அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, January 12, 2012

பூட்டப் படாமல் பூட்டிய மனங்கள்...????பாணத்துறைக்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நண்பர் ஒருவரைக் காண நண்பர்கள் சிலர் சென்றிருந்தோம்.

விபத்துக்குள்ளான நண்பர் படுத்த படுக்கையில் இருப்பார் என்ற பதட்டமான எதிர்பார்ப்பு , மீண்டும் மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த நண்பரைக் கண்டவுடன் அதிர்ச்சியைக் கொண்டு வந்தது.

இது எப்படி சாத்தியம் என்ற ஆய்வில், விபத்து நடந்து இரண்டு வாரங்களின் பிறகுதான் நமக்கு செய்தி கிட்டியது என்று புரிந்துப் போனது.

நல்ல நிலையில் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் சூழ் நிலையில் எவ்வித இறுக்கமும் இன்றி நாம் எல்லோரும் மிக உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

நண்பர் சலபி கருத்துக்களால் கவரப் பட்ட தீவிர சலபி.

இன்னும் கொஞ்சம் இலகு வார்த்தையில் சொன்னால், அஹ்லுல் பைத்களின் மீது தீவிர நேசம் கொண்டுள்ள சலபி.(சலபிகள் அஹ்ளுல்பைத்கள் மீது நேசம் கொள்வதில்லை என்று யார் சொன்னது?)

சலபிகளின் நுனிப்புல் மேயும் கருத்தியலின்படி நாம் 'பிதுஅத்'காரர்கள்.

எங்களுடன் ஒன்றாக அமர்ந்திருப்பது கூட தவறு என்ற கருத்தியலில் அவரது நண்பர்கள் இருக்கிறார்களாம்.

ஆனால், எங்களது நண்பரால் அது முடியாது.


ஏனெனில், எங்களைப் பற்றி எங்கள் நண்பருக்கு நன்கு தெரியும்.

நபி குடும்பத்தினர் மீது நேசம் கொள்வதும், அவர்களை எங்களது இமாம்களாக ஏற்றுக் கொள்வதும் பிதுஅத்தான செய்கை இல்லையே?

அதனால், அவரது சலபி நண்பர்கள் நினைப்பது போல நாம் பிதுஅத் காரர்கள் இல்லை என்ற கருத்தில் எங்களைப் பற்றி எங்களது சலபி நண்பர் இருந்தார்.

அஹ்ளுல்பைத்களின் மீது கொள்கின்ற நேசம் நாம் மதிக்கும் இயக்க வேறுபாடுகளை விட்டும், பிரிந்து  பலவீனப் பட்டுப்  போன நாடுகளின் எல்லைகளை விட்டும், எப்பொழுதும் முறுகிய நிலையில் இருக்கும் இன , மொழி  வேறுபாடுகளை விட்டும் எம்மை அந்நியப் படுத்தி ஒரே விதமான கருத்தியலில் ஒற்றுமையாக ஒன்று படுத்தும் அற்புதமான அழகுக்கு  எங்களது நட்பு ஒரு சாட்சி.

இனி,

எங்களது உரையாடலின் மத்தியில் திடீரென நளீமியாவின் பிரபலமான விரிவுரையாளர்களில் ஒருவரான ஹைருள் பஷர் வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் அவர் வானொலியில் "நடந்து முடிந்துப் போன இஸ்லாமிய வரலாற்றை சிலர் மீண்டும் கிளறி ஆய்வுகள் செய்கிறார்களாம்.இது தேவை இல்லாத விடயம்.ஏனெனில், சஹாபாக்களான எங்களது முன்னோர்கள் 'இஜ்திகாதாக' சில முடிவுகள் எடுத்து சில காரியங்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த காரியங்களினால் ஏதாவது  கெடுதி எங்கள் சமூகத்துக்கு நிகழ்ந்து இருந்தால் அதற்காக அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நன்மையைக் கொடுப்பான்.மாறாக ,ஏதாவது நன்மை நடந்து இருந்தால் அதற்காக அல்லாஹ் அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுப்பான்.யதார்த்தம் இப்படி இருக்கின்ற படியால் நாம்  சஹாபாக்கள் செய்த செய்கைகளை ஆய்வு செய்யக் கூடாது.." என்ற கருத்து தொனிக்கும் விதமாக ஹைருள் பஷர் உரையாற்றி இருக்கிறார்.

இதனை நமக்கு சொன்னது நமது சலபி நண்பர்.

இதைக் கேட்டவுடன் எங்களில் ஒரு நண்பர் வெடிச் சிரிப்பு சிரித்தார்.சிரிப்புடனே இப்படி சொன்னார்."அவர் சொல்வது சரிதானே.....?"

நாம் மௌனமானோம்.

நளீமியாவின் விரிவுரையாளர்களில் ஒருவரான   ஹைருள் பஷர்  சொல்லுவது சரிதானா?

இந்தோனேசியாவின் சுமேத்ரா தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கம் பூதாகரமான பெரும் சுனாமி பேரலையை ஏற்படுத்தி ஆசியா கண்டத்தைக் காவு கொண்ட செய்தி நமக்கு தெரிந்தது தானே?

அந்த நில நடுக்கம் மட்டும் ஏற்படாது இருந்திருந்தால் சுனாமியும் இல்லை பேரழிவுகளும் இல்லையே?

சுனாமி நம்மை வந்து தாக்கும் வரை அது சுனாமி என்று கூட நமக்குத் தெரியாதே?

சுனாமி ஏற்படுத்திய அதிர்ச்சிகரமான நீங்கா வடுக்கள் சுனாமி பற்றிய அறிவை தேடுவதில் எம்மை கொண்டு சென்றதில் ஒரு தவறும் இல்லையே?

சுனாமி தினத்தின் அமைதியான அதிகாலைப் பொழுதில் எனது நண்பர் ஒருவர் அதிகாலை எழுவதற்காக வைத்த அலாரம் வேலை செய்ய வில்லை.

அவர் அன்றைய தினம் அவரது மனைவி பிள்ளைகளுடன் ரயிலில் கண்டி செல்ல தீர்மானித்து இருந்தார்.

அவருக்கென்று சொந்த வாகனம் இருந்தது.

எனினும் அவரது குழந்தைகளுக்கு ரயிலில் போக வேண்டும் என்ற ஆசை.

நம்பி இருந்த அலாரம் காலை வாரி விட்டதால், எழுந்து தயாராவதற்கு சுணங்கி விட்டது.

அதனால், அவர் பதறிக் கொண்டு ரயில் நிலையம் வர துரதிர்ஷ்டவசமாக கண்டி புகையிரதம் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுப் போய் விட்டிருந்தது.

எல்லோருக்கும் ஏமாற்றம்.

பிள்ளைகளின் ரயில் பயண ஆசையை என்ன செய்வது?

அடுத்த பிளட் பாரத்தில் மாத்தறை செல்லும் ரயில் காத்துக் கொண்டிருந்தது.

உடனே தனது முடிவை மாற்றிக் கொண்ட நமது நண்பர் உடனே மாத்தறை செல்லும் புகையிரதத்துக்கு அனுமதி சீட்டை எடுத்து குழந்தைகளுடனும் அன்பு மனைவியிடனும் மாத்தறை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணமானார்.


கொடூரமான சுனாமி பேரலை அந்த ரயிலைக் காவு கொள்ள வெறியுடன் வந்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்த அவரோ, குதூகலத்துடன் அமைதியான கடலை ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகளோ அறியவில்லை.

இது பிறிதொரு கதை.

எங்களது இன்னுமொரு நண்பரின் வீடு வெலிகமை கடற்கரை அருகே எதுவித பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது.

தந்தையை இழந்த அந்தக் குடும்பத்தில் அவரது தங்கைமார்களும் , வயதான அவரது தாயாரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள்.

சுனாமி விழுங்கி ஏப்பமிட்ட அநேக வீடுகளில் அவரது வீடும் ஒன்று.

சுனாமியின் கோரத் தாண்டவத்தை அறிந்ததும் நாம் அந்த வீட்டில் இருந்த நண்பரின் தங்கை மார்களுக்காகவும் வயதான அவரது தாயாருக்காகவும்  வருந்தினோம்.

சுனாமி அனர்த்த உதவிக்கு கிழக்கிலங்கையை நோக்கி நாம் போனதால் வெலிகமை செய்திகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

சுனாமி காவு கொண்டு ஒரு மாதத்தின் பின்னர் எங்களது நண்பரை எதேச்சையாக கொழும்பில் கண்டதும் நெஞ்சில் குற்ற உணர்வு நெருட "நலமா?" என்றேன்.  

"அல்லாஹ்வின் அருளால் நலம் " என்றார்.

அவரது தாயாரைப் பற்றியும் தங்கைமார்களைப் பற்றியும் கேள்விக் கேட்க தயக்கமாக இருந்தது. 

ஆனாலும் நண்பர் உற்சாகமாக அல்லாஹ்வின் அருளைப் பற்றி பேசத் தொடங்கினார்.

சுனாமிக்கு  ஒரு வாரத்துக்கு  முன்னர் நண்பரின் குடும்பத்தவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் பலவந்தமாக பொலிசாரின் துணைக் கொண்டு நண்பரின் தாயாரையும், அவரது சகோதரிகளையும் வெளியேற்றி இருக்கிறாராம்.

வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட அவரது குடும்பத்தினர் தொலை தூரத்தில் இருந்த ஒரு உறவினர் வீட்டில் தஞ்சமடைந்து இருக்கிறார்கள்.

ஒரு வாரத்தின் பின்னர் நிகழ இருக்கின்ற பயங்கரத்தை அறியாத அந்த வீட்டின் உரிமையாளர்கள் நண்பரின் குடும்பத்தினர் இருந்த வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள்.

சுனாமி பேரலை அந்த வீட்டை காவு கொள்ளும் பொழுது அந்த வீட்டில் அதன் உரிமையாளர் அவரது குடும்பத்தவர்கள் சகிதம் இருந்து இருக்கிறார்.

நண்பரின் குடும்பமோ சுனாமி பேரலை எட்டாத இன்னுமொரு இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருந்து இருக்கிறார்கள்.

நண்பர் சொல்லுவது சரி.

அல்லாஹ்வின் அருள் அபாரமானது.

இந்த இரண்டு கதைகளும் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

மாத்தறை ரயிலில் ஏறிய நண்பரின்   குடும்பத்தினர் சுணங்காமல் சரியான நேரத்துக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தால் அவர் கண்டி சென்ற ரயிலில் குடும்பத்தினருடன் இருந்திருப்பார்.

அவரது தவறான தீர்மானத்துக்கு என்ன காரணம் என்று பார்த்தால், சரியான முறையில் வேலை செய்யாத அவர் வாங்கிய வேலை செய்ய தவறிய  அலாரத்தை சொல்லலாம்.

அந்த அலாரத்தை விற்ற நிறுவனத்தை சொல்லலாம்.

அந்த அலாரத்தை செய்த வேலையாட்களை சொல்லலாம்.

அதனைப் பரிசோதித்த தரப் பரிசோதகரில் இருந்து அந்த நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளையும் சொல்லலாம்.

நாம் அலட்சியமாக கருதுகின்ற ஒவ்வொரு செயலும் எதிர்காலத்தில் நன்மையான அல்லது தீமையான ஒரு எதிர் விளைவுக்கு காரணமாக அமைந்து போகின்றன. 

அடுத்த கதையில் நண்பரின் தாயாரையும் அவரது சகோதரிகளையும் வீட்டை விட்டும் துரத்த வேண்டும் என்று யாரோ எடுத்த தவறான தீர்மானம் அந்த வீட்டு உரிமையாளர்களை காவு கொண்டு நண்பரின் வீட்டார்களைப்   பாதுகாத்திருக்கிறது.

இதே விதமாக நாம் இஸ்லாமிய வரலாற்றை அந்த வரலாற்று நாயகர்களின் முடிவுகளின் விளைவுகளை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது , இப்படி நடக்காமல் இப்படி நடந்து இருந்தால் இப்படி நடந்து இருக்குமே என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

உதாரணமாக மக்கா வெற்றியின் பொழுது நபி (ஸல்) அவர்களின் பேச்சைக் கேட்டு அபூசுபியானையும், முஆவியாவையும், இக்ரிமாவையும் மர்வான் இப்னு ஹகமையும் சிரச்சேதம் செய்திருந்தால் பனு உமையாக்களின் அட்டகாசங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் இல்லையே என்கிற எண்ணம் வருவது போல...........

சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே இஜ்திகாத் செய்து நபி (ஸல்) அவர்களின் பேச்சை மீறி அவரது கட்டளைகளை ஏன்  செய்ய வில்லை என்ற எண்ணம் வருவது போல...........

சஹாபாக்கள் எடுத்த இந்த தவறான தீர்மானங்களின் அபாயமான விளைவுகளைப்   புரிந்துக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அந்த தவறான தீர்மானத்தின் பயங்கரத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்ற முயன்ற  முறைகளைக் கூட புரிந்துக் கொள்ள முடியாத சஹாபாக்களின் பாமரத்தனத்தை நமது கால அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுப்பது போல.............

அதெப்படி?

சஹாபாக்கள் அவர்களது தன்னிச்சையான இஜ்திகாதின் படி எடுத்த முடிவுகளின் பயங்கரத்தை நபி (ஸல்) அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

அந்த அபாயத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாது காக்கும் நோக்கில் நபி (ஸல௦ அவர்கள் சில கட்டளைகளை அவரது தோழர்களுக்கு கட்டளை இடுகிறார்கள்.

அதன்படி மர்வான் இப்னு ஹகமுக்கும், அவனது  தந்தையாரையும் மதீனாவை விட்டு தேசப் பிரதிருஷ்டம் செய்கிறார்கள்.

அத்துடன் , அந்த இருவரும் எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய அரசு அரசாலும் எல்லையினுள் வரக் கூடாது என்றும் இஸ்லாமிய அரச விவகாரங்களில் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும்   கடுமையான நிபந்தனைகளையும்  விதிக்கிறார்கள்.

ஆனால், நபி (ஸல்) ௦ அவர்களது கட்டளைக்கு மாறு செய்து இஜ்திகாத் செய்த முதலாம் கலீபா மர்வானின் தந்தையை ஒரு பிரதேசத்துக்கு கவர்னராக நியமிக்கிறார்கள்.

இரண்டாம் கலீபா அவரது இஜ்திகாத் மூலம் துளக்கா முஆவியாவை சிரியாவின் கவர்னராக நியமித்து இன்னுமொரு தவறை செய்கிறார்.

மூன்றாம் கலீபாவோ அவரது இஜ்திகாத் மூலம் மர்வான் இப்னு ஹகமை இஸ்லாமிய அரசின் பாதுகாப்பு செயலாளராகவும், தனது மருமகனாகவும் எடுத்து பாரிய தவறை செய்கிறார்.

அதன் பின்னர் நடந்த பயங்கரங்களை வரலாறு அப்படியே பதிவு செய்து வைத்திருக்கிறது.

அல் குர்ஆனுக்கு   முரண் படாத ஹதீஸ்களும், அல் குர்ஆனுக்கு முரண் படாத இஸ்லாமிய வரலாறும் சஹாபாக்கள் எடுத்த தவறான தீர்மானங்களின் பயங்கரமான விளைவுகள் சூழ்நிலைகளில் ஏற்படுத்திய மாற்றங்களை துல்லியமாக எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

அமைதியான  குளத்தில் விழுகின்ற ஒரு சிறு கல் சின்ன சின்ன சிறு அலைகளை உருவாக்கி அந்த சூழலில் ஒரு மாறுதலை உண்டாக்குகிறது.

கடந்தக் காலங்களில் நாம் அனுமதித்த சில செயல்கள் எங்களது இப்போதைய விளைவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

சிறிது காலம் சென்று சூழ்நிலைகளில் நிகழும் ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டிய பிரிதொன்றுடன் வேறு படுகின்றது.

நாம் அலட்சியப் படுத்தும் ஒரு சின்ன நிகழ்வின் தொடர் விளைவு உலகின் போக்கையே மாற்றும் வலிமை கொண்டதாக இருக்கும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளின் விளைவுகளின் விளைவுகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது நமது மூதாதையர் விட்ட தவறுகளில் நாம் பாடம் படித்துக் கொள்ள முடிகிறது.

 ஹைருள் பஷர் இதனைப் புரிந்துக் கொண்டு தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறோம்.

டாக்டர் அன்புராஜின் ஆய்வுக்கான இன்றைய சிறு கதை:

மரணப் படுக்கையில் இருந்த நபி (ஸல்) அவர்கள் சமூகம் வழித் தவறாது இருக்க, இறுதி உயில் எழுத பேனாவும் ஒரு கடதாசியும் கேட்டார்.

என்ன எழுதப் போகிறார் என்பதை உணர்ந்துக் கொண்ட வழிக் கேட்டில் இருந்தவர்கள் (இஜ்திகாத் செய்து )அதற்கு தடையாக இருந்தார்கள்.

நேர் வழியை விரும்பியவர்கள் எழுத விடுங்கள் என்றார்கள்.

வீடு இரண்டு பட்டுப் போனது.

சஹாபாக்கள்   பிளவு பட்டுப் போனார்கள்.

இறுதியில் தடுத்தவர்கள் வென்றார்கள்.

வென்றவர்கள் வழித் தவறிப் போனார்கள்.

அவ்வளவுதான்.


(ஆதாரம்: புகாரி பாகம் ஒன்று 114 வது ஹதீஸ்)  

1 comment:

Dr.Anburaj said...

டாக்டர் அன்புராஜின் ஆய்வுக்கான இன்றைய சிறு கதை:

மரணப் படுக்கையில் இருந்த நபி (ஸல்) அவர்கள் சமூகம் வழித் தவறாது இருக்க, இறுதி உயில் எழுத பேனாவும் ஒரு கடதாசியும் கேட்டார்.என்ன எழுதப் போகிறார் என்பதை உணர்ந்துக் கொண்ட வழிக் கேட்டில் இருந்தவர்கள் (இஜ்திகாத் செய்து )அதற்கு தடையாக இருந்தார்கள்.
நேர் வழியை விரும்பியவர்கள் எழுத விடுங்கள் என்றார்கள்.வீடு இரண்டு பட்டுப் போனது.

சத்வ ரஸோ தாம்ச குணங்களின் விசேச கூட்டான மனிதனை முற்றிலும் உதாரண புருஷனாக குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்பது நமக்குள் தேக்கநிலையைக் கொண்டு வந்து வீடும். குரானும் மற்று அரபு நாட்டு நூல்களைக் கற்றுக் கொண்டு குறை நிறைகளை அறிந்து காலத்திற்கு தக்க புதிய தெளிவரைகளை உண்மைகளை அறிந புதிய சமயாச்சாரியார்களை ஆன்மீக விஞஞானிகளை உருவாக்க வேண்டும். உருவாகியிருந்தால் பின்பற்றலாம்.
பாரத பிரதமராய் இருந்த ஸ்ரீமான் மெரார்ஜி தேசாய் பஞசாபிற்கு விஜயம் செய்தார். பொற்கோவில் செல்வதாக இருந்தது. பொற்கோவிலுக்குள் இருந்த காலீஸ்தான் காடையர்கள் தேசாய் பொற்கோவிலுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்சுட்டுக் கொல்லப்படுவார் என்று அறிக்கை வெளியிட்டனர். பொற்கோவிலுக்குள் செல்லும் முன் தேசாய் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ” ஆபத்துள்ளது.எனவே குண்டு துளைக்காத உடை அணிந்து கொள்ள வேண்டும். என்று கேட்டுக் கொண்டனர்கள்.அதற்கு தேசாய் அவர்கள் ” நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. எனவே என்னை எவரும் கொல்ல விரும்ப மாட்டார்கள். நான் அணிந்திருக்கும் கதர் சட்டை எக்கு கவச உடையைவிட உறுதியானது.எனவே கதர் ஆடையே போதுமானது என்று கூறி விட்டார். யாரும் அவரைக் கூடவில்லை. ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதுதான் இது. ஸ்ரீதேசாய் அவர்களுக்கு பெரிதும் பிடித்த நூல் ஸ்ரீமத் பகவத் கீதை.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad