அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, July 6, 2011

நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


ஒரு நாள் இமாம் அலியிடம் ஒரு வழக்கு வந்தது.

ஒருவன் ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டான்.கொலை செய்தவனை கொலை செய்தவனின் தம்பி கட்டி இழுத்துக் கொண்டு , அவன் செய்த கொலைக்கு நீதி கேட்டு இமாம் அலியிடம் வந்தான்.

இமாம் நடந்தது என்ன என்று விசாரித்தார்.

"இவன் எனது சகோதரனைக் கொலை செய்து விட்டான்" கொல்லப் பட்டவனின் தம்பி சொன்னான்."இஸ்லாமிய ஷரியாவின் முறைப் படி எனக்கு நீதி தாருங்கள்?"

"இவன் சொல்வது உண்மையா?" என்று இமாம் குற்றம் சுமத்தப் பட்டவனிடம் கேட்டார்.

"நான் வேண்டுமென்றே அவனைக் கொல்லவில்லை" குற்றம் சுமத்தப் பட்டவன் நடுங்கியபடி சொன்னான்."நான் மரத்தில் ஏறியிருந்தேன். அவன் மரத்துக்கு அடியில் இருந்தான். நான் ஏறியிருந்த மரத்தின் கிளை உடைந்ததால் நான் அவனின் மேலே விழுந்தேன்.அதன் காரணமாக அவன் கழுத்து உடைந்து இறந்து போனான்"

இமாம் கொல்லப் பட்டவனின் தம்பியின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.

"இவன் சொல்வது சரி " அவன் சொன்னான். "இவன் மரத்தில் இருந்து எனது சகோதரன் மேலே விழுந்ததன் காரணமாகத்தான் அவன் இறந்தான்."

."நீ இவனை மன்னித்து விடு."இமாம் தீர்ப்பு சொன்னார்"அல்லது கொலைக்குப் பகரமாக நட்டஈட்டைப் பெற்றுக் கொண்டு அவனை விட்டு விடு"

"என்னால் முடியாது" கொலைசெய்யப் பட்டவனின் தம்பி கோபத்தில் அலறினான்."இஸ்லாமிய ஷரியாவின் படி கொலைக்கு கொலை.ஆகவே என்னுடைய சகோதரனின் கொலைக்குப் பகரமாக அவன் கொல்லப் படுத்தல் வேண்டும்."


"சரி அப்படியே ஆகட்டும்." இமாம் நிதானமாக சொன்னார்."ஆனால், கொலைக்குப் பகரமான பழி வாங்கல் இஸ்லாமிய முறைப்படியே நடக்க வேண்டும்."

"அதெப்படி?"தம்பிக்காரன் கேட்டான்.

"இந்தக் குற்றவாளியை அந்த மரத்தின் அடியில் கொண்டு போய் நிறுத்துங்கள்." இமாம் கொல்லப் பட்டவனின் தம்பியைப் பார்த்து சொன்னார்."நீ மரத்தில் ஏறி அவன் உனது சகோதரனை கொலை செய்த மாதிரியே இவனைக் கொலை செய்து விடு"

இமாமின் தீர்ப்பைக் கேட்டு தம்பிக்காரன் வெல வெலத்துப் போனான்.

பேசாமல் இமாம் சொன்னபடி தண்டப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தக் கொலையாளியை மன்னித்து விட்டு விட்டான்.


கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் , மூக்குக்கு மூக்கு என்ற இஸ்லாமிய பழிவாங்கல் சட்டம் எல்லாம் நாம் நமக்குள் வகுத்துக் கொண்ட சட்டமே தவிர, இவைகள் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் அல்ல.

நாம் சொன்ன இந்தக் கருத்தைக் கேட்டு ஒரு பிரபலமான உலமா மூக்கு வியர்த்துப் போனார்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" அவர் கொஞ்சம் காரமாகவே எங்களிடம் இப்படிக் கேட்டார்.

"இந்த சட்டங்கள் எல்லாம் இஸ்லாத்துக்கு முந்திய வேதக்காரர்களான யூத, கிறிஸ்தவ, சாபஈன்களுக்கு அல்லாஹ் வகுத்துக் கொடுத்த சட்டங்களாகும்." நாம் சொன்னோம்.

"இல்லை...இல்லை..."அவசர அவசரமாக அந்த உலமா மறுத்தார்."இது சூரா பகராவில் அல்லாஹ் முஸ்லிம்களான எமக்கு வகுத்து தந்த சட்டங்களாகும்"

நாம் அவருடன் இணைந்து சூரா பகராவைப் புரட்டினோம்.

"நிச்சயமாக நாம்தான் தவ்ராத்தை இறக்கி வைத்தோம்;அதில் நேர்வழியும், ஒளியும் இருக்கின்றன.கட்டுப் பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும்,அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப் பட்டவர்கள் என்பதாலும் இன்னும், அதற்கு சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்து வந்தார்கள்;எனவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள்; என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள்.எவர்கள்  அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பவர்கள்" 
(அல் குரான்: 05 : 44)

"அவர்களுக்கு நாம் அதில் "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் ஆகவும் , காயங்களுக்கு பழிவாங்கப் படும் " என்று விதித்திருந்தோம்; எனினும், ஒருவர் இதனை தர்மமாக விட்டு விட்டால் , அது அவருக்குப் பரிகாரமாகும்;எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள்தாம் அநியாயக் காரர்கள்"   
(அல் குரான்: 05 : 45)

அல் குரான் ஆயத்துக்களைப் பார்த்து நமது நண்பர் உலமா விக்கித்துப் போனார்.

கொஞ்ச நேரம் அல் குரானில் ஆழ்ந்த அவர் புன்சிரிப்புடன் எங்களிடம் ஒரு அல் குரானின் புனித ஆயத் ஒன்றைக் காட்டினார்.

"நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்,உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;உங்களில் எவரேனும், அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவரைச் சேர்ந்தவர்கள்தாம்.நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்."
(அல் குரான்: 05 : 51)

"யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் எங்களுடைய எதிரி என்று அல்லாஹ் இந்த ஆயத்தில் கூறுகிறானே?" இது நமது நண்பர்.

"அவர்கள் மட்டுமா?" என்ற நாம் தொடர்ந்து "அஹ்ளுல்பைத்களின் இமாம்களைத் தவிர வேறு யாரையாவது முஸ்லிம்கள் தங்களது  பாதுகாவலர்களாக ஏற்றுக் கொண்டால் அவர்களும்  அநியாயக் காரக் கூட்டத்தில்தான் இருகிறார்கள்" என்றோம்.


"அப்படியென்றால் சுன்னத்வல் ஜமாத்தினர் எல்லோருமா?' என்று அவர் கேட்டார்.

"இல்லை' என்ற நாம் "சுன்னத்வல்ஜமாத்தினரில் யாராவது உமையாக்களின் தலைமையை ஏற்று அவர்களை தங்களது பாதுகாவலர்களாக ஏற்றுக் கொண்டால் அவர்களின் நிலை அதோ கதிதான்" என்றோம்.

உலமா நண்பர் ஆழ்ந்த மௌனத்தில் சிந்தனையில் மூழ்கிப் போனார்.


உமையா ஆட்சியின் பிதாமகன் அமீர் முஆவியா இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்குப் பகரமாக அய்யாமுல் ஜாஹிளியாவின் 'கோத்திர சட்டமுறைமையை' தனது ஆட்சிக் காலத்தில் அமுல் படுத்தினார்.

ஏனெனில், இஸ்லாமியா ஷரியாவின் படி மன்னராட்சிக்கு இஸ்லாத்தில் கிஞ்சித்தும் இடமில்லை.

அவர்களுக்குப் பின்னால்  வந்த அப்பாசிய மன்னர்களும் அமீர் முஆவியா அறிமுகப் படுத்திய 'கோத்திர சட்டமுறைமையை' தங்களது ஆட்சியிலும் அச்சொட்டாக பின்பற்றினர்.

தொடரும் மன்னராட்சிக்கு அந்த முறை அவசியமாகப் பட்டது.

உமையாக்கள் தங்களது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு உருவகப் படுத்திக் கொண்ட அதே கோத்திர முறையிலான சட்டவாக்கம் இப்பொழுதுள்ள சவூதி அராபியாவிலும் அமுலில் உள்ளது.

இஸ்லாத்துக்கு எதிரான மன்னராட்சியாளர்கள் இத்தகைய சட்டமுறைக்கு 'ஷரியா' சாயம் பூசி அதனை இஸ்லாமிய ஷரியாவாக தங்களது நாட்டில் அமுல் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது தயவில் அட்டைகளாக ஒட்டியிருக்கும் முப்திகள் அந்த ஆட்சியார்களுக்கு  ஆதரவாக தங்களது 'பத்வாக்களை' வெளியிட்டு அவர்களின் தவறுகளுக்கு இஸ்லாமிய முலாம் பூசுகிறார்கள்.

எங்கள் நாட்டு தலைமைத்துவ முப்திகளும் ஜால்ரா அடிக்கும் அந்த அராபிய முப்திகளை ஆகரிணித்த நிலையில் அவர்களது தவறுகளுக்கு இஸ்லாமிய ஷரியா முலாம் பூசி துணை போகிறார்கள்.

எங்களது முப்திகள் சோரம் போவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால்,  பாடசாலைக் கல்வி தலையில் ஏறாத மந்த புத்தி மாணவர்களை மதரசாக்களில் சேர்த்துக் கொண்ட தவறே இப்படியான இமாலயத் தவறுகள் எங்களது சமூகத்தில் அரங்கேறக் காரணம் என்கிற உண்மை பளீரிடுகிறது.

பாடசாலை கல்வி அறவே இல்லாத காரணத்தால் இவர்கள் கற்ற ஆன்மீகம் அறிவில்லாத  ஆன்மிகமாக எம்மை பயமுறுத்துகிறது.

அறிவில்லாத இந்த முப்திகளின் 'உமையா' ஷரியா சட்டப் படி இன்னும் கொஞ்ச நாள்களில் ரிசானா என்கிற ஒரு இலங்கைக் குழந்தை , தான் அறியாமல் செய்த தவறுக்காக தலை துண்டிக்கும் நிலையில் சவூதியில் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறாள்.


அஹ்ளுல்பைத்களின் பரம எதிரி மன்னர் அப்துல்லாஹ் கையொப்பம் இட்டவுடன் அவளது தண்டனை நிறை வேற்றப் பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

அவள் செய்த தவறுக்கு இஸ்லாமிய ஷரியாவின் படி தண்டிப்பது என்றால் அவளது கையால் எப்படி அந்தத் தவறு நடந்ததோ அப்படியே அவள் கொலை செய்யப் படல் வேண்டும்.

அவளது கழுத்தை வெட்டித் துண்டாட இஸ்லாத்தில், இஸ்லாமிய ஷரியாவில் எங்குமே அணுவளவும் அனுமதி இல்லை.

இப்பொழுது எங்களுக்குத் தேவை நீதி.

அதுக்குத் தேவை ஒரு இமாம் அலி.

இமாம் அலியைக் காணவில்லை.

ஆகவே, இந்த அநீதம் நடக்கப் போவது உறுதி.

அப்படியான  அநீதம்  மட்டும்  நடந்தால் , நாளை மறுமையில்  'குழந்தை ரிசானாவின் ' முன் முழங்கால்களில் எங்களது எல்லா தலைமைத்துவ முப்திகளும் இந்த அநீதத்துக்கு துணை நின்று வக்காலத்து வாங்கிய எல்லா தலைவர்களும் , சட்டத் தரணிகளும் மன்னர் அப்துல்லாஹ்வுடன் நிறுத்தப் படப் போவது மட்டும் சத்தியம்.

அன்றைய நாளில் அல்லாஹ் அந்தக் குழந்தையை எழுப்பி இந்த அநீதம் பற்றி நிச்சயமாக விசாரிப்பான்.

அல் குரானில் ரிசானாவுக்காக மறுமையில் அல்லாஹ் எங்களது முப்திகளிடமும், இந்த அநியாயத்துக்கு துணை நின்றவர்களிடமும் கேட்கும் கேள்வி கணக்குப் பற்றிய  ஆயத் இப்படி இருக்கிறது.


"புதைக்கப்பட்டவர்கள் கேட்கப் படும் நாளில்; எந்தப் பாவத்திற்காக கொலை செய்யப் பட்டீர்கள் என்று"
(அல் குரான்: 81 : 8 - 9 )

குழந்தை ரிசானாவின் அபாக்கிய நிலையைக் கண்டு நெஞ்சு துடித்தாலும், மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் குரல் வலை பிடுங்கப் படப் போகின்ற எங்களது அடிவருடி தலைமைத்துவ முப்திகளின் இக்கட்டான நிலையை அறியும் பொழுது ரிசானாவைக் காப்பாற்ற கையாலாகாத எங்களது நிலையையும் மீறிய ஒரு ஆறுதல் எங்களது மனத்தில் உதிப்பதை தடுக்க முடியவில்லை.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad