அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, April 3, 2011

வட்டக் கடை அரசியலும், 'பீடி புகை' அரசியல் ஞானங்களும்?


வட்டக் கடை அரசியலும், 'பீடி புகை' அரசியல் ஞானங்களும்?கிழக்கிலங்கை மக்களுக்கு இந்தத் தலைப்பு ஒன்றும் அவர்கள் அறியாதது  அல்ல.

மற்றவர்கள் கொஞ்சம் புருவத்தை சுளிப்பார்கள்.

கிழக்கிலங்கையில் நெல் அறுவடை செய்யும் காலங்களில் நெற் கதிர்களை குவித்து , நெல்லை வேறாகவும், வைகோலை வேறாகவும் பிரித்து எடுக்கும் வயல் வெளியை சுற்றியுள்ள  இடங்களில் சின்ன சின்னதாக சில பெட்டிக் கடைகள் அறுவடை காலங்களில் முளைத்து இருக்கும்.

மக்கள் அந்தக் கடைகளை சுற்றி வட்டமாக அமர்ந்திருந்து 'பிளேன் டீ' குடித்துக் கொண்டு பீடியை புகைத்துக் கொண்டு இருப்பார்கள்.

அந்த மக்களின் பேச்சுக்களை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

அவர்களின் பேச்சில் அமெரிக்காவின் அதிபர் 'பரக் ஒபாமா' வந்து புதிய உலக நீதியை சொல்லுவார்.

'சச்சின் டெண்டுல்கர்' வந்து சதம்களை விளாசித் தள்ளுவார்.

'மஹிந்த ராஜபக்ச' இவர்களிடம் கேட்டுக்  கொண்டு தான் 'கருணாவை' தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதாக புதிய செய்திகள் வரும்.

'அப்ரிடி' எவ்வளவு 'பணம்' பெற்றுக் கொண்டு இந்தியாவிடம் தோற்றார் என்கிற இரகசியங்களும் , அப்படி பணம் கொடுத்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்களும் கேப்டன் விஜயகாந்தை விட இவர்களுக்கு அத்துப் படி.

விஜயின் அடுத்த படம் என்ன என்று விஜய்க்கே தெரியாது. ஆனால், இவர்களுக்கு அதுவும் தெரிந்து இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களே.

'பாலா' மட்டும் இவர்களிடம் ஒரு முறை வந்தால், 'நான் கடவுள்' என்கிற திரை படத்தைப் போல 'கடவுளின் ஞானிகள்' என்று இவர்களை வைத்தே ஒரு திரை படத்தை எடுத்திருப்பார்.

இதே வட்டக் கடை ஞான தளங்களாக எங்களது ஜும்மா மேடைகள் இப்பொழுது  மாறி  விட்டன.
  
இந்த வட்டக் கடை 'பீடி புகை ஞானங்கள்' போல இப்பொழுது அடிக்கடி கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் சில கிழக்கிலங்கை உலமாக்களாலும் , தலைமைத்துவ உலமாக்களாலும் மக்களுக்கு அந்நியமான, அதுவும் நம்ப முடியாத சில கதையளப்புகள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன.

பீடியை ஆழமாக உள்ளிழுத்து அந்தப் புகையை கொஞ்ச நேரம் நெஞ்சுக்  கூட்டில் தக்க வைத்து , கண்களை மூடி ஒரு கணம் அந்த சுகத்தை அனுபவித்து,பின்னர் புகையை வெளியே ஊதிவிட்டு வாயை சப்புக் கொட்டிக் கொண்டு பேசுவது போல 'அபூதாலிப் நரகவாதி....'என்று அந்த மகானைப் பற்றி அநியாயமாக ,அல்லாஹ்வின் பக்கத்தில் இவர்கள் இருந்து பார்த்தது போல இவர்கள் ஞானத் தீர்ப்பு சொல்லி விடுகிறார்கள்.

                                                                                        


இன்னும் சிலர், கக்கி கக்கி இருமிக் கொண்டு தழு தழுத்த குரலில், தொண்டை குழியை யாரோ பிடித்து நசுக்கினால் குரல் அடைத்துக் கொள்ளுமே , அதே தொணியில் கண்ணீருடன் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுவதாக 'பீடிப் புகை' ஞானம் பேசுகிறார்கள்.

சென்ற மாதம் ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை, பல ஆண்களுடன் சரளமாக தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை எல்லா இலக்கியங்களும் ஒரு சொல்லில் இனம் காட்டுமே, அத்தகைய ஒரு வார்த்தையை  உபயோகித்து- சிலர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை இப்படியும் படு மோசமாக கூறுகிறார்கள் என்று 'பீடிப் புகை' கண்டு பிடிப்பு ஒன்றை கட்டவிழ்த்து விட்டார்.

இந்த அறிவிலாதவனுகளுக்கு -

இந்த அறிவில் ஆதவனுகளுக்கு இது எதற்கு?

அல்லாஹ்வே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கற்புக்கு அல் குரானில் உத்திரவாதம் சொன்னபிறகு இது என்ன அவசியம் இல்லாத புதிய கண்டு பிடிப்புகள்?புதிய ஆராய்ச்சிகள்?

ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுமாறு இவர்களை யாராவது வேண்டினார்களா?

சரி, அந்த அல் குரான் வசனம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருளப் படவில்லை என்று சில தப்சீருடைய உலமாக்கள் சொல்லுவது போல வைத்துக் கொண்டாலும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி , அவர்களது பரிசுத்தத் தன்மைக்கு எதிராக , அபாண்டமான அவதூறாக சஹாபாக்களில் இருந்த முனாபிகீன்கள், அல்லது உமைய்யாக்களில் இருந்த மோசமான தாபிஈன்கள் கட்டவிழ்த்து விட்ட இந்தக் கதையை இவர் எதற்காக மீண்டும் ஞாபகப் படுத்தி சப்புக் கொட்டு கொட்டுகிறார்.


இந்த அறிவில் ஆதவர்கள் இந்த சொற்களை கூறி இந்த சமூகத்தில் எதிர் பார்க்கும் சமூகவியல் மாற்றங்கள்தான் என்ன?

இவருடைய பயானைக் கேட்டு மிகவும் பக்தியுடன் கவனமாக இருந்த மக்கள் , அடுத்த அரை  மணித்தியாலத்தில் டி.வீ. யின் முன் போய் கிரிகெட் மெச்சில் இலயித்துப் போய் இந்த உணர்ச்சிவசப் பட்ட பயானை சுத்தமாக மறந்து போகிறார்கள்.

தவறு செய்வோமா அல்லது வேண்டாமா என இரண்டும் கெட்டான் நிலையில் மன தடுமாற்றத்தில் இருக்கின்ற சில பெண்கள் 'அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே தப்பு செய்திருக்கிறார்கள். நாம் எம்  மாத்திரம் ' என்று எண்ணி,அவர்களை வசீகரித்துள்ள  தவறுகளில் அவர்களுக்கு அவர்களே நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு அவர்களை அறியாமல் வீழ்ந்து விடுகிறார்கள்.

இந்த தவறான சொல்லால் விளையும் அற்புதமான சமூக மாற்றத்தைக் கவனித்தீர்களா?

இந்த சமூகத்தின் பாமர மக்கள் பெரிய புத்திசாலிகள் இல்லை.

அன்னை ஆயிஷா (ரலி) பற்றிய இந்த வசை மொழியை இன்னார் தான் சொல்கிறார்கள் என்ற பெயரில் இந்த பீடி புகை உலமாக்கள் தங்களது எதிரிகளின் பெயரை குறிப்பிட்டாலும், சில நாள்களில் அதை கேட்ட அந்த பாமரர்கள் 'அப்படி' சொன்னவர்களை மறந்து விட்டு , ஆயிஷா (ரலி) இப்படியாமே என்று மிக சாதாரணமாக பேசத் தொடங்கி விடுவார்கள்.

இது தேவை தானா?

தேவை இல்லாத விடயங்களை இந்த உலமாக்கள் பிரசங்கம் என்கிற பெயரில் வெளியே சொல்லி மக்களிடமிருந்து புரட்சி கரமான மாற்றங்கள் எதையுமே எதிர் பார்க்க முடியாதே?

ஒரு வெள்ளிக் கிழமை அன்று ஜும்மா தொழுகை முடிந்தவுடன் எமது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலில்  அவரது வீட்டுக்கு பகல் உணவு போசனத்துக்கு  அவரது வீட்டுக்கு சென்றோம்..

கதவைத் திறந்த அவரது தாயார் எம்மை வீட்டினுள் வந்து அமருமாறு வேண்டினார்.

நாம் வீட்டினுள் சென்றோம்.

வீட்டிலே வானொலியை முடுக்கி விட்டிருந்தார்கள்.

அதில் கொள்ளுபிட்டி ஜும்மா பயான் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

வீட்டிலே சாம்பிராணி  புகை வாசம்.

கதவு நிலை அருகே சந்தனக் குச்சியும் புகைந்துக் கொண்டு இருந்தது.

வீட்டிலே இந்த கம கமக்கும் வாசனைகளுக்கு அர்த்தம் புரிய வில்லை.

காலையில், அல்லது மாலையில் கம கமக்க வேண்டிய சாம்பிராணியும், சந்தனக் குச்சியும் இப்பொழுது இந்தப் பட்டப் பகலில் எரிவதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்டோம்.

பலமாக சிரித்தார்.

"நீங்கள் எல்லாம் தௌஹீத் காரங்கள்.உங்களுக்குத் தான் சாம்பிராணி என்றால் பிடிக்காதே."என்ற அவர் தொடர்ந்தார்."இது எங்களது தாயாரின் வேலை. இப்பொழுது ரேடியோவில் ஜும்மா பயான் போகிறதல்லவா, அதனால் வீட்டைக் கூட்டி சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு மிகவும் பக்தியுடன்  எங்களது உம்மா இந்த பயானை கேட்பார்."

"பயான் செய்யும் ஹசரத்தே வீட்டுக்குள் வந்த மாதிரி என்று சொல்லுங்கோ" என்றேன்.

"ஆம். அப்படித்தான்" என்ற நண்பர் சிரித்தார்.

நண்பரது வீட்டில் எங்களுக்கு உணவு பரிமாறப் பட்டது.

உணவு உண்டு கொண்டிருந்த வேலையில் அந்த ஜும்மா பயானும் முடிந்தது.

நண்பரின் தாயார் இப்பொழுது வீட்டின் முன் ஹாலுக்கு வந்தார்.

"என்ன ...உங்களை மிச்ச நாளாக காணவில்லை?" என்று எம்மிடம் கேட்டார்.

"கொஞ்சம் வேலைகள் இருந்தது" என்ற நாம், அவரிடம்"ஜும்மா பயானை வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் கேட்பீர்களா?" என்றோம்.

"ஆம்." என்ற அவர் தொடர்ந்து"அதில் நல்ல விசயங்களை சொல்கிறார்கள். இல்லையா? என்றார்.

பணத்தை பிரதான இலக்காக வைத்து நடாத்தப் படும் இந்த நாடகங்களைப் பற்றி சொன்னால், அந்த தாயாருக்கு எதுவுமே விளங்காது.

"உண்மைதான். அதில் நல்லவிசயங்களைத்தான் சொல்கிறார்கள்" என்றோம்.

கொஞ்ச நேரத்தில், நண்பரின் மருமகன் மௌனித்திருந்த டி.வீயை உயிர்ப்பித்தார்.

அது கேபள் டி.வீ.

அவர் ஒவ்வொரு சானலாக மாற்றிக் கொண்டுவந்தார்.

கலைஞர் டி.வீயில் 'பறவை முனியம்மா.'

நண்பரின் தாயார் கத்தினார்.."ஏய் அதைக் கொஞ்சம் போடு புள்ள."

"சும்மா இருங்க உம்மா" என்ற நண்பரின் மரு மகன் "இவவை   பார்த்திட்டு உங்களுக்கு இவ  சொல்ற சாப்பாட ஆக்கிறதுதான் வேல "என்று அவரின் வேண்டுகோளை அலட்சியப் படுத்தினார்.

"அக்பர்" என்று தனது மரு மகனை விளித்த நண்பர்"ஆச்சியும்மா சொல்றதை போடுங்கள்" என்று அவரது வீட்டோவை பாவித்தார்.

நண்பரின் மருமகன் அவரது ஆச்சியை முறைத்து விட்டு நண்பரின் பேச்சுக்கு கட்டுப் பட்டார்.

இப்பொழுது பறவை முனியம்மா நண்பரின் வீட்டில் கிராமத்து சமையல் ஒன்றைப் பற்றி விவரிக்க துவங்கி விட்டார்.

நண்பரின் தாயாரும் அதில் இலயித்து விட்டார்.

நண்பரிடமிருந்து விடை பெரும் பொழுது அவரது தாயாரிடம் கேட்டேன்." பறவை முனியம்மா நல்ல உணவுகளை பற்றி சொல்கிறா தானே?"

நண்பரின் தாயார் சொன்னார்"ஆம். நல்ல நாட்டு சாப்பாடுகள்"

"இன்றைக்கு சொன்ன சாப்பாடை உங்களால் ஆக்க முடியுமா?" இது நான்.

"ஏன் முடியாது. இது எல்லாம் ஒரு முறை பார்த்தல் போதும் நான் சும்மாவே செய்வேன்."

நாம் கேட்கும் கேள்விகளின் நிஜமான அர்த்தம் புரியாமல் நண்பர் எம்மை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

"இண்டைக்கி பயானில் ஹசரத் என்ன உம்மா சொன்னார்?" திடீரென நாம் கேட்க...

நண்பர் குறும்புடன் சிரித்தார்.

"நல்ல பயான்.." என்ற தாயார்,கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு "நல்ல ஹதீதுகள் சொன்னார்கள்.......ஆனா, என்ன என்பதுதான் மறந்து விட்டது" என்றார்.

இதுதான் சாதாரணமாக எங்களது நிலை.

நாம் சொல்லுவதை உங்களால் நம்ப முடியாது என்றால் , வரும் வாரம் உங்களது வீட்டில் ஜும்மா பயான் கேட்கும் உங்களது ஆச்சியும்மாவிடம் இதே போல கேட்டுப் பாருங்கள்.

இந்த மாதிரி இருக்கின்ற எங்களது பெண் குலத்துக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் நடத்தையை கேள்விக்குறியாக்கும்  ஜும்மா பிரச்சாரங்கள் தேவைதானா?  

2 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல துணிச்சலான பதிவு. வாழ்த்துகள்!

அஹ்லுல்பைத் said...

தோழன் மபாவின் வருகைக்கும் உங்களது பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad