அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, August 7, 2011

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?



நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?




ஆச்சரியம்!

ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்?

மனித குலத்தின் மோட்சத்துக்கு வழி சொல்லி அவர்களின் மீட்சிக்கு காரணமாக இருந்த மகானை பெற்றெடுத்த புண்ணியவான்களுக்கு மீட்சி இல்லையாம்?

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் நரகத்தில் தீயினால் பொசுக்கப் படுகிறார்களாம்?

சூரியனுக்கே சாணி பூச முயற்சிக்கும் சாணக்கியம் புரிகிறதா?

இஸ்லாத்தின் எதிரிகளின் நாடுகளில் எல்லாம், அவர்களது வீடுகளில் எல்லாம், அவர்கள் கூடும் கூட்டங்களில் எல்லாம், ஏன்? தராவிஹ் தொழுகையின் பின்னர் எங்களது ஊர் மஸ்ஜிதுகளில் எல்லாம் இதே பேச்சு.

பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில், கிறிஸ்தவ  தேவாலயங்களில், யூத மடாலயங்களில், கோயில்களில், கஹ்பதுல்லாஹ்வில், நபியின் பள்ளி வாசலில், ஏன்? உங்களது ஊர் எல்லையில் இருக்கும் நான்கு பேர் மட்டுமே தொழுகின்ற தர்காவிலும் இதே பேச்சுதான்.

நபியின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

புத்தகங்களில், இணையங்களில், நாங்கள் போகும் ஆட்டோ ரிக்ஷாவின் செலுத்துனர் வாய்களில் எல்லாம் மெல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்ற சுவை குன்றாத ஒரு அவல்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

படித்த ஆலிம் முதல் படிக்காத முஅத்தின் வரை தரம் தராதரம் எதுவும் இல்லாமல் பயமில்லாமல் பத்வா கொடுக்கும் ஒரே விடயம்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள்.

இஸ்லாத்தின் எதிரிகளின் ஊடக வலிமையின் வீரியத்துக்கு போடுங்கள் ஒரு சபாஷ்.

அதிர்ச்சியோடு  நாம்  கேட்கிறோம்?

நபியின் பெற்றோர்களா?அதெப்படி சாத்தியம்?

திமிருடன் பதில் சொல்கிறார்கள்.

அவர்கள் இணை வைப்பாளர்கள்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை சிறு வயது முதல் பாது காத்து  வளர்த்த  அவரது  பெரிய தந்தை ஹசரத் அபூதாலிப் அவர்களும் பெரும் இணைவைப்பாளர்கள். அவர்களது இணை வைப்பின் காரணமாக அவர்கள் நரக நெருப்பில் வேதனை செய்யப் படுகிறார்கள்.

இதே விதமான கருத்துக்களை நமது சில முஸ்லிம் அறிஞர்களும் பகிரங்கமாக மிகவும் துணிச்சலுடன் முஸ்லிம்கள் மத்தியில் சொல்வது வேதனையான நிஜமாகும்.

இத்தகைய இஸ்லாமிய அறிஞர்களின் இதுபோன்ற செயல் முறைகள் எமது சமூகத்தின் அதால பாதாள வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் செயல் முறையாகும் என்கிற கூற்று ஒரு மிகையான கூற்றல்ல. 

இஸ்லாத்தின் எதிரிகளினதும்,  இத்தகையஎதிரிகளின்   கருத்துக்களுக்கு  பலியான நமது உலமாக்களும் தம்முடைய வாதத்துக்கு ஆதாரமாக சில இஸ்லாமிய அறிஞர்களின் ஹதீத்களின்  பதிவுகளையும் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளும் ,இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்களில் தம்மை அறியாமல் துணை போகும் நமது அறிஞர்களும் தமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீத் கருத்துக்களின் தொகுப்பாசிரியர்களான இமாம்கள் முஸ்லிம் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் எனபது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகளினதும் எமது அறிஞர்களினதும்  இத்தகைய கருத்துக்கள் சரியானவை என்று நாமும், ஏனையவர்களும் குழம்பிப் போய் விடுகிறோம்.

எம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய செய்தின் பின்னணியில் தொக்கி இருக்கும் இந்த செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்காது.

ஏனெனில் நிஜம் அதுவல்ல.



ஹதீதை திரட்டி பதிவு செய்த இந்த இமாம்கள் அக்காலத்தில் மக்களிடையேயும், அவர்களது ஆசிரியர்களினாலும் பதிந்து வைக்கப் பட்டு இருந்த ஹதீத்களை ஒன்று விடாமல் ஒன்று திரட்டி எங்களது ஆய்வுகளுக்கு பதிவு செய்து விட்டு போய்விட்டார்களே தவிர, தமது ஹதீத்கள்தான் சரியானவை என்று எம்மிடையே எதுவித கருத்து திணிப்புகளும் செய்யவில்லை என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள மறந்து போனோம்.

அந்த இமாம்களின் அல்லது அறிஞர்களின் ஹதீத் திரட்டுகளில் ஒன்றுக்கு ஒன்று முரணான ஹதீத் பதிவுகளும் , தலைப்புகளுக்கு  கொஞ்சமும்  பொருத்தம்  இல்லாத  ஹதீத்களும்  நிறையவே இருப்பதை நாம்இருக்கின்றன.

அவர்களது திரட்டுக்களில் இருக்கின்ற இத்தகைய முரண்பாடுகளையும் , பொருத்தம் இல்லாத தலைப்புகளையும்  கவனித்து  நாம் அவர்களையும் அவர்களது அறிவு ஞானத்தையும்  குறைத்து மதித்துவிட முடியாது.

ஏனெனில், நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களின் எதிரிகளின் ஆட்சிக் காலங்களில் , அந்த ஆட்சியாளர்களின் கவனத்தையும்   மீறி அந்த ஆட்சியாளர்களுக்கே எதிரான அநேக   அறிவிப்புகள்  இந்த திரட்டுகளில் மிகவும் நுணுக்கமாக பதிந்து வைக்கப் பட்டு இருப்பது அவர்களது அறிவு திறனுக்கு ஒரு சான்றாகும்.

இதன் காரணமாகத்தான், ஒரே விடயத்தில் முரண் பட்ட நிலையில் அநேக ஹதீத்களும் அதே போலவே மாறு பட்ட தலைப்புகளில் அநேக ஹதீத்களும் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன என்பதை நாம் தெரிந்துக் கொள்ள தவறியும் போனோம்.

இவ்வாறான முரண்பட்ட தவறான பதிவுகளை அவர்கள் தமது திரட்டுகளில் பதிந்து வைத்ததன் காரணமாகத்தான் எமக்கு ஒவ்வொரு ஹதீதையும் அல் குரானுடன் ஒப்பு நோக்கி ஆய்வு செய்து அந்த ஆய்வுகளின் முடிவில்   குறிப்பிடப் பட்ட எந்த ஹதீதாவது அல் குரானுக்கு முரண்பட்டால் அந்த ஹதீதை கவனத்தில் எடுக்கத் தேவை இல்லை என்று ஒரு சட்டத்தையும் ஹதீத் கலையில் நிர்ணயித்து இருக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் புரிந்துக் கொள்ளதவறியும் போனோம்.

அந்த ஹதீத் கலை இமாம்களின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டும்.

இத்தகைய  நுணுக்கமான விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளத் தவறியமையினால் தான் அல் குரானுக்கு முரண் படுகின்ற  பல  ஹதீத்களை எங்களது தரப்பு  வாதத்துக்கு  முன் வைத்து நாம் அல் குரானுக்கு முரண் பட்டு     தவறிளைத்து விடுகிறோம்.

நபி (ஸல்) ௦ அவர்களது பெற்றோர்களும்  அவரது வளர்ப்புத்  தந்தையும்   நரகவாதிகள் என்கின்ற  தவறான கருத்தினது உருவாக்கத்தையும், அத்தகைய ஹதீத்கள்  அல் குரானுக்கு முரண்படுகின்ற  விதத்தையும்  அத்தகைய கருத்துக்களின் பொய்மையையும் இனி கொஞ்சம்  கவனிப்போம் .  

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்களைப்  பற்றியும், அவர்களது மூதாதையினரைப் பற்றியும் நபி (ஸல்)  அவர்களது பிறப்புக்கு முந்திய அவர்களது நிலையைப்  பற்றியும் அல் குரான் கூறும் சில நிஜங்களைக் கவனியுங்கள்.

"இன்னும் , மிகைத்தவனும், கிருபை மிக்கவனுமான இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்பீராக"

"அவன் எத்தகையவன்  என்றால், உம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் , நீர் நிற்கும் பொழுதும் "

"ஸுஜூது செய்கின்றவர்களில் நீர் புரண்டு , புரண்டு வந்ததையும்."

(அல் குரான் 26   :  217  முதல் 219  வரையுள்ள ஆயத்துகள்)                   ),

தப்சீருடைய விரிவுரையாளர்களில் அநேகர் , நாம் மேலே எடுத்து சொன்ன அல் குரான் ஆயத்துகள் நபி (ஸல்) அவர்களின் வம்ச வழிமுறையை விளக்குவதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.

'ஸுஜூது' என்றால் இணை வைக்காத நிலையில் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்று பொருள் படும்.

'ஸுஜூது ' செய்கின்றவர்களில் நீர் புரண்டு புரண்டு வந்தது..' என்பதன் கருத்து அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அவரது மூதாதையர்களான நல்லடியார்களின் முள்ளந்தண்டில் இருந்து நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் பிறக்கும் வரை தொடராக வந்த அவரது நிலையைக் குறிக்கிறது என்கின்ற கருத்தில் இருக்கிறது என்பதாகும்.

அல் குரானின் இந்த நட் சான்றின் அடிப்படையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையும் நபி (ஸல்) அவர்களது மூதாதையரும், நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நல்லடியார்கள் எனபது ஆய்வுகளுக்கு அப்பாட் பட்ட இறுதி முடிவாகும்.

ஆய்வுக்கு அப்பாற்பட்ட இறுதி முடிவு என்று நாம் சொல்லக் காரணம் அது அல்லாஹ்வின் வேத வசனத்தின் முடிவாகும்.

அல்லாஹ்வின் வேத வசனத்துக்கு முரணாக யாருக்கும் எதுவித தீர்ப்பும் சொல்ல முடியாது.

இந்த அல் குரானின்  ஆயத்துக்களின்  கருத்துக்கு முரணாக யாராவது ஒருவர்,   நபி (ஸல்)அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகள் அல்லது அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் என்று சொன்னால், அவர் அல் குரானை மறுக்கும் காபிரின் நிலைக்கு ஆளாகும் பயங்கரம் இருக்கிறது.

அவ்வாறு சொல்பவர் யாராக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் , இத்தகைய ஹதீத்களை பதிந்துப்  போன  அறிஞர்களுக்கு  இதனால் எதுவித அபாயமும் இல்லை.

ஏனெனில், அவர்கள் முன் கூட்டியே நமக்கு அல் குரானுக்கு முரணாக அவர்களது ஹதீத்கள் இருந்தால் அவற்றை கருத்தில் எடுக்காது அத்தகைய ஹதீத்களை புறந் தள்ளி விட்டு அல் குரானின் கருத்துக்களுக்கு முதலிடம் கொடுக்குமாறு நமக்கு சொல்லி  விட்டு மறைந்து போனார்கள்.

ஹதீத்கள் அனைத்தும் சரியானவைகள் என்று அல் குரான் நமக்கு சொல்ல வில்லை.

நபி (ஸல்) அவர்களும் அப்படி சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்களை விடுங்கள், தேர்ந்து எடுக்கப் பட்ட சஹாபாக்களோ அல்லது தாபஈன்களோ அல்லது தபா தாபியீன்களோ அப்படியும் சொல்ல வில்லை.

எனவே, அல் குரானுக்கும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கும் முரண் படுகின்ற ஹதீத்களை நம்பி நாம் குழம்பத் தேவை இல்லை.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் சுமார் இருநூற்றம்பது வருடங்களுக்குப் பிறகுதான் ஹதீத்கள் சேகரிக்கப் பட்டன.

அதன் பின்னர், அப்போதைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியாளர்களின் அறிஞர்களால் சரி பார்த்து "சஹீஹுஸ் சித்தாக்கள்" என்று படிமுறை படுத்தப் பட்டு மக்கள் மயப் படுத்தப் பட்டன.

அந்தவகையில் புனித அல் குரானுக்கும், நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறைகளுக்கும் முற்றிலும் முரண் பட்ட இந்த ஹதீதுகளை கொஞ்சம் கவனியுங்கள்.

"நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ  மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.

அவன் அனுமதி வழங்கவில்லை.அவரது அடக்கஸ்தலத்தை சந்திக்க அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்."

இதை அபு ஹுரைரா (ரலி)  அறிவிக்கிறார்கள். 

இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர்  தொடர்களில் வந்துள்ளது.

(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்-  1776  வது ஹதீத்)         

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது; 

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தை சந்தித்த போது அழுதார்கள்.அவர்களை சுற்றி இருந்தவர்களும் அழுதார்கள்.

அப்போது அவர்கள் 'நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ   மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப் படவில்லை.

அவரது அடக்கத் தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்.

எனவே , அடக்கத் தலங்களை சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்" எனக் கூறினார்கள். 

இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர்  தொடர்களில் வந்துள்ளது.

(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்-  1777  வது ஹதீத்)  

இந்த இரண்டு ஹதீத்களையும் , இது போன்ற கருத்துக்களை தருகின்ற ஏனைய சில பதிவுகளையும் வைத்துக் கொண்டுதான் எங்களது உலமாக்கள்        
நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று பத்வா கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்து இருக்கிறார்களே தவிர , அவர்கள் தான் நினைத்ததை பேசியும் இல்லை அவர்கள் நினைத்தவாறு நடந்ததும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தான் நினைத்தபடி எதுவும் செய்வது இல்லை என்பதற்கு பின்வரும் அல்  குரான் ஆயத்துக்கள் சான்றாகும்.

"அவர் தம் இச்சைப் படி (எதையும் )பேசுவது இல்லை.அது அவருக்கு வஹி  மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை.'
(அல் குரான் : 53 : 3 ,  4 ) 

நபி (ஸல்) அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரத்தை  எடுத்து சொல்லுமாறு இறை கட்டளை வந்தது.

நபி (ஸல்) அவர்கள் அதனை செயல் படுத்தினார்கள்.

சில நாள்களில் பகிரங்கமாக இஸ்லாமிய பிரச்சாரத்தை எடுத்து சொல்லுமாறு இறை கட்டளை வந்தது.

நபி (ஸல்) அவர்கள் அதன்படி பகிரங்கமாக எடுத்து சொன்னார்கள்.

தாயிப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை கல்லால் அடித்து துன்புறுத்த, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பினான்.

இரத்தம் வடிந்து ஓடும் நபி (ஸல்) அவர்களிடம் வானவர்களின் தலைவர் கேட்டார்"இந்த ஊராரை அழித்து இல்லாது ஒழித்து விட அனுமதி தாருங்கள். நான் இந்த இரண்டு மலைகளையும் ஒன்றுடன் ஒன்றை சேர்த்து இந்த ஊர் மக்களை நசுக்கி அழித்து விடுகிறேன்"

அகிலத்துக்கு எல்லாம் அருட்கொடையான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்" அப்படி செய்ய வேண்டாம். நாளை இவர்களின் சந்ததியினர் இஸ்லாத்தை தழுவக் கூடும். ஆகவே, இவர்களை மன்னித்து விட்டு விடுங்கள்"

அன்னை ஹதீஜா அவர்களினதும், பெரியவர் அபூதாலிப் அவர்களினதும் மறைவு நிகழ்ந்த வருடம் தான் நபிகளார் ஆதரவு நாடி தாயிப் நகர் சென்றார்கள்.

அன்றிரவு மிகவும் கவலையுடன் நபி (ஸல்) அவர்கள் தனித்து துயருடன் இருக்கும் பொழுதுதான் அவரின் நிலையைப் பொறுத்துக் கொள்ளாத  அல்லாஹ் அருமை நபி (ஸல்) அவர்களை ஆதரித்து கௌரவிக்க விண்ணுலகுக்கு வருமாறு கட்டளையிட்டான்.

நபி (ஸல்)  அவர்களும் அதற்கு அடிபணிந்தார்கள்.

சில நாள்களில் ஹிஜ்ரத் செல்லுமாறு கட்டளையிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் அடி பணிந்து நடந்தார்கள்.

மதீனாவில் வைத்து அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு தற்காப்பு யுத்தம் செய்ய கட்டளையிட்டான்.

நபிகளார் அடிபணிந்தார்கள்.

இமாம் அலிக்கு அன்னை பாத்திமாவை திருமணம் செய்விக்க அல்லாஹ் கட்டளையிட்டான்.

அண்ணலார் அடிபணிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவு நெருங்கிய பொழுது உஹத் மலையடிவாரத்துக்கு சென்று அங்கு சஹீதானவர்களுக்காக பிரார்த்திக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.

அப்படியே செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்  நாள்களின் இறுதி சஹ்பான் பிறை பதின் ஐந்தில் ஜன்னத்துல் பகீக்கு சென்று அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.

நபி (ஸல்) அவர்களும் அப்படியே செய்தார்கள்.

இறுதியாக அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு அவர்களிடம் அனுமதி கேட்டான்.

நபி (ஸல்) அவர்கள் மிகவும் மகிழ்வுடன் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் அவர்களது உயிர் எடுக்கப் பட்டது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெடுகிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப் பட்டு நடந்து இருப்பதும், அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களை மிகவும் கண்ணியத்துடன் மரியாதையாக நடாத்தி இருப்பதும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை மிகக் கவனமாக ஆராயும் ஒருவருக்கு புரிந்துப் போகும்.

ஆனால், மிகவும் ஆச்சரியமாக அண்ணல் நபி (ஸல்)  அவர்களின் தாயார் விடயத்தில் மாத்திரம் அல்லாஹ் மிகவும் கடினமாக நடந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை வேதனைப் படுத்தி இருப்பது போல இந்த ஹதீத்கள் உருவாக்கப் பட்டிருப்பதை கவனியுங்கள்.

உஹது மலை அடிவாரத்துக்கு சென்று அங்கே அடக்கப் பட்டிருக்கும் சஹீதுகளுக்காக பிரார்த்திக்குமாறு கட்டளையிடப்பட்ட சம்பவமும், ஜன்னத்துல் பகீக்கு சென்று அங்கே அடக்கப் பட்டிருக்கும் நல்லடியார்களுக்காக பிரார்த்திக்குமாறு சொல்லப்பட்ட சம்பவத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தாயாரின் அடக்கத் தளத்துக்கும் நபி (ஸல்)௦ அவர்களுக்கு சென்று பிரார்த்திக்குமாருதான் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பானே தவிர , இவர்கள் சொல்லுவது போல நபி (ஸல்) அவர்கள் தனது அருமைத் தாயாருக்காக பாவ மன்னிப்பை வேண்ட அல்லாஹ் அதனை தடுத்த கதை அனைத்தும் வெறும் கட்டுக்  கதைகளாகத்தான்   இருக்க   வேண்டும் .

இத்தகைய ஹதீத்களை கட்டுக் கதைகள் என்று நாம் துணிந்து சொல்வதற்கான காரணம்தான் என்ன?

ஹதீத் கலை விற்பன்னர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருக்கும் அடிப்படையான சட்ட விதிகளில் மிக முக்கியமான சட்ட விதியானது , அறிவிக்கப் படுகின்ற எந்த ஹதீதும் புனித அல் குரானுக்கும், நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறைகளுக்கும் கிஞ்சித்தும் முரண் பட்டு இருக்க கூடாது என்பதாகும்.

நபி (ஸல்) அவர்களது பெற்றோரும், அவர்களது வளர்ப்புத் தந்தையும் இணை வைப்பாளர்கள் என்கின்ற கருத்துக்கள் புனித அல் குரானுக்கும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறைகளுக்கும் முரண் பட்டு இருக்கின்றன.

எந்த ஹதீதாவது அல் குரானுக்கும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கும் முரண் பட்டால் அத்தகைய ஹதீத்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனபது சட்ட விதி.

ஆகவே, நாம் இத்தகைய ஹதீத்களையோ  அல்லது இத்தகைய கருத்துக்களையோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் இத்தகைய கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி அத்தகைய கருத்துக்களை
காவிக் கொண்டும் திரிகிறோம்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகள் என்று கூறப் படுகின்ற ஹதீத்கள் அல் குரானுக்கும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கும் முரண் படுகின்ற முறைகள் இப்பொழுது விளங்கியிருக்கும்.

இனி, மறுமையில் நபி  (ஸல்) அவர்களின் அந்தஸ்த்தைப் பற்றி பிரலாபிக்கும் இந்த ஹதீதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம். 

இதன் தலைப்பு மறுமையில்   மக்களின் தலைவர் என்று வருகிறது.

நாம் எடுத்து  சொல்லும் இந்த ஹதீத் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே.

முதன் முதலில் மண்ணறை  பிளந்து எழுபவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை ஏற்கப் படுபவனும் நானே."

ஹசரத் அபூ ஹுரைரா (ரலி)  இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்;  முஸ்லிம்  ஹதீத் கிரந்தம் பாகம் நான்கில் 4574 வது ஹதீத்)

மறுமை நாளில் மக்கள் அனைவரின் தலைவரும், முதன்மையாக ஏற்கப் படும் பரிந்துரை செய்பவரில் முதன்மையானவருமான ஒரு தலைவரின் பெற்றோர் அன்றைய தினம் நரகத்துக்கு இழுத்துச் சென்று எறியப் படுகிறார்களாம்.

அதாவது , மறுமையில் சுவனவாசிகளின் தலைவரின் தாயும், தந்தையும் நரகத்தில்......?

மனித குலத்தின் மோட்சத்துக்கு வழி சொன்ன தலைவரின் பெற்றோர்கள் மீட்சியின்றி தவிக்கிறார்களாம்.

நம்பி ஏற்றுக் கொள்ள முயுமா?

சாதாரண பாமரன் கூட விளங்கிக் கொள்ளும் முறையில் அமைந்த இந்த ஹதீத் எங்களது சில உலமாக்களின் தலைக்கு ஏறாதது ஆச்சரியம்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை மட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை போசித்து பரிபாலித்த அவரது பெரிய தந்தை அபு தாலிப் அவர்களும் , இன்னும் யார் யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அருளுக்கும் ஆகரிணிக்கப் படுகிறார்களோ  அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையில் சுவனம் செல்வார்கள் எனபது இந்த ஹதீதில்  இருந்து விளங்கியிருக்கும்.

இஸ்லாத்தின்  எதிரிகளின் சதிகளில் தம்மை அறியாமல் சிக்குண்ட சில அறிஞர்கள் அல்லது தெரிந்துக் கொண்டே துணையாக சோரம் போகின்ற சில   அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், அல்லது பெற்றோர் நரகவாதிகள் என்று நம்புவது அல் குரானின் கட்டளைக்கு முற்றிலும் முரணானது என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அல் குரானுக்கு முரண்படும் ஹதீத்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

உலகத்தில் உள்ள எந்த நீதி மன்றத்திலும் இரு நூற்றி ஐம்பது வருடத்துக்குப் பிறகு சேகரிக்கப் பட்ட ஆவணங்களை  நீதி வழங்கக் கூடிய சாட்சி ஆதாரமாக ஏற்பது இல்லை.

ஆனால், எங்களது மதிப்புக்குரிய உலமாக்கள் இந்த ஹதீத்களை நுணுக்கமாக ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு இவற்றை தமது தரப்பு வாதத்துக்கு உரிய சாட்சியாக ஏற்றுக் கொண்டு இருப்பது அவர்கள் விடுகின்ற பாரிய தவறாகும்.

அது மட்டுமன்றி, அவர்கள் இதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிராக  தீர்ப்பு வழங்குவதுதான் பரிதாபமான வேடிக்கையாகும்.

என்றாலும் கூட நாம் மேலே குறிப்பிட்ட ஹதீத்களில் எங்காவது 'நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகள் அல்லது இறை நிராகரிப்பாளர்கள் அல்லது இறைவனின் முனிவுக்கு ஆளானவர்கள்' என்று அர்த்தம் தொனிக்கும் வார்த்தைப் பிரயோகம் தெரிகிறதா?

இல்லவே இல்லை அல்லவா?

ஆனால், இந்த ஹதீத்களை வைத்துக் கொண்டு தான் எங்களது உலமாக்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்து உற்சாகமாக   பத்வா வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு வாதத்துக்கு நபி (ஸல்)௦ அவர்கள் அவரது பெற்றோருக்காக  பாவ மன்னிப்பை  அல்லாஹ்விடம் வேண்டினார் என்று வைத்துக் கொள்வோம்.

அத்தகைய தவறான கருத்தில் இருக்கும் அறிஞர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள் மிக இலகுவானவை?     

பிரார்த்தனை என்றால் என்ன?

அல்லாஹ்விடம் நாம் கேட்கும்  அனைத்து விடயங்களும்  பிரார்த்தனை என்று சொல்லப்  படும் .

தனது  அடியார்கள்  தன்னிடம்  பிரார்த்திக்க  வேண்டும் என்று அல்லாஹ் ஆசைப் படுகின்றான்.

இந்த நிலையில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நபி (ஸல்)  அவர்கள் அவனது அனுமதியை வேண்டினார்கள், நபி (ஸல்)  அவர்களின் அந்த வேண்டுதலை  அல்லாஹ் மறுத்தான் என்று எப்படி சொல்ல முடியும்?

இது தவிர, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் 'பிரார்த்திக்க 'வேண்டினார்கள் என்ற வேண்டுதளிலேயே அவர்கள் பிரார்த்தித்து விட்டார்கள் என்ற பொருளும் வருகிறது.

பிரார்த்தனை செய்வதுதான் எங்களது கடமையே  தவிர, அந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாராலும் அல்லாஹ்வை நிர்ப்பந்திக்க முடியாது.

ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதை அவரது வேண்டுதல் நிறைவேறுகின்ற தருணத்தில்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் தமது பெற்றோருக்காக கேட்ட பிரார்த்தனை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப் பட்டதா? இல்லையா என்று
மறுமையில்தான் எம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

அப்படி இருக்க-

நபி(ஸல்) அவர்களது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்று
எம்மால் எப்படிதுணிந்து கூற முடியும்?

இனி இந்த சம்பவத்தை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஆராய்வோம்.

"ஒரு பாவமும் செய்யாத நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்காக நபி (ஸல்) அவர்கள் எதற்காக பாவ மன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்?"

"பாவமே செய்யாத அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்க அல்லாஹ் எதற்காக அனுமதிக்க வேண்டும்?"

அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்க அனுமதிக்காத செய்கையின் மூலம் அந்த புண்ணியவான்களை கௌரவித்து இருக்கிறானே தவிர, அந்த நல்லோர்கள் நரகவாதிகள் என்று எமக்கு செய்தி சொல்லவில்லை. 

'நபியே! நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர்கள் அப்படி ஒரு தவறும் செய்ய வில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அவர்கள் என் பொறுப்பில் பத்திரமாக இருக்கிறார்கள்' என்ற செய்திதான் இந்த தொகுக்கப் பட்டு புணையப் பட்ட ஹதீத்களில் இருக்கின்றனவே   தவிர வேறில்லை. 

இனி, நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகத்தில் என்று எம்மை திசை திருப்ப உபயோகிக்கப் படுகின்ற இந்த  ஹதீதை கவனியுங்கள்.

இதுவும் முஸ்லிமில் ஹசரத் முஅம்மரைக் கொண்டு பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.

ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "இஸ்லாத்துக்கு முன்னர் மரணித்து போன எனது பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்?' என்று கேட்டான்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நரகத்தில்" என்று பதில் சொன்னார்கள்.

அந்த மனிதன் கவலையுடன் திரும்பி சென்றான்.

அதனைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவனை திருப்பி அழைத்தார்கள்.

திரும்பி வந்த அவனிடம் நபி (ஸல்) அவர்கள் என்னுடைய பெற்றோர்களும் உன்னுடைய பெற்றோர்களும் நரகத்தில் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.

அவன் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றான்.

இதுதான் அந்த ஹதீத்.

நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதனை திருப்தி படுத்த சொன்ன சொற்களில் அந்த மனிதன் திருப்தி அடைவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

நபி (ஸல்) அவர்களின் பெற்றோருடன் நரகத்தில் இருப்பது எனபது ஆத்ம திருப்தியை அல்லது மகிழ்வைக் கொடுக்கும் செய்தியா?

இஸ்லாத்துக்கு முந்திய காலப் பகுதியில் , நபிமார்கள் மக்களை நேர்வழிப் படுத்தி அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அறிமுகப் படுத்தாத நிலையில் மரணித்தவர்களை அல்லாஹ் தனது அருளினால் மன்னித்து சுவனத்தில் புகச் செய்வான் என்கிற ஒரு ஹதீதும் இருக்கிறதே.

நீதமான அல்லாஹுத்தாலா தனது அருளினால் எதையும் செய்யும் ஆற்றல் உள்ளவன் தானே.

இந்த நிலையில், நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் திரும்பி செல்லுகின்ற அந்த மனிதனிடம் அவனது துயரத்தைப் போக்க என்ன சொல்லி இருப்பார்?

இதே ஹதீதை ஹம்மாத் இப்னு சலமாவும் அறிவித்து இருக்கிறார்.

ஹம்மாத் இப்னு சலமாவை விடவும் முஅம்மர் நம்பிக்கையானவர் என்பது ஹதீத் கலை ஆய்வாளர்களின் கருத்து.

என்றாலும், ஹதீத்கலை விற்பன்னர்கள்  இந்த ஹதீதை நம்பகமான ஹதீதாக ஏற்றுக் கொள்வதில் கருத்து முரண் பட்டு இருக்கிறார்கள்.

ஏனெனில், முஅம்மர் அறிவிக்கும் ஹதீத்களில் நம்பகத் தன்மை இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

முஅம்மரின் வயதான காலத்தில் அவருக்கு நினைவு தடுமாறி போய் விடுகிறது.

அதன் பின்னர், அவரை சூழ இருந்த அவரது குடும்பத்தவர்கள் முஅம்மரின் பெயரை உபயோகித்து நிறைய ஹதீத்களை அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த சூழலை தமக்கு தோதாக பயன்படுத்திக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் முஅம்மரின் குடும்பத்தினரைக் கொண்டு முஅம்மரின் பெயரை உபயோகித்து தமக்கு தேவையான ஹதீத்களை இட்டுக் கட்டி இருக்கக் கூடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இதன் காரணமாக இந்த ஹதீதின் வலு இழந்து போகும் தளம் இப்பொழுது விளங்குகிறதல்லவா?

இனி, அபூஹுரைரா (ரலி) யும் சாரிதா (ரலி) யும் இனைந்து அறிவிக்கும் இந்த ஹதீதைக் கவனியுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த பொழுது அவர் தனது தாயாரின் மண்ணறைக்கு விஜயம் செய்தார்.

அவ்விடத்தில் அவர் சூரியன் நடு வானுக்கு வந்து கொதிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத அளவு வரும் வரை நின்றுக் கொண்டிருந்தார்.

அல்லாஹ்விடம் இருந்து அவருக்கு அவரது தாயாருக்கு பிழை பொறுக்க தேடுவதற்கு அனுமதி கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்.

உடனே பின்வரும் அல் குரான் ஆயத் அவருக்கு வஹி அறிவிக்கப் பட்டது.

"முஷ்ரிக்குகள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் , நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப் பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானது இல்லை"
(அல் குரான்: 9 ; 113 )

நுபுவ்வத்துக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் தனது பெரிய தந்தையுடன் வியாபார விடயமாக சிரியா தேசம் சென்ற கதை பிரசித்தம்.

இந்த வியாபாரக் கூட்டத்தினரின் தலைக்கு மேலால் திரண்டு இருந்த மேகங்கள் சூரிய வெப்பத்தை விட்டும் இவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு வந்ததைக் கவனித்த ஒரு பாதிரியார் அபூதாலிப் அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை முன்னறிவித்த சம்பவம் இன்னும் பிரசித்தம்.

நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்த அற்புதங்களில் மேகம் சூரிய வெப்பத்தை விட்டும் நபி (ஸல்) அவர்களை பாதுகாக்க குடை பிடிப்பதும் ஒன்று. 

இந்த ஹதீதின் படி அப்படி ஒன்றும் நடக்கவில்லையே?

நபி (ஸல்) கடுமையான வெப்பத்தில் தவித்துக் கொண்டு இருந்தாராமே?

இதில் இவைகளை விடவும் வேடிக்கை என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் தாயாரின் மண்ணறை மக்காவிலேயே இல்லை என்பதாகும்.

மக்காவில் இல்லாத தனது தாயாரின் மண்ணறையில் நபிகளார் வெயிலில் காத்துக் கொண்டு இருந்தார் எனபது கட்டுக் கதை இல்லாமல் வேறென்னவாக இருக்கும்?

இதில் இருக்கின்ற இன்னுமொரு வேடிக்கை அப்பொழுது அருளப்பட்ட அல் குரான் ஆயத்.

அப்பொழுது அருளப் பட்டதாக சொல்லப் படுகின்ற அந்த அல் குரான் ஆயத் மதீனாவில் வைத்து தபூக் யுத்த காலத்தில் 'முஸ்ரிகீன்கள்'சம்பந்தமாக அருளப்பட்டதொன்றாகும்.

இதே கருத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களை நரகத்துக்கு அனுப்புகின்ற
இன்னுமொரு ஹதீதை இனிக் கவனிப்போம். .

சாரிதாவைக்  கொண்டு தபாரியிலும், இப்னு அல் ஜவ்சியிலும் உள்ள இந்தப் பதிவு இப்படி ஒலிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின் அடக்கஸ்தலத்தைக் கடந்து செல்லும் பொழுது, வுழு எடுத்து இரண்டு சுஜூதுகள் செய்து விட்டு அழுதார்கள்.

அவரின் அழுகையைக் கண்டு மக்களும் அழுதார்கள்.

அதன் பின்னர் அவர்களிடம் நபி (ஸல்) திரும்பி வந்த பொழுது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்"நீங்கள் எதற்காக அழுதீர்கள்?" என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் "நான் எனது தாயாரின் மண்ணறையை கடந்து சென்றேன். அதில் நான் இரண்டு சுஜூதுகள் செய்தேன்.அதன் பின்னர் நான் அல்லாஹ்விடம் அவருக்கு பிழை பொறுக்கக் கேட்டேன்.ஆனால், அப்படி செய்வதை விட்டும் நான் அல்லாஹ்வினால் தடுக்கப் பட்டேன்.அதனால்,  நான் அழுதேன்.அதன் பின்னர் நான் மீண்டும் இரண்டு சுஜூதுகள் செய்தேன்.அதன் பின்னர் மீண்டும் நான் அல்லாஹ்விடம் எனது தாயாருக்காக பிழை பொறுக்கக் கேட்டேன்.நான் தனித் தனியாக கண்டிக்கப் பட்டேன்.அதன் காரணமாக நான் அழுதேன்' என்று பதிலுருத்தார்கள்.

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது பெண் ஒட்டகயைக் கொண்டு வருமாறு உத்திரவிட்டார்கள்.

அதில் ஏறி அவர்கள் தனது பயணத்தை தொடர்ந்தார்கள்.

பாதி தூரத்தில் அந்த ஒட்டகை வஹி அருளப்பட்டதன் காரணமாக வஹியுடைய சுமையின் காரணமாக முழங்காலிட்டு அயர்வுடன் அமர்ந்து விட்டது.

அப்பொழுது பின்வரும் அல் குரான் ஆயத் அருளப்பட்டது.

"முஷ்ரிக்குகள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் , நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப் பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானது இல்லை"
(அல் குரான்: 9 ; 113 )

இதுதான் அந்த ஹதீத்.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல தபூக் யுத்த காலப் பகுதியில் அருளப் பட்ட அல் குரான் வசனம் இது.

நபி (ஸல்) அவர்களது தாயார் ஒரு முஸ்ரிகீன் இல்லையே?

அது மட்டுமன்றி இதே அல் குரான் ஆயத் நுபுவ்வத் ஏழாம்  வருடம் அதாவது ஹிஜ்ராத்துக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹசரத் அபூதாலிப் அவர்களது மரண படுக்கையின் போது நபி (ஸல்) அவர்கள் ஹசரத் அபூதாலிபின் ஈமானுக்கு பிரார்த்தித்த பொழுது அருளப் பட்டதாகவும் இன்னுமொரு அறிவிப்பு இருக்கிறது.

இந்த அனைத்து அறிவிப்புகளும் இட்டுக் கட்டப் பட்டவைகள்.

இது தவிர நாம் மேலே எடுத்து சொன்ன ஹதீதில் மக்கள் நபி (ஸல்) அவர்கள் இரண்டு சுஜூதுகள் செய்ததைக் கண்டு இருக்கிறார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்களோ தாம் நான்கு சுஜூதுகள் செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அல் குரானுக்கு முற்று முழுதாக முரண் படுகின்ற இந்த ஹதீதும் நாம் அலட்சியப் படுத்தி புறந் தள்ள வேண்டிய நிலையில் இருப்பது இப்பொழுது புரிகிறது அல்லவா?

நபி (ஸல௦ அவர்களின் தாயார் நரகவாதி என்று சொல்லும் இப்பொழுதுள்ள எங்களது உலமாக்களிடம் சின்னதாக ஒரு கேள்வி?

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்புவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றம்தான் என்ன?

நீங்கள்  இப்படி சொல்வதால் உண்டாகின்ற சமூக மாற்றங்களை எம்மால் பட்டியலிட முடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஜாமியா நலீமிய்யாவின் ஒரு பிரபல விரிவுரையாளர் நபி(ஸல் )அவர்களின் பெற்றோர்கள் நரகத்தில் வேதனை செய்யப் படுவதாக தனது ஜும்மாஹ் பிரசங்கத்தில் உளறினார்.

பேருவளை மக்கள் கொதித்து எழுந்தார்கள்.

செய்வதறியாமல் தடுமாறினார்கள்.

ஒரே நாளில் அந்த விரிவுரையாளர் இஸ்லாத்தின் எதிரிகளின் மத்தியில் பிரபலமாகிப் போனார்.

விளைவு?

யு.எஸ். எய்ட் என்கிற ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆதரவில் அந்த விரிவுரையாளர் அமெரிக்காவுக்கு 'விசேட பயிற்ச்சி' என்கிற போர்வையில் அழைத்து செல்லப் பட்டார்.

சுமார் ஆறு மாதங்கள் ஏதோ பயிற்ச்சியை பெற்றுக் கொண்டு திரும்பி வந்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் பேருவளையில் மீண்டும் ஒரு சல சலப்பு.

இம்முறை இன்னுமொரு இளம் உலமா தனது பிரசங்கத்தில் உணர்ச்சிவசப் பட்டவராக "ஆமினா , அப்துல்லாஹ் என்று உங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்காதீர்கள்.இந்தப் பெயரில் உள்ள நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகள்" என்று உளறிக் கொட்டினார்.

பேருவளை இரண்டாக பிளவு பட்டு போனது.

உலமாவுக்கு ஆதரவாகவும், நபி (ஸல்) அவர்களது குடும்பத்துக்கு எதிராகவும்  ஒரு கூட்டம்.

நபி (ஸல்) அவர்களது குடும்பத்துக்கு ஆதரவாகவும் அந்த உலமாவின்  உளறலுக்கு எதிராகவும் இன்னுமொரு கூட்டம்.

விடயம் போலீஸ் வரைக்கும் சென்றது.

போலீஸ் அதிகாரி அதிர்ந்து போனார்.

"நாம் எங்களது புத்த பெருமானின் பெற்றோர்களையே  தூற்ற மாட்டோம்.கொட்ட" அதிர்ச்சியோடு அவர் கேட்டார். "முஸ்லிம்களான நீங்கள் உங்களது நபியின் பெற்றோரை தூற்றுவது தகுமா?"

அந்த இளம் உலமா எதுவித தயக்கமும் இன்றி பெருமையுடன் சிறுமைத்தனமாக உளறினார் "எங்களிடம் எங்களது கூற்றுக்கு ஆதாரபூர்வமான ஹதீத் உள்ளது."

போலீஸ் அதிகாரி அவரது தரப்பு ஆதாரத்தைக் கேட்க நாம் ஏற்கனவே உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்த முஸ்லிமில் ஹசரத் அபூ ஹுரைரா அறிவிக்கும் ஹதீதை அந்த சின்ன உலமாபோலீஸ் அதிகாரிக்கு காட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரிக்கு ஒன்றுமே புரிய வில்லை.

முஸ்லிம்கள் குரானுக்கு அடுத்ததாக மதிக்கும் ஒரு கிரந்தத்தில் இப்படியொரு புரட்சிகரமான பதிவா?

போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை.

பிளவு பட்டு பிரிந்து போய் கலகத்துக்கு வரிந்து கட்டியிருக்கும் ஊரில் அவர் அமைதியை நிலை நிறுத்த வேண்டும்.

பௌத்தரான அவருக்கு ஊரில் அமைதியின்மையை உருவாக்கிய ஹதீதை அலட்சியப் படுத்தி முடிவு எடுப்பதில் நம்மை போல சிக்கல்கள் இல்லை.

அவர் சொன்னார் "உங்களது ஆதார பூர்வமான ஹதீதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என்ற அவர் சின்ன உலமாவைப் பார்த்து சொன்னார் "இம்முறை உம்மை நான் மன்னிக்கிறேன்.இதன் பின்னர் நீர் நபியின் பெற்றோர் நரகவாதிகள் என்று எனது எல்லையில் பிரசங்கம் செய்யக் கூடாது"

நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்கு எதிரான கூற்றுக்களில் உருவாகின்ற சமூக என்னவென்று புரிகிறதா?

சரி- இவைகளை விடுங்கள்.

இவ்வளவு முக்கியமான ஹதீத்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களது தாயாரின் மண்ணறை எங்கே இருக்கிறது?

நுபுவ்வத்துக்கு முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களின் தாயார் மறைந்து போகிறார்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் மரணித்து ஒரு பொது மயானத்தில் அடக்கம் செய்யப் பட்ட என்னுடைய தந்தையின் மண்ணறையின் சரியான இடத்தையே என்னால் தேடிக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

இந்த நிலையில், மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில், மதீனாவை விட்டும் சுமார் மூன்று மைல் தொலைவில்  நபி (ஸல்) ஆறு வயதாக இருக்கும் பொழுது ஒரு பயணத்தின் பொழுது மரணித்து அடக்கம் செய்யப் பட்ட நபி (ஸல்) அவர்களின் தாயாரின் மண்ணறையை நபி (ஸல்)அவர்கள் எப்படி அடையாளம் வைத்து அறிந்துக் கொண்டார்?

எமது இந்தக் கேள்விக்கான  விடையில் இன்னுமொரு உண்மை வெளி வருகின்ற அழகைக் கவனியுங்கள்.

நபி (ஸல்) அவர்களது வாழ்வின் இறுதி வருடத்தில் அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை அடிவாரத்துக்கு சென்று அங்கே அடக்கம் செய்யப் பட்டிருக்கும் நல்லடியார்களுக்காக பிரார்த்திக்குமாறு கட்டளையிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள்.

அதன் பின்னர் ஜன்னத்துல் பகீக்கு சென்று அங்கே அடக்கம் செய்யப் பட்ட நல்லடியார்களுக்காக பிரார்த்திக்குமாறு கட்டளையிட்டான்.

நபி (ஸல்)௦ அவர்கள் அப்படியே செய்தார்கள்.

இறுதியாக அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவரது பெற்றோர்களின் மண்ணறைகளை அறிவித்து அங்கே சென்று அவர்களுக்காக பிரார்த்திக்குமாறு உத்திரவிட்டிருக்கின்றான்.

அந்த உத்திரவைத்தான் நபி (ஸல்) அவர்கள் செய்திருக்கிறார்கள்.

நடந்தது அவ்வளவுதான்.

முஸ்ரிகீன்களின் சதியினால் நாம் குழம்பிப் போய் விட்டோம்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத்தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன.

1 . நிலையான அருட் கொடை
2 .  பயன் பெறப் படும் கல்வி
3 . அவனுக்காகப் பிரார்த்திக்கும்  அவனுடைய நல்ல குழந்தை.

மூன்று அறிவிப்பாளர்களின் தொடரில் வரும் இந்த அறிவிப்பையும் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3358  வது ஹதீத்)

இந்த ஹதீதின் கருத்தின் அடிப்படையில் ஒரு நல்ல குழந்தையின் நல்ல செயல்களில் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பங்கு இருக்கிறது.

அப்படி என்றால் அல்லாஹுத்தாலாவை எமக்கு சரியான முறையில் இனங்காட்டிய நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் அவர்களின் பெற்றோருக்கு முழுமையான பங்கு இருக்கிறது எனபது நிஜம்.

நுபுவ்வத்திலேயே முழுமையான பங்கு கிடைக்கின்ற நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் சுவன வாதிகள் என்பதில் உள்ள கருத்து வேறுபாடுதான் என்ன?

நல்ல குழந்தையின் பிரார்த்தனையில் பெற்றோருக்கு பங்கு இருக்கும் பொழுது இறுதி ரசூல் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹுத்தாலா ஒரு போதும் தடுக்கப் போவது இல்லை.

 இது தவிர, நபி (ஸல்) அவர்களது பெற்றோர் சுவனவாசிகள் என்பதற்கு ஆதாரமாக அல் குரான்   சான்று பகர்கின்ற அழகை பின் வரும் ஆயத்துகளில்  எம்மால் காண முடியும்.

"அவனை அன்றி (வேறு எவரையும் ) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கிறான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உய்ப்' (சி ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்.- அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம்.- இன்னும் அவ்விருவர் இடமும் கனிவான ,கண்ணியமான பேச்சையே பேசுவீராக" ' 

"இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், 'என் இறைவனே!நான் சிறு பிள்ளையாக  இருந்த போது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக !" என்றும் கூறிப் பிரார்த் திப்பீராக"
(அல் குரான் அத்தியாயம் 17  : ஆயாத்கள்   23  /  24 )

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்குமாறும் அத்தகைய பிரார்த்தனை எப்படி அமைய வேண்டும் என்றும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அழகை பாருங்கள்.
  
இந்த பிரார்த்தனையில் கூட பாவ மன்னிப்புக் கோரும் தன்மை இல்லை.
பெற்றோருக்கு 'கிருபை' செய்யுமாறு வேண்டும் பணிவான வேண்டுதல்கள் தான் தெரிகிறது..

இந்த ஆயத்தில் உள்ள இன்னொரு முக்கியமான இரகசியத்தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

அதென்ன இரகசியம்?

இந்த ஆயத்தில் அல்லாஹுத்தால "உய்ப் (சி) " என்று சடைந்தும் சொல்லிவிடாதீர்கள்" என்று சொன்னது எங்களது பெற்றோர்களை என்று நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நிஜத்தில் அது எல்லாநபிமார்களின் பெற்றோர்களை மட்டும்  குறிக்கின்றதே தவிர, எமது பெற்றோர்களை அல்ல என்பதை நாம் கவனமாக நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நபிமார்களின் பெற்றோர்களை "சி" என்று கூட சொல்ல வேண்டாம் என அல்லாஹ் எமக்கு கட்டளை பிறப்பித்து இருக்க எங்களது மார்க்க அறிஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு அந்த பெற்றோர்களை நரகத்துக்கு அனுப்புவதன் மர்மம்தான் என்ன?

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"அன்னையரை புண் படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, அடுத்தவருக்கு கொடுக்க வேண்டியதை மறுப்பதும், அடுத்தவருக்குரியத்தை தருமாறு கேட்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.

மேலும், ஊர்ஜிதமற்றவற்றை  பேசுவது , அதிகமாக கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு தடை செய்து உள்ளான்.
இதை முகிரா பின் ஸுஅபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3535  வது ஹதீத்)            

இந்த ஹதீதின் படி மனிதர்களாகிய எங்களுக்கே எங்களது அன்னையரை புண் படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்ற அல்லாஹுத்தாலா அதே தவறை அல்லாஹ்வே செய்வானா? என எங்களது உலமாக்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம்.

இதைத் தவிர, தனக்கு ஊர்ஜிதமற்றவற்றை பேச வேண்டாம் என்றும் எமது உலமாக்களுக்கு இந்த ஹதீத் தடை விதித்து எச்சரிக்கை விடுக்கிறதையும் கவனியுங்கள்.

இந்த ஹதீதின் கருத்தின் பிரகாரம் யாராவது நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று ஊர்ஜிதம் இல்லாத இந்த செய்தியை சொல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகிறார்.

அல்லாஹ்வின் வெறுப்பு கடுமையான நரக வேதனையை கொண்டு வரும்.

இதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்புகின்ற எங்களது உலமாக்கள் பரிதாபகரமாக தங்களது நரக படு குழியை ,அவர்களே அவர்களின் வாயால் தோண்டிக் கொள்ளும் அவலத்தை பாருங்கள்.
                                     
இது தவிர, அல்லாஹ்வின் வேதனை நிச்சயிக்கப் பட்ட பாவிகளின் கப்ருகளின் அருகில் செல்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியது இல்லை.

பாவிகள் பற்றிய அல்லாஹ்வின் வேத வசனம் இது.

அத்தகைய பாவிகளைப் பற்றி புனித அல் குரானில் "அவர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் தொழுகை தொழ வேண்டாம்.; இன்னும் அவர் கப்ரில் நிற்க வேண்டாம்; ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள்" என்று வருகிறது.
(அல் குரான் அத்தியாயம் 9  : ஆயாத் 84  )

அல் குரானின் இந்த ஆயத்தின் கருத்துப் படி  அல்லாஹ்வையும்  அவனது தூதரையும்  நிராகரிப்பவர்களே  பாவிகளாவார்கள்.

அப்படியென்றால் நபி (ஸல்) அவர்களை பெற்றவர்களும், அவர்களை பாது காத்து வளர்த்தவர்களும் எப்படி பாவியாவார்கள் என்று கேட்க விரும்புகிறோம்.

பாவிகளின் கப்ரின் அருகே செல்ல வேண்டாம் என்று அல்லாஹ்,அவனது  நபி (ஸல்) அவர்களை தடுத்து இருக்க , தவறான கருத்தியலில் இருக்கும் எங்கள் அறிஞர்கள் சொல்லுவது போல நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகளாக இருந்து கப்ரில் வேதனை செய்யப்படும் நிலை இருந்திருந்தால், நிச்சயமாக நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அடக்கஸ்தலத்துக்கு செல்ல அனுமதி கிடைக்கப் போவது இல்லை.

அடக்கஸ்தலம் என்ன? அதன் அருகே செல்ல கூட அவருக்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது தாயாரின் அடக்கஸ்தலத்தை தரிசிக்க அனுமதி வழங்கிய செய்கை ஒன்றே அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நல் அடியார்கள் என்பதற்கு வலுவான சாட்சியாகும். 

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள்  என்கிற வாதம் பிழையானது என்று இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.. 

தப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகிய அல் குரான் விரிவுரைக் கிரந்தங்களில் எங்களது கருத்துக்கு வலு சேர்க்கும் பல ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.

நபி ஸாலிஹ் (அலை) உடைய ஒட்டகம் சுவனம் செல்கிறது.

ஸாலிஹ் (அலை) உடன் அவரது தூதுத்துவத்துடன் சம்பந்தப் பட்ட ஒரே காரணத்தை தவிர அந்த ஒட்டகத்துக்கு வேறு எந்த சிறப்பும் கிடையாது.

நபி இப்ராஹீம் (அலை) உடைய ஆடும் சுவனம் செல்கிறது.

இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமாக அறுக்கப் பட்டதை தவிர வேறு எந்த சிறப்பும் அந்த ஆட்டுக்கு இல்லை.

'ஹுத் ஹுத்' என்கிற பறவை நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி கண்டு பிடித்து கொடுக்கும் வேலையை செய்து வந்தது.

ஒரு நாள் அந்தப் பறவை 'பல்கிஸ்' மகா ராணியின் இராஜாங்கத்தைப் பற்றிய செய்தியை நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வர, 'பல்கிஸ்' இராணியின் சமூகம் இஸ்லாத்துக்கு வந்த செய்தி பிரசித்தம்.

இதன் காரணமாக 'ஹுத் ஹுத்' என்கிற அந்தப் பறவையும் சுவனம் செல்கிறது.

ஒரு முறை நபி சுலைமான்(அலை) அவர்களும் அவர்களது படையினரும் வரும் வழியில் எறும்புகள் நிறைந்த ஒரு இடத்தை அடைகிறார்கள்.

அங்கே ஒரு எறும்பு மற்ற எறும்புகளை எச்சரித்து ஏனைய எறும்புகளை பாதுகாக்க உதவுகிறது.

""இறுதியாக , எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி)   எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு" என்று கூறிட்டு"
(அல் குரான் 27  : 18  )     

சக எறும்புகளைக் காப்பாற்ற முயற்சி செய்தமைக்கு நன்றிக் கடனாக அந்த எறும்பும் சுவனம் செல்கிறது.

'அஷ்ஹாபுல் கஹ்ப்' உடைய நாயின்  சரித்திரம் நீங்கள் அறிந்ததே. 

அந்த நாய் கூட சுவனம் செல்லும் பாக்கியத்தை, அந்த குகை வாசிகளுடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்த காரணத்தால் அடைகிறது.

அந்தந்த கால நபிமார்களுடன் அவர்களது தூதுதுவத்துக்கு தொடர்பு கொண்ட காரணத்தை தவிர வேறு எந்த சிறப்பு தகுதிகளையும் இந்த ஜீவராசிகள் பெற்றிருக்கவில்லை என்பதை கருத்திட்  கொள்ளவும்.

இதே போல முஹம்மத்  (ஸல்) அவர்கள், அவர்களது பயணத்துக்கு உபயோகித்த கழுதை,  ஒட்டகம் ஆகிய இரண்டு ஜீவன்களும் நபி (ஸல்) அவர்களை சுமந்து சென்ற ஒரே காரணத்துக்காக சுவனம் செல்லும் பாக்கியத்தை பெறுகின்றன.

(ஆதாரம்: தப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான்)

அப்படி என்றால், அகிலங்களின் அருட்கொடையாம் முஹம்மது (ஸல்) அவர்களை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து அவர்களை பெற்றெடுத்த அவர்களின் தாயார் சுவனம் செல்ல , நபி (ஸல்) அவர்களை வயிற்றில் சுமந்ததைத் தவிர வேறு என்ன விசேஷ தகுதி அவருக்கு தேவைப் படுகின்றது?

நபிமார்களுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டமைக்கே சுவனம் செல்லும் பாக்கியம் வாய் இல்லா ஜீவராசிகளுக்கு கிடைக்கும் பொழுது,  இறுதி ரிசாலத்தை சுமந்து வந்த நபி (ஸல்) அவர்களின் தாயாராக இருப்பதற்கு இறைவனால் தேர்ந்து எடுக்கப் பட்ட ஒரு நல்லடியாரின் தகுதிகளையும், தராதரங்களையும் வர்ணிப்பதற்கு   வார்த்தைகள் உண்டா? எனக் கேட்க விரும்புகிறோம்.

அல்லாஹ்   தனது இறுதி நபியின் பெற்றோரை நரகத்தில் வேதனை செய்வதற்கு என்ன காரணம் இருக்கப் போகிறது?

அல்லாஹுத்தாலாவுக்கு அவர்களுடன் அப்படி என்னதான் கோபம்?

நபிகளாரின் பிறப்புக்கு காரணமாக இருந்தார்கள் என்பதைத் தவிர நபி (ஸல்) அவர்களின் பெற்றோரைப் பற்றி எமக்கு வேறு எந்த தகவல்களும் சரியாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நரகத்தில் வேதனை செய்யப் படும் அளவுக்கு அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள்?

நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினருக்கு  எதிரான இத்தகைய கருத்துக்  கழகங்களின் தோற்றம் எப்பொழுது தொடக்கி வைக்கப் பட்டது என்று இனி கொஞ்சம் ஆராய்வோம்.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான  அனைத்து  கருத்துக்களும்  'முஸ்ரிகீன்களான' பனு உமையாக்களினாலேதான் தொடக்கி வைக்கப் பட்டது எனபது மறுக்க முடியாத உண்மையாகும்.

இத்தகைய அநீதத்தை செய்த பனு  உமையாக்கள் அநீதக்காரர்கள் என்று சொல்கின்ற உமைய்யாக்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் தீர்க்கதரிசன
அறிவிப்பொன்று இப்படி  பதிவாகியிருக்கிறது.

அந்த ஹதீதின் மூலம் நபி (ஸல்) அவர்கள் உமையாக்களின் அநீதமான ஆட்சிகளின் ஆரம்பத்தையும், அதனை பிரித்து அறிந்து கொள்ளும் முறைகளையும்  எமக்கு கோடிட்டு காட்டித்தந்து இருக்கிறார்கள்.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி இருக்கும் இந்த ஹதீதைக் கவனியுங்கள்.

இக்ரிமா  கூறியதாவது ;

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் "நீங்கள் இருவரும் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியை செவி மடுத்து வாருங்கள்" எனக் கூறினார்கள்.

நாங்கள் சென்றோம்.

அபூ ஸயீத் (ரலி) தனது தோட்டத்தை சரி செய்துக் கொண்டு இருந்தாரகள்.

அவர் எங்களைக் கண்டதும், தனது மேலாடையை போர்த்திக் கொண்டு எங்களுக்குக் கூறலானார்கள்.

பள்ளி வாசல் கட்டப் பட்ட செய்தியைக் கூறும்போது "நாங்கள் ஒவ்வொரு செங்கலாக சுமப்பவர்களாக இருந்தோம்.அம்மார் (ரலி) இரண்டிரண்டு செங்கட்கலாக சுமக்கலானார்கள்.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்த மண்ணை தட்டி விட்டு " பாவம் அம்மார்.! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும். இவர் அவர்களை சுவர்க்கத்திட்கு அழைப்பார். அவர்களோ  இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) "அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறினார்கள். என அபூ ஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்- புகாரி ; முதலாம் பாகம் 447  வது ஹதீத்.)        

நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசரிடம் முன் அறிவித்த "சதிக்காரக் கும்பல் ஒன்று உம்மைக் கொல்லும்" என்கிற ஹதீதை முஸ்னத் அஹ்மத், புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நசாயீ,தப்ரானி, பைஹகீ, முஸ்னத் அபூ தாவூத், தயாளிசி போன்ற ஹதீத் கிரந்தங்களில் அபூ சஈத் அல் குத்ரீ, அபூ கதாதா அன்சாரி, உம்மு சல்மா, அப்துல்லா பின் மஸூத், அப்துல்லா பின் அமர் இப்னு ஆஸ், அபூ ஹுரைரா, உஸ்மான் இப்னு அப்பான், ஹுளைபா,அபூ அய்யூப் அன்சாரி, அபூ ராபி, குஸைமா இப்னு சபித், அம்ரிபுனுல் ஆஸ், அபுல் யுஸ்கு, அம்மார் பின் யாசிர் -ரில்வானுல்லாஹி அலைஹிம்- போன்ற பிரபலமான சஹாபாக்கள் உட்பட இன்னும் பலரால் அறிவிப்பாளர்களின் தொடர் அறுபடாத நிலையில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இது தவிர இப்னு சஆத் தனது தபகாத்து கிரந்தத்தில் இந்த ஹதீதை பல சனதுகளின் வழியாக பதிவு செய்துள்ளார்.
(ஆதாரம்: இப்னு சஆத் பாகம் மூன்று பக்கம்:  251 , 252 , 253 , 259 )

 அமீர்  முஆவியாவுக்கும், இமாம் அலி அவர்களுக்குமிடையில் சிப்பீன் போர் மூண்டபோது நடு நிலை வகித்த பல சஹாபாக்கள் இப் போரைப் பற்றி கொஞ்சம் குழப்பத்துடன் இருந்தார்கள்.

இது முஸ்லிம்களில் பனூ உமையாக்களுக்கும், பனூ ஹாசிம்களுக்கும் இடையே நடைபெறுகின்ற பதவியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகாயுத யுத்தமாக இருக்குமா? என்கிற மாதிரியான ஒரு பிரமையை தோற்று விப்பதில் பனு உமையாக்கள் வெற்றி கண்டிருந்தார்கள்.

அந்தக் கருத்தை உண்மைப் படுத்துவது போல, இந்த இரண்டு பிரிவிலும் பல மூத்த சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் , நபி (ஸல்) அவர்கள் நிலை நிறுத்திய இஸ்லாத்தை மீள நிலை நிறுத்தப் போவதாக சொல்லிக் கொண்டு களம் இறங்கியிருக்கும் இந்த இருவரில் சத்தியம் யார் பக்கம் இருக்கிறது?

இதுதான் அக்கால நடுநிலை வகித்த மக்களினதும், சஹாபாக்களினதும் குழப்பத்துக்கான காரணமாக அமைந்தது.

என்றாலும், இவர்களின் குழப்பத்துக்கு விடை அம்மார் பின் யாசரின் படு கொலையுடன் பளீரிட்டது.

அவரது ஷஹாதத் யார் உண்மைக்காக, சத்தியத்துக்காக போராடுகின்றார்கள், யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளும் அடையாளமாக அமைந்துப் போனது.

சுன்னத் வல் ஜமாஅத்  அறிஞர்களில் பிரபலமான அறிஞரான அபூபக்கர் ஜாஸ்சாஸ் தனது 'அஹ்காமுல் குரான்' என்கிற கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"சதிகார அநியாயக்காரக் கும்பலுக்கு எதிராக இமாம் அலி இப்னு அபி தாலிப் போராடினார்.அவர்களோடு பத்ருப் போரில் கலந்துக் கொண்ட பல பெரிய சஹாபாக்கள் இருந்தனர்.அவர்களுடைய அருமை பெருமைகள் அறியாத ஒன்றல்ல. அவர்கள் சத்தியத்தின் மீதுதான் இருந்தார்கள் என்பதை அவர்களை எதிர்த்து போராடிய சதிகாரர்களைத் தவிர யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை."

இப்னு ஹஜர் அவர்கள் சுன்னத் வல் ஜமாத்தின் பிரபலமான இன்னுமொரு இமாம்.

அவர் தனது அல் இசாபாவில் "அம்மாரின் கொலையானது இமாம் அலி அவர்கள் ஹக்கின் மீது உள்ளார் என்பதை நிரூபித்தது.அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாத்தினர் அனைவரும் இதனை எதுவித மறுப்பும் இன்றி ஒத்துக் கொள்கின்றனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
(ஆதாரம்: அல் இஸாபா பாகம் இரண்டு பக்கம்:  502 )

ஹாபில் இப்னு கதீர் அம்மாருடைய கொலைச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது , அல் பிதாயா வந்நிஹாயாவில் இப்படி எழுதுகிறார்.
"அம்மாரை   சதிகாரக் கும்பல் ஒன்று கொலை செய்யும் என்ற அண்ணலாரின் ஹதீத் இப்பொழுது விளங்கியது.மேலும், ஹசரத் அலி அவர்கள் சத்தியத்தின்  மீது உள்ளார். அவரை எதிர்த்த அமீர் முஆவியா சதிகார அநியாயக்காரர் என்பதும் விளங்கியது"
(ஆதாரம்- அல்பிதாயா வந்நிஹாயா பாகம்: ஏழு- பக்கம்: 270 )

ஒட்டகைப் போரின் பொழுது அம்மார் (ரலி) அவர்கள் அலி அவர்களுடன் இருப்பதைப் பார்த்த ஹசரத் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீத் ஞாபகத்துக்கு வந்தது.உடனே அவர் அலி அவர்களுக்கு எதிராக இருக்காமல் அதில் இருந்து விலகிக் கொண்டார்.

(ஆதாரம்- அல்பிதாயா வந்நிஹாயா பாகம்: ஏழு- பக்கம்: 241 )

சஹாபாக்களில் சத்தியத்தின் பக்கம் இருந்தவர்களையும், அசத்தியத்தின் பக்கம் இருந்தவர்களையும் பிரித்து அறிவிக்கும் எங்களது சுன்னத் வல் ஜமாஅத் மூத்த அறிஞர்களின் நிலைப் பாடு இதுவாகும்.

இது, எமக்கு அல்லாஹ் அருளிய ஒரு பேரருளாகும்.

இதன் அடிப்படையில் எம்மால் 'அசத்தியத்தை' (பாதிலை') விட்டும் சத்தியத்தை -அதாவது ஹக்கை இனம் கண்டு அதற்கு துணை போக முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்திற்கும்      அசத்தியத்துக்குமான போர், சிப்பீன் என்கிற பெயரில்  வெடித்த கதை நாம் அறிவோம்.

ஆனால், அதனுடன் துயர்ந்த எதிரிகளின் தலைகளைக் கொய்யும் கலாச்சாரம் பற்றிய செய்திகள் எமக்கு புதிது.

ஏனெனில், உத்தம சஹாபாக்களின் நல்ல பெயரில், இத்தகைய கொடூரங்களை செய்த அநீதமான சஹாபாக்கள் மறைந்துக் கொண்டதன் விளைவாக , இந்த செய்திகள் திட்டமிடப் பட்ட முறையில் எமக்கு மறைக்கப் பட்டன. 

அக்காலை, சஹாபாக்களில் முக்கியமான பெருந்தகைகளில் அநேகர், இரண்டு தலைமையில் இரண்டு துருவங்களாக பிளவுபட்டு பிரிந்து நின்றார்கள்.

அப்பிரிவில் இஸ்லாத்தின் எழுச்சியை மட்டும் கருத்தில் கொண்ட கூட்டமும் இருந்தது.

அதே போல, சிலர் தமது தனிப் பட்ட சுய இலாபங்களைக் கருத்தில் கொண்டும், சத்தியத்துக்கு துணை போகாமல் பிரிந்து முரண் பட்டு நின்றார்கள். 

ஒரு புறம் இமாம் அலி முஸ்லிம்களின் தலைவராக இருந்தார்.

மறு புறம் அமீர் முஆவியா பனூ உமைய்யாக்களின் தலைவராகஇருந்தார்.

இவர்களில், அம்மார் பின் யாசர் சுமார் எண்பத்து மூன்று வயது முதியவர் இமாம் அலியுடைய பக்கத்தில் இருந்தார்.

அம்மார் பின் யாசருடைய தாயார் சுமையா பின்த் கையத்.

தந்தை யாசிர் இப்னு அமீர்.

 புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக முதன் முதலாக அபூஜகளினால் கொடூரமான முறையில் சித்திர வதைக்கு ஆளாக்கப் பட்டு  உடம்பு இரு கூறாக கிழிக்கப் பட்டு இவர்கள் இருவரும் படு கொலை செய்யப் படுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் இஸ்லாத்தினது முதலாவது ஷஹீதுகள் என்கிற உயரிய அந்தஸ்த்தைப் பெறுகிறார்கள்.

இம்முறை அம்மார் பின் யாசர்.

இவரும், உமைய்யாக்களின் தலைவர் முஆவியாவின் படையினரினால் கொலை செய்யப் படுகிறார்.

அதன் பின்னர், அநியாயக்கார  அக்கூட்டத்தினர், அம்மார் பின் யாசருடைய தலையை துண்டிக்கின்றனர்.

இதன் காரணமாக , இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது துண்டிக்கப் பட்ட தலைக்கு சொந்தக்காரர் என்கிற பெருமை இவரைச் சேர்கிறது..

அதன் பின்னர், அவரது துண்டிக்கப் பட்ட தலை அந்த அநியாயக்காரக் கூட்டத்தினரால் ஊர்வலமாக ஊர்கோலம் கொண்டு செல்லப் படுகிறது.
(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத். ஹதீத் எண்கள்- 6538 , 6929                              
தாருல் மஆரிப் எகிப்து 1956
தபக்காத்து இப்னு சஆத் பாகம் மூன்று பக்கம் 253 )

வெட்டப் பட்ட தலையை சுமந்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்சிப் பொருளாக காண்பிப்பதில் இனிமை கண்ட அந்த அநியாயக்காரக் கூட்டத்தினர், அதன் பின்னர்,இவ்வாறு செய்வதை ஒரு கலாச்சாரமாகவே ஆக்கிக் கொண்டனர்.

அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப் படுவோரை இறந்த பின்பும் மன்னிப்பது இல்லை. அவரது உடலை சின்னாப் பின்னப் படுத்தாமல் விடுவது மில்லை என்கிற மிருகத்தனமான செயல் பாடுகள் அதன் பின்னர்தான் தொடர்ந்தன.

கொஞ்ச நாள்கள் செல்ல, அதே பாணியில்  துண்டிக்கப் பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்ட தலைக்கு சொந்தக்காரர்  அமர் பின் அல் ஹமிக் என்பவராகும். 

இவர் நபி (ஸல்) அவர்களின் சஹாபாக்களில் ஒருவர்.

ஹசரத் உதுமான் (ரலி) அவர்களின் மரணத்தில் இவருக்கும் தொடர்பு இருந்ததாக இவர் அமீர் முஆவியாவினால் சந்தேகிக்கப் பட்டார்.

இராக்கின் கவர்னராக முஆவியா ஸியாதை நியமித்த போது, அவர் இவரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஸியாதின் படையினர் இவரைக் கைது செய்ய முடுக்கி விடப் பட்டனர்.

அப்படையினரின்  ஒரு குழுவினர் இவரைத் தேடித் பிடித்தனர்.

ஸியாதின் படையினரைக் கண்டவுடன் இவர்  ஓடி ஒரு குகையில் நுழைந்துக் கொண்டார்.

குகையில் இருந்த ஒரு பாம்பு இவரைத் தீண்டியது.

அதன் காரணமாக இவர் அந்தக் குகையிலேயே உயிரை விட்டார்.

இவரைத் துரத்தி வந்த ஸியாதின் படையினர் இறந்த உடலில் இருந்து இவரது தலையைத் துண்டித்து வேறாக எடுத்தனர். பின்னர், அதனை ஸியாத்திடம்  கொண்டு சென்றனர்.

ஸியாத் அந்தத் தலையை அமீர் முஆவியாவிடம் டமாஸ்கஸ்க்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அத்தலை ஊரெல்லாம் சுற்றிக் காண்பிக்கப் பட்டுவிட்டு, இறுதியில் அவரது மனைவியின் மடியில் வீசி எறியப் பட்டது.
(ஆதாரம்- தபகாத்து இப்னு சஆத் பாகம்; ஆறு -- பக்கம் ; 25  )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 48  )     
தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்; 8  பக்கம் ; 24  )     

எகிப்தில் இமாம் அலியுடைய  கவர்னராக முதலாம் கலீபா ஹசரத் அபூ பக்கருடைய மகனும், அன்னை ஆயிஷா (ரலி௦)அவர்களின் சகோதரருமான  முஹம்மத் பின் அபூபக்கர் இருந்தார்.

அமீர் முஆவியாவின் படையினர் அமர் இப்னு ஆஸ் தலைமையில் எகிப்தை வெற்றிக் கொண்டது.

இமாம் அலியின் ஆதரவாளர் முஹம்மத் பின் அபூபக்கர் அமீர் முஆவியாவின்  அந்த அநியாயக் காரக் கூட்டத்தினரால் கைது செய்யப் பட்டார்.

அதன் பின்னர் அவர்களால் கொலை செய்யப் பட்டார்.

பின்னர் அவருடைய உடல் ஒரு செத்த கழுதையின் தோலில் சுற்றி எரிக்கப் பட்டது.
(ஆதாரம்- அல் இஸ்திஆப் பாகம்; 1 -- பக்கம் ; 235  )     
அத தபரீ பாகம்; 4  பக்கம் ; 79  )     
இப்னு அசீர் பாகம்; 3  பக்கம் ; 180  )     
இப்னு கல்தூண்  தக்மிலா பாகம்; 2   பக்கம்;  182 )   


இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் தலையும் இதைப் போலவே  கர்பலா கொலைக் களத்தில் துண்டிக்கப் பட்டு கர்பலாவில் இருந்து கூபாவிட்கும், கூபாவில் இருந்து டமாஸ்கஸ்குமாக நகரங்கள்  சுற்றி உலா வரப்பட்டது.

அவருடைய இறந்த உடல் மீது குதிரைகள் ஓட்டப் பட்டு அந்த உண்டல் சின்னா பின்னாமாக சிதைக்கப் பட்டது.
(ஆதாரம்-    
அத் தபரீ பாகம்; 4  பக்கம் ; 349 , 350 , 356)     
இப்னு அசீர் பாகம்; 3  பக்கம் ; 296 , 298 )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 189 , 192 )  

உமைய்யாக்களின் ஒரு ஆதரவாளரின் பெயர் நூமான் பின் பஷீர் (ரலி).

இவரும் முக்கியமான சஹாபாக்களில் ஒருவர்.

இமாம் ஹுசைனின் கர்பலா படு கொலை சம்பவத்தின் பின்னர் இவர் தனது தவறான போக்கை உணர்ந்து அஹ்லுல் பைத்களின் ஆதரவாளராக மாறினார்.

மர்வானுடைய காலத்தில், இவர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் துணை நின்றார்.

உமையாக்களுக்கும் , அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் இவர் கொலை செய்யப் பட்டார்.

அவரது தலையும் கொடூரமாக துண்டிக்கப் பட்டது.

அதன் பின்னர் அந்தத் தலை அவரது மனைவியின் மடியில் தூக்கி எறியப்பட்டது.
(ஆதாரம்- தபகாத்து இப்னு சஆத் பாகம்; ஆறு -- பக்கம் ; 53  )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 245  )    

கொலை செய்யப் பட்டதன் பின்னர் தலை துண்டிக்கப் பட்டு எகிப்து, கூபா ஆகிய நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு திரியப் பட்ட இன்னுமொரு தலைக்கு சொந்தக்காரர் ஹசரத் முஸாப்  பின் ஸுபைர் (ரலி) ஆகும்.

நகரங்கள் தோறும் சுற்றிவரப் பட்ட அவரது தலை இறுதியாக  டமஸ்கஸ் நகரில் பொதுவிடத்தில் தொங்க விடப்பட்டது.அதன் பின்னர் அந்தத் தலை மீண்டும் சிரியா நாட்டின் நகரங்களில் சுற்றிவர ஏற்பாடு செய்யப் பட்டது.

உமைய்யா ஆட்சியாளர்களின் அநாகரிகமான இத்தகைய செய்கையை அமீர் முஆவியாவின் மகன் யசீதின் மளார் ஆதிக்கா கடுமையாக ஆட்சேபித்தார்."இதுவரை நீங்கள் செய்ததே உங்கள் மனத்துக்கு திருப்தி அளிக்க வில்லையா? இன்னும் அதை ஏன் கண்காட்சிப் பொருளாக ஆக்குகிறீர்கள்?"

அவரின் கடுமையான  எதிர்ப்பின் காரணமாக  அவர்களின் திட்டம் கைவிடப் பட்டது.

அதன் பின்னர், அந்தத் தலை கீழே இறக்கப் பட்டு, குளிப்பாட்டப் பட்டு நல் அடக்கம் செய்யப் பட்டது.
(ஆதாரம்-இப்னு அசீர் பாகம்; 4  பக்கம் ; 14  )   
இப்னு கல்தூண்  பாகம்; 3   பக்கம்;  35 )   

 அமீர் முஆவியாவின் அநியாயக்காரக் கூட்டத்தினரால், ஹசரத் அப்துல்லா பின் ஸுபைர் (ரலி) அவர்களின் தோழர்கள் அப்துல்லாஹ் பின் சப்வான், உமாரா பின் ஹஷம் ஆகியவர்களுடன் இதனை விடவும் கொடூரமாக நடந்துக் கொள்ளப் பட்டது.

அவர்களுடைய தலைகள் துண்டிக்கப் பட்டு மக்காவில் இருந்து மதீனாவுக்கும்,  மதீனாவில் இருந்து டமஸ்கஸ் கொண்டு செல்லப் பட்டன.

அந்தத் தலைகள் போகின்ற வழிகள்  தோறும் முக்கியமான நகரங்களில் , அந் நகரங்களின் முக்கிய இடங்களில் காட்சிப் பொருளாக மக்கள் பார்வைக்கு தொங்க விடப் பட்டன.

அவர்களின் முண்டமான உடல்களோ மக்காவில் அழுகிப் போய் துர் நாற்றம் எடுக்கும் வரைக்கும் தூக்கு மேடையிலேயே தொங்கிக் கொண்டு இருந்தன.
ஆதாரம்- அல் இஸ்திஆப் பாகம்; 1 -- பக்கம் ;  353 , 354  )  
அத தபரீ பாகம்; 5  பக்கம் ; 33 , 34  )     
இப்னு கல்தூண்  பாகம்; 3   பக்கம்;  39182 )
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 332 )  

இறந்து போன உடல்களுடன் இவ்வாறு நடந்துக் கொண்டவர்களின் தராதரம் எவ்வளவு கேவலமானது எனபது இப்பொழுது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.

முஸ்ரிகீன்களான பனு உமையாக்களின் ஆட்சியில் யசீதின் காலம் மிகவும் கொடூரமானது. 

இமாம் ஹுசைனை படு கொலை செய்ததன் பின்னர் அநியாயக் காரன் யசீதின் தலைமையை ஏற்றுக் கொள்ள மதீனா வாசிகள் மறுத்து விட்டனர்.

உடனே அவன் தனது படையினரை மதீனா நோக்கி அனுப்புகிறான்.

இஸ்லாமிய வரலாற்றில் இரத்தக் கரை படிந்த எண்ணிலடங்காத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

வரலாற்று ஆசிரியர்கள் இதனை 'ஹர்ரா போர்' என்று வர்ணிக்கிறார்கள்.

ஒரு நாட்டின் பலமிக்க படையினரால் அந்த நாட்டின் ஒரு நகரம் ஆக்கிரமிக்கப் படுவதை எப்படி போர் என்று கூற முடியும் என்று கேட்கிறோம்?

உமைய்யாக்களினதும் அப்பாசியா ஆட்சியாளர்களினதும் அடி வருடிகளான அறிஞர்களால் இத்தகைய அநியாயங்களை நியாயப் படுத்த எடுத்து விடப் பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் தான் இவ்வாறான பொது மக்களின் கலகங்களை போர் என்று மிகைப் படுத்தி கூறுவதாகும் என்று நாம் கருதுகிறோம்.

அநியாயக் காரப் படையினர் மூலம் மதீனா மக்களை கொடுங்கோலன் யசீதுக்கு பைஆத் செய்யுமாறு அரை கூவல் விடுக்கப் பட்டது.

உண்மையான முஸ்லிம்கள் யசீதின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அதன் பின்னர், மதீனா நகர் யசீதின் படையினரால் துவம்சம் செய்யப் படுகிறது.

அந்த சம்பவத்தின் போது, மதீனா நகரில் சுமார் ஏழு நூறு சஹாபாக்களும் பத்தாயிரத்துக்கு அதிகமான பொது மக்களும் கொன்று குவிக்கப் படுகிறார்கள்.

ஆயிரம் அராபிய பெண் சஹாபா பெண்கள் வயது வித்தியாசம் பாராது கொடூரமாக கற்பழிக்கப் படுகிறார்கள்.

ஹாபீஸ் இப்னு கதீர் கூறுகிறார்கள்"அந் நாட்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தங்கள் கணவர்மார் அல்லாத வேறு நபர்களால் கற்பவதியாக்கப்  பட்டார்கள்"

இந்த கொடூரமான சம்பவம் பற்றி மேலும் அறிய விரும்புவோர் அத்தபரி பாகம் நான்கையும்,  இப்னு அசீர் மூன்றாம் பாகத்தையும், அல் பிதாயா வந்நிஹாயா எட்டாம் பாகத்தையும் பார்க்குமாறு வேண்டுகிறோம்.

சஹாபாக்களில் கடைக் கோடியில் இருக்கின்ற இவர்களும், உன்னதமான இஸ்லாத்தை நிலை நாட்டுவதற்கு தமது உடல், பொருள் ,ஆவிகளை துச்சமாக மதித்து செயல் பட்ட உத்தம சஹாபாக்களும் எக்காரணம் கொண்டும் ஒரே தராதரத்தில் இருக்கப் போவது இல்லை.

உயரிய உத்தம சஹாபாக்களை விடவும் நபி (ஸல௦ அவர்களின் குடும்பத்தினரின்   தராதரம் உயர்வானது.

ஏனெனில், அஹ்லுல் பைத்களின் மீது சலவாத் சொல்லி தொழப் படாத தொழுகை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.

யதார்த்தம் இப்படி இருக்க, இன்று நம்மில் சில உலமாக்கள் தமது அறியாமையின் காரணமாக இந்த அநியாயக் காரக் கூட்டத்தினரையும் அஹ்ளுல்பைத்களையும் ஒரே தரத்துக்கு கொண்டுவருவதட்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர்.

அமீர் முஆவியாவான இந்த அநியாயக்காரக் கூட்டத்தினரும்,  நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினரும் எவ்வகையான ஒப்பீட்டிலும் ஒரே தராதரத்துக்கு கொண்டு வர முடியாது என்பதை  நாம் முன் வைத்த இந்த தகவுகளில் இருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.

இந்த உண்மைகள் எமது உலமாக்களுக்கு திட்டமிட்ட  முறையில் மறைக்கப் பட்டன.

அதன் காரணமாக அவர்கள் சஹாபாக்கள் அனைவரும் ஒரே தராதரத்தில்  உள்ளவர்கள் என்று நம்பவைக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு இருக்கிறார்கள்.

இன்று , இந்த தவறான நம்பிக்கைகள் உரு மாறி மெல்ல திரிபு பட்டு புது வடிவம் எடுத்துள்ளது.

அந்த வகையில், அப்பாவிகளான அந்த உலமாக்களை சிலர் தமது பிரச்சார உத்திகளுக்கு பலிக் கடாக்களாக உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமக்கு எதிராக நடை பெறுகின்ற இந்த துரோகத்தை சரியாக அறியாத அந்த உலமாக்கள் , அஹ்லுல் பைத்களும், அனைத்து சஹாபாக்களும் ஒரே  தராதரத்தில் உள்ளவர்கள் என்று எங்களிடையே பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர்.

இது, அவர்கள் தம்மை அறியாமல் செய்கின்ற ஒரு தப்பு.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்கு எதிரான இந்தக் கட்டுக் கதைகள் அனைத்தும், நபி (ஸல்) அவர்களின் அஹ்லுல் பைத்களின் கடும் விரோதிகளான 'உமையா' ஆட்சியாளர்களினாலும், அதன் பிறகு, அஹ்லுல் பைத்கள்  தமது அரசாட்சிக்கு சவாலாக இருப்பார்கள் என்று பயந்த அப்பாஸிய ஆட்சியாளர்களினாலும் ஆரம்பித்து வைக்கப் பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்பொழுது நாம் இருக்கிறோம்.

நபிகளாரின் குடும்பத்தவர்களை பகிரங்கமாக தூற்றும் அநாகரிக கலாச்சாரம் அமீர்   முஆவியாவின் காலத்தில் தொடக்கி வைக்கப் பட்டது.

அமீர் முஆவியாவுக்கு 'அஹ்லுல் பைத்'களுடன் அப்படி என்னதான் பகை?

அந்த பகையின் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது.

ஹிந்தா பின்த் அத்பா அவரது தாயார்.

அவர் பாக்காஹ் பின் முகைரா குறைஷி என்பவரை திருமணம் முடித்து இருந்தார்.

சில நாள்கள் செல்ல அவர் கருத் தரித்தார்.

அவர் கரு தரித்த விதத்திலும்,   அவரின் நடத்தையிலும்   சந்தேகம் கொண்ட பாக்காஹ் ஹிந்தாவை  வீட்டை விட்டும் துரத்தி விட்டார்.

புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டுக்கு வந்த ஹிந்தாவை அவரது தந்தை ஒரு ஜோசியரிடம் அழைத்து சென்று இருக்கிறார்.

ஹிந்தாவின் பிறந்த திகதியையும்,  அவர் கர்ப்பம் தரித்த முறைகளையும் கேட்டறிந்த அந்த ஜோசியர்,  சில கணக்கு களை போட்டுப் பார்த்து ஹிந்தா நன் நடத்தை உள்ள பெண் என்று நன்சான்றிதல் வழங்கியுள்ளார்.

அது மட்டுமன்றி, ஹிந்தாவுக்கு கிடைக்க இருக்கும் மகனின் பெயர் முஆவியா எனவும், அவர் பிட் காலத்தில் அராபியாவின் அரசராக வருவார் என்றும் அமீர் முஆவியாவின்  பிறப்புக்கு முன்னே அந்த மகனைப் பற்றி முன் அறிவிப்பும் செய்துள்ளார்.

இதனை அறிந்த பாக்காஹ் ஹிந்தாவுடன் மீண்டும் கூடி வாழ முடிவு செய்துள்ளார்.

தன் கணவனின் வேண்டுகோளை மறுத்த ஹிந்தா அதற்கு உடன் படவில்லை.

பிறகு , தனது கணவரின் நண்பரான ஹசரத் அபு சுபியானை ஹிந்தா மணந்துக்  கொள்ள அதன் பின்னர்  முஆவியா பிறக்கிறார். 
(ஆதாரம் ; தாறேகே இஸ்லாம்- மௌலான அக்பர் ஷா கான் நஜீபா பாதி)

இப்படியும் நடக்குமா என்று நீங்கள் ஆச்சரியபடத் தேவை இல்லை.

ஏனெனில், அராபியாவில் ஐயாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் திருமணம் எனபது மலினப் பட்ட ஒரு சம்பிரதாயமாகவே இருந்திருக்கிறது.

ஒரு பெண் நிறைய ஆண்களுடன் எவ்வித ஆட்சேபனையும் இன்றி தொடர்பு வைத்துக் கொள்வாள்.

அவள் கர்ப்பம் தரித்ததன் பின்னர் , தன்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து ஆண்களையும் ஓரிடத்துக்கு அழைப்பாள்.

அவர்கள் அனைவரும் வந்ததன் பின்னர் அவள் ஒருவனை சுட்டிக் காட்டி இவன்தான் தனது கர்ப்பத்துக்கு காரணமானவன் என்று சுட்டிக் காட்டுவாள்.

அவன் அவளது குழந்தையின் தந்தையாக முடிவு செய்யப் படுவான்.

இது இஸ்லாத்துக்கு முந்திய மலினப்பட்ட அராபிய குடும்ப வாழ்வின் ஒரு அம்சம்.

ஒரு பெண் குறிப்பிட்ட சில ஆண்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்வாள்.

அவள் கர்ப்பம் தரித்து குழந்தை கிடைத்தவுடன் அவளுடன் உறவு கொண்டவர்கள் அனைவரும் அழைக்கப் படுவார்கள்.

அங்க அடையாளங்களை வைத்து தகப்பனை முடிவு செய்யும் நிபுணர் அழைக்கப் படுவார்.

அவர் குழந்தையின் அங்க அடையாளங்களையும், தகப்பனாரின் அங்க அடையாளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் குழந்தையின் தந்தையை முடிவு செய்வார்.

இது அறியாமைக் கால அரேபியாவின் இன்னுமொரு மலினப் பட்ட குடும்ப வாழ்வின்,  குழந்தைப் பிறப்பின் ஒரு அம்சம்.

ஒரு கணவன் அராபியாவின் முக்கிய பிரபுக்களில் ஒருவனை தெரிவு செய்து தனது மனைவியை அவனுடன் உறவு கொள்ள அனுப்பி வைப்பான்.

அவள் கர்ப்பம் தரிக்கும்  வரை அக் கணவன் அவளுடன் எதுவித உறவும் வைத்துக் கொள்ள மாட்டான்.

அவள் கருத்தரித்தன் பின்னர் அவன் விரும்பினால் அவளுடன் உறவு கொள்வான்.

இராஜ இரத்தம் ஓடும் குழந்தைக் கிடைக்க வேண்டும் என்கிற நப்பாசையில் இப்படியான ஒரு தரம் கெட்ட இழிகுணம் அய்யாமுல் ஜாஹிளிய்யவில் அந்த அராபியரிடம் இருந்து வந்தது.

இன்றும் கூட அராபிய கிழட்டு மன்னர்கள் அநியாயமாக ஒரு இளம் பெண்ணை மணப்பதும் அதன் பின் அவள் கருத்தரித்ததன் பின்னர் அவளை விவாக விடுதலை செய்வதும் ஒரு சம்பிரதாயமாக அந்த மண்ணில் அழிந்து போகாமல் இருப்பது, இந்த பிரபுத்துவ குழந்தைப் பிறப்பின் எச்சப் பட்ட மிச்சமாகும்.

இந்த மூன்று முறைகளையும் எதுவித மறுப்பும் இல்லாமல் ஏற்று அம்முறைகளை மிகவும் கவனமாக பேணி வந்தவர்களாகவே பனு உமையாக்கள் இருந்து இருக்கிறார்கள்.

ஆகவே, அமீர் முஆவியாவுடைய பிறப்பு இம் மூன்று முறைகளில் ஒன்றாகவே நிகழ்ந்து இருக்கும்.

அமீர் முஆவியாவின் நிஜத் தந்தை அபூ சுபியான் இல்லை என்பது இந்த சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து இப்பொழுது தெளிவாகி இருக்கும்.

அநாகரீகமான இத்தகைய சம்பிரதாயங்களுக்கு பனு ஹாசிம்களும், இன்னும் சில முக்கிய கோத்திரங்களும் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அவர்களிடையே திருமணம் என்பது , கட்டாயமான ஒழுக்கவியல் சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடையதும் அன்னை கதீஜா (ரலி)  அவர்களுடைய    பிறப்பும், அவர்களது திருமணமும்   இதற்கு ஒரு சான்று.

திருமண கலாட்டாக்கள் இப்படி இருக்க, அபூ சுபியான் அவரது திறமையால் அகாலத்தில் இருந்த பெரும் வணிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இந்தப் பணப் பெருக்கு அவருக்கு அந்த சமூகத்தில் பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுக்க , அவருக்கு அந்த சமூகத்தின் தலைவராக வேண்டும் என்கிற 'ஆசை' துளிர்க்கிறது.

ஆனால், அஹ்லுல் பைத்களின் மூதாதையர்களைப் பற்றியும், அவர்களது பிறப்புகள் பற்றியும் அப்பழுக்கு இல்லாத வரலாறு இருந்தது.

இதனால் அராபிய சமூகத்தின் தலைமைத்துவத்தை பனு ஹாசிம்கள் இயற்கையாகவே பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களே தனது மூதாதையர்களில் இருபத்து ஐந்து தலை முறையினரைப் பற்றி விலாவாரியாக விவரித்து இருக்கிறார்கள்.

இயல்பாகவே தன்னகத்தில் கொண்டிருந்த ஒழுக்கவியல் பண்பாடுகள், தலைமைத்து தகுதி ஆகியன பனு ஹாஷிம்களுக்கு அக்கால அராபிகளிடமும்   குறைஷிகளிடையேயும் இயற்கையாகவே தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்கிறது.

இஸ்லாம் அந்த அராபிகளிடம் முற்று முழுதாக தனது செல்வாக்கை செலுத்தியதன் பின்னர் , தலைமைத்துவ  செல்வாக்கு யாரிடம் போவது என்பதில் 'பனிப்' போர் ஆரம்பம் ஆகிறது.

இந்த நிலையில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைத்துவத்துக்கு எது வித குலப் பெருமையும் தன்னில் கொண்டிருக்காத அபூ சுபியானின் 'பனு உமையா'க்களும், வரலாற்றுக்கு முந்திய வரலாறை தன்னகத்தில் கொண்டிருந்த 'பனு ஹாஷிம்'களுக்கும்  இடையே முறுகல் வலுக்கிறது.

ஹசரத் அலி (ரலி)அவர்களின் படு கொலைக்குப் பின்னர் ,அமீர் முஆவியா இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மன்னராக முடி சூடுகிறார்.

அவர் மன்னராக முடி சூடிய பின்னர் அவருக்கு அவரது இழிபிறப்பு இரகசியத்தின் வீரியத்தை குறைக்க வேண்டிய சூழ் நிலை உருவாகிறது.

அவருக்கு எதுவிதமான குலப் பெருமையும் இல்லை.

பிறந்த பிறப்பிலும் பெருமைப் படக் கூடிய தூய்மை இல்லை.

ஒரு தகப்பனுக்கு பிறந்தவர் என்று கூறும் உறுதிப்பாடும் இல்லை.

ஒரு தகப்பனுக்கு பிறந்தவரும் இல்லை.

இதற்கு முடிவு கட்ட என்ன செய்வது?

இதன் விளைவாகவே, நபிகளாரின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பி நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் செய்கையில் அமீர் முஆவியாவின் குடும்ப கௌரவம் காப்பாற்றப் படும் செய்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின.

அமீர் முஆவியா, பணத்துக்கு விலை போன மார்க்க அறிஞர்களைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிரான 'கதைகளை' அற்புதமாக புனையத் தொடங்கினார்.

இஸ்லாத்தின் போர்வையால் அவைகளை மக்கள் மயப்படுத்தினார்.

இதில் முதலாவது இலக்கு ரசூல் (ஸல்) அவர்களின் 'பனு ஹாஷிம்' குலம்.

போட்டார்கள் ஒரு போடு! இப்ராஹீம் (அலை) உடைய தந்தை நரகவாதி!

சில காலம் செல்ல , போட்டார்கள் இன்னொரு போடு!

பாவம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அவர் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் அவரது தாயும் தந்தையும் நரகவாதிகள். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலிகள்?

அமீர் முஆவியாவின் தாய் ஹிந்தாவும் ,தகப்பன் அபூ சுபியானும் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள். எனவே அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை நாடினான். அவர்கள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனார்கள்.எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்!?

அது மட்டுமா?

நபி (ஸல்) அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்த அவரது பெரிய தந்தை அபு தாலிப், அவரும் நரகவாதி.

 முஆவியாவின் மகன் 'யசீத் ' எப்பேர்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்?

அவரது தாத்தா 'அபு சுபியான்' ஒரு முஸ்லிம்.

அவரது பாட்டி 'ஹிந்தா' ஒரு முஸ்லிம்.

அவரது தகப்பன் 'முஆவியா' ஒரு முஸ்லிம்.

ஆனால் இந்த உலகத்தை ஆசை வைத்து?????? அவருடன் அநியாயமாக அவரது ஆட்சிக்கு எதிராக போரிட்டு 'கர்பலாவில்' படு தோல்வி    அடைந்த இமாம் ஹுசைனின் பாட்டனார்  அபு தாலிப் நரகவாதி??? அவரது பாட்டனார் முஹம்மத் (ஸல்) அவர்களின் தாயும் தந்தையும்நரகவாதிகள்???

நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களுக்கு எதிரான கருத்துக் கலகங்களின் ஆரம்பம்  இப்படித்தான் இஸ்லாத்தின் கடும் பகைவர்களினால் மக்கள் மயப்படுத்தப் பட்டன.

இத்தகைய துரதிஷ்ட நிலையில் நபி (ஸல்) அவர்களின் 'ஹதீத்' களும், அவர்களது 'சுன்னாவும்', உண்மையான இஸ்லாமும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களிடம் மட்டுமே பாது காப்பாக இருக்கும் நிலை உருவானது.

நபி (ஸல்) அவர்களது மரணப் படுக்கையிலேயே இந்த நாடகங்களின் முதல் அத்தியாயம் சஹாபாக்களின்   ஒரு குழுவினரால்  பலவந்தமாக   அரங்கேற்றப் பட்ட விடயம் எங்களது உலமாக்கள் மட்டுமே அறிந்த பகிரங்க இரகசியம்.

இந்த இரகசியங்களினால் வரும் வேதனைகளை ஜீரணித்துக் கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப் பட்டு இருக்கிறோம்.

எங்களது வாய்களை நாங்களே கைகளால் பொத்திக் கொண்டு  அலறுவதால் எங்களது வேதனையை யாரும் கண்டுக் கொள்வது இல்லை.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வந்த முதல் மூன்று கலீபாக்களின் காலத்தில் நபி (ஸல்) அவர்களது 'ஹதீத்களை'  எழுதுவதற்கு விதிக்கப் பட்ட 'அரசியல்' தடை, அஹ்லுல் பைத்களின் எதிரிகளுக்கு
கிடைத்த பொன்னான வரப்பிரசாதமாக அமைந்தது.

ஹசரத் அபூபக்கர் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஐநூறு ஹதீத்களை சேகரித்து வைத்து இருந்தார்.

ஆயிஷா  (ரலி) அறிவிக்கிறார்கள்;

"ஒரு நாள் இரவு எனது தந்தையார் காலைவரை மனக் குழப்பமுற்று இருப்பதை கண்டேன். காலையில் அவர் என்னிடம் 'நான் சேர்த்து வைத்து இருக்கும் ஹதீத்களை கொண்டு வா' என்றார்.

நான் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவற்றை கையில் எடுத்த அவர் அவைகளை தீயிட்டு கொளுத்தினார்."
(ஆதாரம்; அலா அல் தீன் முத்த்கியின் - கன்சுல் உம்மால்)

" ஹதீத்களை யார் வைத்து இருந்தாலும் அவற்றை அவர்கள் தீக்கிரையாக்கி விட வேண்டும் " என்று அரச அறிவிப்பாக ஹசரத் உமர் (ரலி) அவரது ஆட்சியின் போது சகல நகரங்களுக்கும் எழுதி ஆணையிட்டார்.
(ஆதாரம்; கன்சுல் உம்மால்) 

"உமர் (ரலி) உடய ஆட்சி காலத்தில் மக்கள் ஹதீத்களை அறிவித்து, அவற்றை சேகரிக்க தலைப்பட்டனர்.

இதனால் ஹதீத்கள் பெருகின.

அத்தகைய ஹதீத்கள் அவரிடம் கொண்டு வரப்பட்ட போது அவர் அவற்றை தீயிலிடுமாறு கட்டளையிட்டார்."
(ஆதாரம்; தபகாத் இப்னு சஆத் )
  .  
'அல் குரானின்' வசனங்களுடன் ஹதீத்கள் ஒன்றாக இணையும் அபாயம் இருந்தது என்று அக்காலத்தில் அந்த செய்கைக்கு நொண்டிச் சாக்கு சொல்லப்பட்டது.

இனி புகாரி ஹதீத் கிரந்தத்தில் இருக்கின்ற மிக நீண்ட ஹதீத் ஒன்றில் இப்படி வருகிறது;

"................ இதோ ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு நான் சொன்ன செய்திகளை அறிவித்து விடுங்கள்.ஏனெனில்,இந்த செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர்தாம் யாரிடம் இருந்து இதை கேட்டாரோ அவரை விட நன்கு பாதுகாப் பவராயிருக்கலாம்." என்று ஒலிக்கிறது.
(ஆதாரம் - புஹாரி ஐந்தாம் பாகம் 4406   வது ஹதீத்)

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை எழுதுவதற்கு நபி (ஸல்) அவர்களே அனுமதித்து இருக்க, முதல் மூன்று கலீபாக்கள் அதனை ஏன் தடுத்தார்கள் என்பதற்கு  யாருக்குமே அப்போது விடை தெரியவில்லை.

ஆனால், இந்த செய்கைகளின் பின்னணியில் முற்று முழுக்க 'உமையாக்கள்' இருந்த இரகசியம் காலப் போக்கில் துலாம்பரமாகியது.

இதன் காரணமாகத்தான் அநீதமான உமையா ஆட்சியாளர்களை சபிக்க முடியும் என்கிற கருத்தில் சுன்னத் wal  ஜமாஅத்  மூத்த  அறிஞர்கள் இருந்து  இருக்கிறார்கள்.

பனு உமையாக்களுக்கு எதிராக ஏதும் எதிர்ப்புக் குரல் எழுப்புவது இல்லை. புரட்சிப் போராளிக் குழுக்கள் எதிலும் பங்கேற்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு  ஒருமுறை ஹசரத் ஹசன்  பசரீ அவர்களுக்கு எதிராக எழுப்பப் பட்டது.

"நீங்கள் பனு உமையாக்கள் உடன்   திருப்தியோடு  இருக்கிறீர்களா?" என்று அவரிடம் வினவப் பட்டது.

"நான் எப்படி அவர்களை ஏற்றுக் கொள்வேன்." என்ற ஹசரத் ஹசன் பசரீ தொடர்ந்து சொன்னார்கள் "அல்லாஹ் அவர்களை நாசமாக்கட்டும்.! நபிகள்(ஸல்) அவர்கள் புனிதப் படுத்தியிருந்த நகரத்தை இவர்கள் தானே தமக்கு ஹலால்    ஆக்கிக்  கொண்டார்கள் . மூன்று  நாட்கள்   அன்   நகர மக்களை எல்லாம்   கொன்று  குவித்துக்  கொண்டு இருந்தார்கள்.
தம்முடைய நப்தீ , கிப்தீ வீரர்களிடம் எல்லாம் நீங்கள் நினைப்பதை எல்லாம் செய்துக்  கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.மூமினான சஹாபா  பெண்களை எல்லாம் தாக்கினார்கள். மானப் பங்கப் படுத்தினார்கள்.பின்பு பைத்துல்லாஹ் மீது படை   எடுத்து   சென்றார்கள்  .அதன் மீது கல் மாறி பொழிந்தார்கள்.தீ வைத்து கொளுத்தினார்கள்.அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.அவர்களின் முடிவு நாசமாகிப் போகட்டும்" என்று அவர் பதில்  கூறினார்கள்.
(ஆதாரம்: இப்னுல் அசீர்  பாகம் நான்கு பக்கம் 170 )

இமாம் ஹசன் பசரீ பனு உமையாக்களை பகிரங்கமாக சபித்ததில் உள்ள சத்தியம் என்ன?

அதற்கான விடை இப்படி இருக்கிறது.

ஒரு முறை நபி (ஸல௦ அவர்கள் சஹாபாக்கள் மத்தியில் " நீங்கள் செய்கின்ற நல்  அமல்களைக் கொண்டு உங்களால் சுவனம் செல்ல முடியாது" என்று சொன்னார்கள்.

சஹாபாக்கள் அதிர்ந்து போனார்கள்.

"யாரசூலுல்லாஹ்! உங்களினாலும் உங்களது நல் அமல்களைக் கொண்டு சுவனம் செல்ல முடியாதா?"  என்று கேட்டார்கள்.

"ஆம்!...நானுந்தான்" என்ற நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மட்டுமே ஒருவனால் சுவனம் செல்ல முடியும்" என்றார்கள்.

அல்லாஹ்வின் அருள் என்ன? அது எங்கே இருக்கிறது? எங்களால் அதனை எப்படி அடைய முடியும்?

அல்லாஹ்வின் அருளைப் பற்றி விளக்குகின்ற அல் குரான் ஆயத் இப்படி ஒலிக்கிறது.

"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் 'ரஹ்மத்தாக' ஓர் அருட் கொடையாகவே அன்றி அனுப்பவில்லை"
(அல் குரான்: 21 ; 107 )

அல்லாஹ்வின் அருளான நபி (ஸல்) அவர்களை நிராகரித்த நிலையில் நாம் செய்கின்ற நல் அமல்களில் எதுவித பயனும் இல்லை.

மேலே நாம் எடுத்து சொன்ன ஹதீதின் படி மனிதனது நல் அமல்களால் மட்டும் அவனால் வெற்றிபெற முடியாது என்பது தெளிவு.

இந்த நிலையில், நபி (ஸல்)  அவர்களின் பெற்றோர்கள் சுவனம் செல்ல இருக்கின்ற தடைதான் என்ன?

மனிதன் செய்த நல் அமல்களின் கேள்விகளுக்கு  முன்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அவனது அறிவு அல்லது அவரிலும், அவர் குடும்பத்திலும் அவன் வைத்து இருக்கும் அவனது நேசம் பற்றிய கேள்விதான்  முதலில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினர் மீது நாம் வைக்கும் நேசம் ஈமானுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது.

ஏனெனில், அல்லாஹ்விடம் நல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப் பட ஈமான் அவசியம்.

மனிதனது உள்ளத்தில் ஈமான் பதியப் பட்டு இருக்கிறதா இல்லையா என்று எப்படி அறிந்துக் கொள்வது?

மனிதனது உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்துக் கொள்ள எதாவது உரை கல் இருக்கிறதா? 

மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில, எங்களது ஈமானின் நிஜத் தன்மையை அறிந்துக்கொள்ள அல் குரான் உடைய ஒரு ஆயத் உரை கல்லாக இருக்கிறது.

பின் வரும் அந்த அல் குரான் ஆயத்தைக் கவனியுங்கள்.

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் , அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காண மாட்டீர்.அவர்கள் தங்கள் பெற்றோராயினும், தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தவராயினும் சரியே;(ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் (அல்லாஹ் )ஈமானை எழுதி (பதித்து) விட்டான்...................." 
(அல் குரான்; 58 : 22 )

எங்களது ஈமானை உரசிப் பார்க்க அல் குரான் உரை கல்லாக சொல்லுகின்ற புனித ஆயத் இதுதான்.

இமாம் ஹசன் பசரீ நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினரினதும், இஸ்லாத்தினதும் எதிரிகளான பனு உமையாக்களை சபித்ததன் மூலம் அவரது ஈமானின் நிஜத் தன்மையை நமக்கு பறை சாட்டி விட்டார்கள்.

ஆனால், மிகவும் பரிதாபமாக நமது இன்றைய சில உலமாக்கள் பனு உமையாக்களின் கருத்துக் காவிகளாக இருந்து அவர்களின் தவறான இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மயப் படுத்துவதில் முனைப்புடன் செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

 அவர்களின் இத்தகைய செயல்களின் காரணமாக பனு உமையாக்களின் சாபத்தில் அவர்களும் உள் வாங்கப்படுகிறார்கள்.

அவர்களை நாம் அலட்சியப் படுத்தி விடுவோம்.

எங்களது நிலை என்ன?

நாம் அந்த ஆயத் சொல்லும் பிரகாரம் இருந்தால், அதாவது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் பகைவர்களுடன் நாம் பகை கொண்டிருந்தால்  நமது உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருக்கிறது என்று புரிந்துக் கொள்வோமாக.

இல்லை என்றால் இதன் பிறகாவது அந்த அல் குரான் ஆயத் நம்மிடம் வேண்டி நிற்கும் தன்மையை எங்களில் நாம் கொண்டு வர முயட்சிப்போமாக.

ஏனெனில், மூமின்களை தவிர வேறு எவரும் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினரை நேசிக்க மாட்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் வழித் தோன்றலின் சிறப்பும் , அதன் தூய்மையும் , பனு உமையாக்களின்  அநீதமும் அவர்களினால் தொடக்கி வைக்கப் பட்ட நபி (ஸல்)௦ அவர்களின் குடும்பத்துக்கு எதிரான ஹதீத்களின் கருத்துக்  குழப்பங்களும்   இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.
  
நபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள் என்று 'உமையாக்களின்'  சான்றுகளை வைத்துக் கொண்டு முடிவுக்கு வந்த உலமாக்களின் உயரிய ஆய்வுக்கும், ஆதாரபூர்வமான எதிர்ப்பு ஆய்வுரைக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் சரியான தெளிவை தந்து அருள்வானாக.

1 comment:

Unknown said...

ஜெஸாக்கல்லாஹு ஹைர்; உங்களுடைய தகவலுக்கு

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad