அஹ்லுல்பைத் Headline Animator

Monday, August 12, 2013

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?


சில தினங்களுக்கு முன்னர் ACJU தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி வானொலியில் இம்முறை கடும் கண்டனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் களம் அமைத்த ஷவ்வால் தலை பிறை சம்பந்தமாக உரையாற்றிய தனது பக்க நியாயங்களை விவரித்த உரையின் தொணி இப்படி ஒலித்தது.



"கிண்ணியாவில் உலமாக்கள் அறிவித்த பிறை சம்பந்தமான அறிவிப்பை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.எங்களது இஜ்திகாத் பிரகாரம் நாம் நோன்பு நோற்க பத்வா வழங்கி இருக்கிறோம்.கிண்ணியா உலமாக்களின் இஜ்திகாத் பிரகாரம் அவர்கள் பெருநாள் கொண்டாட பத்வா வழங்கி இருக்கிறார்கள்.இந்த இஜ்திகாத்களில் ஏதாவது பிழை இருந்தால் அதனைப் பெரிது படுத்தத் தேவையில்லை.ஏனெனில், அந்தப் பிழைக்கு நாம் இஜ்திகாத் செய்த காரணத்தை முன்னிறுத்தி அல்லாஹ் ஒரு நன்மையை வழங்குவான்.........."

தலைமைத்துவங்கள்  தீர்மானிக்கின்ற சில முடிவுகள் சட்டென்று தடம் பிறழ்ந்து தவறாகிப் போனால் அந்தத் தவறுகளுக்கு இஜ்திகாத் முலாம் பூசி விளைவுகளின் செறிவைக் குறைப்பதுதான் இஸ்லாமிய இஜ்திகாத்தின் நோக்கம் என்பது போல அந்த உரை இருந்தது.

அதாவது , அவர்கள் இஜ்திகாத் செய்து எடுத்த முடிவுகளின் செயல்கள் கொண்டு தரும் விளைவுகளில் இருந்து வருகின்ற தவறுகளில் இருந்து தப்புவதற்கான வழிகளை 'இஸ்லாத்தின் ' பெயரால் நியாயப் படுத்தி அவர் உரையாற்றினார்.

அவரது கூற்று நியாயமானதா?

இந்தோனேசியாவின் சுமேத்ரா தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கம் பூதாகரமான பெரும் சுனாமி பேரலையை ஏற்படுத்தி ஆசியா கண்டத்தைக் காவு கொண்ட செய்தி நமக்கு தெரிந்தது தானே?

அந்த நில நடுக்கம் மட்டும் ஏற்படாது இருந்திருந்தால் சுனாமியும் இல்லை பேரழிவுகளும் இல்லையே?

சுனாமி நம்மை வந்து தாக்கும் வரை அது சுனாமி என்று கூட நமக்குத் தெரியாதே?

சுனாமி ஏற்படுத்திய அதிர்ச்சிகரமான நீங்கா வடுக்கள் சுனாமி பற்றிய அறிவை தேடுவதில் எம்மை கொண்டு சென்றதில் ஒரு தவறும் இல்லையே?

சுனாமி தினத்தின் அமைதியான அதிகாலைப் பொழுதில் எனது நண்பர் ஒருவர் அதிகாலை எழுவதற்காக வைத்த அலாரம் வேலை செய்ய வில்லை.

அவர் அன்றைய தினம் அவரது மனைவி பிள்ளைகளுடன் ரயிலில் கண்டி செல்ல தீர்மானித்து இருந்தார்.

அவருக்கென்று சொந்த வாகனம் இருந்தது.

எனினும் அவரது குழந்தைகளுக்கு ரயிலில் போக வேண்டும் என்ற ஆசை.

நம்பி இருந்த அலாரம் காலை வாரி விட்டதால், எழுந்து தயாராவதற்கு சுணங்கி விட்டது.

அதனால், அவர் பதறிக் கொண்டு ரயில் நிலையம் வர துரதிர்ஷ்டவசமாக கண்டி புகையிரதம் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுப் போய் விட்டிருந்தது.

எல்லோருக்கும் ஏமாற்றம்.

பிள்ளைகளின் ரயில் பயண ஆசையை என்ன செய்வது?

அடுத்த பிளட் பாரத்தில் மாத்தறை செல்லும் ரயில் காத்துக் கொண்டிருந்தது.

உடனே தனது முடிவை மாற்றிக் கொண்ட நமது நண்பர் உடனே மாத்தறை செல்லும் புகையிரதத்துக்கு அனுமதி சீட்டை எடுத்து குழந்தைகளுடனும் அன்பு மனைவியிடனும் மாத்தறை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணமானார்.


கொடூரமான சுனாமி பேரலை அந்த ரயிலைக் காவு கொள்ள வெறியுடன் வந்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்த நினைத்த அவரோ, குதூகலத்துடன் அமைதியான கடலை ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகளோ அறியவில்லை.

இது பிறிதொரு கதை.

எங்களது இன்னுமொரு நண்பர் இருந்த கூலி வீடு வெலிகமை கடற்கரை அருகே பளிச்சென கடலை எதிர்த் தாற்போல எதுவித பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது.

தந்தையை இழந்த அந்தக் குடும்பத்தில் அவரது தங்கைமார்களும் , வயதான அவரது தாயாரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள்.

சுனாமி விழுங்கி ஏப்பமிட்ட அநேக வீடுகளில் அவரது வீடும் ஒன்று.

சுனாமியின் கோரத் தாண்டவத்தை அறிந்ததும் நாம் அந்த வீட்டில் இருந்த நண்பரின் தங்கை மார்களுக்காகவும் வயதான அவரது தாயாருக்காகவும்  வருந்தினோம்.

சுனாமி அனர்த்த உதவிக்கு கிழக்கிலங்கையை நோக்கி நாம் போனதால் வெலிகமை செய்திகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

சுனாமி காவு கொண்டு ஒரு மாதத்தின் பின்னர் எங்களது நண்பரை எதேச்சையாக கொழும்பில் கண்டதும் நெஞ்சில் குற்ற உணர்வு நெருட "நலமா?" என்றேன்.  

"அல்லாஹ்வின் அருளால் நலம் " என்றார்.

அவரது தாயாரைப் பற்றியும் தங்கைமார்களைப் பற்றியும் கேள்விக் கேட்க தயக்கமாக இருந்தது. 

ஆனாலும் நண்பர் உற்சாகமாக அல்லாஹ்வின் அருளைப் பற்றி பேசத் தொடங்கினார்.

சுனாமிக்கு  ஒரு வாரத்துக்கு  முன்னர் நண்பரின் குடும்பத்தவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் பலவந்தமாக பொலிசாரின் துணைக் கொண்டு நண்பரின் தாயாரையும், அவரது சகோதரிகளையும் வெளியேற்றி இருக்கிறாராம்.

வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட அவரது குடும்பத்தினர் தொலை தூரத்தில் இருந்த ஒரு உறவினர் வீட்டில் தஞ்சமடைந்து இருக்கிறார்கள்.

ஒரு வாரத்தின் பின்னர் நிகழ இருக்கின்ற பயங்கரத்தை அறியாத அந்த வீட்டின் உரிமையாளர்கள் நண்பரின் குடும்பத்தினர் இருந்த வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள்.

சுனாமி பேரலை அந்த வீட்டை காவு கொள்ளும் பொழுது அந்த வீட்டில் அதன் உரிமையாளர் அவரது குடும்பத்தவர்கள் சகிதம் இருந்து இருக்கிறார்.

நண்பரின் குடும்பமோ சுனாமி பேரலை எட்டாத இன்னுமொரு இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருந்து இருக்கிறார்கள்.

நண்பர் சொல்லுவது சரி.

அல்லாஹ்வின் அருள் அபாரமானது.

இந்த இரண்டு கதைகளும் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

மாத்தறை ரயிலில் ஏறிய நண்பரின்   குடும்பத்தினர் சுணங்காமல் சரியான நேரத்துக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தால் அவர் கண்டி சென்ற ரயிலில் குடும்பத்தினருடன் இருந்திருப்பார்.

அவரது தவறான தீர்மானத்துக்கு என்ன காரணம் என்று பார்த்தால், சரியான முறையில் வேலை செய்யாத அவர் வாங்கிய வேலை செய்ய தவறிய  அலாரத்தை சொல்லலாம்.

அந்த அலாரத்தை விற்ற நிறுவனத்தை சொல்லலாம்.

அந்த அலாரத்தை செய்த வேலையாட்களை சொல்லலாம்.

அதனைப் பரிசோதித்த தரப் பரிசோதகரில் தொடங்கி அந்த நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் வரையும்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சொல்லலாம்.

நாம் அலட்சியமாக கருதுகின்ற ஒவ்வொரு செயலும் எதிர்காலத்தில் நன்மையான அல்லது தீமையான ஒரு எதிர் விளைவுக்கு காரணமாக அமைந்து போகின்றன. 

அடுத்த கதையில் நண்பரின் தாயாரையும் அவரது சகோதரிகளையும் வீட்டை விட்டும் துரத்த வேண்டும் என்று யாரோ எடுத்த தவறான தீர்மானம் அந்த வீட்டு உரிமையாளர்களை காவு கொண்டு நண்பரின் வீட்டார்களைப்   பாதுகாத்திருக்கிறது.

அமைதியான  குளத்தில் விழுகின்ற ஒரு சிறு கல் சின்ன சின்ன சிறு அலைகளை உருவாக்கி அந்த சூழலில் ஒரு மாறுதலை உண்டாக்குகிறது.

கடந்தக் காலங்களில் நாம் அனுமதித்த சில செயல்கள் எங்களது இப்போதைய விளைவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

சிறிது காலம் சென்று சூழ்நிலைகளில் நிகழும் ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டிய பிரிதொன்றுடன் வேறு படுகின்றது.

நாம் அலட்சியப் படுத்தும் ஒரு சின்ன நிகழ்வின் தொடர் விளைவு உலகின் போக்கையே மாற்றும் வலிமை கொண்டதாக இருக்கும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இனி, இந்த வருட ஷவ்வால் மாத தலைப் பிறை 'இஜ்திகாத்' முடிவின் 'பத்வா' வின் பின்னரான செயல் விளைவுகள் என்ன?

ACJU வானியல் நிபுணர்களின் கூற்றுப் பிரகாரமும்,சர்வதேச வானிலை அறிஞர்களின் ஆய்வுகள் சொல்லும் தகவுகளின் முடிவுகளின் பிரகாரமும் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப் பிறை தெற்காசிய நாடுகளுக்குத் தெரியாது என்ற விடயம் நிஜமானது.

ஆனால், கிண்ணியாவில் பிறை தென்பட்டிருக்கிறது. இதுவும் நிஜமானது.

இந்த இரண்டு குழுவினரில் யார் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வது?

ஆச்சரியமாக இந்த இரண்டு தரப்பினரும் சொல்லுவது உண்மை என்ற விடயம் உங்களை விழி சுருங்க வைக்கும்.

இவ்வருட ஷவ்வால் தலைப் பிறை ஆறாம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை அஸ்தமனமான கதையை ACJU வானியல் அறிஞர்கள் குழு அவதானிக்கத் தவறிப் போனார்கள்.

அவர்கள் அதனை அவதானித்து இருந்தால் ஏழாம் திகதி புதன் கிழமை பெருநாள் தினமாக இருந்திருக்கும்.

கிண்ணியாவில் இருக்கும் உலமாக்களும் பொது மக்களும் ஷவ்வால் மாத இரண்டாம் பிறையின் அஸ்தமனத்தை புதன்கிழமை மாலை அவதானித்து இருக்கிறார்கள்.

இதுதான் நிஜத்தில் நடந்திருக்கிறது.

அதன் பின்னர் நடந்த விடயங்கள் உங்களுக்குத் தெரியும்.

எனவே, முஸ்லிம்களின் தலைவர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் நிறுவனத் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளின் விளைவுகளின் விளைவுகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது அந்நிறுவனத் தலைவர்கள் விட்ட தவறுகளில் நாம் பாடம் படித்துக் கொள்ள முடிகிறது.

இலங்கையில் இருக்கின்ற நமது தலைமைகள் எடுத்த அனைத்து முடிவுகளும் ஒன்றில் காகிதப்பூக்களாக மணம் பரப்ப மறுத்து வசீகரமாக காட்சியளிக்கின்றன. அல்லது, வெறும் கண்ணாடி வளையல்களாக நொறுங்கி உடைந்துப் போய் இருக்கின்றன.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad