அஹ்லுல்பைத் Headline Animator

Monday, October 3, 2011

"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!


"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு .அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!.......அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?


அண்மையில்  BMICH இல் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பொழுது நரகத்தில் மிகக் குறைந்த வேதனை அளிக்கப் படுகின்ற திரு.அபூதாலிபின் இணை வைப்பு சம்பந்தமாகவும் அவரது இஸ்லாம் சம்பந்தமாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

அப்பொழுது அங்கே பிரசன்னமாகியிருந்த இலங்கையின் உலமா சபை ஒன்றின் தலைவரிடம் இது பற்றிய தீர்ப்பு கேட்கப் பட்டது.

அந்தத் தலைவர் தனக்கு அருகே அமர்ந்திருந்த ஜாமியா நளீமியாவின் மூத்த பணிப்பாளர் ஒருவருடன் கலந்தாலோசித்து விட்டு "சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு. அபூதாலிப் காபிர்" என்று தீர்ப்பு வழங்கினார்.

திரு.அபூதாலிப் முஸ்லிம், மன்னிக்கவும் ..மூமின் என்கிற அஹ்லுல்பைத்  தமிழ்  தளத்தின் வாதம் இலங்கையின் மூத்த இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுடன் முரண்படுகிறதே?


இல்லை!.

அப்படியொன்றும் முரண்படவில்லை.

உலமா சபை தலைவரின் கூற்றை நன்கு கவனியுங்கள்.

அவர் "சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி ஹசரத் அபூதாலிப் காபிர்" என்றுதான் சொன்னார்.

அந்த தலைமைத்துவ   இஸ்லாமிய அறிஞர் "அல் குர்ஆன் கருத்தின் படியும் அல் குர் ஆனுக்கு முரண் படாத ஹதீஸ்களின் படியும் ஹசரத் அபூதாலிப் காபிர்"என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் அஹ்லுல் கிதாப் - அதாவது வேதத்தை பின்பற்றும் வேதத்தின் கூட்டத்தினர் என்று அழைக்கப் பட்டு வந்தார்கள்.

அதே போல முஸ்லிம்கள் அனைவரும் அஹ்லுஸ் சுன்னாக்கள் - நபி (ஸல்)௦ அவர்களின் நடைமுறையைப் பின்பற்றும் சுன்னாவின் கூட்டத்தினர் என்று அழைக்கப் பட்டு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் தலைவராக தெரிவு செய்யப் படுகிறார்.

அவர் நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதி என்ற நிலையில் கலீபா என்று அழைக்கப் பட்டார்.

நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினருடன் சில விடயங்களில் அவர் பகிரங்கமாக முரண் பட்டமையினால் அஹ்லுல் பைத்களை -நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களை நேசித்த சில சஹாபாக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களது தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை.

தர்ம சங்கடமான இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களது சுன்னாவைப் பின்பற்றிக் கொண்டிருந்த அஹ்லுஸ் சுன்னாக்களில் இருந்து ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களது சுன்னாவையும் அதே சமயம் அபூபக்கர் (ரலி) அவர்களின் தலைமையை   ஏற்று அவரது சுன்னாவையும் ஒருங்கே பின்பற்றத் தொடங்கினார்கள்.

இந்தக் கூட்டத்தினர் தம்மை நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுடன் தலைவரின் சுன்னாவையும் பின்பற்றும் கூட்டத்தினர் என்று அழைத்துக் கொண்டனர்.

முதலாம் கலீபாவின் மறைவிற்குப் பின்னர் அவரது பிரதி நிதியாக உமர் (ரலி) முஸ்லிம்களின் தலைவராக நியமிக்கப் படுகிறார்.

உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களின் நேரடியான பிரதி நிதி இல்லாத காரணத்தால், சஹாபாக்களுக்கு மத்தியில் உமர் (ரலி)யை எப்படி விளிப்பது என்பதில் சிக்கல் தோன்றியது.

உமர் (ரலி) யுடைய நெருங்கிய தோழர் அமர் இப்னு ஆஸ் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டு பிடிக்கிறார்.
அதன்படி அவர் உமர் (ரலி)யை 'அமீருல் மூமினீன்' -மூமின்களின் தலைவர்-என்று அழைக்கத் தொடங்கினார்.

முஸ்லிம்களின் தலைவரை அமீருல் மூமினீன் என்று அழைக்கத் துவங்கிய பெருமை அமர் இப்னு ஆஸ் அவர்களுக்கே சொந்தமாகிறது.

அவரைப் பின்பற்றி எல்லோரும் இரண்டாம் கலீபாவை அமீருல் மூமினூன் என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.
(ஆதாரம்: மஹ்மூத் அஹமத் கலந்பர் எழுதிய "கலீபாக்கள் வரலாறு- தமிழ் மொழி பெயர்ப்பு -பக்கம்:     230 )  

தீர்ந்தது பிரச்சினை.

இப்பொழுது அஹ்லுஸ் சுன்னாக்கள் வேறாகவும், நபி (ஸல்) அவர்களது சுன்னாவுடன் முதலாம் ,இரண்டாம் கலீபாக்களின் சுன்னாவை ஏற்றுக் கொண்ட கூட்டத்தினர் வேறாகவும் ஒற்றுமையுடன் இருந்து வந்தனர். 

இம்முறை அஹ்லுஸ்  சுன்னாக்களை விட்டும் வேறாக தம்மை இனம் காட்ட விரும்பிய இந்தக் கூட்டத்தினர் தம்மை நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுடன் தலைவர்களின் சுன்னாவையும் பின்பற்றும் கூட்டத்தினர் என்று அழைத்துக் கொண்டனர்

இரண்டாம் கலீபாவின் மறைவிற்குப் பின்னர் உதுமான் (ரலி) முஸ்லிம்களின் தலைவராக தெரிவு செய்யப் படுகிறார்.

உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலும் மக்கள் அவரை அமீருல் மூமினூன் என்றே அழைத்து வந்தார்கள்.

அவரின் காலத்தில் இருந்த மக்களில் அஹ்லுஸ் சுன்னாக்கள் வேறாகவும், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுடன் மூன்று கலீபாக்களின் சுன்னாவை ஏற்றுக் கொண்ட மக்கள் வேறாகவும் இருக்கத் தொடங்கினர்.

ஆனால், இம்முறை ஒரு வித்தியாசம்.

மூன்றாம் கலீபாவின் பாதுகாப்பு செயலாளர் மர்வான் இப்னு ஹகமின் தந்திரமான மோசமான செயல் பாடுகளை சகித்துக் கொள்ளாத நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுடன் மூன்று தலைவர்களின் சுன்னாவைப் பின்பற்றும் கூட்டத்தினரிடையே பிளவுகள் வெடிக்கத் துவங்கின. 

இதன் உச்சக் கட்ட கொடுமையாக மூன்றாம் கலீபா கொலை செய்யப் படுகிறார்.

அவரது மறைவுக்குப் பிறகு அஹ்லுஸ் சுன்னாக்களுடன் நபி (ஸல்) அவர்களது சுன்னாவுடன் மூன்று கலீபாக்களின் சுன்னாவையும் பின் பற்றிய கூட்டம் ஒன்றிணைகிறது.

இந்த இரண்டு கூட்டத்தினரின் ஏகோபித்த முடிவில் முஸ்லிம் உம்மாவின் நான்காம் கலீபாவாக அலி (ரலி) தெரிவு செய்யப் படுகிறார்.

முதலாம் கலீபாவின் தெரிவிலும் சஹாபாக்களிடையே கருத்து முரண்பாடு இருந்தது.

இரண்டாவது கலீபாவின் தெரிவிலும் இதே முரண் பாடு தொடர்ந்தது.

மூன்றாம் கலீபாவின் நியமன காலத்தில் இருந்து இது கொஞ்சம் பகிரங்கமாக வெளிப்படக் காரணமாக உமையாக்களின் செல்வாக்கு அரசியலில் புகுந்தது காரணமாக அமைந்தது.

ஆனால், நான்காம் கலீபாவின் தெரிவில் ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மாவும் ஏகோபித்த நிலையில் அவரை தெரிவு செய்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவ தெரிவில் முஸ்லிம்கள் கருத்து முரண்படாமல் ஒரே கருத்தில் ஒரே தலைவரை தெரிவு செய்த கதை நான்காம் கலீபாவின் தெரிவில் மட்டுமே இருக்கிறது.

நான்காம் கலீபாவுக்கு எதிராக அமீர் முஆவியாவின் தலைமையில் பனு உமையாக்களும் அவர்களது ஆதரவாளர்களுமே அவரது தெரிவை மறுத்து அவருக்கு எதிராக கலகம் செய்யத் துவங்குகிறார்கள். 

ஏனெனில், மூன்றாம் கலீபாவின் மறைவுடன் பனு உமையாக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

இழந்து போன தமது ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற வெறியில் பனு உமையாக்கள் மிகவும் தந்திரமாக இமாம் அலி யை எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில், இமாம் அலி அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்ட அஹ்லுஸ் சுன்னாக்களை விட்டும் வேறாக தம்மை இனம் காட்ட வேண்டிய இக்கட்டான நிலை பனு உமையாக்களுக்கு ஏற்படுகிறது.

உடனே அவர்கள் தமது ஆதரவாளக் கூட்டத்தினரை -அஹ்லே ஜமாஅத் என்று அழைக்கத் துவங்கினார்கள்.

உமையாக்களின் ஜமாஅத் என்று தம்மை அவர்கள் பகிரங்கமாக வெளிப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

அவ்வாறான செய்கை அவர்களை முஸ்லிம்களின் எதிரிகளாக வேறாக இணங்க காட்டி முஸ்லிம் உம்மாவை விட்டும் அவர்களைப் பிரித்து விடும் அபாயம் இருந்தது.

பனு உமைய்யாக்களின் இந்த செய்கையின் காரணமாக முஸ்லிம் உம்மா ஒற்றுமையின்றி இரண்டாக பிளவு பட்டு போகிறது.

அவர்களில் ஒரு கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களதும் அவர்களது குடும்பத்தவர்களினதும் ஆதரவாளர்களான அஹ்லுஸ் சுன்னா.

அடுத்தது பனு உமையாக்களின் ஆதரவாளர்களான அஹ்லே ஜமாஅத்தினர்.

அஹ்லுஸ் சுன்னாக்கள் அல் குர் ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையும் பின்பற்றினார்கள்.

அஹ்லே ஜமாத்தினர் அல் குர் ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுடன் ஜமாத்தினரின் அதாவது உமையாக்களின் சுன்னாவையும் பின்பற்றினார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு எதுவித தீர்வும் இல்லாமலேயே இமாம் அலி அவர்கள் படு கொலை செய்யப் படுகிறார்கள்.

அதன் பின்னர் இமாம் ஹசன் முஸ்லிம்களின் தலைவராக தெரிவு செய்யப் படுகிறார்.

அமீர் முஆவியாவின் திட்டமிடப் பட்ட நெருக்குதல்களின் காரணமாக இமாம் ஹசன் அவர்களினால், இஸ்லாமிய தலைமைத்துவத்தை அவரில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

மிகவும் நயவஞ்சகமாகவும், தந்திரமாகவும் இமாமிடம் இருந்து தலைமைப் பதவியை அமீர் முஆவியா தனக்கு சுவீகரித்துக் கொண்டார்.

ஹிஜ்ரி நாற்பத்து ஒன்றில் இமாம் ஹசன் அவர்கள் அமீர் முஆவியாவுடன் ஒரு உடன் படிக்கைக்கு வந்து தனது தலைமைத்துவத்தை  அமீர் முஆவியாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

அதன் பின்னர் அமீர் முஆவியா முஸ்லிம் உம்மாவின் சர்வாதிகார மன்னராக ஆட்சியில் அமர்கிறார்.

அமீர் முஆவியா உடைய கட்டுப் பாட்டில் முழு இஸ்லாமிய உலகும் வந்த   அந்த ஆண்டை அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் "யவ்முல் ஜமாஹ்" என்று பெயரிட்டார்.

"மக்களின் ஆண்டு" என்று அதற்கு பெயர்.

அமீர் முஆவியா முஸ்லிம் உலகின் மன்னராக தன்னை நிலை நிறுத்திய அந்த வருடத்தில் இருந்து உமையாக்களின் ஆட்சித் துவங்குகிறது.

இது ஹிஜ்ரி நாற்பத்து ஒன்றில் நடை பெறுகிறது.

பிரபலமான சஹாபாக்களில் ஒருவரான இப்னு உமரைக் (ரலி) கொண்டு அமீர் முஆவியா அந்த வருடத்தை இப்படி பிரகடனப் படுத்துகிறார்.


"இதன் பின்னர் இஸ்லாமிய உலகில் நபி (ஸல்) அவர்களது சுன்னாவும் ஜமாத்தினரின் சுன்னாவும்தான் அமுலில் இருக்கும். அதன்படி இனிமேல்   இந்த புதிய ஆட்சிக்கு கட்டுப் பட்டு இருக்கும் முஸ்லிம் உம்மா அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத் என்று அழைக்கப் படும்"

"இதற்குப் பின்னர் முஸ்லிம் உலகை 'ஜமாத்தினரின் சுன்னாதான்' ஆளும் " என்றும்  பிரகடனப் படுத்தினார்கள்.

அப்துல்லா இப்னு உமர் (ரலி ) உடைய பெயர் இங்கே குறிப்பிடப் பட்டாலும், இதன் பின்னணியில் மர்வான் இப்னு ஹகமின் செல்வாக்கு இருந்திருக்கும் எனபது பின்னைய சரித்திர நிகழ்வுகளில் புரிந்து போனது.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜமாத்தினர் என்று சொன்னது பனு உமையாக்களை.

அதன்படி 'ஸுன்னத் வல் ஜமாஅத் ' என்பது -"அமீர் முஆவியாவின் அல்லது பனு உமையாக்களின் சுன்னாக்களை அதாவது ,நடைமுறைகளைப் பின்பற்றும் கூட்டம்" என்று அழைக்கப் படும்.

ஆனால், நாம் தவறாக சுன்னத் வல் ஜமாஅத் என்றால் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பின் பற்றும் கூட்டம் என்று தப்பாக விளங்க வைக்கப் பட்டிருக்கிறோம்.

வரலாற்று நிஜங்களை சரியாக அறியாத    எங்களது அப்பாவி உலமாக்களால்  அப்படி விளங்க வைக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இமாம் ஹசனுடைய மரணத்தின் பின்னர் அமீர் முஆவியாவின் ஆதரவாளர்கள் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பிரிவில் ஒன்று பட்டு ஓரணியில் இருந்தார்கள்.

அவர்கள் பகிரங்கமாக அஹ்லுல் பைத்களின்  எதிரிகளாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களது சுன்னாவுக்கு முற்று முழுதாக முரணான முறையிலேயே நடந்தும் கொண்டார்கள்.

அதே சமயம் நபி (ஸல்) சுன்னாவை மிகக் கவனமாக அவரது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்களும்,  அவர்களது ஆதரவாளர்களும் மாத்திரம் பின்பற்றத் தொடங்கினார்கள். 

அழிந்து போகின்ற நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பாதுகாக்க வேண்டிய கடமைப் பாடு அவர்களுக்கு இருந்தது.

இந்த சூழ் நிலையில், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அவர்களது குடும்பத்தவர்களான அஹ்லுல் பைகளை விடவும் அதிகமாக அறிந்தவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது.

இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களின் சரியான சுன்னாவை நமக்கு தொடராக கொண்டு வந்து சேர்த்தவர்கள் என்கிற பெருமை அஹ்லுல் பைத்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்குமே சாரும்.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் இறுதிவரை அமீர் முஆவியாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே போல , அமீர் முஆவியாவும், பனு உமையாக்களும் அஹ்ளுல்பைத்களின் சுன்னாவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் காரணமாக , நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மிகக் கவனமாக பின் பற்றிய அஹ்லுல் பைத்கள் ஸுன்னத் வல் ஜமாத்தில் உள் வாங்கப் படவில்லை.

இதன் காரணமாகத்தான் ஹிஜ்ரி இருநூற்றி முப்பது வரை குலபாயே ராஷிதீன்கள் என்று முதல் மூன்று கலீபாக்களை மாத்திரம் முஸ்லிம் உம்மா ஏற்றுக் கொண்டிருந்தது.

முஸ்லிம் உம்மா ஏற்றுக் கொண்டார்கள் என்பதைவிடவும், ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

முதல் மூன்று கலீபாக்களும், அதன் பின்னர் இஸ்லாமிய ஆட்சிக்கு சொந்தக்காரர்களான  உமையா அப்பாசிய மன்னர்களும், கலீபாக்களும், அமீர்களும்  இமாம் அலியினுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களில் சிலர் இமாம் அலியையும்,  அஹ்ளுல்பைத்களையும் ஜும்மா மேடைகளிலும், ஏனைய பகிரங்க பிரச்சாரங்களிலும் தூற்றவும் செய்தார்கள்.

ஆனால், உமைய்யாக்களின் கலீபா உமர் இப்னு அப்துல் அசீஸ் (ரலி)) அவர்களுடைய காலத்தில் அவர் ஜும்மா மேடையிலும், பகிரங்கமாகவும் இமாம் அலியையும் அஹ்லுல் பைத்களையும் திட்டும் செய்கையை தடை செய்து இருந்தார். 

ஆனாலும் அவருடைய அக்காலத்தில் கூட குலபாயே ராஷிதீன்களில் ஒருவராக இமாம் அலி ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் தொடராக சுமார் என்பது வருடங்களாக இமாம் அலி அவர்களும் ,அஹ்ளுல்பைத்களும் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும்  ஜும்மா மேடைகளில் தொடர்ச்சியாக எங்களது உலமாக்களால் நிந்திக்கப் பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.    

இமாம் அலி அவர்களுக்கும் அஹ்ளுல்பைத்களுக்கும் எதிரான இந்தப் போக்கு  அப்பாசிய கலீபா முஹமத் இப்னு அல் ரஷீத் அல் முஹ்தாசிம்  உடைய காலம் வரை தொடர்ந்தது.

இந்த தூரதிஷ்ட நிலைக்கு இமாம்அஹமத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தான் முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

இமாம் அஹமத் இப்னு ஹன்பல் (ரஹ்)  அவர்கள் , சுன்னத் வல் ஜமாதினருக்கு மத்தியில் அஹ்லுல் பைத்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதன் முதல் குரல் கொடுத்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

தபகாத் அல் ஹனாபிலா  என்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் மிகவும் பிரபலமான , ஆதார பூர்வமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு கிரந்தங்களில் ஒன்று.

'ஹன்பலி'    மத்ஹபை சார்ந்தவர்கள் தமது ஆதாரத்துக்கான தொகுப்புகளை இந்த கிரந்தத்தில் இருந்துதான் எடுப்பார்கள்.

இந்தக் கிரந்தத்தில் 'இப்னு யால 'என்பவரின் மேற்கோளில் , வாதிசாஹ் அல் ஹிம்ஸ் அறிவிப்பதாக பின்வரும் சம்பவம் பதியப் பட்டிருக்கிறது.

"அலி (ரலி)  அவர்களை குலபாயே ராஷிதீன்களில் ஒருவராக தீர்மானிக்கப் பட்டதன் பின்னர் நான் அஹமத் இப்னு ஹன்பல் அவர்களை சந்தித்தேன்.

"அபூ அப்துல்லாவே" நான் இப்னு ஹன்பல் அவர்களிடம் கேட்டேன்."உங்களது செய்கை சஹாபாக்களில் தல்ஹாவையும் சுபைரையும் அவமதிக்கின்ற மாதிரி இருக்கிறதே?"

அவர் சொன்னார் "எதற்காக இப்படி மோசமாக பேசுகிறீர்கள்?" என்ற அவர் தொடர்ந்தார்." முரண் பட்ட நிலையில் பேசுகிற மக்களைப் பற்றி எம்மால் என்னதான் சொல்ல முடியும்?"

நான் பதிலுருத்தேன்." அல்லாஹ் உங்களை திருத்துவானாக! நாம் இப்படி சொல்வதற்கு காரணம் , நீங்கள் அலி (ரலி) அவர்களை குலபாயே ராசிதீன்களில் அதாவது அவரை நான்காவது கலீபாவாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.அப்படி என்றால் அவருக்கு முந்திய மூன்று கலீபாக்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்.இவர் நேரியவர்  என்றால் அவர்கள் வழி தவறியவர்கள் ஆகிறார்களே?" என்றேன்.

அதற்கு அவர்கள் என்னிடம் "அலி அவர்களை நான்காம் கலீபாவாக ஏற்றுக் கொள்வதை தடுப்பதற்கு உறுதியான காரணங்கள் எதுவும் எனக்குத் தென்படவில்லை." என்றார்கள்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீதை எடுத்து சொன்னேன்.

இதை கேட்ட இமாம் இப்னு ஹன்பல் "உமர் (ரலி) அவர்கள் அவரது மகனை விடவும் உயர்வானவர்." என்ற இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் தொடர்ந்தார்கள்."  உமர் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர் அலியை அறுவர் கொண்ட தெரிவுக் குழுவில் இணைத்து இருக்க மாட்டார். அது மட்டுமின்றி அலி அவர்களே தம்மை 'அமீருல் மூமினீன்' என்று பிரஸ்தாபித்து இருக்கிறார்.அவர் தன்னை; தான் மூமின்களின் தலைவர் இல்லையா என சஹாபாக்களிடம் கேட்டு இருக்கிறார்." என்று அவர் கூறினார்.
(ஆதாரம்;தபகாத் அல் ஹனாபிலா பாகம்: 1  பக்கம்: 292)

உங்களது கவனத்துக்கு இப்னு உமரின் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான ஹதீதை தருகிறோம்.
(இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம்.அதில் முதலாவது சிறப்புக் குரியவராக அபூபக்கர் (ரலி) அவர்களை மதிப்பிட்டோம். 
பிறகு உமர் இப்னு கத்தாப் (ரலி)அவர்களையும் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்"
அதன் பின்னர் , சஹாபாக்களில் அவர்களை விடவும் சிறந்தவர்கள் யாரும் இருக்கவில்லை.)
(ஆதாரம்: புஹாரி பாகம் ; 4     ஹதீத் ;  3655 )        

இது மாதிரியான ஹதீதுகளைஆதாரமாகக் கொண்டுதான் இமாம் அலிக்கும்,         அஹ்ளுல்பைத்களுக்குமான நெருக்குதல்கள் பனு உமைய்யாக்களினால் சிறந்த முறையில் முடுக்கி விடப்பட்டன.

இந்த குறிப்பில் இருந்து சுன்னத் வல் ஜமாஅத் என்று அஹ்லுஸ் சுன்னாக்களி விட்டும் பிரிந்த கூட்டத்தினர் இமாம் அலியுடைய தலைமைத்துவத்தை அல்லது அவரை நான்காம் கலீபாவாக நீண்ட காலத்துக்கு ஏற்று இருக்க வில்லை என்பது எமக்கு புலனாகின்றது.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களுடைய துணிகர முயற்சியின் விளைவாக தான் குலபாயே ராஷிதீன்கள் நால்வர் என்ற முடிவுக்கு ஹிஜ்ரி இரு நூற்று முப்பதில் முஸ்லிம் உம்மா வந்தது.

அது வரை இமாம் அலியும் அவரது ஆதரவாளர்களும் இஸ்லாத்தை விட்டும் விலகியவர்களாகவே அப்போதைய முஸ்லிம்களாலும், உலமாக்களினாலும் கணிக்கப் பட்டார்கள்.அதாவது, இமாம் அலியின்  ஆதரவாளர்கள் காபிர்கள் என்று பகிரங்கமாக அழைக்கப் பட்டார்கள்.  

இப்பொழுது , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்பது அமீர் முஆவியாவின் சுன்னத்தை பின் பற்றுகின்ற  ஜமாத்தினர் அல்லது கூட்டத்தினர் என்பதை விளங்கி இருப்பீர்கள்.

அதுதான் நிஜம்.

ஏனெனில், அமீர் முஆவியாவின் ஆதரவாளக் கூட்டத்தினரின் கருத்துப் படி, இமாம் அலியின் கூட்டத்தினரான அஹ்லுஸ் சுன்னாக்கள் அனைவரும் வழி தவறியவர்கள்.ஆகையினால், இவர்கள் அனைவரும் காபிர்கள்.

அதே சமயம், அமீர் முஆவியாவின் தலைமையில் ஒன்று திரண்டிருந்த பனு உமையாக்களின் ஆதரவாளர்களான ஜமாத்தினர் அனைவரும் நேர் வழி நின்ற சஹாபாக்களின் சுன்னாவை பின் பற்றுகின்ற முஸ்லிம்கள்.

அவர்களுடைய தலைவர் அமீர் முஆவியா.

அவர் ஒரு முஸ்லிம்.

அவரிடம் இருக்கின்ற சின்ன சின்ன தவறுகள் கருத்தில் கொள்ளப் படத் தேவை  இல்லை.ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம்.

அது மட்டுமன்றி, அவர்கள் அனைவரும் சுன்னத் வல் ஜமாஅத்தாக மாறிய முஸ்லிம்கள்.

இப்பொழுது நாம், ஸுன்னத் வல் ஜமாஅத் என்றால் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பின் பற்றிய கூட்டம் என்று தப்பாக அர்த்தம் சொல்லித் தரப் பட்டு எம்மை அறியாமல் அமீர் முஆவியாவின் சுன்னத்தைப் பின் பற்றுகின்ற ஜமாத்தில் சேர்ந்திருக்க நிர்ப்பந்திக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மாத்திரம் துணிகரமாக இமாம் அலி அவர்களையும் அஹ்லுல் பைத்களையும் எங்களுக்கு சரியான முறையில் நெறிப் படுத்திக் கட்டாது இருந்திருப்பின் எங்களது நிலைமை என்னவாகி இருக்கும்?

நாம் எம்மை அறியாமல், அமீர் முஆவியாவின் ஆதரவாளர்களாக சுன்னத் வல் ஜமாத்தில் இருந்துக் கொண்டு அஹ்லுல் பைத்களுக்கு எதிரான நிலைப் பாட்டில் இருந்து வழி தவறி போய் இருப்போம்.

அல்லாஹ் எங்களை அந்த அநியாய செய்கையை விட்டும் பாதுகாத்தான்.

இப்பொழுதும் யாரெல்லாம் சுன்னத் வல் ஜமாத்தில் இருந்துக் கொண்டு அஹ்லுல் பைத்களுக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பனு உமைய்யாக்களின் ஆதரவாளர்கள் என்று தெரிந்துக் கொள்ளட்டும்.

இன்னும் கொஞ்சம் இலகு வார்த்தையில் சொன்னால்,  அமீர் முஆவியாவின் ஆதரவாளர்கள். இமாம் ஹுசைனை கொலை செய்த யசீதின் ஆதரவாளர்கள்.

பத்ரு சஹாபாக்களினதும், இமாம் அலியினதும் அஹ்லுல் பைத்களினதும் எதிரிகள்.

சவூதி நிதி நிகழ்ச்சி நிரல்களில் சிக்கி சவூதியின் அமெரிக்க இஸ்லாத்தை நியாயப் படுத்தும் தலைமைத்துவ உலமாக்கள் இந்த நிஜங்களை ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.

ஆனால், சவூதி நிதிகளில் தங்கி இருக்காத எங்களது உலமாக்கள் இந்த உண்மையை அறிந்ததும் தங்களது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்ப முடியும்.

எங்களது இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று மிகச் சரியானது.

அல் குர் ஆனையும் நபி (ஸல்) அவர்களது சுன்னாவையும் பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னாக்களின் அகீதாவின்படி ஹசரத் அபூதாலிப் (ரலி) ஒரு மூமின்.

அல் குர் ஆனையும் பனு உமையாக்களையும்  பின்பற்றும் சுன்னத்வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி ஹசரத் அபூதாலிப் ஒரு காபிர்.

இவ்வளவுதான் வித்தியாசம். 


4 comments:

Muhammad Ali said...
This comment has been removed by a blog administrator.
Muhammad Ali said...

Salaam Alaikum Brother.. I am really sorry. I copy some post from your site paste in Face book. I am not ask any permission from U before do that. I hope you will not angry with me. Same time what happen?? U not post regularly now a days. Please only one site I saw in Tamil for Ahlulbaith. I Hope you will continue your good job.

அஹ்லுல்பைத் said...

அன்பு நண்பர் முஹம்மத் அலியின் வருகைக்கும், உவந்தளித்த பின்னூட்டத்திற்கும் நன்றி.

அஹ்லுல்பைத் தளத்தில் உள்ள விடயங்களை மக்கள்மயப் படுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

நீங்கள் அதனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நன்றி.

வாழ்த்துக்கள்.

நபிகளாரின் பெற்றோரைப் பற்றியும் அவர்களது மூதாதையரைப் பற்றியும் மக்கள் மயப் படுத்தப் பட்டிருக்கிற ..........படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிற தவறான கருத்துக்களின் நிஜ சொரூபத்தை துகிலுரிக்கும் நோக்கில் ஒரு நூலை எழுதி அதன் இறுதிக் கட்ட வேளைகளில் மும்முரமாக இருக்கிறோம்.

அஹ்லுல்பைத் தளத்தின் பதிவுகளின் குறைவுக்கு அதுதான் காரணம்.

மற்றபடி ஒன்றும் இல்லை.

நூல் வெளியீட்டு விழா தினத்தை அறிவிக்கிறோம்.

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து விடை பெறுகிறோம்.

Muhammad Ali said...

Salaam Brother,
Really if I am in India I can come and join with you. But I am in Bahrain now. Really I missing this good day. I hope to get the book to read and study about our beloved Prophet family.

Thanks.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad