அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, August 20, 2011

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்:

அன்னை ஆமினா (அலை) அவர்களின் அடக்கஸ்த்தளம்
(ஒரு முறை சலவாத் சொல்வோம்!) 

"அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்."

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்: 

நபி  (ஸல்) அவர்களது அருமைப் பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத மூமின்கள் என்பதற்கு அல் குரானில் ஆதாரம் இருக்கிறது.

இந்த விடயம் பற்றி உலமாக்களுக்கு நன்கு தெரியும் .

எனினும், அதனை அவர்கள் வெளியே சொல்வதில்லை.

அவர்களுடைய மாணவர்களுக்கும் படித்துக் கொடுப்பதில்லை.அதனை ஆராய  விரும்பும்  மாணவர்களை அப்படி ஆய்வு செய்வது கூடாது என்று தடுத்தும் விடுகிறார்கள்.


அல் குரான் அத்தியாயம் 26 அஸ் சுஅறா 219  வது ஆயத் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் உட்பட அவர்களது உயிரணுவை சுமந்து வந்த அவர்களின் மூதாதையர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடி பணிந்து நடந்த மூமின்கள் என்று இந்த ஆயத் சான்று பகர்கிறது.

"ஸுஜூது செய்கின்றவர்களில் நீர் புரண்டு , புரண்டு வந்ததையும்."
(அல் குரான் 26   :   219 )

தப்சீருடைய விரிவுரையாளர்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் , நாம் மேலே எடுத்து சொன்ன அல் குரான் ஆயத்துகள் நபி (ஸல்) அவர்களின் வம்ச வழிமுறையை விளக்குவதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.

'ஸுஜூது' என்றால் இணை வைக்காத நிலையில் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்று பொருள் படும்.

'ஸுஜூது ' செய்கின்றவர்களில் நீர் புரண்டு புரண்டு வந்தது..' என்பதன் கருத்து அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அவரது மூதாதையர்களான நல்லடியார்களின் முள்ளந்தண்டில் இருந்து நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் பிறக்கும் வரை தொடராக வந்த அவரது நிலையைக் குறிக்கிறது என்கின்ற கருத்தில் இருக்கிறது என்பதாகும்.

அல் குரானின் இந்த நட் சான்றின் அடிப்படையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையும் நபி (ஸல்) அவர்களது மூதாதையரும், நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நல்லடியார்கள் எனபது ஆய்வுகளுக்கு அப்பாட் பட்ட இறுதி முடிவாகும்.

ஆய்வுக்கு அப்பாற்பட்ட இறுதி முடிவு என்று நாம் சொல்லக் காரணம் அது அல்லாஹ்வின் வேத வசனத்தின் முடிவாகும்.

அல்லாஹ்வின் வேத வசனத்துக்கு முரணாக யாருக்கும் எதுவித தீர்ப்பும் சொல்ல முடியாது.

அல் குரான் அத்தியாயம் இருபத்து ஆறு அஸ் சுஅறா இரு நூற்றி பத்தொன்பதாம் ஆயத்துக்கு விளக்கம் சொல்லும் சில தப்சீருடைய உலமாக்களின் கருத்துக்களை இனிக் கவனிப்போம்.

1 ) தப்சீருல் குரானில் அழீம்

தப்சீருல் குரானில் அழீம் என்கிற தப்சீர் இஸ்மாயில் இப்னு கசீர் உடையது.இவருடைய தப்சீர் இப்னுகதிரின் த்ப்சீருக்கு முன்னர் எழுதப்பட்டது எனபது குறிப்பிடத் தக்கது.

இவரின் தப்சீரில் அல் குரான் 26 வது அத்தியாயம் 219 வது ஆயத்துக்கு இப்படி விளக்கம் எழுதுகிறார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாவது: இந்த வசனத்துக்கான விளக்கம்  நபி(ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்னர் அவரின் நிலையானது ஒரு நபியுடைய முதுகந்தண்டிலிருந்து இன்னொரு நபியின் முதுகந்தண்டுக்கு புரட்டப் பட்டு நபி (ஸல்) அவர்கள் இறுதி நபியாகி வெளியாகும் வரைக்கும்
நபி (ஸல்) அவர்கள் மாறி மாறி வந்துக் கொண்டிருந்த நிலையைக் குறிக்கும் என்று வரும்.என்று குறிப்பிடுகிறார்.

2 ) அல் குர்துபி

அல் குர்துபி எனபது இன்னுமொரு பிரபலமான தப்சீராகும்.இதனை எழுதியவர் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் என்கிற அறிஞராவார்.

இவரின் தப்சீரில் அல் குரான் 26 வது அத்தியாயம் 219 வது ஆயத்துக்கு பின்வருமாறு விளக்கம் எழுதுகிறார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

மூதாதையரின் முதுகந் தண்டிலிருந்து தொடராக வந்தது என்பது நபி ஆதம் (அலை), நபி நுஹு (அலை) , நபி இப்ராஹீம் (அலை) , ஆகியோரில் தொடராக
வந்து இறுதியில் இறுதி நபியாக வெளியாகும் வரைக்கும் மாறி மாறிவந்துக்
கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களது நிலையைக் குறிக்கின்ற ஆயத்தாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு விளக்கம் அளிக்கிறார்.

3 )அத் தப்சீருல் முனீர் பில் அகீததி வஷ் ஷரீஅதி வல் மன் ஹஜி

அத் தப்சீருல் முனீர் பில் அகீததி வஷ் ஷரீஅதி வல் மன் ஹஜி என்பது மிக அண்மையில் வஹ்பத்துள் சுலைஹி என்பவரால் எழுதப் பட்ட தப்சீர் கிரந்தமாகும். 

இவரின் மிகப் பிரபல்யமான தப்சீரில் அல் குரான் 26 வது அத்தியாயம் 219 வது ஆயத்துக்கு இப்படி விளக்கம் எழுதுகிறார்.

மூதாதையரின் முதுகந் தண்டிலிருந்து தொடராக வந்தது என்பது நபி ஆதம் (அலை), நபி நுஹு (அலை) , நபி இப்ராஹீம் (அலை) , ஆகியோரில் தொடராக
வந்து இறுதியில் இறுதி நபியாக வெளியாகும் வரைக்கும் மாறி மாறிவந்துக்
கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களது நிலையைக் குறிக்கின்ற ஆயத்தாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஆயத்தின் மூலம் சில இஸ்லாமிய அறிஞர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பெற்றோர்கள் மூமின்கள் என்று வாதிடுகிறார்கள்.

அவ்வாறு வாதிடும் அறிஞர்கள் தமது தரப்புக்கு பின்வரும் ஹதீதையும் ஆதாரமாக தருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

"நான் பரிசுத்தமான ஆண்களின் முதுகந்தண்டில் இருந்து பரிசுத்தமான பெண்களின் கற்ப்பறைகளுக்கு இவ்வுலகில் பிறக்கும் வரை அல்லாஹ்வினால் இடம் பெயரச் செய்யப் பட்டுக் கொண்டே இருந்தேன்"

4 ) தப்சீருல் ஸாவி

தப்சீருல் ஸாவி என்ற தப்சீர் கிரந்தம் அஹ்மத் அஸ் ஸாவி அல் மாலிகி என்பவரால் எழுதப் பட்டது.

இவரின் பிரபல்யமான தப்சீரில் அல் குரான் 26 வது அத்தியாயம் 219 வது ஆயத்துக்கு இப்படி விளக்கம் எழுதுகிறார்.

அஸ் ஸாஜிதீன் என்ற வார்த்தையின் மூலம் சொல்லப் படுகின்ற கருத்தானது அல் முமினூன் என்பதாகும்.

இதன் அர்த்தமானது ஆதம் (அலை) அவர்களில் இருந்து அப்துல்லாஹ் (அலை) அவர்கள் வரைக்கும் பரிசுத்தமான மூமின்களின் முதுகந் தண்டில் இருந்தும் பரிசுத்தமான பெண்களின் கர்ப்பறைகளிலேயும் தொடராக பிரண்டுக் கொண்டிருந்த உங்களை நீங்கள் பார்ப்பீர்கள் என்பதாகும்.

அதாவது, நபி ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் அப்துல்லாஹ் (அலை) அவர்கள் வரைக்கும் நபி (ஸல்) அவர்களை தமது முதுகந்தண்டிலும் கர்ப்
பறையிலும் சுமந்து வந்த அனைவரும் மூமின்களாவார்கள்.

இக்கட்டத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது தந்தை இறை நிராகரிப்பாளர் என்கிற தோரணையில் அல் குரானின் சில ஆயத்துக்கள் சிலாகித்து இருப்பதை அறிந்த சிலர் கொஞ்சம் குழம்பிப் போவார்கள்.

அப்படி நாம் குழம்பிப் போவதற்கு அவசியம் இல்லை.

அல்  குரான் அராபியரின் மொழி வழக்கிலேயே அருளப் பட்டது.

அராபிய மொழி வழக்கில் அவர்கள் தமது சிறிய தந்தையரையும் பெரிய தந்தைமார்களையும் 'அபூ' என்றே அழைத்து வந்தார்கள்.

'அபூ' என்றால் தந்தை என்று பொருள் வரும்.

(ஆங்கிலத்தில் நாம் நமது மாமா, சிற்றப்பா, பெரியப்பா ஆகியோர்களை 'அங்கள்' என்று குறிப்பிடுவோமே, சரியாக அதேபோல அராபிய மொழி வழக்கில் சிறிய தந்தை , பெரிய தந்தைமார்களை 'அபூ' என்ற சொட் பிரயோகத்தில்தான் அராபியர் அழைத்து வந்தனர்.)

அல் குரானின் 'அபூ' என்கிற வார்த்தைப் பிரயோகம் இப்ராஹீம் அலை அவர்களின் சிறிய தந்தையை அல்லது அவரது பெரிய தந்தையைக் குறிக்கிறதே தவிர அது அவரது நிஜத் தந்தையைக் குறிப்பிட வில்லை என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
இப்ராஹீம் அலை அவர்களின் தந்தையின் பெயர் 'தரெஹ்' என்பதாகும்.

அல் குரானின் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களுக்கு அல் குரானிலேயே ஆதாரம் இருப்பது இன்னுமொரு விஷேசம்.

'அல் அப்' என்கிற வார்த்தையை அராபிகள் 'அல் அம்'என்பதற்கும் பாவிப்பார்கள்.

இதற்கு ஆதாரமாக யாகூப் (அலை) அவர்களின் குழந்தைகள் கூறிய பின் வரும் அல் குரான் வசனம் இருக்கிறது.

"...............உங்களுடைய இறைவனையும் , உங்களுடைய பெற்றோர்களின் இறைவனையும் நாங்கள் வணங்குவோம்.............."
(அல் குரான்: 2 : 133 )

இஸ்மாயீல் (அலை) அவர்களை யாகூப் (அலை) அவர்களின் குழந்தைகள் 'அபூ' என்று கூறுகிறார்கள்.ஆனால், நிஜத்தில் இஸ்மாயில் (அலை) அவர்கள் யாகூப்
(அலை) அவர்களின் குழந்தைகளின் பெரிய தந்தையாக இருக்கிறார்

அது மட்டுமன்றி , நபி (ஸல்) அவர்களுடைய 'நூர்' என்கிற பேரொளி காபிரான மனிதர்களின் முதுகெழும்பில் ஒரு பொழுதும் இடம் பெயர மாட்டாது.

5 ) அல் பஹ்ருல் முஹீத் பித் தப்சீர்

அல் பஹ்ருல் முஹீத் பித் தப்சீர் என்கின்ற அல் குரான் விளக்கவுரையை முஹம்மது இப்னு யூசுப் என்கிற அறிஞர் எழுதியுள்ளார்.

அவர் தனது தப்சீரில் அல் குரான் 26 வது அத்தியாயம் 219 வது ஆயத்துக்கு இப்படி விளக்கம் எழுதுகிறார்.

"அல்லாஹ்வுக்கு சுஜூது செய்யக் கூடிய ஒருவரின் முதுகெழும்பில்   இருந்து அல்லாஹ்வுக்கு சுஜூது செய்யக் கூடிய இன்னொருவரின் முதுகந்தண்டுக்கு அவரது 'ரூஹை' அல்லாஹுத்தாலா இடம் பெயரச் செய்தான்."

அவர் தனது கருத்துக்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

"நான் பரிசுத்தமான ஆண்களின் முதுகந்தண்டில் இருந்து பரிசுத்தமான பெண்களின் கற்ப்பறைகளுக்கு இவ்வுலகில் பிறக்கும் வரை அல்லாஹ்வினால் இடம் பெயரச் செய்யப் பட்டுக் கொண்டே இருந்தேன்"

அது மட்டுமன்றி அவர் தனது  தப்சீரில் "யார் யாரெல்லாம் காபிராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் அசுத்தமானவர்கள்" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

"முஸ்ரிகீன்கள் அனைவரும் அசுத்தமானவர்கள்.............."
(அல் குரான்: 9 : 28 )

இதே விதமான கருத்துக்களுடன் கொஞ்சம் அதிகப் படியான விளக்கங்களை இமாம் பஹ்ருல் ராசி எழுதிய "அத் தப்சீருள் கபீர்" என்ற கிரந்தத்திலும், சுலைமான் இப்னு உமர் எழுதிய "அல் புதூஹாதுள் இலாஹிய்யா பித் தவ்லீஹி தப்சீரில் ஜலாளைனி ளித் தகாயகில் கபிய்யா" என்கிற கிரந்தத்திலு காண முடியும்.

நாம் மேலே எடுத்து சொன்ன தப்சீர் உலமாக்களின் விளக்கங்களில் இருந்து நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் முஸ்ரிகீன்கள் இல்லை என்பதும்,நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் அல்லாஹ்வை முற்றிலும் ஏற்றுக் கொண்ட மூமின்கள் என்பதும் தெளிவாகிறதல்லவா?

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad