அஹ்லுல்பைத் Headline Animator

Monday, June 27, 2011

சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சில வாரங்களுக்கு முன்னர், ஒரு வெள்ளிக்கிழமை மருதானை ஜும்மாஹ் மஸ்ஜிதில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்  பிரபலமான மௌலவி முஹாஜிரீன் அவர்களின் குத்பா பேருரையில் கலந்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடும் அருமையான குத்பா பேருரை.

நபி (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் அவர்களின் பெயரில் சலவாத் சொல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் மௌலவி அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.

ஆனால், அவர் சொன்ன சலவாத்தில் ஒரு சின்ன குழப்பம்.

முஹாஜிரீன் மௌலவி அவர்கள் தனது உரையில் நபி (ஸல் ) அவர்களின் பெயர் கூறக் கேட்ட மாத்திரம் சொன்ன சலவாத்துக்களை கீழே தருகிறோம்.

அதில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் ஏதாவது தெரிகிறதா என்று கவனமாக கவனியுங்கள்.

மௌலவி அவர்களின் உரையில், அவர் முஹம்மத் என்று சொன்ன வுடன் - சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நபி -என்ற கட்டங்கள் வரும் தோறும் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  - என்றார்.

ரசூல் என்று கூறும் பொழுதெல்லாம் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நாம் அன்றாடம் கேட்கும் சலவாத்துடன் இதில் ஒரு முரண்பாடும் இல்லை என்று பார்த்த பார்வைக்கு தெரிகிறதல்லவா?

ஆனால், நாம் சரி கண்ட இந்த சலவாத்தில் பெரும் முரண்பாடு இருக்கிறது.

என்ன என்கிறீர்களா?


சலவாத் என்கிற சொல்லுக்கு உயிர்ப்புடன் இருத்தல், புகழுதல், கௌரவப் படுத்துதல், மரியாதை செலுத்துதல்,அடி பணிதல்  போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.

மொத்தத்தில் இந்த பிரபஞ்சத்தின் சகல இயக்கங்களும் சலவாத் என்கிற ஒரு  சொல்லினுள் உள் வாங்கப் பட்டுவிடும்.

ஆகவே, சலவாத் என்ற சொல்லினது நிஜமான அர்த்தத்தை சரியான முறையில் உலகில் யாரும் அறிந்துக் கொள்ளவோ அல்லது சரியான முறையில் புரிந்துக் கொள்ளவோ இல்லை.

அதே போல சலாம் என்கிற சொல்லுக்கும் சாந்தி, ஒற்றுமை, ஈடேற்றம் போன்ற பல பொருள்கள் இருக்கின்றன.

இந்த சொல்லினது சரியான அர்த்தத்தையும் சலவாத் போலவே உலகில் யாரும் அறிந்துக் கொள்ளவோ அல்லது புரிந்துக் கொள்ளவோ இல்லை.

"நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனது வானவர்களும் சலவாத் சொல்கின்றனர்; ஆகவே, மூமின்களே!  நீங்களும் அவர்மீது சலவாத் சொல்லி அவர்மீது சலாமும் சொல்வீர்களாக."
(அல் குரான்: 33 : 56 )

இந்த அல் குரான் ஆயத் அருளப்பட்டவுடன் நாயகத் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம்" யா ரசூலுல்லாஹ்! உங்கள் மீது சலாம் சொல்லும் முறையை நாம் அறிவோம். ஆனால், உங்களின் மீது எப்படி சலவாத் சொல்வது ? என்று வினவினார்கள்.

சலவாத்தினது மகான்மியத்தையும் அதன் பிரமாண்டமான அர்த்தங்களையும் விளங்கி இருந்தக் காரணத்தினால் நபி (ஸல்) சலவாத் சொல்லும் முறையைப்பற்றி நபி தோழர்களுக்கு சொல்லிக் கொடுத்து அதனை நமக்கும்   சொல்லித்தந்தார்கள்.

அவர்கள் சொல்லிக் காட்டிய முறை இதுதான்.

"அல்லாஹும்ம சல்லி அலாமுஹம்மத் வாலி முஹம்மத்" 


"யா! அல்லாஹ்! நபி முஹம்மத் அவர்கள் மீதும் முஹம்மத் அவர்களது குடும்பத்தவர்கள் மீதும் சலவாத்து சொல்வாயாக!"

நபி (ஸல்) ௦ அவர்கள் நமக்க்கு சொல்லித் தந்த சலவாத் அஹ்ளுல்பைத்களான   நபி (ஸல்)  அவர்களது குடும்பத்தவர்களை இணைத்துக் கொண்டதாக இருக்கிறது.

ஆனால் , துரதிர்ஷ்ட வசமாக எங்களது உலமாக்களும், அவர்களுடன் சேர்ந்த நாமும் நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறக் கேட்ட மாத்திரம் - சல்லல்லாஹு அலைஹிவசல்லாம்- என்று கூறுகிறோம்.

இதனுடைய அர்த்தம் வித்தியாசமானது.

"அல்லாஹுத்தாலா சலவாத்தை சொல்வானாக! அவர் மீது ஸலாமையும் சொல்வானாக"என்ற அர்த்தம் தான் நாம் இப்பொழுது சொல்லும் சலவாத்துக்கு இருக்கிறது.

இந்த சலவாத்தை நமக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்பதில் தெளிவில்லை.

ஆனால்,  தொன்று தொட்டு சொல்லிக் கொண்டு வருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரார்த்தனையின் பணிவு நாம் சொல்லும் இந்த சலவாத்தில் இல்லை.

அல்லாஹ்வுக்கு நிகரான பிறிதொரு ஆளுமையான கட்டளையிடும் தொனிதான் இங்கே ஒலிக்கிறது.

பணிவான சலவாத்துக்கு பதிலாக கர்வமான பெருமைதான் இங்கே தெரிகிறது.

அல்லாஹ்வின் அடிமை என்கிற பவ்வியத்தை விட்டு விட்டு ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்ய மறுத்த சைத்தானின் அகம்பாவம் நாம் சொல்லும் சலவாத்தில் இருக்கிறது.

அதாவது- அல்லாஹ் அவனது ரசூலுக்கு அவனே சலவாத் சொல்லிக் கொள்ளட்டும்- என்று நாம் வேண்டா வெறுப்பாக சொல்லுவது போல தொனிக்கும் இந்த சலவாத்தை மிகவும் பக்தியுடன் சொல்லிக் கொள்கிறோம்.

நாம் சொல்லும் இந்த சலவாத்தின் படி அல்லாஹ்வையும் நமக்குத் தெரியாது, அவனது ரசூலையும் நமக்குத் தெரியாது என்றாகிறது.

நபி (ஸல்) அவர்கள் சலவாத்தை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு நமக்கு கற்றுத் தந்திருக்க , நாமோ அந்தப் பிரார்த்தனையையும் அதில் பொதிந்துள்ள பணிவையும்  முற்றிலும் அலட்சியப் படுத்திவிட்டு நாம் அறியாத யாரோ ஒருவர் அந்த அறியாதவரின் இன்னொரு அறியாதவருக்கு சொல்லிக் கொள்ளட்டும் என்கிற தோரணையில் எமது சலவாத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

அல்லது அப்படி சொல்லுவதற்கு பழக்கப் படுத்தப் பட்டு இருக்கிறோம்.

இந்த சலவாத்தில் இருக்கும் இன்னொரு பயங்கரம் அதில் அஹ்ளுல்பைத்களான நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்கள் இணைத்துக் கொள்ளப் பட வில்லை.

நபி (ஸல்) அவர்களே நமக்க்கு நாம் சொல்லும் சலவாத்தில் அவர்களது குடும்பத்தவர்களை இணைத்துக் கொள்ளுமாறு பனித்திருக்க நாம், அவர்களது குடும்பத்தவர்களை அலட்சியப் படுத்தி சலவாத் சொல்ல நிர்ப்பந்திக்கப் பட்டு இருக்கிறோம்.

எங்களுக்கு பயங்கரமாகத் தெரிந்த நாம் சொல்லுகின்ற இந்த சலவாத்தினது நிஜமான அர்த்தத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இலங்கையில் பிரபலமான மத்ரசா ஒன்றின் ஒஸ்தாதுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

நடைமுறையில் நாம் சொல்லும் சலவாத் பற்றி அவரிடம் விசாரிக்க , நாம் சொல்லுவதற்கு பழக்கப் படுத்தப் பட்டிருக்கிற சலவாத்தை சரியானது என்று நிரூபிக்க அவர் விலாவாரியாக அரபு இலக்கண விதிகளைப் பற்றி விவரிக்கத் துவங்கினார்.

"சல்லல்லாஹு அலைஹிவசல்லம்- என்பதன் அர்த்தம் நாம் அல்லாஹ்வுக்கு கட்டளை பிறப்பிப்பது போல ஒலித்தாலும்  அரபு இலக்கண விதிகளின் படி ஒரு எஜமான் கட்டளை இடும் தொனியில் ஏதாவது சொன்னால் அது கட்டளையாகவும், அடிமை தனது எஜமானுக்கு கட்டளை இடும் தொனியில் எதாவது சொன்னால் அங்கே அது ஒரு பணிவான வேண்டுதலாகவும் மாறி ஒலிக்கும் " என்றார்.

இது என்னவோ  சரியான பதிலாக நமக்குப் படவில்லை.

உடனே நாம் இன்னுமொரு பிரபலமான உலமாவைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றி விசாரித்தோம்.

அவர் சிரித்தார்.

"அரபு இலக்கணத்தில் இப்படி ஒன்றும் அர்த்தங்கள் இல்லை "என்றார்.

நாம் "ஒரு பிரபலமான ஒஸ்தாத் இப்படி சொல்கிறாரே?" என்றோம்.


அதற்கு அவர் "உலகத்திலே இருக்கின்ற எல்லா உலமாக்களும் தர்ம சங்கடத்திலே மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர்" என்றார்.

நாம் " அதென்ன தர்ம சங்கடம்?" என்றோம்.  

"சத்திய தர்மம், மரபு தர்மம் என்று இரண்டு தர்மங்கள் இருக்கின்றன." என்ற அந்த பிரபலமான உலமா தொடர்ந்தார்."இந்த இரண்டு தர்மங்களும் ஒரு சேர வரும் நிலைமையில் இரண்டில் எதை தெரிவு செய்ய வேண்டும் என்கிற கட்டத்தின் பொழுதுதான் எங்களது உலமாக்கள் தர்மசங்கடத்திலே மாட்டிக் கொள்கிறார்கள்" என்றார்.

"இரண்டு தர்மங்களுக்கு இடையே தோன்றும் தர்ம சங்கடம் புரிகிறது. ஆனால், அதென்ன சத்திய தர்ம? மரபு தர்மம்?" என்றோம்.

"கடமையான ஒரு காரியம் மரபு தர்மமாகும்" என்ற அந்த உலமா "சத்திய தர்மம் என்றால் அந்தக் கடமையான காரியத்தின் உள்ளம் சம்பந்தமான உள்ரங்க விடயங்கள் அனைத்தும் அடங்கும்"  என்றார்.

"அதெப்படி?" என்றோம்.

"தொழுகை எனபது கடமையான ஒரு காரியம்.ஆகவே தொழுவது மரபு தர்மமாகும்." என்ற அவர் தொடர்ந்து "உள்ளத் தூய்மை, அல்லாஹ்வை அறிதல் ஆகியன தொழுகையின் மூலமாக மனிதனுக்கு கிடைக்க வேண்டிய விடயங்களாகும்.ஆகவே, இந்த படித்தரங்கள் சத்திய தர்மமாகும்.நாம், இன்று தொழுகையில் மரபு தர்மத்தை பின் பற்றுகிறோம்.சத்திய தர்மத்தை விட்டு விட்டோம். ஆகவேதான் அநேக தொழுகையாளிகள் நரகத்துக்குப் போகிறார்கள்" என்றார்.  

"சலவாத்துடன் இந்த தர்மங்கள் எப்படி பொருந்துகின்றன?" என்று கேட்டோம்.

"சல்லல்லாஹு அலைஹிவசல்லம் என்பது மரபு தர்மம்.அவ்வாறு சலவாத் சொல்வதில் ஒரு கடமையை செய்கிறோம் என்கிற உணர்வு இருந்தாலும் அதில் நன்மைகள் கிடைக்குமா எனபது சந்தேகமே." என்ற அவர் தொடர்ந்து " அல்லாஹும்ம சல்லி அலாமுஹம்மத் வாலி முஹம்மத் - எனபது சத்திய தர்மம்.நம்முடைய உலமாக்கள் சத்திய தர்மத்தை விட்டு விட்டு மரபு தர்மத்தை தெரிவு செய்து வழிதவறிப் போனார்கள்" என்றார்.

நாம்"அப்படியா!" என்றோம்.

அதற்கு அந்த பிரபலமான உலமா"நபி (ஸல்) அவர்கள் நமக்கு சலவாத் சொல்லும் முறையைப் பற்றி நல்ல முறையில் விளக்கியிருக்க நாம் எதற்காக நமது மனோ இச்சையின் பிரகாரம் தவறாக சலவாத் சொல்ல என்ன தேவை இருக்கிறது? என்று முடித்தார்.

ஒரு வகையில் அவர் சொல்லுவதும் சரிதான்.

சரி, இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்?

நீங்கள் நமது உலமாக்களைப் போல சலவாத் சொல்லுவதில் இப்படியான  'தர்ம சங்கடத்தில்' மாட்டிக் கொண்டால் எந்த தர்மத்தை தெரிவு செய்வீர்கள்?

நிகழ் கால  உலமாக்கள் சொல்லித்தந்த 'சல்லல்லாஹு அலைஹிவசல்லம்' என்கிற மரபு தர்மம்?

அல்லது, நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லித்தந்த 'அல்லாஹும்ம சல்லி அலாமுஹம்மத் வாலி முஹம்மத்' என்கிற சத்திய தர்மம்?

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad