அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, October 18, 2011

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???


இதென்ன புதுக் கோஷம் என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகிறது.

ஆனாலும் உண்மை அதுதான்.

சம்  சம்   கிணற்றின் நீரின் சுவையில் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகத்தின் வேதனை புரிந்து போகும்.

சபாவுக்கும்  மர்வாவுக்கும் இடையேயான  ஓட்டத்தின் தடுமாற்றத்தில் அன்னை ஹாஜாராவின் தனிமையான பரிதவிப்பு பட படக்கும்.

சம் சம் கிணற்றின் தீரமான கதைகளில் பரிதாபமாக நாம் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தின் கதையை சுத்தமாக மறக்கடிக்கப் பட்டுப் போனோம்.

அதென்ன மறந்த கதை?

தூர்ந்து போன சம் சம் கிணற்றை மீண்டும் தோண்டி உயிர்ப்பித்த நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் வாலிப அப்துல் முத்தலிபின் தீரமிக்க தீர்மானங்களில் ஒன்றாக அந்தக் கதை இருக்கிறது.


மறைந்துப் போய் கதைகளிலே மட்டும் உயிர்த்துக்   கொண்டிருக்கின்ற சம் சம் கிணறு இருக்கும் இடத்தை தனக்குக் காட்டித் தந்தால் தனது முதாதையர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக பலியிடுவதாக வாலிபர் அப்துல் முத்தலிப் அல்லாஹ்விடம் நேர்ச்சை வைக்கின்றார்.

கிணறு இருக்கும் இடம் பற்றி அவருக்கு கனவில் காண்பிக்கப் படுகிறது.

குறைஷி அராபியரின் எதிர்ப்பையும் மீறி அவர் துணிந்து கிணறு இருக்கும் இடத்தை தன்னந் தனியாக தோண்டுகிறார்.

அவர் தோண்டிய இடத்தில் இருந்து நீர் மீண்டும் பீரிட்டு கிளம்புகிறது.

அதன் பின்னர் அவர் தான் அல்லாஹ்விடம் நேர்ந்துக் கொண்டவிதமாக தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட முனைகிறார்.

அவ்வாறு அறுத்துப் பலியிட அழைத்துச் செல்லப் பட்டவர் வேறு யாரும் இல்லை.

அவர்தாம், நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (அலை).

அப்துல்லாஹ் (அலை) அவர்களின் மாமன்மார்களின் தலையீட்டால் அவருக்குப் பகரமாக நூறு ஒட்டகைகள் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடப் பட்ட கதை வரலாறு.

நமது இன்றைய ஹஜ் தின பிரசங்கங்களில் சம் சமக் கிணற்றின் பெருமையைப் பேசும் கட்டங்களில் கூட இந்த விடயங்களை யாரும் மருந்துக்குக் கூட நினைவு படுத்துவது இல்லை.

சரி! அதை விடுங்கள்.




இப்பொழுது ஒவ்வொரு வருடமும் 9 / 11 என்றொரு நாள் உலக மக்களால் பலவந்தமாக நினைவு படுத்தி வைக்கப் படுகின்றது.

செப்டம்பர் பதின் ஒன்று என்ற அந்த நாளில் அமெரிக்காவின் குண்டு வைத்து தகர்க்கப் பட்ட இரட்டைக் கோபுரமும் அதன் பின்னர், உடைக்கப் பட்ட அந்த கோபுரத்துக்காக துவம்சம் செய்து ஆக்கிரமிக்கப் பட்ட இஸ்லாமிய நாடுகளும் நினைவுக்கு வரும்.

அந்த நாளில், அமெரிக்காவின் அதிபர் சீரோ சதுக்கத்துக்கு வந்து அந்த துயர நாளை நினைவு படுத்தி முதலைக் கண்ணீர் விட்டு அதை துடைத்து விட்டு சில அறிக்கைகளை வெளியிடுவார்.

உலகத்தின் அனைத்து ஊடகங்களும் அவரது அந்த செய்தியை நேரலையில்  காட்டுவார்கள்.

அதே போல ,டிசம்பர் இருபத்து ஐந்தில் இயேசு நாதர் பிறந்த தினம் வரும்.

வத்திகானில் போப் ஆண்டவர் சொல்லும் செய்திக்காக உலகம் காத்திருக்கும்.

இந்தத் தினங்கள் யாவும் சர்வதேச தினங்களாக உலக மக்களால் நினைவு படுத்தப் படுகின்றன.

இதே போன்று முஸ்லிம்களால் மிகக் கவனமாக நினைவு படுத்தப் படவேண்டியதொரு முக்கிய தினம் சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் உலகத்திலே இடம் பிடித்துள்ளது.

ஆனால், நாம் அந்த தினத்தை நினைவு படுத்துவதை விட்டும் தடுக்கப் பட்டு விட்டோம்.

அடக்கி வாசிக்கப் படும் அஹ்லுல்பைத் அரசியலில் அப்படியானதொரு துரதிர்ஷ்ட நிலை வலிந்து உருவகப் படுத்தப் பட்டிருக்கிறது.

அஹ்லுல்பைத் அரசியலுக்கு ஆதரவாக அன்றைய தினம் அப்படி என்னதான் நடந்தது?

வெறும் மண்ணையும் சுண்ணாம்பையும் இரண்டறக் கலந்து நான்கு சுவர்கள் கொண்டு கட்டப் பட்டிருந்த அல்லாஹ்வின் வீட்டை தகர்த்து தரை மட்டமாக்கிவிட ஆபிரகா என்ற மன்னன் பெரும் யானைப் படையுடன் அன்றைய தினம் மக்கா நோக்கி வந்திருக்கிறான்.

யானைகளைக் கொண்டு இடித்து தரை மட்டமாக்கவேண்டிய நிலையில் அந்தக் கட்டிடம் வலுவானதாக இருக்கவில்லை.

சுண்ணாம்பும் மண்ணும் கலந்த கலவையைத் தவிர அந்த சுவர்களில் எந்தப் பெறுமதியும் இல்லை.

ஆனாலும், அந்த சாதாரண கட்டடம் மக்காவின் மக்களிடையே ஒரு நினைவு தூபியாக விளங்கிக் கொண்டிருந்தது.

மேசப்போதொமிய நாகரீகத்தின் கொடுங் கோல மன்னன் நம்ரூதின் இறை மறுப்புக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஒரு நாயகனை அந்தக் கட்டடம் நினைவுப் படுத்தியது.

அப்போதைய மனிதக் குலம் அலட்சியப் படுத்தி ஒதுக்கிய  ஒரு கருப்பு நிற அடிமைப் பெண்ணின் அடக்கஸ்த்தலத்தை  அந்த கட்டடம் உள் வாங்கி இருந்தது.

பெண்ணுரிமைக்கு அல்லாஹ் அளித்த அற்புதமான அடையாளச் சின்னமாக அந்த ஆலயத்தில் அனுமதிக்கப் பட்ட அந்த அடக்கஸ்த்தலத்தின் அனுமதி அமைந்து இருந்தது.

அந்தக் கட்டடத்தின் உரிமையையும், அந்தக் கிணற்றின் உரிமையையும் பனு ஹாசிம் என்று அழைக்கப் பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் அனுபவித்து வந்தார்கள்.

பழமையான இவற்றைத் தவிர வேறெந்த விசேஷமும் அங்கே இருக்கவில்லை.

இவை தவிர, அந்த மன்னனின் திறன் மிக்க படையினரை எதிர்க்க கூடிய நிலையில் மக்காவின் மக்களும் இருக்க வில்லை.

அவர்களிடம் பெரும் மதிப்பில் இருந்தது எல்லாம் நான்கு சுவர்களினால் கட்டப் பட்டு இருந்த அந்தக் கட்டிடமும், அதனை அண்டியிருந்த கிணறும் அவைகளுக்கு பொறுப்பாக இருந்த பனு ஹாசிம் குடும்பத்தினரும் மட்டுமே.

இந்த சிறு கட்டிடத்தை இடிப்பதற்கும், கிணற்றை தனது ஆளுமையில் கொண்டு வருவதற்கும், பனு ஹாசிம் குடும்பத்தவர்களை ஆக்கிரமிப்பதற்கும் அந்த மன்னனுக்கு பெரும் யானைப் படையின் தேவை இருக்க வில்லை.

ஆனாலும், அவன் பெரும் யானைப் படையுடன் மக்கா நோக்கி வந்திருக்கிறான்.

அந்தத் தருணத்தில், ஒரு குடும்பத்தின் பொறுப்பில் இருந்த மிகப் பலமான ஆன்மீக நம்பிக்கைகளை துவம்சம் செய்து, மிகப் பலவீனமான பௌதீக ரீதியான சொத்துக்களை சூறையாடி அழித்தொழிக்க மன்னனின் பிரமாண்டமான யானைப் படை ஒரு புறமும், மன்னனின் பெரும் படையினரை எதிர்க்க எதுவித வலுவும் இல்லாத நிலையில் அந்த ஆன்மீகக் குடும்பமான பனு ஹாசிம் குடும்பத்தினர் மறு புறமும் இந்த இரண்டு கூட்டத்தினரில் வெற்றி பெறுபவர்கள் யார் என்பதைக் காணும் ஆவலில் அப்போதைய அராபிய குறைஷிகளும்  இருந்திருக்கிறார்கள் எனபது மட்டும் நிஜம்.

கஹ்பாவில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் ஹஜ்ஜில் நாம் இப்பொழுது முகாமிடும் மினாவில் அந்த யானைப் படை அன்றைய தினம் முகாமிட்டது.


தனது பெரும் படையை எதிர்க்க யாரும் இல்லாததைக் கண்ட மன்னன் துணுக்குற்றான்.

இதே சமயம் சூழ மேய்ச்சலில் இருந்த சில ஆடுகளையும் ஒட்டகைகளையும் மன்னனின் படையினர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

யானைகளின் பிளிறல் சத்தத்தையும் மன்னனின் படையினரின் ஆரவாரக் கோஷத்தையும் தவிர வேறெந்த சத்தமும் இல்லை.

மக்காவின் அராபிய குறைஷிகள் மலைகளின் மேல் ஏறி ஒளிந்துக் கொண்டார்கள்.

பனு ஹாசிம் குடும்பத்தினர் அவர்களது தலைவர் அப்துல் முத்தலிபுடன் தனித்து விடப் படுகிறார்கள்.

செய்வதறியாத அபாயச் சூழல்.

எந்த நிமிடமும் எதிர்பாராத எதுவும் நடக்கலாம்.

திடீரென மன்னனின் படையினர் அப்துல் முத்தலிபை தேடி வருகிறார்கள்.

அவரை அழைத்துக் கொண்டு மன்னனிடம் செல்கின்றார்கள். 

மக்காவில் தெரிந்த அமானுஷ்யமான அமைதி மன்னனின் மனத்திலும் கிலியை கொண்டுவந்திருந்தது.

மன்னன் அல்லவா? 

சாதுர்யமாக தனது பயத்தை அவன் மறைத்துக் கொண்டிருந்தான்.

கம்பீரமாக தனது சிம்மாசனத்தில் அமர்ந்து கஹ்பாவுக்கு உரிமைக் கோரிக்கொண்டிருந்த பனு ஹாசிம்களின் தலைவரை எதிர் கொள்ள அவன் தயாரானான். 

என்ன ஆச்சரியம்?

தலைவர் அப்துல் முத்தலிபை நேரில் கண்டவுடன் அவனது காம்பீரம் எல்லாம் எங்கோ பறந்து விட்டன.

பெரியவர் அப்துல் முத்தலிபைக் கண்டு பதறிக் கொண்டு மன்னன் தனது சிம்மாசனத்தை விட்டும் எழுந்தான்.

அப்துல் முத்தலிபை அமரச் செய்து அவருக்குப் பக்கத்திலேயே தானும் அமர்ந்துக் கொண்டான்.

போரை விட்டு விட்டு சமரசம் பேசவும் தயாரானான்.

அப்துல் முத்தலிப் பேசத்துவங்கினார்." உங்களது படையினர் கைப் பற்றிய எனது ஒட்டகங்களை மீண்டும் என்னிடம் தந்து விடச் சொல்லுங்கள்..."

மன்னன் அதிர்ந்துப் போனான்."பெரியவரே! நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?"

"ஏன்...இல்லை?" அப்துல் முத்தலிப் தொடர்ந்தார். "ஒட்டகங்களின் சொந்தக் காரன் நான்.அதனால் தான் எனது ஒட்டகங்களை நான் திருப்பிக் கேட்டேன்.ஆனால், கஹ்பாவின் சொந்தக் காரனோ அல்லாஹ்வாக இருக்கிறான்." அப்துல் முத்தலிப் தீர்க்கமாக சொன்னார்."கஹ்பதுல்லாஹ்வைப் பாது காப்பது அவனின் பொறுப்பு"

மன்னன் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

அப்துல் முத்தலிபின் பதிலின் மூலம் ஏகத்துவத்துக்கும், இறை மறுப்புக்கும் இடையேயான ஒரு பலப் பரீட்சைக்கு கங்கணம் கட்டியாகி விட்டது.

மன்னன் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுக்க கட்டளையிட்டான். 

அப்துல் முத்தலிபின் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட ஈமானின் பலத்தையும்,  அவனது அல்லாஹ்வை மறுக்கும் சைத்தானிய ஈமானின் பலத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஒரு களம் தயாராகி விட்டது.

அப்துல் முத்தலிப் தனது குடும்பத்தவர்களை அழைத்துக்கொண்டு கஹ்பாவுக்கு சென்றார்.

அவரது குடும்பத்தவர்களில் நபி (ஸல்) அவர்களை தனது வயிற்றில் சுமந்திருந்த அன்னை ஆமினா ஸலாமுன் அலைஹாவும்  ஒருவர்எனபது இங்கே நினைவு கூறத் தக்கது.

தனது குடும்பத்தவர்கள் சகிதம் இறை இல்லம் கஹ்பாவை அடைந்த அப்துல் முத்தலிப் கஹ்பாவின் கதவைப் பிடித்துக் கொண்டு உருக்கமாகப் பிரார்த்தித்தார்."யா!..அல்லாஹ்! நீயே இந்த வீட்டின் பாதுகாவலன்.இதனை இன்று நீயே பாதுகாத்துக் கொள்.இந்த வீட்டைப் பாது காத்துக் கொள்ள முடியாத எனது இயலாமைக்காக நான் உன்னிடம் மன்னிப்பைக் கேட்கிறேன்."

அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தவர்களை அழைத்துக் கொண்டு மலையின் மேல் ஏறி ஏனைய அராபிய குறைசிகளுடன் இணைந்துக் கொண்டார்.

கஹ்பதுல்லாஹ்வை அழித்தொழிக்க யானைப் படையின் மன்னன் இப்பொழுது தயாராகிறான்.

அவன் தனது படையினரை மக்காவை நோக்கி முன்னேறுமாறு பணிக்கிறான். 

யானைகள் பயங்கரமாக பிளிறியபடி முன்னேற மறுத்து நிலத்தில் அமர்ந்து விடுகின்றன.

மீன்டும் முயற்சிக்கின்றார்கள்.


கடூரமான பிளிறலுடன் யானைகள் அடிபணிய மறுக்கின்றன.

மீன்டும் மீன்டும், மீன்டும் முயற்சிக்கின்றார்கள்.

ஊகும்....யானைகள் அசைந்தபாடில்லை.

மன்னனின் மனத்தில் மட்டுமல்ல, இப்பொழுது எல்லோரின் மனத்திலும் கிலி கௌவிப் பிடிக்கிறது.

'இதென்ன துற்சகுனம்...?'

சிலர் யானைகளை மக்காவுக்கு எதிர்ப் புறமாக ஓட்டிச் செல்ல முயல்வது போல பாவனை செய்தார்கள்.

என்ன ஆச்சரியம்.

அடம்பிடித்த யானைகள் அமைதியாக எழுந்து நடக்கத் துவங்கின.

அவைகளை மீன்டும் மக்காவை நோக்கி திருப்பியபொழுது மினாவை அடைந்ததும் பிளிறியபடி நிலத்தில் அமர்ந்து விட்டன.

இந்த அமளி துமளிக்கிடையே திடீரென வானில் ஒரு பேரிரைச்சல்.

திடுக்கிடும் நெஞ்சுடன் வானை நோக்கினால்........

வேக வேகமாக ஒரு முகில் கூட்டம் பேரிரைச்சலுடன் இந்த யானைப் படைகளைக் குறிவைத்து வருவது தெரிந்தது.

எல்லோரும் விக்கித்துப் போனார்கள்."ஆண்டவனே...என்ன நடக்கப் போகிறது..."மன்னனைத் தேடினார்கள். "எங்கே எங்களது மன்னன்...."

அவனும் அச்சத்தில் உறைந்துப் போயிருந்தான்.

'கடலைப் பிளந்து மூசாவைக் காப்பாற்றிய அதே இறைவன் தானோ இந்த கஹ்பாவின் இறைவன்?'

நினைப்பதற்குக் கூட நேரம் இல்லை.

அந்த பேரிரைச்சலான முகில் கூட்டம் சிதறிப் பிரிவது போல இருந்தது.

'இதென்ன அதிசயம்...இது முகில்போல வந்த ஒரு வகை சிட்டுக் குருவிகளல்லவா' 

கீச் ..கீச்சிட்ட குருவிகளுக்கிடையே சத்தமிடாத ருத்திரமான சில குருவிகள் தங்களது சொண்டுகளிலும், கால்களிலும் சில கூழாங் கற்களை சுமந்துக் கொண்டு பறந்து வருவது தெரிந்தது.

நடக்கப் போகும் பயங்கரத்தை உணர்ந்துக் கொண்ட அந்தப் படையினர் யானைகளையும் விட்டுவிட்டு ஓடத் துவங்கினர்.

மினாவை அண்டியிருக்கும் முஸ்தலிபாவரைத்தான் அவர்களால் ஓட முடிந்தது. 

அலறியடித்து ஓடுகின்ற யானைப் படையினரை சுற்றி வட்டமிட்ட அவைகள் தத்தமது இலக்குகளை இனம் கண்டதன் பின்னர் தமது சொண்டுகளில் காவி வந்த கூழாங் கற்களையும், தமது கால்களில் சுமந்து வந்த கூழாங் கற்களையும் அந்தப் படையினரின் மேலே பொத்...பொத்தென்று போட்டு விட்டு பறந்தன.

பொடிக் கற்களால் தாக்கப் பட்ட அனைவரும் வெடித்து சிதறிப் போனார்கள்.

கணப் பொழுதில் முஸ்தலிபா பிணக் காடாக மாறியது.

கண் மூடி கண் திறக்கும் கணத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தன. 

இந்த சம்பவத்தை அல் குர் ஆன் விவரிக்கும் அழகைப் பாருங்கள்.

"யானைப் படையினரை இறைவன் நடாத்திய விதத்தை நீங்கள் பார்க்கவில்லையா?"

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் மிகவும் கீழ்த்தரமான நிலையில் ஆக்கவில்லையா?"

"அபாபீல் என்ற பறவைகளை அவர்கள் மீது ஏவி அனுப்பினான்."

"நெருப்புக் கங்கங்களைக் கொண்ட பொடிக் கற்களை அவைகள் எரிந்தன."

"அவர்கள் மென்று தின்னப் பட்ட வைக் கோள்களைப் போல அவன் ஆக்கிவிட்டான்." 
(அல் குர்ஆன் :  105 : 1 முதல் 5  ஆம் ஆயத்வரை)

ஹஜ்ஜில் அரபாவுக்குப் பின்னர் நாம் முஸ்தலிபாவில் கொஞ்ச நேரம் தங்கி விட்டு மினாவுக்கு வருகின்றோம்.


முஸ்தலிபாவை விட்டும் அவசர அவசரமாக சென்று விடும்படி நபி (ஸல்) அவர்கள் வேண்டியிருக்கிறார்கள்.

'இந்த அவசரம் ஏன்?' என்று வினவப் பட்டபொழுது 'முஸ்தலிபா   அல்லாஹ்வின் தண்டனை இறக்கப் பட்ட இடமாக இருக்கின்றது' என்று பதில் சொன்னார்கள்.

முஸ்தலிபாவில் ஆபிரகாவின் யானைப் படையினர் அழிக்கப் பட்ட சம்பவம் பதிந்து இருக்கிறது.


மினாவிலோ ஏகத்துவத்துக்கு எதிராக போர் தொடுத்த ஆப்ரகாவின்  படையினர் முகாமிட்டிருந்த அதே இடத்தில் இன்று நாம் ஏகத்துவத்தை நினைவு படுத்திக் கொண்டு வருடா வருடம் முகாமிட்டு இருக்கிறோம்.

ஆப்ரகா மன்னனின் யானைப் படையின் கதையுடன் பனு ஹாசிமிகளின் தலைவர் அப்துல் முத்தலிபின் ஈமானின் கதையும், யானைப் படை அழிக்கப் பட்டு ஐம்பத்தொரு நாள்களுக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் பிறந்த கதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப் படுகின்றன.

முஸ்தலிபாவிலோ  அல்லது மினாவிலோ இவைகளைப் பற்றியும் யாரும் மூச்சு விடுவது இல்லை. 

என்றாலும்,  மினாவில் அப்ரகாவின் யானைப் படையை நினைவு படுத்துவதிலும், முஸ்தலிபாவில் அப்ரகாவின் யானைப் படையினரின் அழிவை நினைவு படுத்துவதிலும் நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினரான பனு ஹாசிம்களின் ஈமானும், அல்லாஹ் அவர்களுக்கு உதவிய கதைகளும் பேசப் படுகின்ற கட்டாயம் இருக்கின்றது.

இஸ்லாமிய ஆட்சியில் பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய உமையா ஆட்சியாளர்களின் ஆளுமையின் காரணமாக நாம் இந்தக் கதைகளை நினைவு படுத்துவதிநின்றும் சூசகமாக தடுக்கப் பட்டு விட்டோம்.

நீங்கள் உங்களது நண்பரான ஒரு உலமாவிடம் "மினாவிலும், முஸ்தலிபா விலும் நடந்த வரலாற்று சம்பவங்கள் எதாவது இருக்கிறதா?" என்று மெதுவாக கேட்டுப் பாருங்கள்.

"நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்தார்கள்...நாமும் செய்கிறோம்...தேவை இல்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்" என்றுதான் அநேகமாக அவர்களின் பதில் இருக்கும்.

ஏனெனில், இவைகள் தாம் எங்களுக்கு கிடைத்த பதில்கள்.

2 comments:

irukkam said...

அல்குர்ஆனையும் அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுவதொன்றே இவ்வுலக மற்றும் மறுவுலக வெற்றிக்கான வழியென்பது நபி (ஸல்) அவர்களின் உறுதியான கூற்றாக இருக்கின்ற போதிலும், அதைத் தெரிந்தும், தெரியாதது போலக் காட்டிக் கொண்டு தாமும் பின்பற்றாது பிறரையும் பின்பற்ற விடாது தடுக்கும் போலி இஸ்லாமியவாதிகளால் இத்தகைய உண்மைகளை வாசிக்கவும் முடியாது. யோசிக்கவும் முடியாது.

எவ்வாறாயினும், உங்களது முயற்சிக்காக, அஹ்லுல்பைத் நேசன் என்ற வகையில் எனது உள்ளார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வது என் கடமை.

அண்மையில்தான், உங்களது தளம் எனக்கு அறிமுகமானது. நாள் தவறாமல் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து வருகின்றேன். பெரும்பாலான ஆக்கங்களை வாசித்து விட்டேன். இஸ்லாமிய வரலாற்றுண்மைகள் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

இன்னும் தோண்டப் போனால் எத்தகைய பூதங்கள் கிழம்புமோ என்ற அச்சவுணர்வு தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்றது.

இறைத்தூதரும் அஹ்லுல்பைத்தினரும் தம் உயிரையும் அர்ப்பணித்து வளர்த்தெடுத்த புனித இஸ்லாமும் அதன் கொள்கைகளும் பிற்காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவும் சடவாதத் தேவைகளுக்காகவும் எவ்வளவு மோசமாப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன என்ற உண்மை, ஒவ்வொரு உண்மை முஸ்லிமையும் ஆழ்ந்த கவலையில் ஈடுபடுத்தும் என்பது உறுதி.

அஹ்லுல்பைத் said...

சகோதரர் ஹாபிஸ் அவர்களுக்கு நெஞ்சு நெகிழ்ந்த நன்றிகள்.!

அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களில் ஒருவர் என்று துணிந்து உங்களை இனம் காட்டியதற்கு ஒரு சபாஷ்.

பொருளாதார ரீதியில் மற்றவர்களில் தங்கி இருக்காத ஒரு நிலையை நாம் எங்களது உலமாக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டோமானால், அஹ்லுல் பைத்களுக்கு நடந்த அநியாயங்களை அக்கு வேறு ஆணிவேராக அவர்கள் துகிலுரித்து விடுவார்கள்.

அந்த நன் நாளின் உதயத்திற்காக பொறுத்திருப்போம்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad