அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, July 31, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

அத்தியாயம் நான்கு........அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

சென்ற பதிவில்.......நான் என்னுடைய நண்பருக்கு இவற்றை விளக்கியவுடன் அவர் மீண்டும் அந்த முஸ்லிம் அறிஞருக்கு செல்பேசி அழைப்பை எடுத்து நான் சொன்ன விடயங்களை அக்குவேறு ஆணிவேராக விளக்கினார்.

அவரது விளக்கங்களைக் கேட்ட அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் நகைப்புக்கிடமானவை.


அப்படி அவர் என்னதான் சொன்னார்?


"உங்களது நண்பர் சொல்லும் விடயங்கள் அனைத்தும் உண்மையானவை.ஆனால்,அவற்றை நாம் பிரசித்தமாக பேசக் கூடாது.அதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக் கொடுக்கவும் கூடாது. மீறி நாம் அப்படி செய்தால்,அது இஸ்லாத்துக்கு இழுக்கை கொண்டுவரும்.ஆகவே,இந்த விடயங்களில் நாம் மௌனம் காப்பதே சிறந்தது."

அந்த அறிஞரின் நிலையும் அவர் சொல்லுவதும் சரியானதா?

இல்லை....தவறானது! மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும்கூட .!!

நாம் சர்ச்சைக்குரிய இந்த விடயங்களைத் தெளிவு படுத்தும் செய்கையில் புனித இஸ்லாத்தின் கௌரவமும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது கண்ணியமும் காக்கப் படுகின்ற செயல் விளைவுகளுக்கு களம் அமைக்கப் படுகிறது.

அதற்கு மாற்றமாக இந்தத் தவறான செய்திகளைக் கேட்டு மௌனித்துப் போகும் செய்கையானது இத்தகையத் தவறான செய்திகளுக்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொள்ளும் செயல் விளைவுகளுக்கு காரணமாக அமைந்துப் போகிறது.

அதனால் நாம் அறிந்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துவது அத்தியாவசியமாகிறது.நான் சொன்னதைக் கேட்ட நண்பர் எனது கூற்றை ஏற்றுக் கொண்டார்.

திருமணத்தின் பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது சரியான வயது ஆறு அல்ல என்பதற்கு வேறு ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா?என்று ஆவலுடன் திரும்பவும் கேட்டார்.

நான் அவருக்கு சொன்ன பதில் இதுதான்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது ஆறு அல்ல என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாற்று நூல்களிலே பதிவாகி இருக்கின்றன.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பத்ர யுத்தத்திலும் உஹத் யுத்தத்திலும பங்கேற்றிருக்கும் சம்பவம் சம்பந்தமான செய்திகள் புஹாரி , முஸ்லிம் கிரந்தங்களில் பரவலாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

அனஸ் (ரலி) அறிவிப்பதாக புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் பதிவாகியிருக்கும் ஒரு ஹதீஸ் பதிவில் "உஹத் யுத்த தினத்தில் மக்களால் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை சுற்றிலும் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலைமை உருவானது. அப்பொழுது நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் அவர்களது ஆடைகளை நிலத்தில் இழு பட்டு இடைஞ்சலாவதை விட்டும் தவிர்ப்பதற்காக கொஞ்சம் உயர்த்திப் பிடித்தவர்களாக ஓடியோடி காயப்பட்டவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்."

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தான் பங்கேற்ற அனைத்து யுத்தங்களிலும் பதினைந்து வயதுக்குக் குறைவானவர்கள் யுத்தத்தில் பங்கு கொள்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்களது ஒரு அறிவிப்பு புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் இப்படி பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

"இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் 'எனக்கு பதின் நான்கு வயதாக இருந்தக் காரணத்தினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் எனக்கு உஹத் யுத்தத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கவில்லை.ஆனால், கந்தக் யுத்தத்தின் பொழுது எனது வயது பதின் ஐந்து. நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கந்தக் யுத்தத்தில் பங்கேற்க என்னை  அனுமதித்தார்கள்."

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி முதலாம் வருடம் நடந்த பத்ர் யுத்தத்திலும் ஹிஜ்ரி இரண்டாம் வருடம் நிகழ்ந்த உஹத் யுத்தத்திலும்  பங்கேற்றதாக பதிவாகியிருக்கும் பதிவுகள் அனைத்தும் அவர் அப்பொழுது ஆறு அல்லது ஏழு அல்லது ஒன்பது வயது சிறுமியாக இருந்திருக்க மாட்டார் என்பதற்கு வலுவான ஆதாரமாக இருப்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

அநேகமான அறிவிப்புக்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹிஜ்ரதுக்கு முன்னர் ஏழு அல்லது எட்டாம் வருடம் பிறந்ததாக குறிப்பிடப் பட்டிருப்பதைக் கவனிக்க முடியும்.

(அவ்விதமான அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொண்டுதான் அன்னையவர்களின் திருமணத்தின் பொழுது அன்னையவர்களின் வயது ஆறு அல்லது ஏழு என்ற தவறான முடிவுக்கு வந்த அநேக அறிஞர்கள் அவ்விதமாகவே கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.)

புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் பதிவாகியிருக்கும் ஒரு ஹதீஸ் பதிவு அன்னை ஆயிஷா (ரலி அவர்கள் அறிவித்ததாக இப்படி பதிவாகி இருக்கிறது.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'அல் குர்ஆனின் ஸூரா அல் கமர் அருளப்படும் பொழுது நான் இளம் பெண்ணாக இருந்தேன்.'

 இளம் பெண் என்ற அர்த்தத்தைத் தரும் 'ஜாரியாஹ்' என்ற அரபிப் பதம் புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை உங்களது அவதானத்துக்கு கொண்டு வருகிறேன்.

அல் குர்ஆனின் 54 வது அத்தியாயமான சூரா அல் கமர் ஹிஜ்ரத்துக்கு முன்னர் எட்டாம் வருடம் நுபுவ்வத்துடைய இரண்டாம் வருடம் அருளப்பட்டிருப்பதாக அல் குர் ஆன் விரிவுரைக் கிரந்தங்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

இனி இந்தக் கணக்கை கொஞ்சம் கவனித்துப் பார்ப்போம்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடைபெறும் பொழுது அன்னையவர்களின் வயது ஆறாக இருந்திருந்தால் சூரா அல் கமர் அருளபடுகின்ற பொழுது அன்னையவர்கள் பிறந்தும் இல்லை. அன்னையவர்களின் வயது ஒன்பதாக இருந்திருந்தால் சூரா அல் கமர் அருளப்படும் பொழுது அவர் அப்பொழுதுதான் பிறந்திருக்கும் பச்சிளம் பாலகர்.

அராபிய மொழி வழக்கில் பச்சிளம் பாலகர்களுக்கு 'சிபியாஹ்' என்ற சொல்லாடல் வழக்கில் இருக்கிறது.

ஆனால், புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் சூரா அல் கமர் அருளப்பட்ட பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 'ஜாரியாஹ்'- இளம் பெண் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.ஆகவே, சூரா அல் கமர் அருளப்பட்ட பொழுது அன்னையவர்கள் 'ஜாரியாஹ்' -இளம் பெண்ணாக இருந்திருக்கிறாரே தவிர 'சிபியாஹ்' என்று குறிப்பிடப் படுகின்ற பச்சிளம் பாலகர் பிராயத்தில் இருக்கவில்லை. ஆகவே,சூரா அல் கமர் அருளப்படும் பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆறு வயதுக்கும் பதின் மூன்று வயதுக்கும் இடைப் பட்ட வயதில் இருந்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் அன்னையவர்களின் திருமணம் பதின்னான்குக்கும் இருபத்தொரு வயதுக்கும் இடையில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் பதிவாகியிருக்கும் இந்த ஹதீஸ் அன்னையவர்களின் திருமண வயதில் இருக்கும் முரண்பாடுகளை மீண்டுமொரு முறை புலப்படுத்தி நிற்கின்றது.

அக்கால அராபிய வழக்கில் குழந்தைகளுக்கு வேறாக சில சொற்களும் கன்னிப் பெண்ணுக்கென்று சில சொற்களும் கன்னிக் கழிந்தப் பெண்ணுக்கென்று சில சொற்களும் உபயோகத்தில் உபயோகிக்கப் பட்டு வந்திருக்கின்றன.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களது முஸ்னத் கிரந்தத்தில் பதிவு செய்திருக்கும் இந்தப் பதிவைக் கொஞ்சம் கவனியுங்கள்.

"அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ஸலாமுன் அலைஹா - அவர்கள் மரணித்ததன் பின்னர் கஹுலாஹ் என்ற பெண்மணி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களை மறுமணம் செய்துக் கொள்ளுமாறு வேண்டி நின்றார்கள்.
அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அந்தப் பெண் என்ன நினைக்கிறார் என்று வினவினார்.

அதற்கு அந்தப் பெண்மணி "நீங்கள் ஒரு கன்னிப் பெண்ணை மணந்துக் கொள்ளுங்கள்.அல்லது,திருமணமாகி விதவையான பெண்ணென்றாலும் மணந்துக் கொள்ளுங்கள்." என்றார்.

கஹுலாஹ் என்ற அந்தப் பெண் கன்னிப் பெண் என்ற சொற்பிரயோகத்திற்கு 'பிக்ர் ' என்ற சொல்லையும் திருமணமான பெண்ணைக் குறிக்கும் சொல்லுக்கு 'தய்யிப்'என்ற சொல்லையும் உபயோகித்து இருக்கறார்.

அவரது கூற்றைக் கேட்ட நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அந்தப் பெண்ணின் மனத்தில் இருக்கும் கன்னிப் பெண் யார் என்று கேட்க அந்தப் பெண் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரை சொல்லியிருக்கிறார்.
ஆதாரம்:முஸ்னத் - இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
பாகம்: 6 - பக்கம் : 210.

அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற நிபுணர்கள் அரபு மொழி வழக்கில் 'பிக்ர்' என்ற சொற்பிரயோகம் பச்சிளம் பாலகர்களுக்கோ அல்லது ஒன்பது வயதுக் குழந்தைகளுக்கோ உபயோகப் படுத்தப் படுவதில்லை என்பதை நன்கறிவார்கள்.

'ஜாரியாஹ்' என்ற அராபிய சொல் துள்ளி விளையாடும் இளம் பெண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.

'பிக்ர்' என்ற அராபிய சொல் திருமணமாகாத கன்னிக் கழியாத இளம் பெண்ணைக் குறிக்கப் பயன் படுகிறது.

ஆகவே, இந்த அராபிய சொற்பதங்கள் ஒருபோதும் ஒன்பது வயது சிறுமியைக் குறிக்க அராபிய  வழக்கில் உபயோகிக்கப் படவில்லை என்பதை அவதானிக்கவும்.

இந்த ஹதீஸின் மூலமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணல் நபி ஸல் அவர்கள் திருமணம் புரியும் பொழுது திருமணம் ஆகாமல் கன்னிக் கழியாமல் இருக்கும் இளம் பெண்ணாக இருந்திருக்கிறார் என்ற உண்மையை தெளிவு படுத்தி நிற்பதை உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

அன்னையவர்களின் திருமணத்தின் பொழுது அவர்களது வயது பதினெட்டு என்றோ அல்லது இருபது என்றோ அறுதியிட்டுக் கூற முடியாது.

திருமணம் செய்யக் கூடிய இளம் பெண்ணாக இருந்தார் என்பது மட்டும் நிச்சயம்.

நாம் சொன்னதைக் கேட்ட நண்பர் மௌனித்து ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துப் போனார்.
No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad