அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, June 23, 2011

வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை?


வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை? 


மக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு பல முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன.

அந்த முக்கிய பொறுப்புக்களை சில சமயம் அவர்கள் மறந்து செயல் படுகிறார்கள்.

அதனால் வருகின்ற விளைவுகள் பயங்கரமானது.

அந்தத் தலைவனின் சந்தோஷம் அவனது மக்களின் சந்தோஷமாக இருக்கிறது.

அவனின் கவலை அந்த மக்களின் கவலையாக உருவெடுக்கிறது.

அவனின் வெற்றி அந்த மக்களின் வெற்றியாக பரிணமிக்கிறது.

அவனது இனத்தில் அவனை வெறுப்பவர்களும் அவனது வெற்றி தோல்வியில் ஏதோ  ஒரு விதத்தில் செல்வாக்கு செலுத்தப் படுகிறார்கள்.

இலங்கை பல தசாப்தங்களாக பல கலவரங்களை சந்தித்து மீண்ட பூமி.


கலவரங்களில் பலர் பாதிக்கப் பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து எழுந்து மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு மலரும் தன்மையில் இலங்கை ஒரு ஆசிர்வதிக்கப் பட்ட நாடு.


'பிரபாகரன்' என்ற மிகத் திறமையான ஒரு இனத்தின் தலைவன் எடுத்த சில தவறான தீர்மானங்கள் அந்த இனத்தின் பலரது வாழ்வை கேள்விக் குறியாக்கியது வரலாறு.

அவரது தவறான தீர்மானங்களினால் தோல்வியடைந்தது அவர் மட்டும் அல்ல.

அவரை நம்பிய அவரது ஆதரவாளர்களுடன் அந்த இனமும் தோற்றுப் போனது.

அவர்களது தோல்விக்கு தோல்வி என்ற சொல்லின் மூலம் அவர்களது நிஜமான இழப்புக்களை மதித்து கணித்துவிட முடியாது.

அவைகள் தோல்வியை விடவும் ஒருபடி மேலானது.

அந்தத் தலைவனின் தோல்வியில் பச்சிளம் பாலகர்கள் பரிதாபமாக இறந்துப் போனார்கள்.

"கடவுளே! என் குழந்தை.....!கடவுளே ! என் குழந்தை.....!!" என்று சித்தம் சிதைந்து புலம்பியபடி இலக்கின்றி அங்கும் இங்கும் திரிந்து தத்தமது பேரக் குழந்தைகளை தேடியலைந்த முதியவர்கள் ஒரு புறம் இருக்க,இன்னொரு புறம் "அம்மா....! அம்மா...." என்று உயிர் இழந்த தனது தாயாரைக் கட்டிக் கொண்டு கதறிய இளம் பெண்களின் கதறலில் தொலைந்து போன பாதுகாப்புக் கரத்தின் பரிதவிப்புகள் இழைந்து தெரிந்தது.

உண்பதற்கு உணவு இல்லை! இருப்பதற்கு உறைவிடம் இல்லை! அணிவதற்கு ஆடைகள் இல்லை!

மொத்தத்தில், பாதுகாப்பாக இவைகளுக்கு வழி சொன்ன உறவுகளும் இல்லை.

குழந்தைகள் அனாதைகள் ஆனார்கள்.

பெண்கள் விதவைகளானார்கள்.

முதியோர் சொந்த பந்தங்களை இழந்தார்கள்.

இளைஞர்கள் உயிரை இழந்தார்கள். 

யுவதிகள் கற்பை இழந்து பின்னர் உயிரை இழந்தார்கள்.

சமூகம் ஒரு தலை முறையே இழந்து போனது.

இதை போன்ற மீளப் பெற முடியாத இழப்புகளைத்தான்  
தோல்வி அடைந்த ஒரு சமூகம் பரிசாக பெற்றுக் கொள்கிறது.

அந்த சமூகத்தின் தலைவர்களின் தவறான தீர்மானங்களே அந்த சமூகத்தின்  இத்தகைய இழப்புகளுக்கு மூலமாக இருக்கின்றன.

இலங்கையில் சிறு பான்மையினரான முஸ்லிம்களின் நிலை என்ன?

தோல்வி கண்ட தமிழ் இனத்தின் இழப்புகள் எமக்கு கற்றுத் தரும் பாடங்கள் என்ன?

முல்லைவாய்க்காலில் அவர்கள் சந்தித்த அதே பயங்கரங்களை நாமும் எதிர் கொள்வதா? அல்லது அதில் இருந்து பாடம் கற்று நம்மை திருத்திக் கொள்வதா?

அனுசரித்து போவது என்பது தோல்வியின் ஆரம்பம் இல்லை என்பதை நாம் எமது இளைஞர்களுக்கு  கற்றுக் கொடுக்க வேண்டும்.

அவசரப் பட்டு அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு பலிக் கடாவாக உடனடியாக உள் வாங்கப் படப் போவது அவர்களது குடும்பத்தினர் என்பதை அவர்கள் உணர்ந்துக் கொள்ளல் வேண்டும்.

வேகம் என்றால் என்ன , விவேகம் என்றால் என்ன என்பதை நாம் எமது இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

சுய நலமிக்க தலைவர்களின் பிடியில் இருந்து நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இஸ்லாம் என்றும் ஜிகாத் என்றும் ஆக்ரோசமாக முடிவு எடுத்து, அவர்களது தலைவர்களால் தவறாக வழிக் கெடுப்பதற்கு முன்னர் , அவர்கள் அவர்களது குடும்பத்தினரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.


இஸ்லாமிய உணர்விலே வாழ்கின்ற வாலிபர்கள் முதலில் தமது மனைவி குழந்தைகளின் பாதுகாப்புக்கு வழி சொல்ல வேண்டும்.

எங்களது சொந்த விடயத்துக்கு எம்மை விட்டால் உதவுவதற்கு யாருமே இல்லாத சூழ் நிலையில், எங்களது குடும்பத்தினரை அந்தரத்தில் விட்டு செல்ல யாருக்குமே உரிமை இல்லை.

இஸ்லாம் அப்படியானதொரு தியாகத்தை மனிதனிடம் இருந்து வரவேற்பதும்   இல்லை.

தலைவர்களின் இனிப்பான வார்த்தை  ஜாலங்களுக்கு மயங்கி, எம்மை நம்பி  இருக்கும் குடும்பத்தினரை அலட்சியப் படுத்தி நாம் செய்யும் தியாகங்களால் கொழுக்கப் போவது எங்களது தலைவர்களே தவிர நாமோ அல்லது நம்முடைய குடும்பமோ அல்ல.

அல்லாஹ்வின் பெயரால் எங்களையும், எங்களது காலத்தையும் அந்த தலைவர்கள் கொள்ளையடித்து விடுவார்கள்.

இறுதியில், நாம் எங்களது வாழ்க்கையைக் கண்டு மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் பரிதாபமான நிலைக்கு ஆளாகிவிடுவோம்.

நாம் எம்மை சுதாகரித்துக் கொண்டு , ஏமாந்துபோன மற்றவர்களின் அனுபவங்களை எங்களது அனுபவமாக கொண்டு பாடம் படித்துக் கொள்வோம்.

இதன் படி, ஒவ்வொருவரும் பொறுப்புடன் தமது குடும்பத்தினரைக் கருத்தில் கொண்டு அவர்களது பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்கும் பொழுது அந்த குடும்பம் பாதுகாக்கப் படுகிறது.

அவ்வாறு பாதுகாக்கப் படும் குடும்பங்கள் ஒன்றிணைந்த நிலையில் அந்த சமூகம் பாதுகாக்கப் படுகிறது.

ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அந்த இனத்தின் பாதுகாப்பாக மாறி விடுகிறது.


இத்தகைய சாதகமான சூழல் பரிணமிக்கும் வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விடல் கூடாது.

எத்தகைய அத்துமீறல்கள் எம்மீது திணிக்கப் பட்டாலும் சரிதான்.

காலம் கனியும் வரை பொறுமை தேவை.

இத்தகைய பொறுமையில் எங்களது இழப்புகளின் வலிகள் அகோரமானவைகள் அல்ல.அதே போல பயங்கரமானவைகளும்  அல்ல.

விவேகம் இல்லாத , தூர நோக்கு இல்லாத தலைவர்களினாலேயே நாம் எமது பாதுகாப்பை இழக்க நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

அஹ்ளுல்பைத்களின் இமாம்களை எங்களது தலைவர்களாக நாம் ஏற்றுக் கொள்ளும் சூழல் வரும் வரை இத்தகைய தலைவர்களினால் நாம் ஏமாற்றப் படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அஹ்ளுல்பைத்கள் அல்லாத இத்தகைய தலைவர்களை நம்பி ஏமாறும் சமூகத்தின் இழப்புகளை யாராலும் பாதுகாக்கவும் முடியாது.

ஒரு கணம்,  மத்திய கிழக்கின் இழப்புகளை சிந்தித்துப் பாருங்கள்!

நாம் எங்களையும், எங்களது குடும்பத்தவர்களையும் இத்தகைய இழப்புகளில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது?

நாம் எங்களது குழந்தைகளுக்கு அஹ்லுல்பைத் இமாம்களை சரியாக இனம் காட்டுவோம்.

அவர்களின் தலைமைத்துவத்தின் மகத்துவத்தைப் புரிய வைப்போம்.

அதன் மூலம், வேறு தலைவர்களினால் அவர்கள்; ஏமாற்றப் படுவதை விட்டும் எம்மால் அவர்களைப் பாதுகாக்க முடியும்.

அஹ்லுல் பைத்களில் வைக்கும் நேசம் அல்லாஹ்வின் நேசத்தை எம்மீது கொண்டு தரும்.

அல்லாஹ்வின் நேசம் எம் மீது இருந்தால், அது எம்மை எத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

அஹ்ளுல்பைத்களின் நேசத்துடன், கல்வியில் நாம் எமது குழந்தைகளை தன்னிறைவடைய செய்வோம்.

அஹ்லுல் பைத்களின் நேசத்துடன், பொருளாதாரத்தில் நாம் சந்தித்த பின்னடைவுகளை அவர்கள் சந்திக்கும் நிலை உருவாகாமல் நாம் பார்த்துக் கொள்வோம்.

அஹ்லுல் பைத்களின் நேசத்துடன்,தன்னம்பிக்கை நிறைந்த சிறந்த தேகாரோக்கியம்  உள்ளவர்களாக அவர்களை வளர்த்து எடுப்போம்.

அத்தகய ஆரோக்யமான சூழலுக்கு அடித்தளம் போட வேண்டியது நாம் என்பதை உணர்ந்துக் கொள்வோம்.

சில சமயம், அஹ்ளுல்பைத்களின் நேசம் எனும், நாம் நடும் இந்த மரத்தின் கனியை சுவைப்பதற்கு எம்மால் முடியாமல் போகலாம்.

ஆனால், எங்களது குழந்தைகளுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் அந்த வாய்ப்புக்  கிடைக்கும்.

இன்ஷா அல்லாஹ் அஹ்ளுல்பைத்களின் நேசத்தினால், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாறிவிடும்.

இப்பொழுது சொல்லுங்கள்?

நமக்குத் தேவை என்ன ?

அஹ்ளுல்பைத்களை அலட்சியப் படுத்திய இஸ்லாத்தின் ஜிகாதிய வேகம்.....?

அஹ்ளுல்பைத்களை நேசிக்கும் பொறுமையான விவேகம்?2 comments:

Abu Jinn said...

போராட்டங்கள் எல்லாமே பிரபாகரன் போன்றதா? ஏன் உலகில் வெற்றிகரமான போராட்டங்கள் நிலைக்கவில்லையா? கஸ்ரோவையும், ஹோசிமின்னும் ஏன் உங்கள் கண்களிற்கு தெரியவில்லை. எதுவுமே தியாகத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அஹ்லுல்பைத் கூட தியாக களங்களை கடந்தே நிற்கிறது. முஸ்லி்ம்களை ஆயதங்கள் வழி நடாத்த முடியாது. ஆனால் ஆயுதங்களால் முஸ்லிம்கள் வழிநடாத்துவார்கள். சிந்தியுங்கள் எதை என்பது புரியும்...........

அஹ்லுல்பைத் said...

சரியான தலைமைத்துவம் இல்லாத போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதே எமது வாதம்.

இஸ்லாமிய வரலாற்றை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிரமாண்டமான இஸ்லாமிய வெற்றியின் பின்னால் அதன் வெற்றிக் களிப்புக்கு இறையாகிய அஹ்ளுல்பைத்களை அவர்களின் ஆதரவாளர்களின் கதைகளை உங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.

தவறான தலைமைத்துவத்தின் சுயநலமான தீர்மானங்களினால் தியாகம் என்கிற தன்னலம் இல்லாத உங்களது அர்ப்பணிப்புக்களினால் வெற்றி கிட்டினால் அந்த வெற்றியை சுவீகரிக்கப் போவது உங்களது தலையை தடவிய சுயநலமிக்க தலைவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..

உங்கள் தியாகத்தின் உயிர்ப்பில் தப்பித் தவறி நீங்கள் தோற்றுப் போனால் அதன் வலியை அதன் வேதனையை நீங்களும் உங்களது குடும்பத்தவர்களும் தனித்துதான் சுவைக்கப் போகிறீர்கள்.

உங்களுடன் சேர்ந்து அழுவதற்கு உங்களுடன் யாருமே கூட வரமாட்டார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கர்பலாவில் தனித்து நின்ற அஹ்ளுல்பைத்களின் கதையும் நமக்கு போதிக்கும் பாடம் இதுதான்.

தொலை தூரத்தில் இருக்கும் கருப்பு மனிதனின் கவலைக்கு கண்ணீர் வடித்து லிப்டன் சதுக்கத்தில் அவனது மீட்சிக்கு பதாதை தூக்குவதை விட்டு விட்டு , ஒரு நேர சோற்றுக்கு வழியின்றி அல்லல் படும் உங்களது அண்டை வீட்டுக்காரனை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

தியாகம் என்பது சொல்லில் சொல்லி காட்டுவதில் இல்லை அது நமது செய்கையின் மூலம் பலன் பெற்ற பக்கத்து வீட்டுக் காரனின் மன நிறைவில் இருப்பது தெரிந்து போகும்.

எமது ஆதங்கம் எல்லாம், நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் தொலைந்து போன சரியான தலைமைத்துவம் நமது சமூகத்தில் தனது ஆளுமையை செலுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக நாம் இருக்க வேண்டும் என்பதிலும், பொறுமை இழந்த நிலையில் எமது உத்வேக செய்கையினால் நமது குடும்பங்கள் பாதிப்பு அடையக் கூடாது என்பதிலுமே தவிர, வேறொன்றும் இல்லை.

இல்லை ...இல்லை... நான் தியாகம் செய்யத்தான் போகிறேன் என்று நீங்கள் அலறிக் கொண்டு வெளியே கிளம்பினால்,ஆதாயம் உங்களை நெறி படுத்தும் உங்களது சுயநலமான தலைவர்களுக்கு.

உங்களை நம்பி இருக்கும் உங்களது மனைவி மக்களுக்கு தியாகியின் விதவை, தியாகியின் குழந்தைகள் என்கிற பெயர்தான் மிஞ்சும்.

இல்லை ...! இல்லை...! மன்னிக்கவும்...?!!

பயங்கரவாதியின் விதவை, பயங்கரவாதியின் பிள்ளைகள் என்கிற பெயர்தான் கிடைக்கும்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad