அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, March 26, 2011

Peace TV - பிளவுகளின் பிறப்பிடம்
ஒற்றுமையான இந்தியாவை வேற்றுமையாக்க  துடிக்கும் தலைவர்கள்   
(கருத்து - அஹ்லுல்பைத்)அல் குரானின் உண்மையான கருத்துக்களுக்கு முரணாக மிகவும் தப்பான விதத்தில் அர்த்தம் கற்பிக்கின்ற வகையில் அதன் கருத்துக்கள் எங்களது முல்லாக்களால் சிதைத்து வேறு அர்த்தத்தில் திசை திருப்பப் பட்டு சிதைக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி திசை திருப்பப் பட்ட நிகழ்வுகள் எப்பொழுது தொடக்கி வைக்கப் பட்டன என்பதை எம்மால் சரியாக அனுமானிக்க முடியாமல் இருக்கின்றன.

எங்களது இஸ்லாமிய வரலாறு மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு அற்புதமாக சிதைக்கப் பட்டதுதான் இதற்கு காரணம்.

இவ்வாறு திசை தப்பிய கருத்துக்களை காவிக் கொண்டு எமது நிகழ் கால முல்லாக்கள் அத்தகைய துரோகிகளுக்கு இன்னமும் துணை  போவதுதான்   எங்களது சமூகத்தின் எழுச்சிக்கு எதிரான பெரிய சாபக் கேடு.

"காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.........."இப்படிஒரு மனித உரிமை மீறலை சூரா தௌபா    ஐந்தாம் ஆயத்தில் அல் குரான் சொல்கிறதாம்......?  

இது ஒரு இராணுவக் கட்டளை..! இதில் என்ன தவறு இருக்கிறது...???" டாக்டர்   சாகீர் நாயக் இது சரி என்கிற ரீதியில் சிரிப்புடன் சூளுரைக்கிறார்.

சூரா தௌபாவிலுள்ள ஐந்தாம் ஆயத்துக்கு இப்படியான தவறான ஒரு புது விளக்கத்தை சாகீர் நாயக்கின் இணையதளத்திலும், யூ டியூபிலும் எங்களால் பரவலாக காணமுடியும்.

அல் குரான் எல்லா காலத்துக்கும் பொருத்தமானது , அது எக்காலத்துடனும் முரண் படாதது என்று பெருமை பேசும் எங்களது உலமாக்கள் இந்த ஆயத்துக்கு சாகீர் நாயக் சொல்லும் கருத்து சரி என்று கண்டால் வகையாக மாட்டிக் கொண்டு விழி பிதுங்க வேண்டி வரும்.

சூரா தௌபா ஐந்தாம் ஆயத் அப்படி  என்னதான் சொல்கிறது?


"சங்கை மிக்க மாதங்கள் கழிந்து விட்டால், இணை
வைப்பாளர்களை நீங்கள் கண்ட இடங்களில்  கொல்லுங்கள்.இன்னும், அவர்களைப் பிடியுங்கள், 
அவர்களை முற்றுகையிடுங்கள் , ஒவ்வொரு பதுங்குமிடத்திலும்
அவர்களை குறி வைத்து உட்கார்ந்து இருங்கள்.
ஆனால், அவர்கள் பாவ   மன்னிப்புக் கோரி , தொழுகையை கடை பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவார்களானால் அவர்களுடைய
வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடயோனாகவும் இருக்கிறான்" 
(அல் குரான்  9  :  5  )  


அல்லாஹ்வே    விரும்பாத ஒரு காரியத்துக்கு - அவனது நல்  அடியார்களான எங்களது இளம் இளைஞர்கள் திசை திருப்பப் பட்டிருக்கும் பரிதாபமான காட்சி. 'டாமினேட்' என்கிற சொல் 'இஸ்லாம்' என்கிற சொல்லுக்கு நேர் எதிரானது.ஒருபோதும் இஸ்லாம் யாரையும் 'டாமினேட்' செய்யாது. மக்கள் மத்தியில் இஸ்லாமிய அச்ச நோயை உருவாக்கவே இந்த சொல் பிரயோகம் கையாளப் படுகிறது.  

(கருத்து - அஹ்லுல்பைத்)டாக்டர் சாகீர் நாயக் தனது உரையில் "காபிர்களை அல்லாஹ் 
கொல்லுமாறு சொன்னது 
உண்மைதான். ஆனால், இது யுத்த காலத்தில் யுத்த நடைமுறையை
கருத்தில் கொண்டு அருளப் பட்ட யுத்தம் சம்பந்தப் பட்ட வசனம்.
 யுத்தத்தில் எதிரிகளை கொல்வது அனுமதிக்கப் பட்ட தர்மம்.  எனவே,
இந்த கருத்துரையில் எது வித தவறும் இல்லை" என்று வாதிடுகிறார். 

மக்கள்   கை தட்டி ஆரவாரத்துடன் குதூகலிக்கிறார்கள்.

இன்னும் அவர் "இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க வியட்நாம் யுத்தம் நடைபெற்றது.அப்பொழுது அமெரிக்காவின் தலைவர் தனது இராணுவத்தினரை நோக்கி" வியட்நாமியர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.." என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?

இப்பொழுது ஒருவர் அந்த அமெரிக்க தலைவரின் கூற்றை எடுத்துக் கொண்டு
வியட்நாமியர்களை கொல்லுமாறு அமெரிக்காவின் தலைவர் சொல்கிறார் என்றால் அது சரியான கூற்றாகுமா?

அதேபோல, அக்காலத்தில் ஒரு யுத்த களத்தில் , யுத்த தர்மத்தை சொல்லி முஸ்லிம்  வீரர்களின் மனோபாங்கை மாற்றுவதகு அருளப்பட்ட வசனத்தை எடுத்துக் கொண்டு காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு இஸ்லாம் சொல்கிறது என்று சொன்னால் அது சரியாகுமா?" என்று பார்வையாளர்களிடம் திருப்பிக் கேட்கிறார்.

கரகோசம் வானைப் பிளக்கிறது.

"என்ன அருமையான   விளக்கம்.காபிர்களின் வாயெல்லாம்
 மூடிப் பட்டு விட்டது. '

'எங்களது யுத்த தர்மத்தைப் பற்றி காபிர்களுக்கு என்ன தெரியும்.
யாராவது எங்களுடன் வம்பு செய்தால் அவ்வளவுதான். 
விரட்டி, விரட்டி வெட்டுவோம்'

கேள்வி கேட்ட காபிர் சகோதரர்களின் மனத்தில் ஒரு நெருடல்...!

"இஸ்லாம் மனித சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கின்ற மார்க்கம் என்று சொல்கிறார்களே?'

'அப்படியென்றால், தனக்கு விரும்பிய மார்க்கத்தை தெரிவு செய்து அதன்படி நடக்கும்  மிக சாதாரண மனித உரிமையை கூட இஸ்லாம் மனித குலத்துக்கு
வழங்க வில்லையா?'

மனத்தில் உதித்த கேள்விக்கு பதிலும் டாக்டர் சாகிர் நாயக் உடைய சூளுரையில் இருந்தது.

"இது அப்போதைய யுத்த காலத்துக்கு, காலத்தின் தேவை அறிந்து  அருளப் பட்ட வசனம்."

காபிர் சகோதரர்களின் நெஞ்சில் இப்பொழுது நிம்மதி.

"அப்பாடா! இது அந்த காட்டு மிராண்டித்தன காலத்துக்கு பொருத்தமாக அருளப்பட்டதாம். நாகரீகமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் எங்களது காலத்துக்கு இது பொருந்தாது. எனவே, முஸ்லிம்களே அவர்களது வேத நூல் எக்காலத்துக்கும் பொருத்தம் இல்லை என்று ஒத்துக்
கொண்டார்கள். நமக்கு அது ஒன்றே போதும்"
இஸ்லாமிய 'டாமினேட்'    முயற்சியின் ஒரு எதிர் விளைவு. 'சைத்தானிய சக்திகளால் 'டாமினேட்'   செயயப்பட்ட ஈராக். 

(கருத்து - அஹ்லுல்பைத்)டாக்டர் சாகீர் நாயக் உடைய இந்த சூளுரை சரியானது தானா?

சரி என்று சொல்பவர்களிடம் , மக்கள் தெரிவு சுதந்திரத்துக்கு முழு அளவில் இடம் அளித்த அல் குரானின் பின் வரும்
வசனங்களுக்கு என்ன பதில் இருக்கிறது?


"மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை.வழிக் கேட்டிலிருந்து
நேர் வழி முற்றிலும் தெளிவாகி விட்டது.ஆகையால், எவர் சைத்தானை நிராகரித்து அல்லாஹ்வின்மீது 
நம்பிக்கை கொள்கிறாரோ , அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை
நிச்சயமாக பற்றிக் கொண்டார்.மேலும், அல்லாஹ் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கிறான்."
(அல் குரான்:  2  :  256 ) 

"மேலும், உம இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே 
நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.எனவே, மனிதர்கள் யாவரும் நம்பிக்கை 
கொண்டோராக ஆகி விட வேண்டும் என்று அவர்களை நீர் கட்டாயப் படுத்துகிறீரா?"
(அல் குரான் : 10 : 99  )  

சுவாமிஜி, உங்களது மத நம்பிக்கைக்கு இஸ்லாம் ஒருபோதும் தடை விதித்து குறுக்கே வந்தது கிடையாது.உங்களுக்கு உங்களது மார்க்கம். எங்களுக்கு எங்களது மார்க்கம்.ஆனால், படைத்த இறைவனை சரியாக அறிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனினதும் கட்டாய கடமை என்பதை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள்.  

(கருத்து - அஹ்லுல்பைத்)"( நபியே! ) சொல்லுவீராக ! "காபிர்களே! "
"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்" 
(அல் குரான்: 109 : 1  வது ஆயத்தும்   6  வது ஆயத்தும்  )

இது, காபிர்கள் சம்பந்தமாகவும், அவர்களது இறையியல் நம்பிக்கை சம்பந்தமாகவும் இஸ்லாத்தினது தெளிவான நிலைப்பாடு.

இந்த வசனங்களின் மூலம் மனிதனின் தெரிவு செய்யும் உரிமையை இஸ்லாம் கௌரவப் படுத்தும் அழகை கவனியுங்கள்.

படைத்த இறைவனை ஏற்றுக் கொள்வதும் அல்லது ஏற்றுக் கொல்லாமல் அவனை நிராகரிப்பதற்கும் மனிதனுக்கு பூரண சுதந்திரம் இஸ்லாத்தில் இருக்கிறது.

மனிதன் அல்லாஹ்வை ஏற்றால் என்ன? அல்லது  ஏற்காவிட்டால் தான் என்ன?

ஏனெனில், மனிதனது சுதந்திரமான இந்த தெரிவில் இலாபம் அடைவதும் அல்லது நட்டம் அடைவதும் மனிதனே தவிர , அவனைப் படைத்த இறைவனல்ல.

அப்படி என்றால் சாகிர் நாயக் உடைய சூளுரையில் பொதிந்துள்ள
நிஜங்கள் தான் என்ன?

'இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருத்தம் இல்லாத ஒரு மார்க்கம் என்று அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். அத்துடன் கூடவே,  அடக்கி வாசிக்கப் பட்ட அஹ்லுல் பைத் அரசியலின் நிகழ் கால எதிரியாக தன்னை இனம் காட்டிக் கொள்கிறார்.

இந்த அல் குரான் ஆயத்துக்கு அவர் சொன்ன விளக்கமே முதலில் மிகவும் தவறானது.

சூரா தௌபா ஹிஜ்ரி பன்னிரெண்டாம் வருடம் அருளப்பட்டது.

இஸ்லாமிய யுத்தங்கள் எல்லாம் முடிந்து நபிகளாரின் 'ஹஜ்ஜதுல் விதா' வுக்கு முன்னர் இது அருளப் படுகிறது.

இந்த சூரா காபிர்களை விளித்து அருளப்பட்டது  அல்ல.மாறாக, இந்த வசனங்கள் இணை வைப்பாளர்களைப் பற்றி மாத்திரமே பேசுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மௌனமாக வெளியே  சொல்லாமல் சகித்துக் கொண்டு இருந்த, அவர்களுடன் கூடவே ஒன்றாக இருந்த  இனைவைப்பாளர்களைப் பற்றி அல் குரான் இப்பொழுது வெளிப்படையாக பேசத் துவங்குகிறது.

காபிர்கள் என்கிற சொல்லுக்கு 'நிராகரிப்பவர்கள்' என்று பொருள் படும்.

இந்த வசனத்தில் காபிர்கள் என்ற சொல்லே இல்லை.

அப்படியிருக்க இது காபிர்களைப் பற்றி பேசுகிறது என்று சாகீர் நாயக்கால் எப்படி துணிந்து பொய் சொல்ல முடியும்?

யுத்தங்கள் எல்லாம் முடிந்து நபி (ஸல்) அவர்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கும் பொழுது யுத்த தர்மத்தைப் பற்றி அல் குரான் வசனங்கள் அருளப் படுவதற்கு அவசியம் இல்லையே?

நிஜத்தில் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

யுத்தத்தைப் பற்றி அல் குரானின் இந்த வசனம் ஒன்றுமே பேசாத பொழுது நாம் எதற்கு இதனை யுத்த காலத்தில் அருளப் பட்ட யுத்த தர்மத்தை விளக்குகின்ற வசனம் என்று அலட்டிக் கொள்ள வேண்டும்?

இந்த வசனம் இணை வைப்பாளர்களைப் பற்றியே பேசுகிறது.

இணைவைப்பாளர்களை அல் குரான் 'முஸ்ரிக்கீன்கள்' என்று குறிப்பிடுகிறது.

காபிர்கள் என்றால் , படைத்த இறைவனை முழுமையாக  'நிராகரிப்பவர்கள்' என்று பொருள் படும் என்று முன்னர் பார்த்தோம்..

'முஸ்ரிகீன்கள்' என்றால், படைத்த இறைவனை ஏற்றுக் கொண்டு 'மனத்தில், அவனை நிராகரிப்பவர்கள் என்று அர்த்தமாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் அவர்களால் அவர்களது எதிரிகளான மக்கத்து குறைஷி காபிர்களை இலகுவாக இனம் கண்டு கொள்ள முடியும்.

ஆனால், அவர்களுடன் கூடவே ஒன்றாக இருக்கும் 'முஸ்ரிகீன்களை' இனம் காண்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.

எண்ணங்களின் விளைவாக செயல்கள் இருந்த காரணத்தால், சிலரது செயல் பாடுகள் அவர்களை 'முஸ்ரிகீன்களாக' மக்களுக்கு இனம் காட்டின.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளிப்படையாக காட்டிக் கொண்ட சில சஹாபாக்கள்,  அவர்களது செயல் பாடுகளில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்கு மாறு செய்த நிகழ்வுகள் நிறையவே ஹதீத்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால்,  மிகவும் மரியாதையாகவும், பணிவுடனும் இருந்த அத்தகைய சகாபாக்கள்,  தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது எல்லாம் நபி (ஸல்) அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இத்தகைய சஹாபாக்கள்தான் மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஹவ்லுல் கவ்தர் நீர் தடாகத்திடம்  தண்ணீர் அருந்த வரும் பொழுது, வானவர்களினால் பலவந்தமாக நரகத்திற்கு இழுத்துச் சென்று அதனுள் வீசி எறியப் படுவார்கள்  என்று சொல்லும் பல ஹதீத்களை எம்மால் ஸஹிஹ்  கிரந்தங்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் உள்ள இந்த ஹதீத்களை கவனியுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

நான் உறங்கிக் கொண்டு இருந்தேன்.

அப்போது நான், (கனவில்) அல் கவ்சர் தடாகத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்போது எனது சஹாபாக்களில் ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

எனக்கும், எனது சஹாபாக்களின் அந்த  குழுவினருக்கும் இடையே ஒரு வானவர் தோன்றி அந்தக் குழுவினரை நோக்கி "வாருங்கள்" என்று அழைக்கிறார்.

உடனே நான் அந்த வானவரிடம்"எங்கே இவர்களை அழைக்கிறீர்கள்?" என்றேன்.

அவர் " அல்லாஹ்வின் மீதாணையாக!  நரகத்திற்கு" என்றார்.

நான்"இவர்கள் என்ன செய்தார்கள்" என்று கேட்டேன்.

அவர் " உங்களுக்குப் பின்னால், இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறி சென்று விட்டார்கள்" என்றார்.

பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு வானவர் தோன்றி ""வாருங்கள்" என எனது அந்த சஹாபாக்களை அழைக்கிறார்.

நான் "இவர்களை எங்கே அழைக்கிறீர்கள்" என்றேன்.

அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்கு தான்."என்றார்.

நான் "இவர்கள் என்ன செய்தார்கள்" என்றேன்.

அவர் "இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய் விட்டார்கள்.' என்று பதிலளித்தார்.

அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பிக் கொள்வார்கள் என நான் கருத வில்லை"

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி:  பாகம் ஏழு ஹதீத் - 6587  )

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

மறுமை  நாளில் என் சஹாபாக்களில் சிலர் என்னிடம் அல் கவ்சர் தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் தடாகத்தை விட்டும் விரட்டப் படுவார்கள்.

உடனே நான் "இறைவா! இவர்கள் என் தோழர்கள்" என்பேன்.

அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால், இவர்கள் செய்தது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்கள்" என்று சொல்வான்.

இதை நபித் தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஸுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ,"அவர்கள் ஒதுக்கப் படுவார்கள்" என்றும் , அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விரட்டப் படுவார்கள்" என்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஆதாரம் புஹாரி:  பாகம் ஏழு ஹதீத் - 6586  )


நபி (ஸல்) அவர்களது சில சஹாபாக்களைப் பற்றி இப்படி வெளிப்படையாக சொல்லப் பட்டதும், அல்லாஹ்வினதும், அவனது ரசூலினதும் எதிரிகளான அத்தகைய சஹாபாக்களில் நேசம் வைத்து அவர்களின் செயல்களில் சரி கண்ட எங்களது சில அறிஞர்கள் அத்தகைய சஹாபாக்களின் தவறுகளை மூடி மறைப்பதற்காக இந்த அல் குரான் ஆயத்தின் கருத்தை திசை திருப்பினார்கள்.

அவர்கள் இணைவைப்பாளர்கள் என்று அல் குரான் குறிப்பிடுவது காபிர்களை என்று எம்மை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார்கள்.

அவர்கள் செய்த செயல்களின் விளைவுதான் இது.

நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற அஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இத்தகை தவறான நம்பிக்கைகளின் தேவைப்பாடு அவசியப்பட்டது.

சூரா தௌபாவின் இந்த ஆயத் எந்த வகையில்  காபிர்களை விளித்து அருளப் படவில்லை என்பதை இனி கவனிப்போம்.

"சங்கை மிக்க மாதங்கள் கழிந்து விட்டால், இணை
வைப்பாளர்களை நீங்கள் கண்ட இடங்களில்  கொல்லுங்கள்.இன்னும், அவர்களைப் பிடியுங்கள், 
அவர்களை முற்றுகையிடுங்கள் , ஒவ்வொரு பதுங்குமிடத்திலும்
அவர்களை குறி வைத்து உட்கார்ந்து இருங்கள்.
ஆனால், அவர்கள் பாவ   மன்னிப்புக் கோரி , தொழுகையை கடை பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவார்களானால் அவர்களுடைய
வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடயோனாகவும் இருக்கிறான்" 
(அல் குரான்  9  :  5  )  

ஒரு காபிர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவரால் எப்படி அல்லாஹ்விடம் பாவ    மன்னிப்பு கேட்டு தொழுகையை கடை பிடித்து சகாத்தை கொடுக்க முடியம்?

இந்த கடமை எல்லாம் ஒரு முஸ்லிமுக்கு உரியதே தவிர ஒரு காபிருக்கு உரியது அல்லவே?.

இது ஒன்றே இந்த வசனம் காபிர்களை விளித்து அருளப்பட்டது இல்லை என்பதற்கு போதுமான அத்தாட்சியாகும்.

இந்த அல் குரானின் ஆயத்தின் படி இணை வைப்பாளர்கள் பாவமன்னிப்பு கேட்டு தொழுகையை கடை பிடித்து சகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை எதுவும் செய்யாது விட்டு விடுமாறு அல்குரான் எமக்கு போதிக்கிறது.

அல் குரானின் இந்த போதனைப் படி இணைவைப்பாளர்களை கொல்லுவது இஸ்லாமிய சட்டம்.

ஏனெனில் அவர்கள் இறைவனை முற்றிலும் நிராகரித்த காபிர்களை விடவும் அபாயகரமானவர்கள்.

இத்தகைய அபாயகரமானவர்களை இனம் கண்டால் அவர்களை கொன்று விடுவதுகூட கூடும்.

என்றாலும், அத்தகைய அதி அபாயகரமானவர்களை இனம் கண்டாலும்
ஒரு முஸ்லிமால் அவரைக் கொள்ள முடியாது.

அடையாளம் காணப் பட்ட அந்த அபாயகரமானவர்கள் தமது தவறுக்கு பாவ   மன்னிப்பு கோரி, தொழுகையை கடைப்பிடித்து சகாத்தும் கொடுத்து வந்தார்கள் என்றால் அவரை கொல்லுவதட்கு இஸ்லாமிய சட்டத்தில் இடம் இல்லை.

இணை வைப்பாளரான ஒருவர் அவரது இணைவைப்பை மற்றவர்கள் அடையாளம் கண்டவுடன் ,தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டியாவது, பாவ மன்னிப்பு கேட்பது போலவும், தொழுவது போலவும் , சகாத் கொடுப்பது போலவும் நடிக்க  துவங்கி விடுவார்.

இத்தகைய மக்களை இஸ்லாம்'முனாபிகீன்கள்' அதாவது நயவஞ்சகர்கள் என்று அழைக்கிறது.

அவர்களின் உள்ளொன்று புரமொன்றாக இருக்கும்.

இந்த வசனத்தின் மிக முக்கிய நோக்கம் இணைவைப்பாளர்களின் தராதரம் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை மக்களுக்கு புரிய வைப்பதே தவிர , அவர்களை கொல்லுவது அல்ல.

இணை வைப்பாளர்கள் இந்த உலகில் உயிருடன் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள் என்பதை இந்த வசனம் எமக்கு தெளிவாக விளக்குகிறது.

இதில் இருக்கின்ற இன்னுமொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தெளிவாக இனம் காணப் பட்ட பல இணை வைப்பாளர்கள் கொலை செய்யப் படவும் இல்லை அவமானப் படுத்தப் படவும் இல்லை.

ஆச்சரியமாக இல்லை?

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி இருந்த இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக இருந்த காரணத்தால், அந்த தோழர்களில் நேசம் வைத்த சில இஸ்லாமிய தலைவர்களும், மத குரு மார்களும் இணை வைப்பாளர்கள் என்ற சொல் காபிர்களைக் குறிக்கிறது என்று தப்பாக அர்த்தம் கற்பிக்க துவங்கினார்கள்.

சில காலம் செல்ல இஸ்லாமிய அரசின் மன்னர்களான உமைய்யாக்களும், அப்பாசியர்களும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் அவர்களின் ஆளுமையைப் பயன்படுத்தி இந்த வசனத்தை இஸ்லாமிய சட்டமாக்கி நிறையவே தவறுகள் செய்யத் தொடங்கினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள். ஆட்சி அதிகாரம் அல்லாஹ் யாருக்கு வழங்கு கிறானோ அது அவருக்கே சொந்தம். அவர் நல்லவராக இருந்தாலும்  அல்லது நடத்தை கெட்டவராக இருந்தாலும் பரவாயில்லை.

அவர் ஒரு முஸ்லிம் தலைவரா!

அது போதும்.உனது தலைவராக அவரை ஏற்றுக் கொள். அல்லது உயிரை விடு என்பதுதான் அவர்களது அதி பயங்கரமான வழிமுறையானது.
முஸ்லிம்களை நெறி பிரள வைத்த தனி மனித சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கும் இஸ்லாத்துக்கு விரோதமான இஸ்லாமிய ஆதிக்க சுலோகம்.  . 

(கருத்து - அஹ்லுல்பைத்)இப்பொழுது இருக்கிற எதேச்சிகாரிகளுக்கு யு.என். ஓ . எப்படி சட்டமியற்றி வளைந்து கொடுத்து அவர்களது 'டாமினேட்' செய்கைகளுக்கு துணை போகிறதோ , அதே போல அல் குரானிய வசனங்களுக்கு தவறான சட்டங்களை இயற்றிக் கொண்டு அப்போதைய ஆட்சியாளர்கள்  அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வுக்கு எதிரான ஆட்சியை இந்த உலகில் 'டாமினேட்' செய்யத் துவங்கினார்கள்.
 
இப்பொழுது இருக்கின்ற இந்த சாகிர் நாயக் மாதிரி உலகாயுதத்துக்கு விலை போன அப்போதைய முல்லாக்களின் வழிக் காட்டலில் இந்த வசனத்துக்கு தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்ட அந்த அநியாயக்கார தலைவர்கள்  காபிர்களை எல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு பலவந்தப் படுத்தி, அப்படி ஏற்காதவர்களை படு கொலை செய்யத் தொடங்கினார்கள்.

சமாதான மதமான இஸ்லாம் 'மதம்' கொண்டு உலக மக்களை 'பலாத்காரமாக 'டாமினேட்' செய்யத் துவங்கியது.

சமாதானத்தினதும், சாந்தியினதும் அடையாளச் சின்னங்களான மஸ்ஜிதுகளில் 'ஜிகாதிய' பிரச்சாரங்கள் முடுக்கி விடப் பட்டன.

இதனால், முஸ்லிம் மஸ்ஜிதுகள் உலக மக்களின் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் ஆக்கிரமிப்பு சின்னங்களாக மாறின.


பிளவுகளினதும்,  பிரச்சினைகளினதும்   அடையாளச் சின்னமாக உருமாறியிருக்கும் நிகழ்கால மஸ்ஜிதுகள். 

(கருத்து - அஹ்லுல்பைத்)நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் வாளை உருவிக்கொண்டு வீதிக்கு இறங்கி மக்களை பீதிக்கு உட்படுத்திய உமர் (ரலி) அவர்கள் தொடக்கி வைத்த அவர்களின் இந்த அபார ஆட்டம் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி சென்ற நூற்றாண்டில் தான் முடிவுக்கு வந்து காபிர்களை நிம்மதி பெரு மூச்சு வைக்க வைத்தது.
இப்பொழுது அது புது வடிவெடுத்து -'பாகிஸ்தானின் இஸ்லாமாகி' எமது இஸ்லாமிய இயக்கங்களில் இருக்கிறது.

அதென்ன 'பாகிஸ்தானின் இஸ்லாம்?'

சி.ஐ.எ.எதை விரும்புகிறதோ அது தான் பாகிஸ்தானின் விருப்பம்.

பாகிஸ்தான் எதை விரும்புகிறதோ அதுதான் ஜமாத்தே இஸ்லாமியின் விருப்பம்.

சி.ஐ.எ.யின் இஸ்லாம்தான் பாகிஸ்தானின்  இஸ்லாம்.

'பாகிஸ்தான் சொல்லும் இஸ்லாம் மற்றவர்களுக்கு உரியதே தவிர பாகிஸ்தானியருக்கு உரியது அல்ல.'

எனவே, உங்கள் ஊர் ஜமாஅதே இஸ்லாமி  தலைவர்களின் உபதேசத்தில் மயங்கி பாகிஸ்தான் மோகத்தில் இருக்கும் இலங்கை, இந்திய , மலேசிய இளைஞர்களே....கவனம்.


"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.(அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல் , வரம்பை மீறி அல்லாஹ்வை 
திட்டுவார்கள்.- இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம்.- பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது.அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்."
(அல் குரான்; 6  : 108  வது ஆயத். )

1 comment:

Anonymous said...

நீங்கள் கூறியதுதான் அந்த ஆயத்திற்கு விளக்கம் என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருப்பார்களே...இஸ்லாத்திற்கு எதிராக இருந்த காபிர்களுக்கு எதிராக மட்டும்தான் போர்ப்பிரகடனம் செய்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
தயவு செய்து தவறான விளக்கம் கொடுக்காதீர்கள்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad