :   67   )

இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டு விட்ட நிலையில் இதென்ன சொல்லப் படாத இன்னுமொரு முக்கிய விடயம் என்று சஹாபாக்கள் குழம்பிப் போனார்கள்.


அருளப் பட்ட ஆயத்தின் படி நபி (ஸல்) அவர்கள் சொல்லுகின்ற இந்த செய்தி தான் இறைவனின் தூதை முழுமைப் படுத்தப் போகிறது என்கிற தோரணையில் அந்த ஆயத் ஒலித்தது.

மனிதர்களுக்கு ஏதோ விதத்தில் தயங்கித்தான் இதை இன்னும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை எனபது போலவும் அது தெரிந்தது.

அத்தகைய மக்களை அலட்சியப் படுத்தி விட்டு அந்த இறை செய்தியை ஏனைய மக்களுக்கு அறிவிக்குமாறு இப்பொழுது "வஹி" அருளப்பட்டு விட்டது.

அது என்ன செய்தி?

மக்களை வழி கெடுக்கும் தஜ்ஜாலின் தலைமைத்துவத்துக்கு எதிரான , இறுதி நாள் வரை தீர்மானமாக இருக்கப் போகின்ற "இஸ்லாமிய தலைமைத்துவம்" பற்றிய செய்தி சொல்லப் படப் போகிறது.

சஹாபாக்கள் ஆவலோடு நபி (ஸல்) அவர்கள் சொல்லப் போகும் செய்தியைக் கேட்க காத்திருந்தார்கள்.

இந்த ஆயத் அருளப் பட்ட உடனேயே உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திலே தரித்து நின்று உடனே, தம்முடன் வந்தவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள்.

சேய்த் இப்னு அர்கம் அறிவித்ததாக அபூ துபைல் அறிவிக்கும் இந்த அறிவிப்பு அல் ஹாகிம் உடைய அல் முஸ்ததர்க்கில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது:

"நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பும் வழியில் 'கதீர் கும்' என்கிற இடத்தில் திடீரென நின்றார்கள்.

"அவர்களுடன் வந்த அவரது தோழர்களுக்கு அவ்விடத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்யுமாறு வேண்டினார்கள்.

"தோழர்களும் மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்தார்கள்.

"அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் கட்டளைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

"நான் உங்கள் மத்தியில் இரண்டு பெறுமதியான பொக்கிஷங்களை  விட்டு செல்கிறேன். அதில் ஒன்று மற்றையதை விட பெறுமதி கூடியது.

"அவை இரண்டும், அல்லாஹ்வின் வேதநூலும், எனது குடும்பத்தவர்களான எனது அஹ்ளுல்பைத்களுமாகும். அவை இரண்டின் விஷயத்திலும்  மிகக் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை இரண்டும் மறுமையில் நியாய தீர்ப்பு நாளில் நீர் தடாகத்திடம் என்னை சந்திக்கயும் வரை ஒன்றை விட்டும் மற்றொண்டு ஒரு போதும் பிரியப் போவது இல்லை."

இதனை சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னார்கள்."நிச்சயமாக அல்லாஹ் எனது 'மௌலா'வாகும்.(பாது காவலன் அல்லது தலைவன்).அனைத்து விசுவாசிகளுக்கும் நான் மௌலாவகும்.(பாது காவலன் அல்லது தலைவன்)யார் யாருக்கு எல்லாம் நான் மௌலாவோ அவர்களுக்கு எல்லாம் இந்த அலி மௌலாவாகும் (பாது காவலன் அல்லது தலைவன்).


"அலியை நேசிப்பவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அலியுடைய விரோதிகளுடன் அல்லாஹ்வும் விரோதம் கொள்கிறான்.


(ஆதாரம்; அல் முஸ்த்தாதர்க் மூன்றாம் பாகம் பக்கம் 109 )

நபி (ஸல்) இந்த உரையை அவரது சஹாபாக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்தவுடன் இமாம் அலியிடம் வந்த உமர் (ரலி) இமாம் அலிக்கு பைஆத் செய்துவிட்டு சொன்னார்கள் " அபூதாலிபின் புதல்வரே! என்னுடைய நல் வாழ்த்துக்கள் உங்கள் மீது உண்டாகட்டும். இன்று காலை நீங்கள் பெரும் அருள்  பெற்றவராக  மாறி விட்டீர்கள்.இன்று நீங்கள் அனைத்து மூமின்களினதும் ஏகோபித்த தலைவராக ஆகி விட்டீர்கள்"

மீர் செய்யிது அலி ஹமாதாணி என்பவர் ஸாபி மத்கபின் முக்கிய அறிஞர்களில் ஒருவர்.

அவர் அவரது மவத்தாத் அல் குர்பாவில் (ஐந்தாம் பாகம்) உமர் (ரலி) சொன்னதாக பிவருமாறு அறிவிக்கிறார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் கதீர் கும் மில் வைத்து சஹாபாக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் பொழுது உமர்  (ரலி) க்குப் பக்கத்தில் அழகிய வாட்ட சாட்டமான ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்தார்.


அவரை உமர் (ரலி) இதற்கு முன்னர் எங்குமே காணவில்லை.


நபி (ஸல்) அவர்கள் இமாம் அலியின் கையை உயத்தி அவரை மூமின்களின் தலைவராக நியமித்ததன் பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த வாட்ட சாட்டமான அந்த வாலிபர்"  நிச்சயமாக இது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் ஒப்பந்தப் பத்திரமாகும்."நயவஞ்சகர்களை தவிர வேறு எவரும் இந்த ஒப்பந்தத்தை முறிக்க மாட்டார்கள்." என்ற அவர் உமரை நோக்கி "உமரே ! நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முறிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். " என்று கூறி இருக்கிறார்.


இந்த சம்பவத்தை உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது , நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) யை நோக்கி "அது உண்மையை உங்களுக்கு சொல்லித் தந்த ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்" என்று சொன்னார்கள்.

அன்றைய தினம் அங்கு சமூகம் அளித்து இருந்த அனைத்து சஹாபாக்களும் இமாம் அலியை தங்களது தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அவருக்கு பைஆத்தும் செய்தார்கள்."

அதில் முதலாவது நபர் உமர் (ரலி) ஆவார்கள்.

இஸ்லாத்துக்குள் ஊடுருவி இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அந்தப் பிரசங்கத்தையும், முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவம் பற்றிய விடயங்களையும் திரிபு படுத்தி குழப்பி விட்டார்கள்.

அதன் நிகழ் கால விளைவாக ஒரே அல்லாஹ்வை, ஒரே நபி (ஸல்) அவர்களை ஏற்று ஒற்றுமையாக இருக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் கருத்து வேற்றுமைகளில் துண்டாடப் பட்டும், துண்டாடப் பட்ட முஸ்லிம் சமூகம் வாழும் நாடுகள் எல்லைகளாகப் பிரிக்கப் பட்டும் , எல்லைகளாக பிரிக்கப் பட்ட முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தின் எதிரிகளால் ஆக்கிரமிக்கப் பட்டும்  சூறையாடப் பட்டுக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

ஆனால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் "கதீர்கும் " சம்பவம்  நடைபெற்ற துல் ஹஜ் பிறை பதினெட்டாம் தினத்தை இமாம் அலியின் முஸ்லிம் உம்மாவின் மீதான அவரது ஆன்மீக உலகாயுத தலைமைத்துவத்தை பிரகடனம் செய்யும் நிகழ்ச்சி நடை பெற்ற நாள் என்று கூறி இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நன் நாளை ஒரு பெரு நாளாகவே இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால், நாம்?

எங்களது மனத்தில் இந்த நன் நாளைப் பற்றிய எதுவித முக்கியத்துவமும் இல்லை.

எங்களது மனத்தில் இந்த நாளைப் பற்றிய முக்கியத்துவம் சிதைந்துப் போவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்துப் பார்க்கையில் பல அதிர்ச்சியான செய்திகள் நம் முன்னே பளீரிடுகின்றன.

அப்படி என்ன அதிர்ச்சியான செய்திகள்?

தன்னுடன் இருந்த சஹாபாக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருந்த நபி (ஸல்) அவர்கள் தனது மறைவுக்கு முன்னர் இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்தை ஒரு ஆவணமாக எழுதுவதற்கு முயற்சித்து இருக்கிறார்கள் எனபது அதில் முக்கியமானதாகும்..

ஆனால் அப்படி எழுதப் படுவதை சில சஹாபாக்கள் தடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்று தேடிப் பார்க்கையில் எங்களையே நம்ப முடியாத நிலையில் ஹசரத் உமரும் அவரது ஆதரவாளர்களும் அந்த செயலின் நாயகர்களாக இருந்திருப்பது புரிகிறது. 


அதனால், இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனப் பத்திரம் நபி (ஸல்) அவர்களினாலேயே எழுதப் பட்ட ஆவணமாக எங்களுக்கு கிடைக்காத துரதிர்ஷ்ட நிலை எங்களது சமூகத்துக்கு ஏற்பட்டது.

அந்த சம்பவம் பற்றிய ஹதீத் அறிவிப்பு புகாரி ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவாகி உள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய மரண வேதனை அதிகமான பொழுது  நபி (ஸல்) அவர்கள் "என்னிடம் ஒரு ஏடு கொண்டு வாருங்கள். எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன்" என்றார்கள்.

அப்பொழுது அங்கே இருந்த உமர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது. நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது. அது நமக்குப் போதுமானது.நபிகளார் சொல்வதை எழுதத் தேவை இல்லை" என்றார்கள்.

உமர் (ரலி) உடைய கருத்துக்கு முரண் பட்ட சில சஹாபாக்கள் "இல்லை. நாம் அதை எழுத வேண்டும்" என்றார்கள்.

உடனே அங்கே இருந்த சஹாபாக்கள் இரு குழுவினராக பிளவு பட்டு கூச்சலும் குழப்பமும் மிகுந்து விட்டன.

இதை கண்ட நபி (ஸல்) அவர்கள் "என்னை விட்டும் விலகி சென்று விடுங்கள்.என் முன்னால் இப்படி கூச்சலிடுவது கூடாது" என்று சொல்லி அவர்கள் அனைவரையும் துரத்தி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுத நினைத்த கடைசி மரண சாசனத்துக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்து விட்ட சோதனை பெரும் சோதனை தான்" என்று கூறியவர்களாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெளியேறி விட்டதாக உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கிரரகள். (ஆதாரம்: புகாரி பாகம் ஒன்று 114 வது  ஹதீத்) .

அன்றைய தினம் அங்கே நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பல நம்பகமான அறிவிப்புகள் ஹதீத் கிரந்தங்களில் பதிவாகி இருக்கின்றன.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்.

இனி வரும் வருடங்களிலாவது நாம் துல்ஹஜ்  பிறை பதின் எட்டில் "கதீர் கும்" நாளை ஒரு கணம் நினைத்துப் பார்த்து அந்த நாளைக் கொண்டாட எங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போமாக.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad