அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, December 17, 2011

சோதனைகளின் மறுபக்கம்...........?????

சோதனைகளின் மறுபக்கம்...........?????




இஸ்லாமிய சமூக சேவை நிறுவனம் ஒன்றில் பணி புரியும் எம்முடைய நண்பர் ஒருவர் அவரின் மேமன் பாய் நண்பர் ஒருவரைப் பற்றி சொன்ன கதை இது.

எம்முடைய நண்பரின் அலுவலகத்தில் இஸ்லாமிய சமூக சேவைக்காக ஒரு தொகைப் பணத்தை வரவு செலவை மட்டிட்டு அந்த இயக்கத்தினர் நண்பரிடம் கொடுத்து வைத்து இருப்பார்கள்.

நண்பருக்கு அந்தப் பணத்தை சுதந்திரமாக செலவழிக்கும் உரிமை   கிடையாது.

அவருக்கு அனுமதிக்கப் பட்ட செலவை மாத்திரமே அவரால் செய்ய    முடியும்.

இந்த நிலையில் ஒரு நாள், அவரின் மேமன் பாய் நண்பர் அந்த அலுவலகத்தில் இருக்கும் பொழுது ஒரு பெண் வந்து யாசகம் கேட்டு   இருக்கிறாள்.

நண்பர் ஒரு உதவியும் அந்தப் பெண்ணுக்கு செய்யவில்லையாம்.

அதற்கான நிலையில் அவர் இல்லை போலும்.

அதனைக் கண்ட அவரின் நண்பர் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பண உதவி செய்து விட்டு, நமது நண்பரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து "யாராவது ஏதாவது கேட்டு இங்கே வந்தால் அவரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள்.குறைந்தது பத்து ரூபாயாவது கொடுத்து அனுப்புங்கள்." என்று உபதேசித்து இருக்கிறார்.

அதன் பின்னர் அந்த மேமன் பாய் நண்பர் அந்த இஸ்லாமிய இயக்கத்தின் அலுவலகத்துக்கு வரும் தோறும், பணம் கொடுத்து அந்தப் பணத்தை யாசிக்கும் மக்களுக்கு என்றே ஒதுக்கியும் வைத்திருக்கிறார்.

நமது நண்பருக்கு ஆச்சரியம்.

ஒரு நாள் அவர் தனது நண்பரிடம் அவர் இவ்வாறு செய்வதற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் "இது எங்களது பாட்டனாரின் வசிய்யத்." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து "எங்களது குடும்பத்தினர் இதனை தவறாமல் செய்து வருகிறோம்" என்றார்.

"வசிய்யத்தா?" என்று நண்பர் ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்.


அதற்கு அந்த மேமன் பாய் நண்பர் "எங்களது பாட்டனார் கொழும்பில் கடை வைத்திருக்கும் பொழுது யாராவது அவரிடம் ஏதாவது உதவி கேட்டு வந்தால் அவரின் தேவைகளை மறுக்காமல் தன்னால் முடிந்த அளவு நிறை வேற்றி வைப்பார்.அது மட்டுமன்றி, யாராவது அவரிடம் யாசித்தால் அவர்களை விரட்டவும் மாட்டார்." என்ற நண்பரின் நண்பர் தொடர்ந்து "ஒரு நாள் அவர் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று அவரின் வாழ்வில் நடந்தது..."என்றார்.




நமது நண்பர் ஆவலுடன் "என்ன நடந்தது?" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் "அன்றைய தினம் எனது பாட்டனார் கொஞ்சம் வேலைப் பளுவில் மூழ்கி இருந்திருக்கிறார்.அப்பொழுது அவரது கடைக்கு வந்த ஒரு சிறுமி அவரிடம் யாசித்து இருக்கிறாள்.தனது வேலையில் சிரத்தையாக இருந்த எனது பாட்டனார் அந்தச் சிறுமிக்கு எதுவும் கொடுக்காது 'போ...போய் பிறகு வா' என்று அந்த சிறுமியை துரத்தியிருக்கிறார்.

"எனது பாட்டனார் இந்த விடயத்தை அவ்வளவு கரிசனையாக எடுத்துக் கொள்ளவில்லை. நிஜத்தில் அவர் அந்த விடயத்தையே சுத்தமாக மறந்தும் போனார்.

"இது நடந்து சில நாள்களின் பின்னால் ஒரு நாள் எனது பாட்டனார் ஒரு கனவு கண்டிருக்கிறார்.

"அதில் அவர் நமது கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைகி வஆலிஹி வசல்லம் அவர்களின் தர்பாரில் இருக்கின்ற மக்களுடன் தான் இருக்கும் நிலையில் தன்னைக் கண்டிருக்கிறார். அதில் அவர் துரத்திய சிறுமி அந்த அவையில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு தட்டில் சில   இனிப்புக்களை வைத்து எல்லோருக்கும் பகிர்ந்துக் கொண்டு வந்திருக்கிறாள்.அவள் எனது பாட்டனாரை நெருங்கியவுடன் அவருக்கு அந்தத் தட்டை நீட்டுவதற்கு முன்னர் நபி சல்லல்லாஹு அலைகி வஆலிஹி வசல்லம் அவர்கள் பக்கம் திரும்பி "எனதருமைப் பாட்டனாரே! நான் இவருக்கு இதனைக் கொடுக்கவா வேண்டாமா?' என்று கேட்டிருக்கிறாள்.

"விடை என்னவென்று அறிந்துக் கொள்வதற்கு முன்னரேயே 'குப்'பென்று வியர்த்து விறுவிறுக்க எங்களது பாட்டனார் தூக்கம் களைந்து எழுந்து விட்டார்.

"அதன் பின்னர் அவருக்கு உறக்கம் வரவேயில்லை.

"விடிந்தவுடன் முதல் வேலையாக எங்களது இமாமிடம் ஓடிய எங்களது பாட்டனார் தான் கண்ட கனவைப் பற்றி முறையிட்டு   இருக்கிறார்.

"அதனைக் கேட்ட எங்களது இமாம் "உங்களிடம் யாசகம் கேட்டு வந்து நீங்கள் துரத்திய சிறுமி நிச்சயமாக நபி சல்லல்லாஹு அலைகி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்பத்தினரான பனு ஹாஷிமிகளைச்   சேர்ந்த ஒரு சிறுமியாகத்தான் இருந்திருக்க வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.


"அன்று மிகவும் கலக்கத்துடன் வீடு வந்த எங்களது பாட்டனார் அதன் பின்னர் அவர் மரணிக்கும் வரை யாசிப்பவர்களைத் துரத்தவில்லை.எங்களுக்கும் அவ்வாறு துரத்துமாறு சொல்லவில்லை.மாறாக அப்படி வருபவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் பரீட்சார்த்தமான சோதனைகளை சுமந்து வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பவேண்டாம் என்று வசிய்யத் செய்து விட்டுப் போய் இருக்கிறார்" என்றாராம்.

அதனைக் கேட்ட நமது இஸ்லாமிய சமூக சேவைகள் செய்யும் இயக்கத்தின் நண்பர் பேச்சிழந்து போய் நின்றாராம்.

ஏன்?

நாமும்தான்.!

ஏன் தெரியுமா?

இந்தக் கதையைக் கேட்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பச்சை   விளக்கு அனுமதிக்காக வாகனத்தில் காத்திருந்த சமயம் எம்மிடம் யாசித்த ஒரு இளம் முஸ்லிம் பெண் எங்களது நினைவுக்கு வந்தாள்.

அந்த முஸ்லிம் பெண்ணுக்கு எதுவும் கொடுக்காது எங்களது செய்கைகளை நியாயப் படுத்துவதற்கு  'இப்படி யாசிப்பவர்களுக்கு யாசகம் கொடுத்து யாசிக்கும் பழக்கத்தை எங்களது சமூகத்தில் வளர விடக் கூடாது..' என்று நொண்டி சாக்கு சொல்லி எங்களது மனத்தை திருப்திப் படுத்திக் கொண்ட எங்களது நிலை நம்மைக் கொஞ்சம் சஞ்சலப் படுத்தியது.

சிலசமயம் நாம் கூட அந்த அக்கினிப் பரீட்சையில் உள்வாங்கப் பட்டோமா?

அப்படி என்றால் எங்களது நிலை?

நினைக்கவே பயமாக இருந்தது.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad