அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, September 5, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

அத்தியாயம் இரண்டு........

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது பிறப்பு சம்பந்தமாக பதிவாகி இருக்கும் இந்த ஹதீஸைக் கொஞ்சம் ஆழமாகக் கவனியுங்கள்.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பிறந்த செய்தி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எடுத்து சொல்லப் படுகிறது.

அவர்கள் குதூகலத்துடன் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா உடைய வீட்டுக்கு விரைந்து வருகிறார்.

வீட்டிலே குழந்தைப் பிறந்தவுடன் அங்கிருந்தவர்கள் அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்களிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்கள் கூறிய பதில் வித்தியாசமானது.நாம் கூர்ந்து கவனிக்கத் தக்கது. "  இந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குரியது.அது எனக்குரிய பொறுப்பல்ல." என்று கூறி குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பை நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பொறுப்பில் விட்டு விடுகிறார்கள்

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் வீட்டுக்கு வந்தவுடன் அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் "உங்களது பேரக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?' என்று கேட்கிறார்.

அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் "என்னுடைய பேரக் குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு உரியது.நான் ஜிப்ரீலின் வருகைக்காக காத்திருக்கிறேன்." என்று பதில் கூறுகிறார்கள்.

உடனடியாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி அருளப் படுகிறது.

அதன் பின்னர் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் "எனக்கு ஜிப்ரீல் வஹி அறிவித்தார்.குழந்தைக்கு 'ஹசன்'என்று பெயர் வைக்கச் சொல்லி அல்லாஹ்வின் புறத்தில் இருந்துக் கட்டளை வந்திருக்கிறது.குழந்தைக்கு 'ஹசன்'என்று பெயரிடுங்கள்." என்கிறார்.

அதன் பின்னர் குழந்தைக்கு "ஹசன்" என்று பெயர் சூட்டப் படுகிறது.

ஹசன் என்ற பெயர் அதற்கு முன்னர் யாருக்கும் சூட்டப் பட்டிருக்கவில்லை.

இமாம் ஹசன் பின் அலிக்கு பெயர் சூட்டியது அல்லாஹுத்தஆலா என்ற விடயத்தை உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

உதாரணமாக 'குலபாயே ராஷிதீன்கள் ' என்று நாம் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்த நான்கு கலீபாக்களை அழைக்கிறோம்.அவர்களில் ஐந்தாவது ஆட்சியாளராக இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்கள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்திருக்கிறார்.

ஆகவே,குலபாயே ராஷிதீன்கள் பட்டியலில் நிச்சயமாக இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி உள்வாங்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்படி நடக்கவில்லை.

இன்றுவரை நமது அறிஞர்கள் குலபாயேராசிதீன்கள் நால்வர் என்று சொல்லி வருகிறார்கள்.

குலபாயே ராஷிதீன் என்பதன் தமிழ் வடிவம்  "நேர் வழி நின்றவர்கள்" என்று அர்த்தம் சொல்கிறது.

அப்படி நேர்வழி நின்றவர்கள் என்று நாம் கருதுகின்ற நால்வரில் மூவருக்கு பெயர் வைத்தவர்கள் முஸ்ரிகீன்களான அவர்களின் பெற்றோர்களாகும்.

ஆனால், ஆறு மாதங்கள் முஸ்லிம் சமூகத்தின் கலீபாவாக ஆட்சி செய்த இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு பெயர் வைத்ததோ ஏக வல்ல அல்லாஹ்வாகும்.

அந்த அல்லாஹுத் தஆலா தான் பெயர் வைத்த ஒருவரை இஸ்லாமிய நெறி பிறழ்ந்த வாழ்க்கை வாழ அனுமதிப்பானா?

இணைவைப்பாளர்களான பெற்றோர் வைத்த பெயரைக் கொண்டவர்கள் நேர் வழி சார்ந்து நிற்க அல்லாஹ் பெயர் வைத்தவர் மாத்திரம் நேர் வழி பிரழ்ந்துப் போனாரா?

இனி இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது குழந்தைப் பிராயத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.

அக்கால அராபியர்குழந்தைகளை அரவணைத்து வைத்துக் கொள்வதை அல்லது அன்புடன் முத்தமிடுவதை அல்லது தூக்கிக் கொஞ்சுவதை அவமானமான செய்கையாக  கருதிய காரணத்தினால் அவர்கள் குழந்தைகளை விட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்கள்.

தவிர,அக்கால அராபியர்களிடையே குழந்தைகளிடம் அன்பு பாராட்டுவது தரம் குறைந்த செய்கையாகவும் ,ஆண்மை தொலைத்த செயலாகவும் கருதப் பட்டும் வந்தது.

ஆனால், நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் குழந்தை இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுடன் நடந்துக் கொண்ட முறை அராபியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ஒரு பாடமாக அமைந்துப் போனது.

அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா அவர்களது வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதிலும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வீட்டின் முன்னே நின்று "நபியின் வீட்டார்களே .....என்னுடைய இதயக் கொழுந்து ஹசன் எங்கே?" என்று சத்தமாக குரல் கொடுப்பார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது குரலோசையைக் கேட்டவுடன் குழந்தை இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி வீட்டினுள்ளிருந்து ஓடோடி வெளியே வருவார்.

அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்கள் முன்னிலையில் குழந்தையை அள்ளியெடுத்து அரவணைத்து முத்தமிடுவார்கள்.அத்துடன் தனது தோழர்களை நோக்கி "நான் இவரை நேசிக்கிறேன்.அல்லாஹ் இவரை நேசிப்பவர்களை நேசிக்கிறான்."என்றும் கூறுவார்கள்.

பிறிதொரு முறை நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களைத் தனது தோளில் சுமந்துக் கொண்டு வந்தார்கள்.

வீதியிலே இவர்கள் இருவரையும் கண்ட நபித் தோழர்கள் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களைப் பார்த்து "அருமை மகனே.......நபியின் தோளிலே ஏறி வரும் அளவுக்கு நீங்கள் அருள்பாளிக்கப்  பட்டிருக்கிறீர்கள்.நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்" என்று கூறியிருக்கிறார்கள்.

அதனைக் கேட்ட நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.உடனே தனது தோழர்களை நோக்கி "இல்லை...இல்லை........அப்படி சொல்லாதீர்கள்.இவரை சுமந்து செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததுதான் எனக்குக் கிடைத்த அருளாகும்." என்று சொன்னார்கள்.

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது ஆளுமையிலே வளர்ந்து வரும் பாக்கியம் பெற்றவராக இமாம் ஹசன் இப்னு அலி ஸலாமுன் அலைஹி இருந்திருக்கிறார்கள்.

அவரது வளர்ப்பிலே ஆளுமை செலுத்திய அடுத்த தனித்துவமான நபர் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹாவாகும்.

புனிதமான அந்தத் தாய்க்கும் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கும் இடையில் இருந்த உறவு அபாரமானது.இமாமின் வாழ்க்கையில் அவர் கற்ற அனைத்து அறிவுகளும் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹாவிடமிருந்தாகும்.

இந்த இரண்டு தனித்துவமிக்க தலைமைகளுடன் இன்னுமொரு தலைவரின் அரவணைப்பில் வளரும் பாக்கியம் பெற்றவர்தான் இமாம் ஹசன் இப்னு அலி ஸலாமுன் அலைஹி.

அது வேறு யாருமல்ல.

அவரது தந்தை இமாம் அலி இப்னு அபீதாலிப் ஸலாமுன் அலைஹி.

இவர்களது நேரடி கண்காணிப்பில் வளர்ந்த அந்த மகான் பின்னாளில் பெண்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்யும் செய்கையின் நாயகனாக மாறி நின்றார் என்ற செய்தி கொஞ்சம் அபத்தமானது.

எது எவ்வாறிருப்பினும் இன்றிருக்கும் பல நூல்களிலே அவை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தாக இருக்கட்டும்,அஹ்லுஸ் ஸுன்னாவாக இருக்கட்டும்,சுன்னிகளாக அல்லது ஷியாக்களாக இருக்கட்டும் அவைகளில் அநேகமானவை இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது தனித்துவத்தை சிதறடிக்கும் கதைகளை கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.

அப்படியென்ன கதைகள்?

- இன்ஷா அல்லாஹ் - அடுத்த பதிவில் இன்னமும் வரும்.............


1 comment:

Muhammad Ali said...

Salaam Alaikum,
"இவர்களது நேரடி கண்காணிப்பில் வளர்ந்த அந்த மகான் பின்னாளில் பெண்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்யும் செய்கையின் நாயகனாக மாறி நின்றார் என்ற செய்தி கொஞ்சம் அபத்தமானது." Still now if we put some hadees from Imam Hassan or Ahlulbaith every Muslims asking give me reference. But without any ref where Chennai PJ saying something every body accepting. What a world this?. Awaiting for more post.

Wa Salaam.
Muhammad Ali.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad