அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, April 23, 2011

"அநீதத்தின் மறு பெயர் உமையாக்கள் ..... ... நபிகளாரின் தீர்க்க தரிசன அறிவிப்பு........."




"அநீதத்தின் மறு பெயர் உமையாக்கள் ..... ... நபிகளாரின் தீர்க்க தரிசன அறிவிப்பு........."


உமையாக்களின் அநீதமான ஆட்சிகளின் ஆரம்பத்தையும், அதனை பிரித்து அறிந்து கொள்ளும் முறைகளையும் நபி (ஸல்) அவர்கள் எமாக்கு கோடிட்டு காட்டித்தந்து இருக்கிறார்கள்.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி இருக்கும் இந்த ஹதீதைக் கவனியுங்கள்.

இக்ரிமா  கூறியதாவது ;

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் "நீங்கள் இருவரும் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியை செவி மடுத்து வாருங்கள்" எனக் கூறினார்கள்.

நாங்கள் சென்றோம்.

அபூ ஸயீத் (ரலி) தனது தோட்டத்தை சரி செய்துக் கொண்டு இருந்தாரகள்.

அவர் எங்களைக் கண்டதும், தனது மேலாடையை போர்த்திக் கொண்டு எங்களுக்குக் கூறலானார்கள்.

பள்ளி வாசல் கட்டப் பட்ட செய்தியைக் கூறும்போது "நாங்கள் ஒவ்வொரு செங்கலாக சுமப்பவர்களாக இருந்தோம்.அம்மார் (ரலி) இரண்டிரண்டு செங்கட்கலாக சுமக்கலானார்கள்.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்த மண்ணை தட்டி விட்டு " பாவம் அம்மார்.! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும். இவர் அவர்களை சுவர்க்கத்திட்கு அழைப்பார். அவர்களோ  இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) "அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறினார்கள். என அபூ ஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்- புகாரி ; முதலாம் பாகம் 447  வது ஹதீத்.)        


இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக கொடூரமான முறையில் வெட்டி எடுக்கப் பட்டு வெறித்தனமாக உலாவந்த தலை ஹசரத் அம்மார் பின் யாசர் அவர்களுடையது ஆகும்.



ஆதாரபூர்வமான  ஹதீத் கிரந்தங்களில் ஒன்றான முஸ்னத்தில் இமாம் ஹன்பல் (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

சிப்பீன் போரின் போது ஹசரத் அம்மார் பின் யாசருடைய தலை வெட்டப் பட்டு அமீர் ( ??) முஆவியாவிடம் குதூகலமாக கொண்டு வரப்பட்டது.

"இதை நான்தான் வெட்டினேன்  ...நான் தான் வெட்டினேன்"   என்று இருவர் சண்டையிட்டுக் கொண்டு வேறு வந்தனர்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத். ஹதீத் எண்கள்- 6538 , 6929                                
தாருல் மஆரிப் எகிப்து 1956
தபக்காத்து இப்னு சஆத் பாகம் மூன்று பக்கம் 253 )


நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசரிடம் முன் அறிவித்த "சதிக்காரக் கும்பல் ஒன்று உம்மைக் கொல்லும்" என்கிற ஹதீதை முஸ்னத் அஹ்மத், புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நசாயீ,தப்ரானி, பைஹகீ, முஸ்னத் அபூ தாவூத், தயாளிசி போன்ற ஹதீத் கிரந்தங்களில் அபூ சஈத் அல் குத்ரீ, அபூ கதாதா அன்சாரி, உம்மு சல்மா, அப்துல்லா பின் மஸூத், அப்துல்லா பின் அமர் இப்னு ஆஸ், அபூ ஹுரைரா, உஸ்மான் இப்னு அப்பான், ஹுளைபா,அபூ அய்யூப் அன்சாரி, அபூ ராபி, குஸைமா இப்னு சபித், அம்ரிபுனுல் ஆஸ், அபுல் யுஸ்கு, அம்மார் பின் யாசிர் -ரில்வானுல்லாஹி அலைஹிம்- போன்ற பிரபலமான சஹாபாக்கள் உட்பட இன்னும் பலரால் அறிவிப்பாளர்களின் தொடர் அறுபடாத நிலையில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இது தவிர இப்னு சஆத் தனது தபகாத்து கிரந்தத்தில் இந்த ஹதீதை பல சனதுகளின் வழியாக பதிவு செய்துள்ளார்.
(ஆதாரம்: இப்னு சஆத் பாகம் மூன்று பக்கம்:  251 , 252 , 253 , 259 )

 முஆவியாவுக்கும், இமாம் அலி அவர்களுக்குமிடையில் சிப்பீன் போர் மூண்டபோது நாடு நிலை வகித்த பல சஹாபாக்கள் இப் போரைப் பற்றி கொஞ்சம் குழப்பத்துடன் இருந்தார்கள்.

இது முஸ்லிம்களில் உமையாக்களுக்கும், பனூ ஹாசிம்களுக்கும் இடையே நடைபெறுகின்ற பதவியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகாயுத யுத்தமாக இருக்குமா? என்கிற மாதிரியான ஒரு பிரமையை தோற்று விப்பதில் பனு உமையாக்கள் வெற்றி கண்டிருந்தார்கள்.


அந்தக் கருத்தை உண்மைப் படுத்துவது போல, இந்த இரண்டு பிரிவிலும் பல மூத்த சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் , நபி (ஸல்) அவர்கள் நிலை நிறுத்திய இஸ்லாத்தை மீள நிலை நிறுத்தப் போவதாக சொல்லிக் கொண்டு களம் இறங்கியிருக்கும் இந்த இருவரில் சத்தியம் யார் பக்கம் இருக்கிறது?

இதுதான் அக்கால நடுநிலை வகித்த மக்களினதும், சஹாபாக்களினதும் குழப்பத்துக்கான காரணமாக அமைந்தது.

என்றாலும், இவர்களின் குழப்பத்துக்கு விடை அம்மார் பின் யாசரின் படு கொலையுடன் பளீரிட்டது.

அவரது ஷஹாதத் யார் உண்மைக்காக, சத்தியத்துக்காக போராடுகின்றார்கள், யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளும் அடையாளமாக அமைந்துப் போனது.

சுன்னத் வல் ஜமாஅத்  அறிஞர்களில் பிரபலமான அறிஞரான அபூபக்கர் ஜாஸ்சாஸ் தனது 'அஹ்காமுல் குரான்' என்கிற கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"சதிகார அநியாயக்காரக் கும்பலுக்கு எதிராக இமாம் அலி இப்னு அபி தாலிப் போராடினார்.அவர்களோடு பத்ருப் போரில் கலந்துக் கொண்ட பல பெரிய சஹாபாக்கள் இருந்தனர்.அவர்களுடைய அருமை பெருமைகள் அறியாத ஒன்றல்ல. அவர்கள் சத்தியத்தின் மீதுதான் இருந்தார்கள் என்பதை அவர்களை எதிர்த்து போராடிய சதிகாரர்களைத் தவிர யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை."

இப்னு ஹஜர் அவர்கள் சுன்னத் வல் ஜமாத்தின் பிரபலமான இன்னுமொரு இமாம்.

அவர் தனது அல் இசாபாவில் "அம்மாரின் கொலையானது இமாம் அலி அவர்கள் ஹக்கின் மீது உள்ளார் என்பதை நிரூபித்தது.அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாத்தினர் அனைவரும் இதனை எதுவித மறுப்பும் இன்றி ஒத்துக் கொள்கின்றனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
(ஆதாரம்: அல் இஸாபா பாகம் இரண்டு பக்கம்:  502 )

ஹாபில் இப்னு கதீர் அம்மாருடைய கொலைச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது , அல் பிதாயா வந்நிஹாயாவில் இப்படி எழுதுகிறார்.

"அம்மாறை சதிகாரக் கும்பல் ஒன்று கொலை செய்யும் என்ற அண்ணலாரின் ஹதீத் இப்பொழுது விளங்கியது.மேலும், ஹசரத் அலி அவர்கள் சத்தியச்த்தின் மீது உள்ளார். அவரை எதிர்த்த முஆவியா சதிகார அநியாயக்காரர் என்பதும் விளங்கியது"
(ஆதாரம்- அல்பிதாயா வந்நிஹாயா பாகம்: ஏழு- பக்கம்: 270 )

ஓட்டகைப் போரின் பொழுது அம்மார் (ரலி) அவர்கள் அலி அவர்களுடன் இருப்பதைப் பார்த்த ஹசரத் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீத் ஞாபகத்துக்கு வந்தது.உடனே அவர் அலி அவர்களுக்கு எதிராக இருக்காமல் அதில் இருந்து விலகிக் கொண்டார்.

(ஆதாரம்- அல்பிதாயா வந்நிஹாயா பாகம்: ஏழு- பக்கம்: 241 )

சஹாபாக்களில் சத்தியத்தின் பக்கம் இருந்தவர்களையும், அசத்தியத்தின் பக்கம் இருந்தவர்களையும் பிரித்து அறிவிக்கும் எங்களது சுன்னத் வல் ஜமாஅத் மூத்த அறிஞர்களின் நிலைப் பாடு இதுவாகும்.

இது, எமக்கு அல்லாஹ் அருளிய ஒரு பேரருளாகும்.

இதன் அடிப்படையில் எம்மால் 'அசத்தியத்தை' (பாதிலை') விட்டும் சத்தியத்தை -அதாவது ஹக்கை இனம் கண்டு அதற்கு துணை போக முடியும்.

ஆனால், இலங்கையில் சில கிழக்கிலங்கை உலமாக்கள் கொள்ளுபிடியில் ஜும்மா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது,  இந்த மூத்த அறிஞர்களின் கருத்துக்களுக்கு மாற்றமான முறையில் தமது சுய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

அதன்படி,  எப்பொழுதும் சத்தியத்தில் இருந்த இமாம் அலியும் அவருடன் முரண் பட்டு அநியாயக் காரக் கும்பலின் தலைவராக இருந்த முஆவியாவும் ஒரே தராதரத்தில் இருக்கிறார்கள் என்பதாக கூறி அப்பாவி இலங்கை முஸ்லிம்களை தப்பாக வழி நடாத்துகிறார்கள்.

அந்த உலமாக்களுக்கு சில சமயம் நாம் சுட்டிக் காட்டும் இந்த விடயம் புதிதாக இருக்கலாம்.

தயவு செய்து, நாம் சுட்டிக் காட்டிய இந்த தகவல்களை ஆய்வு செய்து எமது இந்த தகவல்களில் எதாவது குறை இருப்பின் அதனை எமக்கு சுட்டிக் காட்டுமாறு அவர்களை நாம் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad