அஹ்லுல்பைத் Headline Animator

Monday, July 25, 2011

பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை முஸ்லிம்கள் மத்தியில் சலசலக்க வைக்கும்.

பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.

அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.


அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும்,  அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.

பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.

நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.

அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.

உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.

நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?

எதுவுமே இல்லை.

அல்லாஹ்வை அறியும் ஞான இரகசியங்கள் எதாவது இருக்கிறதா?

அதுவும் இல்லை.

சரி, எதாவது சமூக சீர் திருத்தங்கள்?

ஒன்றும் இல்லை.

இத்தகைய இல்லாமைகளைக் கவனித்த நமது சீர்திருத்த தௌஹீத் தலைவர்களும், அவர்களுடன் ஒன்றிணைந்த ஜமாத்தே இஸ்லாமி  தலைவர்களும் இந்த பராத் நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தார்கள்.

இந்த முற்போக்கு தலைவர்களுக்கு எதிராக நோன்பு நோற்று பராத் இரவில் பிரார்த்தனை செய்யும் அடுத்த கூட்டமும் கிளர்ந்து எழுந்தது.

ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு கூட்டத்தார்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு தமது பக்க நியாயங்களை தத்தமது ஆதரவாளர்களுக்கு சொல்ல, வருடா வருடம் இந்தத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு அவர்களின் மேல் சுமத்தப் பட்டு விட்டது.

முஸ்லிம் மக்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை மாற்றிய கூட்டத்தாரின் இலக்கு இதன் காரணமாக செவ்வனே நிறை வேற்றப் பட்டாகி விட்டது.

முஸ்லிம்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை திருப்பும் அளவுக்கு அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது.



சஹ்பான் பிறை பதின் ஐந்தில் அப்படி என்ன முக்கிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று இஸ்லாமிய வரலாற்றை நாம் ஆராய்ந்துப் பார்த்தால் அன்றைய தினம்தான் இமாம் மகதி (அலை) அவர்கள் பிறந்து இருக்கிறார்கள்.

இமாம்  மகதி (அலை) அவர்கள் இறுதித் தீர்ப்பு நாள் நெருங்கும் பொழுது தோற்றம் பெறுவார்கள் என்று நம்பகமான ஹதீத் அறிவிப்புகள் இருக்கின்றன.

இறுதித் தீர்ப்பு நாள் நெருங்கும் பொழுது இமாம் மகதி (அலை) பிறப்பார்கள் என்று எங்கேயும் அறிவிக்கப் படவில்லை.

ஆனால், தோற்றம் பெறுவார் என்றுதான் எல்லா அறிவிப்புகளும் சொல்கின்றன.

அதன் படி மீண்டும் தோற்றம் பெறப் போகும் ஒருவரைத்தான் நாம் எதிர்பார்த்து இருக்கிறோம்.

ஏற்கனவே பிறந்து மறைந்த ஒருவரைத்தான் மீண்டும் தோன்றுவார் என்று கூற முடியும். 

இனி, இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு பற்றி எங்களது இமாம்களின் பதிவுகள் சிலவற்றை சுருக்கமாக கவனிப்போம்.


அபு அல் பலாஹ் ஹன்பலி என்பவர் ஹன்பலி மத்ஹபின் இமாம்களில் ஒருவர்.

அவரது 'ஷதாரத் அல் தஹாபிலும்' , 'தஹாபி இன் அல் இப்ர பி கபர் மின் காபரிலும்'  பதிந்துள்ள பதிவு இவ்வாறு ஒலிக்கிறது.

"அலவி ஹுசைனில் இருந்து இமாம் ஜாபர் சாதிக்கும்    இமாம் ஜாபர் சாதிக்கின் மகன் மூஸா காசிமும் அவரது மகன் அலி ரிதாவும் அவரது மகன் ஜவேதும் அவரது மகன் அலி ஹாதியும் அவரது மகன் ஹசன் அஷ்கரியும்  அவரது மகன் முஹம்மத் ஹசன் அஸ்கரியுமாவார்.

அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் இவரை கலாப் ஸாலிஹ் ,ஹுஜ்ஜத், மஹ்தி, முந்தஜார் (எதிர்பார்க்கப் படுபவர்), ஷாஹிப் அல் ஷமான் (நிகழ காலத்தின் இமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள்.- என்று பதிந்துள்ளார்கள்.

இப்னு  ஹாஜர் ஷாபி மத்ஹபில் ஒரு பிரபலமான இமாம். அவர் தனது 'சவாய்க் அல் முஹார்ரிகா' என்ற கிரந்தத்தில் இமாம் ஹசன் அஸ்கரி உடைய வாழ்க்கை வரலாறை எழுதும் பொழுது "இமாம் ஹசன் அஸ்கரி அவர்கள் தனது ஐந்து வயது நிரம்பிய மகனான 'அபுல் அல் காசிம்' அவர்களை தனித்து விட்ட நிலையில் இந்த உலகை விட்டும் மறைந்தார்கள். அவரது மகனை மக்கள் 'ஹுஜ்ஜத்' என்றும், 'முஹம்மத்' என்றும் அழைத்து வந்தார்கள்". என்று பதிந்துள்ளார்கள்.

முஹம்மத் அமின் பக்தாதி சுன்னத் வல் ஜமாஅத்தினரால் எற்றுக்கொள்ளபப்ட்ட   அண்மைக்கால இமாம்களில் ஒருவர்.அவர் தனது 'சாபைக் அல் தஹாப்' என்ற கிரந்தத்தில் "முஹம்மத் என்று அழைக்கப் பட்ட மஹ்தி ஐந்து வயது நிரம்பும் பொழுது அவரது தந்தை மரணமானார்" என்று எழுதியுள்ளார்கள்.

'வாபாயத் அல் அயான்' என்கிற வரலாற்று வாழ்க்கை தொகுப்பை தொகுத்த இப்னு கஹல்லிகன் மிகவும் பிரபலமான இன்னுமொரு சுன்னி இமாம். சுன்னிகளின் அனைத்து மத்ஹப்களும் இவரை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இருப்பது இவரில் இருக்கின்ற இன்னுமொரு  விசேஷம்.

எல்லா மத்ரசாக்களிலும் இவரது நூலை தங்களது பாடங்களின் ஆதாரத்துக்கு உள்ள அத்தாட்சியாக எடுத்தாள்வார்கள்.

அவரது தொகுப்பில் இமாம் மஹ்தி (அலை) பற்றி அவர் இப்படி சொல்கிறார். "அபுல் அல் காசிம் முஹம்மத் பின் அல் ஹசன் அல் அஸ்கரி அவர்களை தங்களது பன்னிரெண்டாவது இமாமாக அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள்  அனைவரும் ஒருமித்து நம்புகிறார்கள். அவர்கள் தாங்கள் எதிபர்த்திருந்த இமாம் மஹ்தி இவர்தான் என உறுதியாக் விசுவாசிக்கிறார்கள்".


முஹியத்தீன் இப்னு அரபி என்பவர் இன்னுமொரு பிரபல சுன்னி இமாம்.

இவர் மிகவும் கடுமையான சூபிக்களில்  ஒருவர். சூபி தரீக்காக்களில் உள்ளவர்கள் இவரது கூற்றை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த மகான் தனது 'புதுஹத் மககிய்யாவில்' இப்படி பதிந்துள்ளார்.

"உலகத்தில் அதர்மமும், அநீதியும், அல்லாஹ்வுக்கு எதிரான கொள்கைகளும் ஆடசியும்  நிறையும் பொழுது இமாம் மஹ்தி தோற்றம் பெறுவார். அவர் இந்த உலகில் மீன்டும் நீதியையும், தர்மத்தையும், அல்லாஹ்வின் இறையாட்சியையும்  நிலை நிறுத்துவார்.

அவர் நபி மகள் பாத்திமா (அலை) உடைய வம்சாவளியில் தோன்றுவார்.

அவரது பாட்டனார் இமாம் ஹுசைன் (அலை) ஆகும்.

அவர் இமாம் ஹசன் அஷ்கரியின் மகனாவார்.ஹசன் அஸ்கரி இமாம் அலி நாகியின் மகனாவார்.இமாம் அலி நாகி இமாம் முஹம்மத் தகியின் மகனாவார். இமாம்  முகமத் தகி இமாம் அலி ரிதாவின் மகனாவார். இமாம் அலி ரிதா இமாம் மூஸா காசிமின் மகனாவார். இமாம் மூஸா காசிம் இமாம் ஜாபர் சாதிக்கின் மகனாவார். இமாம் ஜாபர் சாதிக் இமாம் முஹம்மத் பாகிரின் மகனாவார். இமாம்  முஹம்மத் பாகிர் இமாம் ஜைனுல் ஆபிதீனின் மகனாவார். இமாம் ஜைனுல் ஆபிதீன் இமாம் ஹுசைனின்  மகனாவார். இமாம் ஹுசைன் இமாம் அலி பின் அபூதாலிபின்  மகனாவார்."


இமாம் அபு ஹனிபாவின் மாணவர்களில் ஒருவர் இமாம் முஹம்மத் பின் யூசுப்.

இவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். இவரது நூல்கள் அநேகமாக எல்ல மதரசாக்களிலும் பாட நூலாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவர் தனது ' கிதாயதுல் தாலிப் என்ற கிரந்தத்தில் இமாம் ஹசன்  அஸ்கரி (அலை) அவர்களின் மறைவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "இமாம் அலி அஷ்கரி மறையும் பொழுது முஹம்மத்  என்கிற சிறுவரைத் தவிர அவருக்கு வேறு  பிள்ளைகள்  இருக்கவில்லை. அவரது குழந்தை தான் இமாம் முன்திசார்  (எதிர்பார்க்கப் பட்ட இறுதி இமாம்) ஆகும்" என்று பத்நிதுள்ளார்.

இப்னு ஸாபாக் மாலிகி என்பவர் மாலிகி மத்ஹபின் ஒரு பிரபல இமாம்.

அவர் தனது 'புஸுள் அல் முஹிம்மா' (முக்கியமான செய்திகள்) என்கிற நூலில் இமாம் மஹ்தி (அலை)  அவர்கள் பற்றி இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்.

"அஹ்லுல் பைத் ஆதரவாளர்களின் பன்னிரெண்டாவது இமாம் அபு முஹம்மத் ஹசன் காசிமின் மகன் அபு அல்  காசிம் முஹம்மத் ஆவார்.இவரை ஹுஜ்ஜத், கலாப் ஸலிஹ் என்றும் அழைப்பார்கள்" என்று கூறி இமாம் மஹ்தி (அலை)அவர்களின் வழிமுறைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் சபலன்ஜி ஷாபி மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவர்.இவர் தனது 'நூர் அல் அபஸார்' என்கிற கிரந்தத்தில் "முஹம்மத் என்பவர் ஹசன் அஷ்கரியின் மகனாவார்.இவரது தாயார் நர்ஜிஸ் அல்லது சாய்கால் அல்லது சவ்சான் என்று அழைக்கப் பட்ட அடிமைப் பெண்களில் ஒருவர்.அவர்களது வழிமுறை அபுல் காசிமில் இருந்து வருகிறது.அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இவரை ஹுஜ்ஜத், மஹ்தி, கலாப் ஸாலிஹ், காய்ம்,முந்தசார், ஷாஹிப் அல் ஸமான் (நிகழ காலத்தின் இமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள். என்று எழுதியுள்ளார்கள்.

சூபி தரீக்காக்களினால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இன்னுமொரு இமாம் அப்துல் வாஹாப் அஷ் சஹாரானி. 

அவர் தனது 'யவாகித் வா அல் ஜவாகிர்' என்ற கிரந்தத்தில் இப்படி சொல்கிறார்."மஹ்தி இமாம் ஹசன் அஷ்கரின் மகனாவார்.அவர் ஷஹ்பான் மாதம் பதினைந்தாம் இரவு ஹிஜ்ரி வருடம் இருநூற்றி ஐம்பைத்து ஐந்தில் பிறந்தார்.தற்பொழுது மறைந்த  நிலையில் இருக்கின்றார். இப்பொழுது ஹிஜ்ரி ஒன்பதாயிரத்து நூற்றி ஐம்பைத்து ஏழு.சுமார் எழுநூற்று மூன்று வருடங்களாக மறைந்துள்ள இவர் ஈசா  (அலை) வருவதற்கு முந்திய காலப்  பகுதியில் மீன்டும் தோற்றம் பெறுவார்".என்று சுமார் நானூற்று எழுபத்து ஐந்து வருடத்துக்கு முன்னரேயே எழுதி உள்ளார்.

இது எப்படி சாத்தியம்?

அல் குர் ஆனில் 'குகை' வாசிகளின் சரித்திரத்தில் இது போன்றே ஏழு அல்லது ஒன்பது இளைஞர்கள் சுமார் முந்நூறு  அல்லது அதற்கும் அதிகமான காலங்கள் உயிரோடு இருந்த சம்பவம் பிரஸ்தாபிக்கப் பட்டிருப்பதை கவனியுங்கள்.

அதே போல உஜைர்  (அலை) அவர்கள் சுமார் நூற்றி ஐம்பது வருடங்கள் தூங்கி விழித்து தனது சகோதரனை காண வந்த சமயம் இவர் இளைஞராகவும் இவரது சகோதரன் முதியவராகவும் இருந்த சம்பவமும் அல் குர் ஆனில் உள்ளது.

இதனை விடவும் நபி ஈசா (அலை)அவர்கள் இன்று வரை உயிருடன் இருப்பதை நாம் விசுவாசிக்கிறோம்.

கிழ்ர் (அலை) அவர்கள் பற்றிய சரித்திரமும் இதை போன்றதே.

ஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பும் மறைவும் சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் அஹ்லுல் பைத்களின் எதிரிகளினால்  திட்டமிட்ட முறையில் சிதைக்கப் பட்டன.

இதனால், எமக்கு அந்த சம்பவங்களின் நம்பகத் தன்மையில் சந்தேகமும், நம்பிக்கை இன்மையும் தோன்றி உள்ளன.

ஏனெனில், நாம் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான கருத்து சூழலிலேயே பிறந்தோம்.அதிலேயே வளர்ந்தோம்.அந்த நம்பிக்கைகளிலேயே இறந்தும் போகிறோம்.

சஹ்பான் பிறை பதின் ஐந்தில் இமாம் மகதி (அலை௦) அவர்களின் ஜனன தினத்தை அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.

அன்றைய தினம் அவர்கள் கர்பலாவில் ஒன்று திரள்வார்கள்.

விருந்தோம்பலும், ஒருவருக்கு ஒருவர் முகமன் கூறி வாழ்த்து தெரிவிப்பதுமாக மிகவும் குதூகலமாக அந்த நாளை உயிர்ப் பிப்பார்கள்.

அடக்குமுறைகளுக்கு உள்ளான, அநீதத்துக்கு ஆளான மக்களின் ஆதரவாளரின் பிறந்த தினம் அல்லவா?

இமாம் மகதி (அலை) அவர்களின் பிறப்பு அநீதமான ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்.


இமாம் மகதி (அலை) அவர்களை நினைவு படுத்துவது அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அபாய அறிவிப்பாகும்.

இதனால், இமாம் மகதி (அலை) அவர்களைப் பற்றிய விடயங்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கி வைக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

இதனால்தான் , சஹ்பான் பிறை பதினைந்தில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்கள் இமாம் மகதி (அலை) அவர்களை நினைவு படுத்துவதைக் கவனித்த அஹ்லுல் பைத்களின் எதிரிகள் அன்றைய தினத்தில் வேறு புதிய கதைகளை கட்டவிழ்த்து விட்டு எம்மை அன்றைய தினம் இமாம் மகதி (அலை) அவர்களை நினைவு படுத்துவதை விட்டும் தூரமாக்கி விட்டார்கள்.

அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்குண்ட நாமும் பராத் நோன்பை பிடித்து சூரா யாசீனில் மூழ்கி வேறு நினைப்புகளில் வேறு இலக்குகளில் அஹ்ளுல்பைத்களின் இறுதி இமாமை மறந்து விடுகிறோம்.

இத்தகய சூழலில் நாம் இன்றும் கூட என்றும் போல பராத் நோன்பைப் பிடித்து நீண்ட எமது ஆயுளுக்கும், நல்ல உணவு அபிவிருத்திக்கும், செய்யப் போகும் பாவங்களுக்கு முட் கொடுப்பனவாக அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி மன்னிப்பையும் வேண்டி பக்தி பரவசத்துடன் அந்த நாளைக் கடத்தினோம்.

எங்களது செய்கையின் கோமாளித்தனத்தை உணர்ந்த தவ்ஹீத் ஜமாத்தும் அவர்களின் கருத்தியலில் சரி கண்ட கூட்டத்தினரும் எங்களை கேலியுடன்  எள்ளி நகையாடிக் கொண்டு நாளைக் கடத்தினார்கள்.


ஆனால் , இவைகள் எதையும் கண்டுக் கொள்ளாமல், இம்முறை கர்பலாவில் ஒன்று திரண்ட சுமார் ஆறு மில்லியன் அஹ்லுல்பைத் ஆதரவாளர்கள் இமாம் மகதி (அலை) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறி அவரது வருகையை எதிர்பார்த்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருக்கிறார்கள்.

இம்முறை இமாம் மகதி (அலை) அவர்களின் பிறந்த தினமான சஹ்பான் பதின்  ஐந்தில் கர்பலாவில் திரண்டு இமாம் மகதி (அலை) அவர்களின் வருகையை அவசரப் படுத்தித் தருமாறு பிரார்த்தித்த அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்களின் மக்கள் வெள்ளத்தின் சில புகைப் படங்கள் உங்களது பார்வைக்காக.





இன்ஷா அல்லாஹ், அடுத்த வருட சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் தினத்தில் நாமும் எங்கள் காலத்தின் இமாம் மகதி (அலை) அவர்களை நினைவு கூற தயாராகிக் கொள்வோமாக.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad