அஹ்லுல்பைத் Headline Animator

Monday, October 1, 2012

அமைதியின் இருப்பிடம்...........



சென்றவாரத்தில் ஒரு நாள் ஜன சந்தடி மிக்க கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவிலே நான் நடந்துப் போய்க்கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையைப் பார்த்தால் சுமார் மூன்று வயது நிரம்பிய குழந்தையொன்று தனித்து தவறிப் போன தனது தாயை அல்லது தந்தையைத் தேடி அழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கணப் பொழுதில் அந்தக் குழந்தையைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடிவிட்டது.

குழந்தையின் முகத்தில் கலவரம் கலந்தப் பயம் தெரிந்தது.

தன்னைச் சுற்றி திடீரென கூட்டம் கூடியதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை சத்தம் இன்னும் அதிகரித்தது.



குழந்தையையும், குழந்தையை சுற்றியிருந்த கூட்டத்தையும் கவனித்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்த பொழுது,கூப்பிடு தொலை தூரத்தில் இருந்து பதட்டத்துடன் ஒரு பெண் கூடியிருந்த கூட்டத்தை குறி வைத்து ஓடி வந்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் முகத்திலும் கலவரம்.

அவள் யாரையும் சட்டை செய்யாது கூட்டத்தைப் பிளந்து உள்ளே நுழைந்தாள்.

அழுதுக் கொண்டிருந்தது அவள் குழந்தை.

தனது தாயை இனம் கண்டதும் அழுதுக் கொண்டிருந்த குழந்தை தாவி வந்து அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டது.

குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

ஆனால், கலவரம் படர்ந்திருந்த குழந்தையின் முகத்தில் இப்பொழுது அமைதி நிலவியது.

அந்தத் தாய் தனது குழந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உச்சி மோந்தாள்.

அதன் பின்னர் அந்தத் தாயும் குழந்தையும் அவ்விடத்தை விட்டும் போகத் தொடங்கினார்கள்.

நான் போகவேண்டிய திசையை நோக்கித் தான் அவர்கள் சென்றார்கள்.

எனக்கு முன்னால் நடந்துப் போய்க் கொண்டிருந்த அவர்களைப் பின்தொடர்ந்தவனாக நானும் போய்க் கொண்டிருந்தேன்.

கூட்ட நெரிசலில் மீண்டும் தாயும் மகளும் ஒருவரை விட்டும் ஒருவர் கணப் பொழுது கொஞ்சம் பிரிந்தனர்.

ஆனால், இம்முறை இருவரும் தம்மை உடன் சுதாகரித்த நிலையில் சட்டென்று ஒருவரை ஒருவர் தேடி கூட்டத்தை தள்ளியபடி ஒன்றிணைந்தனர்.

தாய் குழந்தையின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் .

குழந்தை அன்னாந்துத் தனது தாயைப் பார்த்து நிம்மதியுடன் சிரித்தாள்.

தாயும் குழந்தையைப் பார்த்து முறுவலித்தாள்.

இந்தக் காட்சி சட்டென்று ஒரு உண்மையை என் மனத்தில் புரிய வைத்தது.

அது என்ன?

அமைதி.!

அமைதியின் இருப்பிடம் எது என்பதை அந்தக் குழந்தையின் நிம்மதியான சிரிப்பு எனக்கு உணர்த்தியது.

இனம் புரியாத குழப்பமும், கூட்டமும், இறைச்சச்சலும் நிறைந்த அந்த சூழல் அந்தக் குழந்தையின் உள்ளத்தில் ஒருவிதமான அச்சுறுத்தலை உருவாக்கியது.

முகம் தெரியாத , தனது நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத அந்த மக்கள் வெள்ளத்தில் தனது கரத்தை அக்கறையுடன் பற்றிய தனது தாயை அந்தக் குழந்தை முழுவதுமாக நம்புகிறது.

தனது பாதுகாப்புக்கு தன்னை நேசிக்கும் தனது தாய் இருப்பதை அந்தக் குழந்தை தெரிந்து வைத்திருக்கிறது.

அதன் காரணமாக தன்னை கொஞ்சமும் நேசிக்காத, தன் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத அந்தக் கூட்டத்தில் அந்தக் குழந்தை நிம்மதியாக இருக்கிறது.

குழந்தையின் பாதுகாப்புக்கு அதன் தாய் உத்திரவாதம் கொடுக்கிறாள்.

அந்த நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு நிம்மதியைக் கொடுக்கிறது.

அந்த நிம்மதி அந்தக் குழந்தைக்கு அமைதியைக் கொடுக்கிறது.

வளர்ந்து பெரியவர்களான நமக்கு....?

அடிப்படையில் அந்தக் குழந்தைக்கும் நமக்குமிடையில் பெரிதாக ஒரு வேறுபாடும் இல்லை.

நாம் ஒன்றில் தாயைத் தொலைத்த குழந்தையின் நிலையில் நமது நிம்மதியை தேடி தவிக்கிறோம்.

அல்லது, தாயைக் கண்டு அவளின் பாதுகாப்பில் தனது இருப்பை உணர்ந்து தன்னை அலட்சியப் படுத்தும் மக்களிடையே கூட நிம்மதியான நிலையில் அமைதியான குழந்தையின் நிலையில் நிம்மதியாக இருக்கிறோம்.

நமக்கு , நமது பாதுகாப்புக்கு அல்லது நமது நிம்மதிக்கு நமக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்கும் இறைவனில் நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு நிம்மதியைக் கொண்டு தருகிறது.

இறைவனில் நம்பிக்கை தொலைத்தவர்களுக்கு நிம்மதியும் தொலைந்துப் போகிறது.

இறைவனில் நாம் வைக்கும் நம்பிக்கை நமது வாழ்வுக்கு ஒரு இலக்கை நிர்ணயிக்கிறது.

என்னுடைய பள்ளி நாட்களில் ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்தேன்.

வீட்டில் அவரது தாயாரின் தாயார் -உம்மம்மா -அவரது முழங்கைக்கு எண்ணெய் தேய்த்தவாறு இருந்தார்.

"உம்மா.......உங்கள் கைக்கு என்ன நடந்தது?" என்று அந்தத் தாயாரிடம் கேட்டேன்.

"ஒ.....அதுவா" என்றவர் தனது கைக்கு எண்ணெயைத் தேய்த்தவாறு "தவறிப் போன ஆடொன்றை தேடிப்போன பொழுது கால் தவறி விழுந்து விட்டேன்.........முழங்கை முறிந்து விட்டது.நல்லவேளை தலைக்கு அடிபடவில்லை.........அல்ஹம்துலில்லாஹ் .....வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை.அல்லாஹ் காப்பாற்றினான்"என்றார்.

வீட்டினுள் வயதான அந்தத் தாயாரின் வயோதிக சகோதரர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவர் என்னைப் பார்த்து முறுவலித்தார்.

நான் அவரைப் பார்த்து "சுகமா......." என்றேன்.

"அல்ஹம்துலில்லாஹ்........அல்லாஹ்வின் அருளால் நலம்..." என்றார்.

அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் அவ்விடத்துக்கு வர அவர் வந்த அவரது நண்பருடன் எழுந்து சென்றார்.

அவர் நடக்கும் பொழுது நொண்டி.....நொண்டி நடந்து சென்றார்.

"காலில் என்ன.....?" என்றேன்.

"தேங்காய் பறிக்கும் பொழுது ஒரு தேங்காய் தவறி காலில் விழுந்து விட்டது........அல்ஹம்துலில்லாஹ்.........தேங்காயைத் தலையில் விழ வைக்காமல் அல்லாஹ் காப்பாற்றினான்." என்றார்.

மிகச் சாதாரணமாக அலட்சியமாக ஒலித்த அவர்களின் பதில்களுக்கான உள்ளார்ந்த அர்த்தம் அப்பொழுது எனக்குப் புரியவில்லை.

இறைவன்  எப்பொழுதும் நமக்கு நல்லதையே நாடுவான் அல்லது நல்லதையே செய்வான் என்கிற நம்பிக்கையில் பிறந்த பதில்களாக அந்த முதியவர்களின் பதில்களில் ஒலித்த அர்த்தம் இப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.

நண்பரின் முதிய தாயார் முறிந்துப் போன தனது முழங்கையைப் பற்றிக் கவலைப் படும் மன நிலையில் இருக்கவில்லை.

அதே போல, காயப் பட்ட காலைப் பற்றிக் கவலைப் படும் மன நிலையில் அந்தத் தாயாரின் முதிய சகோதரர் இருக்கவில்லை.

தமக்கு ஏற்பட்ட இழப்புகளிலும் நன்மையைக் காணும் உளப் பாங்கினை அல்லாஹ்வை .....அவனது தீர்ப்பினை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு அவர்களில் வெளிப் படுத்தியிருந்தது என்னவோ உண்மை.

அல்லாஹ்வை விசுவாசிக்கும்........அல்லது தன்னைப் படைத்த இறைவனை விசுவாசிக்கும் ஒவ்வொருவரின் மன நிலையும் இப்படித்தான் இருக்கும்.

அதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இறைவனை பூரணமாக நம்பும் மனத்தில் நிம்மதி இருக்கும் என்பது சத்தியம்.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad