அஹ்லுல்பைத் Headline Animator

Friday, July 26, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்......


அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்...... 
அத்தியாயம் - இரண்டு - 


சென்ற பதிவில்.............நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அலுவலகத்தினுள் 'ஸலாம் 'கூறியபடி நுழைந்தார்.

"என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றுக் கேட்டார்.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம்  அவர்களினதும் திருமணக்  கதைகளில் இருக்கின்ற நம்பகத் தன்மைகளின் நம்பகம் இல்லாத தன்மைகளின் ஆய்வை விளக்கினேன்.

அவர் உடனே தனது செல்போனை எடுத்து கொழும்பில் இருக்கும் ஒரு பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு போன் எடுத்து நான் ஆய்வு செய்யும் விடயம் தொடர்பான அவரது கருத்தைக் கேட்டார்.

அந்த மார்க்க அறிஞர் சொன்ன விடயங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறு வயதிலே திருமணம் செய்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது.ஒரு கணவன் தனது மனைவியுடன் நடந்துக் கொள்ளும் முறைகள் சம்பந்தமான அறிவை நடைமுறை செயல் முறை மூலம் அண்ணலார் அன்னையவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அது மட்டுமன்றி,அண்ணலார் சம்பந்தமான அநேக  ஹதீஸ் அறிவிப்புக்களை அன்னையார் நடைமுறை சம்பவங்களின் துணைக் கொண்டே அறிவித்ததற்கு அவர்களின் சிறு வயதுத் திருமணமே காரணம்."

இதனை எனக்கு சொன்ன நண்பர் "இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதில் இவ்வாறு விரிந்தது.



இப்பொழுது இருக்கின்ற முஸ்லிம் அறிஞர்களில் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ஹதீஸ்களை தொகுத்து நூலுருவில் கொண்டு வந்த மகான் இவராவார்.

இவரது ஹதீஸ் தொகுப்பின் பெயர் 'முவத்தா' வாகும்.

மாலிக் மத்ஹபின் ஸ்தாபகரும் அக்காலை இருந்த பிரபல்யமான இஸ்லாமிய சட்டக் கலை வல்லுனராகவும் இமாம் மாலிக் இப்னு அனஸ்  (ரஹ்) இருந்திருக்கிறார்.

அது மட்டுமன்றி, இமாம் ஜவ்பர் சாதிக்,இமாம் அபூ ஹனிபா (ரஹ்)  ஆகிய மாபெரும் அறிஞர்களின் சம காலத்தவரான இமாம் மாலிக் இப்னு அனஸ்  (ரஹ்) அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்தான் ஷாபி மத்ஹபின் நிர்மாண சிற்பி இமாம் ஷாபி  (ரஹ்) அவர்கள் என்பதை தயை கூர்ந்து கவனிக்கவும்.

அஹ்ளுல்பைத்களை நேசித்தமைக்காக இமாம் ஷாபி (ரஹ்)  அவர்களை அவர் காலத்தில் இருந்த சில அறிஞர்கள் வழித் தவறிய ஷியா என்று அழைத்தனர்.

அதனை இமாம் ஷாபி  (ரஹ்) எதிர்கொண்ட விதம் அபாரமானது.

தன்னை ஷியா என்று அழைத்த மக்களுக்கு இமாம் ஷாபி  (ரஹ்) இப்படி பதிலளித்தார்."அஹ்ளுல்பைத்களை நேசிப்பவர்களை நீங்கள் ஷியா என்றழைத்தால் என் காலத்தவர்களில் நான்தான் முதலாவது ஷியா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்"

பின்னாளில், அஹ்ளுல்பைத்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்  (ரஹ்) அவர்கள் இமாம் ஷாபி  (ரஹ்) அவர்களின்  மாணாக்கரில் ஒருவர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அத்துடன் இமாம் புஹாரி (ரஹ்)  அவர்களின் தந்தை முஹம்மத் இப்னு இஸ்மாயில் இமாம் மாலிக் இப்னு அனஸ்  (ரஹ்)  உடைய மாணவர்களில் ஒருவர் என்பதும் குறிப்படத்தக்கது.

பெருந்தகை இமாம் மாலிக் இப்னு அனஸ்  (ரஹ்) அவர்களின் பிரதான ஆசிரியர்களாக   ஹிஷாம் இப்னு உர்வாவும்  (ரஹ்) ,உபைதுல்லாஹ் இப்னு ஷிஹாப் அல் ஜுஹ்ரி  (ரஹ்) ஆகிய தாபிஈன்களான பெருந் தகைகள்   இருவர் இருந்திருகிறார்கள்.

நாம் மேலே குறிப்பிட்ட பெரும் பெரும் அறிஞர்கள் அடைந்த ஞானத்தினதும் அறிவினதும் மூல ஊற்றுக் கண்ணாக அன்னை ஆயிஷா (ரலி) இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி இப்பொழுது உங்களை விழி உயர்த்த வைக்கும்.

ஆனால், நிஜம் அதுதான்.

அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவுக்குப் பின்னர்பெண்களுக்கான முதலாவது 'மத்ரசாவை'அன்னையவர்கள் ஜமல் கலகத்தின் பின்னர் தனது வீட்டில் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அதன் பின்னர் புனித அல் குர் ஆனுக்குரிய விளக்கவுரையை தொகுத்து முடித்தும் இருக்கிறார்கள்.

அன்னையவர்களின் வீட்டில் ஒரு திரை போடப்பட்டு ஆண் மாணவர்கள்  வேறாகவும் பெண் மாணவிகள் வேறாகவும் கற்பதற்கு ஒழுங்குகள் செய்யப் பட்டிருந்திருக்கின்றன.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பிரதானமான மாணவர் உர்வா இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களின் சகோதரராவார்.

இவர்களின் தாயார் ஹசரத் அபூபக்கரின்(ரலி) அவர்களின்  மகள் அன்னை அஸ்மா (ரலி) ஆவார்கள்.

அன்னை அஸ்மா(ரலி) வும் அன்னை ஆயிஷா (ரலி)வும் கூடப் பிறந்த சகோதரிகள் என்ற விடயத்தை நாம் அறிவோம்.அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்னை அஸ்மாவை (ரலி) விடவும் பத்து வயது இளமையானவர்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்  அவர் அறிந்திருந்த அனைத்து விடயங்களையும் அவரது சகோதரியின் மகனான உர்வா இப்னு ஜுபைர் (ரலி) அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹசரத் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பிறந்த உர்வா இப்னு ஜுபைர்  (ரஹ்)  தாபிஈன்களின் பிரபல்யமான ஏழு பிக்ஹு கலை வல்லுனர்களில் ஒருவர்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறக் கேட்ட அனைத்து ஹதீஸ்களையும் இவர் நூலுருப் படுத்தியிருந்தார்.ஆனால்,'ஹர்ரா'போரின் பொழுது கொடுங்கோலன் யசீதின் படையினர் மர்வான் இப்னு ஹகமின் துணையுடன் அன்னையவர்களின் மத்ரசாவுக்குத் தீ வைத்துக் கொளுத்தி இவர் தொகுத்திருந்த அனைத்து பதிவுகளையும் எரித்து சாம்பலாக்கி விட்டனர்.

ஹர்ரா போரினால் விளைந்த அவலங்கள் பல்லாயிரம்.

மூன்று தினங்கள் நீடித்த அந்தக் கொடூர நாள்களில் சுமார் ஆயிரம் ஷஹாபா பெண்கள் வயது வித்தியாசமின்றி கற்பழிக்கப் பட்டார்கள்.

எழுநூறு ஷஹாபா சான்றோர்கள் சிரச்சேதம் செய்யப் பட்டார்கள்.

சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப் பட்டார்கள்.

ஹாபிஸ் இப்னு கதிரின் கூற்றுப் பிரகாரம் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான அராபிய சஹாபா பெண்கள் தங்கள் கணவர் அல்லாதவர்களினால் கர்ப்பவதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

மதீனா மக்களின் சொத்துக்கள் முழுமையாக 'கனீமத்' என்ற பெயரில் சூறையாடப் பட்டிருக்கின்றன.

அன்னையவர்களின் குடும்பத்தினர் பனு உமையாக்களுக்கு எதிரானவர்களாக இருந்த காரணத்தினால் ஹர்ரா போரில் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள்.

அன்னை அஸ்மா (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் அவரது ஆதரவாளர்களும் புனித கஹ்பதுல்லாஹ்வில் வைத்து பகிரங்கமாக தூக்கிலிடப் பட்டிருகிறார்கள்.

ஹர்ரா போரினால் மதீனா மக்கள் அப்பொழுது பாதிக்கப் பட்டார்கள்.

அன்னையவர்களின் பதிவுகள் அனைத்தும் தீக்கிரையாக்கப் பட்ட காரணத்தினால் சரியான தகவல்களை இழந்த நிலையில் முஸ்லிம் சமூகம் இப்பொழுதும் இக்கணமும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஷிஹாஹுஸ் ஷித்தாக் கிரந்தங்களில் உர்வா இப்னு ஜுபைரின் (ரலி)  அவர்களின்  மகன் ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) வினால் தனது தந்தை தன்னிடம் சொன்னதாக சொல்லப் படுகின்ற ஹதீஸ் அறிவிப்புகள் பல பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் திருமணம் புரிந்து ஒன்பது வயதில் வீடு கூடினார் என்றகருத்தை சொல்கின்ற அனைத்து ஹதீஸ் அறிவிப்புக்களும் ஹிஸாம் இப்னு உர்வா  (ரஹ்) வினால் அவரது தந்தை உர்வா இப்னு ஜுபைர்  (ரலி) அவர்களினால் அறிவிக்கப் பட்டதாக சொல்லி அறிவிக்கப் பட்டிருப்பதை அனைத்து ஹதீஸ் விற்பன்னர்களும் கருத்து வேறுபாடுகளின்றி ஏற்றிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத்  திருமணம் செய்யும் பொழுது அன்னாரின் வயது ஆறாக அல்லது ஏழாக இருந்தது, நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னையாருடன் ஒன்பது வயதில் வீடு கூடினார்கள் என்ற கருத்தை சொல்கின்ற அனைத்து ஹதீஸ் பதிவுகளும் ஆச்சரியமாக ஹிஸாம் இப்னு உர்வா  (ரஹ்) வினால் மட்டுமே அறிவிக்கப் பட்டிருப்பதை உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

அக்காலத்தில் மதீனாவில் அல்லது மக்காவில் இருந்த எந்த சஹாபாவோ அல்லது தாபிஈன்களோ அல்லது தபஅதாபிஈன்களோ இது சம்பந்தமாக  எதுவுமே அறிவிக்காது இருப்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இதிலிருக்கும் நம் கவனம் சிதைந்த இன்னுமொரு பயங்கரமான உண்மை என்னவெனில் இவரது மாணவரான இமாம் மாலிக்  (ரஹ்) கூட தனது ஆசானிடம் இவ்வாறான ஹதீஸ்களைக் கேட்டதாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

இஸ்லாமிய வரலாற்றின் முதலாவது ஹதீஸ் தொகுப்பான அல் முவத்தாவில் இவ்விதமான ஹதீஸ் அறிவிப்புகள் எதுவுமே இல்லை.

மதீனாவில் சுமார் எழுபத்தொரு வருடங்கள் வாழ்ந்த ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) மதீனாவில் இருக்கும் பொழுது இவ்வாறான ஹதீஸ் அறிவிப்புக்கள் எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை இதிலிருந்து புலப்படுகின்றது.

இந்த ஹதீஸை ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) தனது எழுபத்தொரு வயதுக்குப் பிறகு தனது வாழ்விடமாக ஈராக்கை தெரிவு செய்ததன் பின்னர்தான் அறிவிக்கத் துவங்கினார் என்று வரலாறு சான்று பகர்கிறது.

உண்மையில் இத்தகைய அறிவிப்புக்களை அவர் செய்தாரா அல்லது அவர் பெயரில் மறைந்திருந்து வேறு யாராவது செய்தார்களா என்ற சந்தேகம் பாமரர்களான எங்களது மனத்தில் உருவாகுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனெனில், அவரது மாணவரான இமாம் மாலிக் இப்னு அனஸ்  (ரஹ்) ஈராக் மக்களினால் அவரது ஆசானின் பெயரால் கூறப் பட்ட அனைத்து ஹதீஸ் அறிவிப்புக்களும் நம்பகமானவை அல்ல என்று கூறி அத்தகைய ஹதீஸ்  அறிவிப்புக்கள் அனைத்தையும் மறுத்திருக்கிறார்.
(ஆதாரம்: தஹ்சேப் அல் தஹ்சேப்- பாகம் 11)

தஹ்சேப் அல் தஹ்சேப் என்பது பிரசித்திப் பெற்ற ஹதீஸ் அறிவிப்பாளர்களின் விபரங்களை தாங்கியிருக்கின்ற கிரந்தமாகும்.அதில் யாகூப் இப்னு சைபாஹ் அறிவித்ததாக பதியப் பட்டிருக்கும் ஒரு பதிவு இப்படி ஒலிக்கிறது.

"ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) மிகவும் நம்பகமான ஹதீஸ் அறிவிப்பாளர்.ஆனால்,அவர்  ஈராக் சென்றதன் பின்னர் ஈராக்கில் அவர் அறிவித்த அனைத்து ஹதீஸ்களும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்."
(ஆதாரம்:தஹ்சேப் அல் தஹ்சேப் ,இப்னு ஹஜர் அல் அஸ்கலானியின்  தார் இஹ்யா அல் துராத் அல் இஸ்லாமி-பாகம் பதினொன்று பக்கம் 50)

'மீஜானுல் அய்தித்தால்' என்பது ஹதீஸ் அறிவிப்பாளர்களின் விபரங்களைத் தாங்கியிருக்கும் இன்னுமொரு பிரபலமான கிரந்தமாகும்.அக் கிரந்தத்தில் ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) சம்பந்தமாக பதிவாகி இருக்கும் ஒரு பதிவை உங்களது ஆய்வுக்குத் தருகிறோம்.

"ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) அவரது வயதான காலத்தில் மிகவும் கடுமையான நினைவு தடுமாற்றத்திற்கு ஆளாகியிருந்திருகிறார்."
(ஆதாரம்: மீஜானுல் அய்தித்தால்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மாணவிகளில் பிரபல்யமான ஒருவர்தான் உம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் இப்னு சஆத் ஸுராரா (ரஹ்).

 மதீனத்து அன்சார் குடும்பங்களில் ஒன்றில் பிறந்த இவர் அன்னையவர்களின் காரியதரிசி நிலையில் கணிக்கப்பட்டவர்.

நம்பகமான ஹதீஸ் அறிவிப்பாளர்களில் இவர் முக்கியமானவர்.

ஆறு ஹதீஸ் கிரந்தங்களிலும் இவரது அநேக அறிவிப்புகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

இவரது சிறப்பை பின்வரும் சம்பவங்களில் இருந்து உங்களால் ஊகித்துக் கொள்ள முடியும்.

அல் காஸிம் முஹம்மத் இப்னு அபீபக்கர் என்பவர் மதீனாவில் இருந்த நீதிபதிகளில் ஒருவர்.இவரது ஆசிரியர்களில் ஒருவர்தான் உபைதுல்லாஹ் இப்னு  ஜுஹ்ரி (ரஹ்) .

இவர் இஸ்லாமிய வரலாற்று தொகுப்பாசிரியர்களில் முக்கியமானவர்.

இமாம் ஜுஹ்ரி  (ரஹ்) ஒரு முறை அல் காஸிம் முஹம்மத் இப்னு அபீபக்கரிடம் "நீங்கள் அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்வதில் அதிக நாட்டம் கொண்டிருப்பது தெரிகிறது.உங்களுக்கு சரியான இஸ்லாமிய அறிவுத் தேவை என்றால் நீங்கள் உம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் சென்று கல்வி பயிலுங்கள்.ஏனெனில்,உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான் தனது அனைத்து அறிவுகளையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்." என்று அறிவுரை பகர்ந்திருக்கிரார்கள்.

அவரது அறிவுரைக்கேட்ப அன்னையவர்களிடம் அல் காஸிம் முஹம்மத் இப்னு அபீபக்கர் சென்று கல்வி கற்று விட்டு இப்படி சொன்னார்."நான் அன்னை உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் சென்றேன்.அவரது ஞானமும் அறிவும் சமுத்திரத்தைப் போல ஆழமானது.அவ்வாறான அறிவுத் திறன் கொண்ட பெண்ணை என்னுடைய வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை."

உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான்  (ரஹ்) அவர்களது சிறப்பு சம்பந்தமாக உமர் இப்னு அப்துல் அஸீஸ்  (ரஹ்) சொல்லிய கூற்று இப்படி ஒலிக்கிறது.

"அன்னை ஆயிஷா ரலி) அவர்கள் சம்பந்தமான விடயங்களை அறிந்தவர்களில் உம்ராஹ் பின்த் அபூபக்கர் (ரஹ்) வை விடவும் முன்னணியில் இருக்கும் ஒருவரையும் நான் காணவில்லை.ஏனெனில்,அன்னையவர்களின் அனைத்து அறிவுகளையும் அவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள்.அது மட்டுமன்றி,அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் மிகவும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார்கள்."

அமீருல் மூமினீன் இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்கள் நபிக் குடும்பத்தார்கள் சகிதம் கர்பலாவுக்கு தனது பயணத்தை மேற்கொள்ள முனையும் பொழுது உம்ராஹ் பின்த் அபூபக்கர்  (ரஹ்) மிக நீண்டதொரு மடலை இமாமுக்கு எழுதினார்கள்.

அதில் பபிலோனியாவில் (ஈராக்கில் ) வைத்து இமாம் ஹுசைன் கொல்லப் படுவார்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அறிவித்திருப்பதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்ல தான் கேட்டிருப்பதாகவும் அதனால் இமாம் அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மக்காவை விட்டும் வெளியே செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி வேண்டி நின்றார்கள்.

அக் கடிதத்தை வாசித்த அமீருல் மூமினீன் இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் அவ்வாறு கூறி இருந்தால் அதனைத் தடுப்பவர் எவருமில்லை.ஆகவே,நிச்சயம் நான் அங்கு செல்வேன்" என்று சொன்னவர்களாக கர்பலாவுக்கு பயணமாகி இருக்கிறார்.

அதன் பின்னர் உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான்  (ரஹ்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதாக முன்னறிவித்த ஹதீஸ் பலித்துப் போனதை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இந்தளவு நெருக்கமான உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான் (ரஹ்)  கூட அன்னையவர்களுக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களுடன் திருமணம் நடக்கும் பொழுது அன்னையவர்களின் வயது ஆறு என்றோ அல்லது ஒன்பது என்றோ சொன்ன அறிவிப்புகள் எதுவுமே இல்லை என்பதையும் உங்களது கவனத்துக்கு ஒப்புவிக்கிறோம்.

புனித அல் குர்ஆனுக்கு முரணான சட்டங்களை இஸ்லாமிய சட்டங்களாக வகுத்து தீர்ப்பளித்த அனைவரும் தமது சட்டத் தீர்ப்புக்கு ஆதரவாக எடுத்தாள்கின்ற ஹதீஸ் அறிவிப்புக்களை அறிவித்தவர்களாக உர்வா பின் ஜுபைர் அல்லது உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான்  (ரஹ்) அவர்களின்  அறிவிப்புக்களை சான்றாக கொள்வதை உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

மணப்பெண்ணுக்கு ஒரு பொருட் குவியலை மஹராக கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் திருப்பி எடுக்கக் கூடாதென்று புனித அல் குர்ஆன் கட்டளைப் பிறப்பித்திருக்க கொடுத்த மஹரை திருப்பி எடுப்பதற்கு ஆதாரமாக உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான் (ரஹ்)   அறிவித்ததாக சொல்லப் படுகின்ற ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் இந்த அல் குர் ஆன் கட்டளைக்கு முரணான செய்கையை செய்வதற்கு இஸ்லாமிய சரிஆ  சட்டம் வகுத்திருக்கிறார்கள்.

இன்று மத்திய கிழக்கில் பெண்களுக்கு மஹராக கொடுத்த மஹரை விவாகரத்தின் பொழுது  திருப்பி எடுக்கும் அல் குர்ஆனுக்கு முரணான செய்கையை செய்வதற்கு இஸ்லாமிய சரிஆ சட்ட அனுமதிக்கு மூலக் காரணமாக உம்ராஹ் பின்த் அப்துர் ரஹ்மான்  (ரஹ்) வின் ஹதீஸை அடிப்படையாகக் காரணம் சொல்கிறார்கள்.

இவ்விடயத்தை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது விவாகரத்தின் பொழுது இலங்கையில் மஹர் தொகையை இலங்கை மணவாளர்கள் திருப்பி எடுக்கிறார்களா? என்ற எண்ணம் நெஞ்சில் நெருட நான் உடனே எனது நண்பர் இம்ராசுக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டேன்.(0094 7777 23733)

இம்ராஸ் கொழும்பில் முஸ்லிம் விவாகரத்து விடயங்களில் மத்தியஸ்த குழு உறுப்பினர்.

எனது கேள்வியைக் கேட்டவுடன் "அல் குர் ஆன் சூரா நிசாவின் இருபத்து ஒன்றாவது ஆயத்தின் பிரகாரம் கொடுத்த மஹரை திருப்பி எடுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை" என்றார்.

"இல்லை......இலங்கையில் அப்படி யாராவது கொடுத்த மஹரை திருப்பி கேட்டிருக்கிறார்களா?" இது நான்.

மறு முனையில் இம்ராஸ் வாய் விட்டு சத்தமாக சிரித்தார்.பின்னர் "மஹர் கொடுத்தால்தானே எடுப்பதற்கு......" என்றவர் கொஞ்சம் சீரியஸாகி ஆழமான குரலில் இங்கே நாம் எதிர்நோக்கும் பிரச்சினை வேறு விதமானது.விவாகரத்துக் கோரும் மாப்பிள்ளை மாருக்கு கொடுத்த சீதனத்தை பெண் வீட்டார் திருப்பி எடுக்க நாயாய் சீரழிகின்றனர்." என்றார்.

இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

 உமராஹ் பின்த் அப்துர் ரஹ்மான்  (ரஹ்) அல்லது உர்வா இப்னு ஜுபைர்  (ரஹ்) ஆகியோர் நிச்சயமாக புனித அல் குர் ஆனுக்கு முரணாக எதுவுமே சொல்லி இருக்கப் போவதில்லை.

ஏனெனில், அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது பாசறையில் வளர்ந்தவர்கள்.

அவர்களில் குற்றம் காணும் செய்கை நாம் அறியாமல் அவர்களில் அவதூறு காணும் செயல் விளைவில் நம்மை கொண்டு நிறுத்தும்.

ஆனால்,இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் பெயரை உபயோகித்து செய்த தகிடு தத்தங்களுக்கு நாம் துணை நிற்காத செயலின் செயல் விளைவுகள் தனித்துவம் நிறைந்த அந்த புண்ணிய சீலர்களின் மீது பூசப்பட்டிருக்கும் அவதூறுகளை தூய்மைப் படுத்த துணை நிற்கும்.

இந்த ஒப்பீட்டாய்வுகள் மூலமாக ஹிஷாம் இப்னு உர்வா  (ரஹ்) அறிவித்ததாக கூறப் படுகின்ற  இந்த ஹதீஸ்கள் அனைத்தும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணக் கதைக்கான ஆதார பூர்வமானவைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகின்றது.

இதனைக் கேட்டவுடன் நமக்கு முன்னால் அமர்ந்திருந்த  நமது நண்பர் தனது செல் பேசியை மீண்டும் எடுத்து அதே இஸ்லாமிய அறிஞரிடம் நாம் சொன்ன செய்திகளை அப்படியே இடைக்கிடை சில கேள்விகளை நம்மிடம் கேட்டு நாம் சொன்ன விடைகளுடன் ஒப்புவித்தார்.

எங்களது கருத்துக்களைக் கேட்ட அந்த அறிஞர் நமது நண்பரிடம் சொன்ன விடயங்கள் அனைவரையும் நிமிடத்துக்கு வாயடைத்துப் போக செய்யும்.

அவர் அப்படி என்னதான் சொன்னார்?

இன்ஷா அல்லாஹ்- அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் அடுத்த பதிவில் தொடரும்.




No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad