அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 30, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!

அத்தியாயம் மூன்று......

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!



"..........ஒப்பீட்டாய்வுகள் மூலமாக ஹிஷாம் இப்னு உர்வா அறிவித்ததாக கூறப் படுகின்ற  இத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகின்றது."

நாம் சொன்னதைக்  கேட்டவுடன் நமது நண்பர் தனது செல் பேசியை மீண்டும் எடுத்து அதே இஸ்லாமிய அறிஞரிடம் நாம் சொன்ன செய்திகளை அப்படியே இடைக்கிடை சில கேள்விகளை நம்மிடம் கேட்டு நாம் சொன்ன விடைகளுடன் ஒப்புவித்தார்.

எங்களது கருத்துக்களைக் நமது நண்பர் சொல்லக் கேட்டு அந்த அறிஞர் நமது நண்பரிடம் சொன்ன விடயங்கள் அனைவரையும் நிமிடத்துக்கு வாயடைத்துப் போக செய்யும்.

அப்படி என்னதான் அவர் சொன்னார்?

"இமாம் புஹாரி,இமாம் தபாரி,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்,  இமாம் ஹஜர் அல் அஸ்கலானி,ஆகிய அனைத்து இமாம்களும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்   அவர்களினதும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் திருமணம் நடைபெற்ற பொழுது அன்னையவர்களின் வயது ஆறு என்றும் அவர்கள் ஒன்பது வயதில் வீடு கூடினார்கள் என்றும் ஒருமித்து அறிவித்திருக்கிறார்கள்."என்று கூறிவிட்டு "உங்களது நண்பர்கள் இந்த அறிஞர்களை விடவும் இந்த விடயத்தில் பேரறிவு பெற்றிருக்கிறார்களா?...என்று திருப்பிக் கேட்கிறார்" 
என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இதற்கு எங்களது பதில் என்ன?

நாம் நமது நண்பருக்கு சொன்ன பதில் இதுதான்.


இமாம் தபாரி, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,இப்னு ஸாத் ஆகியோரது கிரந்தங்களில் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ் ) அறிவித்ததாக பதிவு செய்யப் பட்டிருக்கின்ற ஹதீஸ் பதிவுகள் ஒருமித்த நிலையில் இப்படி பதியப் பட்டிருக்கின்றன.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருமணத்திற்கு நிச்சயம் செய்யும் பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது ஆறு. நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னையவர்களுடன் வீடு கூடும் பொழுது அன்னையவர்களின் வயது ஒன்பது."



என்றாலும், இமாம் தபாரி ஹசரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக குறிப்பிடும் இன்னுமொரு பதிவு இந்த அறிவிப்புக்கு நேர் முரணாக ஒலித்துக் கொண்டிருப்பதை உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அதில் அவர் "இஸ்லாத்துக்கு முந்திய அறியாமைக் காலத்தில் ஹசரத் அபூபக்கர் (ரலி) அவர்களது இரண்டு மனைவிகளுக்கு அவரது நான்கு குழந்தைகளும் பிறந்தார்கள்." என்று குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: தபாரி- தாரிகுல் உமாம் வல் மா முல்க் -பாகம்: நான்கு பக்கம் 50

ஒரு வாதத்திற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்களது நிச்சயதார்த்தம் இமாம் அல் தபாரி குறிப்பிடுவது போல அவர்களது ஆறாவது வயதில் கி.பி.619 இல் நடந்ததாக வைத்துக் கொள்வோம்.

அதே போன்று அன்னையவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் தனது ஒன்பதாவது வயதிலிருந்து ஒன்றாக சேர்ந்து வாழத் துவங்கினார் என்றும் வைத்துக் கொள்வோம். அதன்படி அந்நிகழ்வு கி.பி.622இல் நடந்தேறுகிறது.

அவ்வாதத்தின் முடிவின் பிரகாரம் அன்னையவர்கள் கி.பி.613 இல் பிறந்து இருக்க வேண்டும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களுக்கு நபித்துவம் கி.பி. 610இல் அன்னாரது நாற்பதாவது வயதில் கிடைக்கத் துவங்குகிறது.

நாம் கவனித்த ஹதீஸ் அறிவிப்புக்களின் பிரகாரம் அன்னையவர்கள் நபித்துவத்தின் பின்னர் பிறந்திருக்கிறார்.

ஆனால்,இமாம் அல் தபாரியின் அறிவிப்பின் பிரகாரம் அன்னையவர்கள் நுபுவ்வத்துக்கு முன்னரான ஐயாமுல் ஜாஹிலியாக் காலத்தில் பிறந்து இருப்பதாக கூறியிருக்கிறார்.அதன்படி அன்னையவர்கள் கி.பி.610க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.

அன்னையவர்கள் கி.பி.610க்கு முன்னர் பிறந்ததாக நாம் கருதினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் பொழுது அவர்களின் வயது பன்னிரெண்டு அல்லது பதின் மூன்றாகவும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னையவர்களுடன் சேர்ந்து வாழத் துவங்கும் பொழுது அன்னையவர்களின் வயது பதினைந்து அல்லது பதினாறாகவும் இருந்திருக்க வேண்டும்.

இமாம் அல் தபாரி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வயது சம்பந்தமாக முரண்பட்ட இரண்டு கருத்துக்களை தனது கிரந்தங்களில் பதிவு செய்திருக்கிறார்.

நுபுவ்வத்துக்கு முன்னர் பிறந்ததாக அறிவிக்கப் படுகின்ற அறிவிப்பு அல் குர் ஆனின் திருமண வயது சம்பந்தமான ஒழுக்க விழுமியங்களுடன் முரண்படாமல் இருக்கிறது.

நுபுவ்வத்துக்கு பின்னர் பிறந்ததாக அறிவிக்கப் படுகின்ற அறிவிப்பு அல் குர் ஆன் மனித சமூகத்தில் ஏற்படுத்த விளைகின்ற ஒழுக்க விழுமியங்களுக்கு முரண்பட்டு ஒலிக்கிறது.

இந்தப் பதிவுகள் மூலம் இமாம் அல் தபாரி (ரஹ் ) அவர்களுக்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது சம்பந்தமான கருத்தில் உறுதியான முடிவு எடுக்க முடியாடிருந்திருப்பது போன்றதொரு பாணி புலப்படுகிறது.

இதில் நாம் எந்தப் பதிவை சரியானப் பதிவு என்று ஏற்றுக் கொள்வது?

புனித அல் குர் ஆனுக்கு முரண்படாத பதிவையா அல்லது அல் குர் ஆனுக்கு முரண்படுகின்ற பதிவையா?

இனி, இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் தனது அல் இஸாபா பி தமிய்யிழில் சஹாபா என்ற கிரந்தத்தில் "அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்   அவர்களுக்கு முப்பத்து ஐந்து வயதாக இருக்கும் பொழுது பிறந்தார்.அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விடவும் ஐந்து வயது மூத்தவர்" என்று பதிவு செய்திருக்கிறார்.
ஆதாரம்:அல் இஸாபா பி தமிய்யிழில் சஹாபா- இப்னு ஹஜர் அல் அஸ்கலானி
பாகம் :4  பக்கம 377

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களது கூற்றின் பிரகாரம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நாற்பதாவது வயதில் பிறந்திருக்கிறார்.

அன்னையவர்களை நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்   அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் வருடம் திருமணம் செய்தார்கள் என்று இமாம்  இப்னு ஹஜர் அல் அஸ்கலானி குறிப்பிடும் குறிப்பு சரியானதாக இருக்கும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட  அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணத்தின் பொழுது அன்னையவர்களின் வயது பன்னிரெண்டாக இருந்திருக்க வேண்டும்.

ஒன்றுக்கொன்று முரண் பட்ட இத்தகையத் தகவுகள் அன்னையவர்களின் திருமண வயதில் அக்கால அறிஞர்களுக்கு இருந்த குழப்பத்தை தெளிவு படுத்தி நிற்கின்றன.

இமாம் இப்னு கதீர் தனது அல் பிதாயா வல் நிஹாயாவில் கேட்பவர்  விழியுயர்த்தும் வித்தியாசமான இன்னுமொரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அப்படி அவர் என்னதான் சொல்கிறார்?

"அன்னை அஸ்மா (ரலி) அவர்களை விடவும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்  10 வருடங்கள் இளையவராகும்."
ஆதாரம்: அல் பிதாயா பிதாயா பிதாய வல் நிஹாயா பாகம் : 8  பக்கம் : 371

"அஸ்மா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 73 ஆம் வருடம் அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) கொலை செய்யப் பட்ட வருடம் உயிருடன் இருந்தார்கள்.அந்த சம்பவம் நடை பெற்றதன் பின்னர் ஐந்து, அல்லது பத்து,அல்லது இருபது அல்லது நூறு நாள்களின் பிறகு அவர் மரணித்தார்.அவரது மரணத்தின் பொழுது அவர் நூறு வயது மூதாட்டியாக இருந்தார்."
ஆதாரம்: அல் பிதாயா வல் நிஹாயா பாகம் : 8  பக்கம் : 372

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களது ஒரு பதிவில் அன்னை அஸ்மா சம்பந்தமாக குறிப்பிடும் குறிப்பு இப்படி ஒலிக்கிறது. "அஸ்மா (ரலி) நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். அவர் ஹிஜ்ரி 73 அல்லது 74 இல் மரணமானார்.
ஆதாரம்: தக்ரிபு'ல் தெஹ்சேப் - இப்னு ஹஜர் அல் அஸ்கலானி -

அநேகமான வரலாற்று ஆய்வாளர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்னை அஸ்மா (ரலி) அவர்களைவிடவும் பத்து வருடம் இளமையானவர் என்று குறிப்பிடுகிறார்கள்.அன்னை அஸ்மா (ரலி)  அவர்கள் ஹிஜ்ரத் வரும் பொழுது அவர்களது வயது 27 அல்லது 28.

அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் அநேகரது கூற்றுப் பிரகாரம் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 73 இல் மரணமாகும் பொழுது அவர்களது வயது 100. அன்னை அஸ்மா (ரலி) அவர்களை விடவும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பத்து வருடம் இளையவர்.

அவ்வறிவிப்புக்களின் பிரகாரம் ஹிஜ்ரி முதலாம் வருடம் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் வரும் பொழுது அன்னாரது வயது 27 ஆக இருந்திருக்கும்.அப்படியென்றால் ஹிஜ்ரி முதலாம் வருடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது 17 அல்லது 18 ஆக இருந்திருக்க வேண்டும்.

அதன்படி அன்னை ஆயிஷா (ரலி) யவர்களுக்கு அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களுடன் திருமணம் நிச்சயமாகும் பொழுது அவர்களது வயது 18 அல்லது 19 ஆக இருந்திருக்கும்.அவர்கள் அண்ணலாருடன் ஒன்றாக வாழத் துவங்கும் பொழுது அவர்களது   வயது 19 அல்லது 20 ஆக இருந்திருக்கும்.

அக்கால இஸ்லாமிய அறிஞர்களது பதிவுகளை புனித அல் குர்ஆனுடன் ஒப்பு நோக்கி ஆயும் பொழுது அன்னையவர்களின் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது என்றொலிக்கும் கூற்று அல் குர்ஆனின் கட்டளைக்கு முரண்படாமல் இருப்பதை கவனிக்கவும்.

இந்தத் தகவுகள் அக்கால அறிஞர்களிடையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது சம்பந்தமாக இருந்த குழப்பங்களையும் தெளிவின்மையையும் தெளிவு படுத்தி நிற்கின்றன.

இந்தத் தெளிவின்மையான கருத்துக்கள் இன்னுமொரு உணமையைத் தெளிவு படுத்தி நிற்கின்றன.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணவயதை தமது கிரந்தங்களில் குறிப்பிடுகின்ற இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களது இன்னுமொரு கிரந்தத்தில் அதற்கு நேர் மாற்றமான கருத்துக்களையும் மறக்காமல் பதிவிட்டு வைக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்னவென்ற ஆய்வு மெய் சிலிர்க்கும் இன்னுமொரு உண்மையை புலப்படுத்துகிறது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது குழந்தைத் திருமண வயது சம்பந்தமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அப்போதைய ஆட்சியாளர்கள் தமது அற்ப ஆசைகளை நிவர்த்தி செய்யக் கூடிய சட்டங்களை இஸ்லாமிய சரிஆ சட்டங்களாக வகுத்து செயல் படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.(இப்போதைய மத்திய கிழக்கில் நடைமுறையில் இருக்கின்ற அநேகமான சட்டங்கள் இந்த யூகத்தை உறுதி செய்துக் கொண்டிருக்கிறதை யாரும் மறுக்கப் போவதில்லை)

ஏனெனில், புனித இஸ்லாத்தில் அல் குர் ஆனுக்கு முரணான அனைத்து இஸ்லாமிய சட்டங்களினதும் ஆதார தகவுகளாக இட்டுக் கட்டப் பட்ட ஹதீஸ்கள் இருப்பதை நுணுக்கமாக ஆராயும் ஒருவருக்கு புரிந்துப் போகும்.

இவற்றை நன்கு அறிந்திருந்த அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் தமது கிரந்தங்களில் தாம் குறிப்பிடப் பட்டிருக்கின்ற தகவுகள் புனித அல் குர் ஆனுடன் முரண்படுகின்ற தருணங்களில் தமது கருத்துக்களை புறந் தள்ளிவிட்டு புனித அல் குர் ஆனின் கட்டளையை ஏற்று நடக்குமாறு அறிவுறித்தி சென்றிருக்கிறார்கள்.

நான் என்னுடைய நண்பருக்கு இவற்றை விளக்கியவுடன் அவர் மீண்டும் அந்த முஸ்லிம் அறிஞருக்கு செல்பேசி அழைப்பை எடுத்து நான் சொன்ன விடயங்களை அக்குவேறு ஆணிவேராக விளக்கினார்.

அவரது விளக்கங்களைக் கேட்ட அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் நகைப்புக்கிடமானவை.

அப்படி அவர் என்னதான் சொன்னார்?

அடுத்த பதிவில் அதனைக் கவனிப்போம்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad