அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, December 20, 2012

மருமகனின் பேத்தியைத் திருமணம் செய்த மாமனார்.....?????இஸ்லாமிய நாகரீகத்துக்குள் (அ)நாகரீகம் புகுத்திய விஷமிகள் .....??? -


திருப்பதிக்கு  அல்வா கொடுத்து ........கடலுக்கு உப்பு  காட்டிய .....காட்டிக் கொண்டிருக்கும் நமது அறிஞர்கள்...?

குழப்பமாக இருக்கிறதா?

சில தினங்களாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சமூக ஒற்றுமையைக் கருத்திட் கொண்டு பரவலான பிரச்சாரங்கள்.

அத்தகைய பிரச்சாரங்களின் சாராம்சம் இப்படி ஒலித்துக்கொண்டிருந்த கதை நமக்கு எட்டியது.

"அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்களை நம்பாதீர்கள்.அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினையை உண்டு பண்ணும் நோக்கத்தில் செயல் படுகின்றார்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்துப் போன வழிக்கெட்ட பிரிவினர்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை ஆராய்வது இஸ்லாத்தில் இருக்கும் பிழைகளை தேடி அவற்றைப் பகிரங்கப் படுத்துவதற்கேயன்றி வேறில்லை.

"சஹாபாக்கள்தான் நபிகளாருக்குப் பிறகு நமக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தந்தவர்கள்.சஹாபாக்கள் எதனை செய்தார்களோ அவை நபிகளாரின் சுன்னாக்களாகும்.

"சஹாபாக்களைப் பின்பற்றித்தான் நாம் நமது கடமைகளை செய்ய வேண்டும்..அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்கள் சொல்லுவது போல அஹ்ளுல்பைத்கள் எனப் படுவோர் நமது சஹாபாக்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல.

அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான சஹாபாக்களின் செயல்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணானதல்ல.

'இஜ்திகாத்' செய்து சஹாபாக்கள் எடுத்த முடிவுகளினால் ஏதாவது தீமை இந்த சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தாலும் அதற்குக் காரணமான சஹாபாக்களுக்கு  அதற்கு ஒரு நன்மை கிடைக்கும்.ஆகவே,சஹாபாக்களின் செயல் விளைவுகள் நன்மையோ தீமையோ அதனைப் பற்றி நாம் ஆய்வுகள் செய்யக் கூடாது..........."

இவ்வாறு.....அல்லது இதனை விடவும் கொஞ்சம் அபத்தமாக இலங்கை வானொலி சத்தமிட்டதாம்.

பிரச்சாரம் செய்த பிரசங்கிகள் அனைவரும் இலங்கையில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய பிரசங்க பீரங்கிகள்.

பாமர முஸ்லிம்கள் அஹ்ளுல்பைத்களின் மீது வைக்கின்ற நேசத்தின் பின் விளைவுகளின் வெளிப்பாடு   அஹ்ளுல்பைத்களின் மீது கொடுமை புரிந்த எதிரிகள் மீதான அவர்களது கோபத்தை வெளிக் கொணரும் அபாயத்தை இந்த பிரச்சாகரர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

அத்தகைய தவறான புரிந்துணர்வுடன் இவர்கள் சமூக ஒற்றுமை சம்பந்தமாக பேசியதனால் அந்தப் பேச்சுகளின் ஒலி  விளைவுகள் சமூகத்தைப் பிளவுப் படுத்தும் பயங்கரத்தை உள் வாங்கி ஒலித்தன.

சமூக ஒற்றுமையின் ஒழிப்புக்காக இந்நிமிடமும் இணையங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சமூக ஒற்றுமையைப் பிரதி பலிக்கும் நோக்கில் அவர்களது பிரசங்கத்தில் வழக்கம் போல  அபூர்வமான சில கதைகளை 'ஹதீஸ்கள்'என்ற பெயரில்  கட்டவிழ்த்தும்  விட்டார்கள்.

வாழ்த்துக்கள்.

அதில் ஒன்று இமாம் அலி அவர்களின் நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தை அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா- அவர்களை ஹசரத் உமர் (ரலி) யவர்கள்  திருமணம் செய்தார்களாம்.( என்று  சொல்லிவிட்டு....)அஹ்ளுல்பைத்களின் எதிரியாக ஹசரத் உமர் (ரலி) யவர்கள் இருந்திருந்தால் இமாம் அலி தனது நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தையை ஹசரத் உமர் (ரலி) யவர்களுக்கு திருமணம் செய்விப்பார்களா?(என்று  திருப்பிக் கேட்டார்கள்....)

நாம் அதிர்ந்துப் போனோம்.

இருக்காதா பின்னே?இமாம் அலி தனது மகளை ஹசரத் உமர் (ரலி)யவர்களுக்கு திருமணம் செய்வித்திருந்தால் அல்லது அவ்வாறு செய்வதற்கு அனுமதித்து அதற்கு துணை நின்றிருந்தால் அஹ்லுல் பைத்களின் உரிமையை பறித்தவர்களுடன் ஹசரத் உமர் (ரலி)யவர்கள் இணைந்திருந்து நபிக் குடும்பத்தினருடன் அவர் முரண்பட்டிருந்தார் என்ற நமது வாதம் பிசு பிசுத்துப் போகின்றது.

தவிர,குழந்தைகளைத் திருமணம் செய்யும் செய்கை அல் குர்ஆனிய போதனைக்கும்,நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நடைமுறைக்கும் முரணானது என்கின்ற நமது கூற்றும்  வலு விழந்துப் பிழைத்துப் போகிறது.

சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமாக அல்லது சிறுவர்களின் உரிமைக்கு சாவு மணியடிக்கின்ற சிறுவர் துஷ் பிரயோகம் சம்பந்தமாக இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

முதலில் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிணைந்து ஏற்று கொண்டிருக்கின்ற  சிறுவர்களுக்கான  உரிமைகள் என்றால் என்னவென்று கவனிப்போம்.

*ஒரு சிறுவர் தனது பருவ வயதை அடையும் வரை அவரது பாதுகாவலரினால்  கட்டாயமாக கனிவான முறையில் நடாத்தப் படவேண்டும்.

*அவருடைய பாதுகாவலர்கள் அவருடன் கனிவான முறையில் பேச வேண்டும்.

*அவரின் பொருப்புதாரிகளினால்  அவருக்குரிய உணவுகள் சரியான வேளைகளில் வழங்கப் பட வேண்டும்.

*அவருக்குரிய உடைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை  அவருக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

*அவரது பாதுகாவலர்கள் கல்வி கற்கின்ற உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டும்.

*அவருக்கு உறங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப் படல் வேண்டும்.

*அவர் சுகவீனமுற்றால் அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்துக் கொடுக்கப் பட வேண்டும்.

*சிறுவர்கள் கண்ணியமான முறையில் நடாத்தப் பட வேண்டும்.

*தப்பு செய்ததற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவோ,கண்டிக்கவோ முடியாது.அத்தகைய தப்புகளுக்கான காரணத்தை கண்டு பிடித்து தீர்வை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

*சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுகளுக்கு உபயோகிக்க முடியாது.

நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று அந்த சிறுவருக்கு அல்லது சிறுமிக்கு மறுக்கப் பட்டால் அது சிறுவர் துஸ்பிரயோகத்துக்குள் அடங்கும்.

சிறுவர்களினதும் பெண்களினதும் வயோதிகர்களினதும்  பாதுகாப்புக்கான உத்திரவாதம்  இஸ்லாத்தில் இருக்கிறது என்பது எமது வாதம்.

சிறுவர்களின் உரிமை சம்பந்தமாக அல் குர்ஆன் என்ன சொல்கிறது?

பின்வரும் அல் குர் ஆன் வசனங்களைக் உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.


"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;. ஆடையும் அளியுங்கள்;. இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." -(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 5)

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 6)

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(அல் குர்ஆன் அத்தியாயம் 6: வசனம்152)


புனித அல் குர்ஆனின் இத் திரு வசனங்கள் அனாதைச் சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகிறது.

அநாதை சிறுவர்களுக்கென்று ஐக்கிய நாடுகள் சபையில் எவ்விதமான உரிமைச் சரத்துகளும் இல்லை.

இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு மேய்ப்பாளனாக கருதப் படுகின்றான்.அவன் அவனது பொறுப்பில் விடப் பட்டிருக்கின்ற அனைத்துக் காரியங்களுக்கும்,அவனது பொறுப்பில் இருக்கின்ற அனைவரினதும் உரிமைகளுக்கு அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

இனி,ஒரு பரம ஏழை சிறுவர் ஒருவர் துரதிர்ஷ்ட வசமாக தனது பெற்றோரை இழந்து அனாதையாகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இஸ்லாத்தில்அவரின் நிலை  என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை ஆதார நூலான அல் குர்ஆன் போதனையின் பிரகாரம் அந்த அனாதைச்சிறுவருக்கு அதன் பாதுகாவலர் உணவளிக்க வேண்டும்.நல்ல ஆடையும் அணிவித்துக் காக்க வேண்டும்.அவர்களுடன் கனிவான வார்த்தைகளைப் பேசவும் வேண்டும்.அவர்களது திருமண வயதுவரை அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும்.அவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளும் விதத்தில் அறிவூட்டவும் வேண்டும்.

அந்த ஏழை அநாதை சிறுவரின் பாதுகாவல் யாருடையப் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றது என்ற ஆய்வில் அப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப் பட்டிருப்பது புரிகிறது.

ஒரு குழந்தை ஆறு அல்லது ஏழு வயதினுள் இவ்வுலகில் தனது வாழ்வை சுதந்திரமாக தீர்மானிக்கும்  முழுமையான அறிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியம் இல்லை.

ஆறு வயது அல்லது ஏழு வயது நிரம்பிய ஒரு குழந்தை பருவ வயதை அடைந்த ஒருவர் பெற்றிருக்கும் அறிவை,விவேகத்தை ,நுணுக்கத்தை பெற இயலாது.

இந் நிலையில் ஒருவர் பருவமடையாத -நன்மைத் தீமைகளைப் பிரித்துணரும் பக்குவம் புரியாத ஒரு குழந்தையைத் திருமணம் புரிவது அல்லது அதற்குத் துணை நிற்பது-நமது பாஷையில் சொன்னால் மாமா வேலை செய்வது இஸ்லாத்தின் பார்வையிலும்,அல் குர்ஆணின் போதனைக்கும் முரணானது.

தவிர, பருவமடையாக் குழந்தைகளை திருமணம் செய்வதற்கு புனித அல் குர்ஆனில் அனுமதி இல்லை.

திருமணம் முடிப்பதென்ன? அவர்களுக்கு சில வேளைகளில் சுதந்திரமாக தங்களது பெற்றோர், பாதுகாவலர் முன்னிலையில் வருவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

வயதுக்கு மூத்தவர்கள் சுதந்திரமாக ஓய்வு கொள்ளும் தருணங்களில் அவர்கள் சொந்த பெற்றோர்களாக இருந்தாலும் அவர்களது அனுமதியைப் பெறுமாறு ......அவ்வாறு அவர்களை பழக்குமாறு அற்புதமான ஒழுக்க விழுமியத்தை அல் குர் ஆன் நமக்குப் போதிக்கிறது.

இந்தப் புனித அல் குர் ஆனின் வசனத்தைக் கவனியுங்கள்...

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை )களும், உங்களிலுள்ள பருவமடையாச் சிறுவர்களும்,(உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதிக் கோர வேண்டும்.பஜ்ரு தொழுகைக்கு முன்னரும்,நீங்கள் மேல் மிச்சமான உங்கள் மேலாடைகளைக் கலைந்திருக்கும் லுஹர் நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் - ஆக இம் மூன்று நேரங்களும் உங்களுக்காக அமையப் பெற்றுள்ள மூன்று அந்தரங்க வேளைகளாகும்.............." 24 : 58 

அல் குர் ஆன் பருவமடையாச் சிறுவர்களை...அவர்களது சுதந்திரத்துக்கு கடிவாளமிட்டு  கட்டுப் படுத்தும் இந்தத் தருணங்கள்  மனிதர்கள் அந்தரங்கமாக......சுதந்திரமாக இருக்கும் தருணங்கள்என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.

மனிதர்களது அந்தரங்கத் தருணங்களில் அவர்களிடையே சுதந்திரமாக வருவதற்கே பருவமடையாச் சிறுவர்களுக்கு தடை விதிக்கும் போதனையைப் போதிக்கின்ற புனித மார்க்கத்தில் அத்தகைய தடைக்கு தகுதியான சிறுவர்களை மணந்துக் கொள்ளும் அனுமதியை யார் கொடுத்தார்கள்?

இனி புனித அல் குர்ஆனின் அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்...

"இன்னும் உங்களுடையக் குழந்தை பிராயம் அடைந்து விட்டால் அவர்களும் தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதிக் கேட்பது போலவே அனுமதிக் கேட்க வேண்டும்.இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்;அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன்:ஞானம் மிக்கவன்." 24 : 59

திருமணம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியத்தைக் கட்டிக் காக்கின்ற பெறுமதியான கலாச்சாரமாகும்.

அதனால்,திருமணம் புரியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பரம் விரும்புவது இஸ்லாமியத் திருமணத்தின் அடிப்படைகளில் பிரதானமான சரத்துக்களில் ஒன்றாக இருக்கின்றது.

எனவே, இஸ்லாம் அறிவு பூர்வமான முடிவு எடுக்கும் திறனைக் கொண்ட இருவருக்கிடையே ஏற்படுத்துகின்ற உளவியல் ஒப்பந்தமாக கணிக்கிறது.

இதன் காரணமாகத்தான் ஒருவர் மற்றவரை மணம் புரிந்துக் கொள்ள விரும்பாத நிலையில் அத் திருமணம் அல் குர் ஆணின் போதனையின் பிரகாரம் இஸ்லாமிய 'ஷரியா'வுக்கு முரணானது என்று இஸ்லாம் கருதுகிறது.

திருமணம் சம்பந்தமாக இஸ்லாம் இவ்வாறான கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில் அல் குர் ஆணின் வசனங்களுக்கு முரணான முறையில் பருவமடையாத ஐந்து, ஆறு,ஏழு அல்லது ஒன்பது வயது சிறுமியைத் திருமணம் செய்விக்க இமாம் அலி ஒப்புக்கொள்வாரா என்று கேட்க விரும்புகிறோம்.

அல் குர் ஆனின் போதனைக்கு முரணாக ஐந்து வயது குழந்தையை ஹசரத் உமர் (ரலி)யவர்கள் திருமணம் செய்ததாக ஹசரத் உமர் (ரலி)யவர்களை நேசிக்கின்ற நமது இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கும் அவர்களது நம்பிக்கைகளுக்கும் ஆட்சேபனையில்லை.

பெண் குழந்தைகளை துடி துடிக்க உயிருடன் புதைக்கும் கலாச்சார கோத்திரத்தில் இருந்து வந்தவர்தான் ஹசரத் உமர் (ரலி) என்பது நாமறிந்த உண்மை.

ஆகவே,ஹசரத் உமர் (ரலி)யவர்களின்  ஐந்து வயது குழந்தையைத் திருமணம் செய்த தெரிவு சுதந்திரத்துக்கு அல்லது அல் குர்ஆணின் போதனைக்கு முரணான அவரது நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் நமக்கில்லை.

ஆனால்,முஸ்லிம் சமூகத்தின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலான அந்த செய்கையை நாம் மிகக் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஹசரத் உமர் (ரலி)யவர்களின் இச் செய்கையினால் முஸ்லிம் சமூகத்தின் தன்னிருப்பு எப்படி கேள்விகுறியாகிறது என்று நீங்கள் விழி பிதுங்குவது நமக்கு புரிகிறது.

ஒரு சமூகம் விளையாட்டுப் பருவத்தை கடக்காத சிறுமிகளைத் திருமணம் செய்வித்து அந்த சமூகத்தின் பெண் சிறுமிகளின் பெண்ணுரிமைக்கு முரணாக நடக்கும் செய்கையை புத்தியுள்ள யாருமே அனுமதிக்கப் போவதில்லை.

அந்த அனாச்சாரங்களை மத கடமையாக அங்கீகரித்து நடைமுறைப் படுத்தும் சமூகத்தின் தன்னிருப்பு ஏனைய சமூகத்தின் ஒழுக்கவிலுமியத்துக்கு பாரிய அச்சுறுத்தல் என்ற கருத்தியல் இத்தகைய செய்கைகளால் உருப்பெருவதை யாராலும் தடுக்க முடியாது.

அத்தகைய கருத்துக்களின் வீரியம் என்றாவதொரு நாள் குழந்தைகளின் வாழ்வியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் சமூகத்தின் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கும் நிலைமையை உருவாக்கும்.

தவிர,ஐந்து வயதில், ஆறு வயதில் அல்லது பத்து வயதில் ஒருவரினால் பாலுணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியுமா? அல்லது அந்த வயதுகளில் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்துக் கொள்ளத்தான்  முடியுமா?

இஸ்லாம் சிறுவர் சிறுமியருடன் வியாபாரம் செய்வதை சட்ட ரீதியாக தடுத்திருக்கும் தகவலையும் உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இனி,நாம் இந்தக் கதைக்கான வரலாற்று ஆதாரங்களைத் தேடத் துவங்கினோம்.

அபுல்பிதாவின் இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்பிலும்,அல்லாமா ஷிப்லி நூமானியின் அல் பாரூக் கிரந்தத்திலும் ஹிஜ்ரி பதின் ஏழாம் வருடம் ஹசரத் உமர் (ரலி)யவர்கள் உம்மு குல்தூம் என்ற ஐந்து வயதுக் குழந்தையை திருமணம் முடித்ததாக குறிப்புகள் காணக் கிடைத்தன.

வரலாற்று ஆதாரங்கள் நிரூபிக்கின்ற பருவமடையாத ஒரு சிறு குழந்தையை ஹசரத் உமர் (ரலி)யவர்கள் திருமணம் செய்தார்கள் என்ற செய்கை அல் குர் ஆனின் ஒழுக்கவியல் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது.

அது மட்டுமன்றி ஹசரத் உமர் (ரலி)யவர்கள் இமாம் அலியின் மகளை - பருவமடையாத மகளை மணந்துக் கொண்டார் என்ற கதையும்,அத்திருமணத்தை இமாம் அலி செய்து வைத்தார் என்ற கதையும் அஹ்லுல் பைத்களின் புனிதத்துக்கு மாசு கற்பிக்கின்ற அவதூறாகும்.

புனித அல் குர் ஆணுக்கு முரணான அத்தகைய செயலை இமாம் அலி ஒருபோதும் செய்திருக்கப் போவதில்லை.

ஏனெனில்,புனித அல் குர் ஆனின் போதனைகளின் செயல் வடிவங்களையும் அதன் சரியான அர்த்தங்களையும் நமக்குக் கற்றுத் தருகின்ற மகோன்னதமான பொறுப்பு அஹ்லுல்பைத் இமாம்களின் கடமைகளாக இருக்கின்றன.

இந்தக் கருத்தியலின் அடிப்படையில் நாம் நமக்குக் கிடைத்த சான்றுகளை புடம் போடத் துவங்கினோம்.

மெலிதாக ஒரு கேள்வி நெஞ்சில் நெருடத் துவங்கியது.

ஹசரத் உமர் (ரலி)யவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களது மாமனார்.

நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களது குழந்தைகளுக்கு  ஹசரத் உமர் (ரலி)யவர்கள் தாத்தாவாகிரார்.

அந்த வகையில் அவர் அன்னை பாத்திமா-ஸலாமுன் அலைஹா-வின் தாத்தா முறையாகிறார்.

இந்த உறவுகள் அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா- அவர்களை ஹசரத் உமர் (ரலி)யின் கொள்ளுப் பேத்தியாக்கி விடுகிறது.

தாத்தா உறவு முறையான ஒருவருக்கு தனது பேத்தியை மணக்கும் உரிமையை புனித தீனுல் இஸ்லாம் அனுமதிக்கிறதா?

ஹசரத் உமர் (ரலி)யவர்கள் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களது மகளின் மகளைத் திருமணம் செய்தார் என்று கூறும் அறிஞர்களின் அபத்தமான கூற்று அநாகரீகமான செயல்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கின்றது என்கிற மாயையை தோற்றுவிக்கிறது.

இனி, உலகத்தில் வாழ்கின்ற நமது தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறோம்.

நாம் கற்ற உலக நாகரீகங்களில் எந்த நாகரீகமாவது தனது மருமகனின் பேத்தியைத் திருமணம் செய்யும் உரிமையை அந்த மாமனாருக்கு அனுமதிக்கும் அநாகரீகமான செயலை  செய்ய அனுமதித்து இருக்கிறதா?

நாம் அறிந்த அறிவுக்கு அப்படியொரு அநாகரீகமான அனுமதி எங்குமே இல்லை.

நாகரீகங்களுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்த இஸ்லாமிய நாகரீகத்தில் அநாகரீகமான அத்தகைய செயல் அனுமதிக்கப் பட்டிருக்கின்றதா?

நமது அறிஞர்கள் சொல்லும் அபத்தமான கதைகளில் ஆச்சரியமாக அத்தகைய அனுமதி அளிக்கப் பட்டிருக்கின்ற தோரணை தெரிகிறதே?

நெஞ்சைக் கீறி ரணப் படுத்துகின்ற இவ் வினாக்களுடன் நாம் நமக்குக் கிடைத்த சான்றுகளை இன்னும் துருவிப் பார்க்கத் துவங்கினோம்.

ஆச்சரியமாக சில முரண்பாடுகள் பளீரிட்டன.

ஹசரத் உமர் (ரலி)யார் திருமணம் செய்த சிறுமி உம்மு குல்தூமின் வயது ஐந்து.

திருமணம் நடந்த ஆண்டு ஹிஜ்ரி பதின் ஏழு.

அவ்வாறென்றால் அக்குழந்தை ஹிஜ்ரி பன்னிரெண்டில் பிறந்து இருக்க வேண்டும்.

அன்னை பாத்திமா -ஸலாமுன் அலைஹா- நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவின் பின்னர் சுமார் ஆறு மாதங்களில் இந்த உலகத்தை விட்டும் பிரிந்து விடுகிறார்கள்.

ஹிஜ்ரி பதின் ஒன்றில் இந் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படியென்றால் ஹசரத் உமர் (ரலி) மணந்ததாக சொல்லப் படுகின்ற  சிறுமி உம்மு குல்தூம் அன்னை பாத்திமா -ஸலாமுன் அலைஹா- இந்த உலகை விட்டும் மறைந்ததன் பின்னர்தான் பிறந்திருக்கின்றார்.

ஆனால், இமாம் அலியினதும் அன்னை பாத்திமா- ஸலாமுன் அலைஹா-அவர்களினதும் நான்காவது குழந்தை அன்னை உம்மு குல்தூம்-ஸலாமுன் அலைஹா-அவர்களோ ஹிஜ்ரி ஒன்பதில் பிறந்திருக்கிறார்.

இப்னு குதைபா என்ற இஸ்லாமிய அறிஞர் தனது "அல் -மஆரிப் " என்ற கிரந்தத்தில் இமாம் அலியின் பெண் குழந்தைகள் உம்முல் ஹசன் பின்த் ஷீத்,பாத்திமா ஆகியோரைத் தவிர ஏனைய பெண் குழந்தைகள்  பனூ ஹாஸிம் குடும்பத்தவர்களிடையே மாத்திரமே திருமணம் செய்வித்ததாக குறிப்பிடுகின்றார்.

அவரது வரலாற்றுக் குறிப்பில் எந்த இடத்திலும் உமர் (ரலி)யவர் அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா-அவர்களை திருமணம் செய்தார் என்ற குறிப்பை  காணக் கிடைக்கவில்லை.

அது மட்டுமன்றி,அல்லாமா ஷிப்லி நுமானியின் அல் பாரூக் கிரந்தத்திலும், அபுல் பிதாவின் இஸ்லாமிய வரலாற்று நூலிலும் உமர் (ரலி) மணந்த  உம்மு குல்தூம் என்ற குழந்தை அஹ்லுல்பைத் குடும்பத்தைச் சார்ந்தது அல்லது இமாம் அலியின் குழந்தை என்ற குறிப்பும் இல்லை என்ற விடயத்தையும் உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

நாம் மேலே எடுத்துக் காட்டிய தகவல்கள் அஹ்ளுல்பைத்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒருபோதும் புனித அல் குர் ஆனின் போதனைகளுக்கு முரணாக இருக்கப் போவதில்லை என்ற உண்மையை  மீன்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..4:231 comment:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad