அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, October 25, 2011

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????


கொழும்பில் தெமட்டகொட என்றொரு பிரதேசம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பிரசித்தமானது.

அந்த வீதியில் இருக்கின்ற எங்களது இஸ்லாமிய இயக்கங்களின் தொலைந்து போன ஆன்மீக பலம் ஆச்சரியமாக அங்கே இருக்கின்ற ஒரு பௌத்த விகாரையில் பளீரிட்டு தன்னை இனம் காட்டியது.

அந்த பௌத்த விகாரையை மக்கள்   'அலி தென்னா பன்சல' என்று அழைப்பார்கள்.

இரண்டு யானைகளின் சிலைகள் அந்த விகாரையின் நுழை வாயிலில் இருப்பதால் அதற்கு அப்படியொரு பெயர்.

 'இரண்டு யானைகளின் விகாரை' என்று அதன் அர்த்தம் தமிழ் வடிவம் பெறும்.


இலங்கையில் இருக்கின்ற போதைப் பொருள் விற்பனையின் பாதாள உலகின் முக்கிய நாயகர்களில் சிலர் தெமட்டகொடையில் இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாயகர்களில் தலைவர்களில் ஒருவர் நீர் கொழும்பு பொலிசாரிடம் பெருந் தொகையான போதைப் பொருட்களுடன் கையும் மெய்யுமாக பிடி பட்டார்.

போதைப் பொருள் கடத்தலின் நாயகர் தப்புவதற்கு வழி இல்லை.

நிலைமையின் அதி பயங்கரத்தை உணர்ந்துக் கொண்ட அவரது சகாக்கள் உடனே அலி தென்னா பன்சலையில் ஒரு நேர்த்திக் கடன் வைத்தார்கள்.

அதன்படி அவர்களின் தலைவர் எவ்வித சிக்கலும் இன்றி பொலிசாரின் பிடியில் இருந்தும் விடுவிக்கப் பட்டால் தாம் அலி தென்னா பன்சலையில் இருக்கும் தேவாலயத்திற்கு தங்கத்தால் ஒரு வேலி போடுவதாக அவர்கள் நேர்ந்துக் கொண்டார்கள்.

கூடவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கையில் வந்தது.

அரசாங்கத்துக்கு ஆதரவான பாதாள உலகின் நாயகர்களை தேர்தலின் பொழுது சிறைகளை விட்டும் விடுதலை செய்வதும், எதிர்க் கட்சிக்கு ஆதரவான பாதாள உலகின் நாயகர்களை பிடித்து சிறையில் போடுவதும் மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் தேர்தல் கலாச்சாரம் அல்லவா?

நமது இந்த நாயகர் அரச ஆதரவாள பாதாள உலகின் நாயகன்.

சிறையை விட்டும் அவரை வெளியே எடுப்பதற்கான பிரயத்தனங்கள் வேகமாக அரச தரப்பு அரசியல் வாதிகளின் ஆதரவுடன் செய்யப் பட்டது.

அதன் படி, அவரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட போதைப் பொருள் திடீரென     வேறொரு பொருளாக மாற்றம் பெற்றது.

"குடு தத்குடுவாக" மாறியது.- புரிந்ததா?

அதன் காரணமாக கொஞ்ச நாளில் நீதி மன்றில் அவருக்கு பிணை கொடுக்கப் பட்டது.

தலைவர் இப்பொழுது வெளியே வந்து விட்டார்.

நிம்மதி பெரு மூச்சு விட்ட அவரது சகாக்கள் தங்களது தலைவரின் விடுதலைக்கு தாம் அலி தென்னா பன்சலையில் வைத்த வேண்டுதல் தான் காரணம் என்று உறுதியாக நம்பத் தொடங்கினர்.

அவர்களது ஆத்மார்த்தமான நம்பிக்கையின் படி, சக்தி மிக்க அலி தென்னா பன்சலைக்கு தாம் நேர்ந்து வைத்த நேர்ச்சையை பூர்த்தி செய்ய அந்தத் தொண்டர்கள் தயாரானார்கள்.

அதன் படி சுமார் நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபா செலவில் எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒரு தங்க வேலி தயார் செய்யப் பட்டது.


அதன் பின்னர், மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப் பட்டிருந்த பெறுமதியான அந்த தங்க வேலியை அந்தத் தலைவரின் சகாக்கள் அலி தென்னா பன்சலைக்கு மிகவும் பக்தி சிரத்தையுடன் கொண்டு சென்றனர்.

நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வேலியுடன் பெருமிதமாக பன்சலைக்கு வந்த இந்தக் குழுவினரை பன்சலையின் பிரதான தேரர் அன்புடன் வரவேற்றார்.

தங்களது நேர்த்திக் கடன் பற்றியும், அதனை நிறைவேற்ற தாம் தங்க வேலியுடன் வந்திருப்பதாகவும் சகாக்கக்ளில் ஒருவர் தேரரிடம் கூறினார்.


தங்க வேலியை கீழே வைக்கும் படி தேரர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

பக்தி சிரத்தையுடன் அப்படியே செய்யப் பட்டது.

நாற்பத்து ஐந்து இலட்சம் பெறுமதியான அந்தத் தங்க வேலி எதுவித சலனத்தையும் அந்த தேரரில் கொண்டு வரவில்லை.

"என்னுடைய குழந்தைகளே.." என்று வந்தக் குழுவினரை விளித்த அந்தத் தேரர் "என்னைப் பொறுத்தவரை இந்த தங்க வேலி எவ்வித பெறுமதியும் அற்றது."என்றார்.

பாதாள உலகின் சின்னத் தலைவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.

"இந்தத் தங்க வேலி மனிதர்களின் இரத்தத்தைக் குடித்த பணத்தினால் செய்யப் பட்டிருக்கிறது." என்ற அவர் தொடர்ந்தார். "என்றாலும், நீங்கள் தரும் இந்த காணிக்கையை மறுக்கும் உரிமை எனக்குக் கிடையாது. அதனை இந்த விகாரையின் நிர்வாகிகளே முடிவு செய்வார்கள்."

தங்கத்தால் வடிவமைக்கப் பட்ட வேலியை எவ்வித பெறுமதியும் இல்லை என்று சொன்ன விகாரையின் பிரதான தேரர் தங்க வேலியை ஏற்பதற்கு மறுத்துவிடுவாரோ என்று பயந்த பாதாள உலகின் தலைவரின் அடிவருடிகளுக்கு இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவசர அவசரமாக விகாரையின் நிர்வாகக் குழு கூட்டப் பட்டது.

அவர்கள் சுதந்திரமாக முடிவு எடுக்கட்டும் என்பது போல தேரர் அவர்களைவிட்டும் விலகிக் கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் அந்த நிர்வாகக் குழுவின் தலைவர் பக்குவமாக  மிகவும் மரியாதையாக தேரரின் அவைக்கு அவர்களின் முடிவுடன் வந்தார்.

தேரர் ஒன்றும் பேசவில்லை.

தலைவர் பேசினார் "தேரர் அவர்களே..!எங்களது முடிவு தவறு என்றால் நீங்கள் எங்களை பெரு மனது கொண்டு மன்னிக்க வேண்டும்."

'எதற்காக ?' என்பது போல தேரர் அவரைப் பார்த்தார்.

"இது தங்க வேலியாக இருந்தாலும் இது எத்தகைய பணத்தைக் கொண்டு செய்யப் பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்" என்ற தலைவர் தொடர்ந்தார். "எங்களது நிர்வாகக் குழு இந்த தங்க வேலியை இந்த பன்சலையில் அமைக்கப் பட்டிருக்கிற தேவாலயத்தில் பொருத்தி இந்தப் பன்சலையை அசிங்கப் படுத்த விரும்பவில்லை."

தேரரின் முகத்தில் பெருமிதம் கலந்த இளநகை அரும்பியது.

'பணத்துக்கு விலை போகும் நிலையில் எனது விகாரையின் மக்களும்  இல்லை.'

தேரர் எதுவும் பேசாமல் அந்த பாதாள உலகின் நாயகர்களை தீர்க்கமாகப்   பார்த்தார்.

அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

எதுவும் பேசாமல் தாம் கொண்டு வந்த பெறுமதியான தங்க வேலியை எடுத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிப் போகத் தொடங்கினார்கள்.

இந்த விடயத்தைக் கேள்விப் பட்டவுடன், நாமும் உங்களைப் போலவே ஆச்சரியப் பட்டு போனோம்.


அன்று மாலை, கொத்தடுவையில்   எங்கள் நண்பர் ஒருவரின் மரண வீட்டில் நாம் ஒன்று திரண்டிருந்தோம்.

மரண வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்திருந்த சிலரில் அந்த பகுதி பள்ளிவாசலின் நிர்வாகிகளும் இருந்தார்கள்.

தேர்தல் நெருங்கி இருந்த காரணத்தால் யாருக்கு வாக்குப் போடுவது என்பதில் பல்வேறு பட்ட கருத்துக்களை அங்கே திரன்டிருந்தவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

எங்களது நண்பர் ஒருவர் அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று தலைவராக இருக்கின்றவரின் பெயரைக் கூறி "இப்பகுதி முஸ்லிம்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதுதான் புத்திசாலித்தனம்..."என்றார்.


அவரது கருத்தை பள்ளிவாசலின் நிர்வாகி கடுமையாக கண்டித்தார்.

"அவர் இந்தப் பகுதியில் வீதியை செப்பனிடும் பொழுது பள்ளி வாசலில் இருந்து பிரதான பாதை வரைக்கும் உள்ள பகுதிக்கு கொங்ரீட் போட மறுத்துவிட்டார்." பள்ளி வாசல் நிர்வாகி தொடர்ந்து சொன்னார். "ஆனால், "............"என்பவர் தனது செலவில் அந்த பகுதிக்கு கொங்ரீட் போட்டு தந்தார்....ஆகவே, நாம் பகிரங்கமாக அவருக்கு எங்களது ஆதரவை வழங்குகின்றோம்."

எங்களது நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.

அமைதியாக அடங்கிப் போனார்.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

ஏனெனில்,பள்ளி வாசல் நிர்வாக சபை அங்கத்தவர் பெருமையுடன் பெயர் குறிப்பிட்ட ....நாம் பெயர் குறிப்பிடாத அந்த அரசியல் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருந்து செயல்படுபவர்தான் தங்கவேலி செய்து பௌத்த விகாரைக்கு அன்பளிப்பு செய்ய முயன்ற பாதாள உலகின் நாயகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த பிரசித்தமான விடயமாகும்.


எது எப்படிப் போனாலும் எங்களது மனத்தில் முள்ளாக நெருடிய கேள்விக்கு விடை இன்னும் புரியவில்லை.

தங்கவேலி செய்தவரின் தராதரம் சரியில்லை என்று நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வேலியை மறுத்த தன்மானமுள்ள பௌத்த விகாரையின் தேரரும் நிர்வாகிகளும் இருக்கும் ஆன்மீக தளத்தின் அருமையின் பெறுமதி என்ன?

வெறும் முப்பதாயிரம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதிக்கு தமது ஆத்ம கௌரவத்தை மொத்தமாக விற்று விட்ட பள்ளி வாசல் நிர்வாகிகளின் 'காக்கா' பிடிக்கும் இழி குணத்தின் பெறுமதி என்ன?

எங்களுக்கு என்றால் ஒன்றுமே புரியவில்லை.

உங்களுக்கு????? 

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad