அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 18, 2017

பாமரனை கவிழ்க்க உதவும் ஒரு கலை.........இல்முல் றிஜால்


ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட குணவியல்பு விபரங்களை ஒன்று திரட்டுகின்ற செய்திகளின் 'கலை அறிவின்' அறபுப் பெயர்தான் ‘இல்முல் றிஜால்’.

இத்தகைய தனி மனித ஒன்றுதிரட்டலை அறிமுகப்படுத்தியவர் அறிஞர் மதாஇன் என்று நினைக்கிறேன். இக்கலை உமையாக்களின் ஆட்சியின் பொழுது உயிர்த்ததாகவும் வாசித்த நினைவுண்டு.
அதன் பின்னர் ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டிலிருந்த இஸ்லாமிய அறிஞர் அபூ அம்ர் உதுமான் இப்னு அப்துல் ரஹ்மான் சலாஹ் அல் தீன் அல் குர்தி அல் சஹ்ராசூரி அவர்களினால் மீளவும் இக்கலை நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஷாபி மத்கபை பின்பற்றிய அந்த அறிஞர் இப்னு சலாஹ் என்ற பெயரிலேயே அழைக்கப் பட்டு வந்தார்.
அவர் “முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.” [49:6] என்ற புனித அல் குர்ஆன் ஆயத்தை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் நுணுக்கமான இந்த அறிவை இஸ்லாமிய அறிஞர்களிடையே அறிமுகப்படுத்தினார்.
பாஷிக்.....பாவிகள் யாருமே ஹதீஸ்களை முறையாக அறிவிக்கப் போவதில்லை. அவர்கள் அவற்றில் குளறுபடியைத்தான் உருவாக்குவார்கள்.
எனது தந்தையை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவரது தந்தையை இலேசாக நினைவிருக்கிறது. தந்தையின் தந்தையுடைய தந்தையை நான் அறியேன். அவரை பெயரளவில் மாத்திரமே நான் அறிவேன். அப்படி பெயரளவில் அறிந்த கொள்ளுத்தாத்தாவின் தந்தையின் பெயரைக் கூட எனக்குத் தெரியாது.
தகவல் தொழில் நுட்பம் சிறந்து விளங்குகிற இன்றைய, சுமார் ஐம்பது வருட வாழ்க்கையின் யதார்த்தம் இது.
இப்படியிருக்க, சுமார் ஐநூறு வருடத்துக்கு முற்பட்ட பல்லாயிரக்கணக்கான தனி நபர்களின் தகவல்களை துல்லியமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னரான காலத்தில் பிறந்த ஒருவரால் அல்லது பலரால் ஒன்று திரட்ட முடியுமா?
முடியாது என்கிறேன் நான்.
முடியும் என்று நம்மை நம்புமாறு வற்புறுத்துகிறார்கள் இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள்.
நான் முடியாது என்று சொல்வதற்கு இன்னமும் சில காரணங்கள் மீதமிருக்கின்றன. இஸ்லாமிய வரலாற்றை நுணுக்கமாக அவதானிக்கும் ஒருவருக்கு சில உண்மைகள் புரிந்துப் போகும்.
அதன் பிரகாரம், புனித அல் குர்ஆனுக்கு முரணில்லாத ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதற்கும், புனித அல் குர்ஆனுக்கு முரணான கருத்துத்துக்களைக் கொண்டிருக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளுமாறு பாமரர்களை நிர்ப்பந்திக்க செய்வதற்குமான சூழலை இல்முல் றிஜால் என்ற பெயரை உபயோகித்து இஸ்லாமிய பெயரிலான இஸ்லாத்துக்கு முரணான இஸ்லாமிய ஆட்சியாளர்கள் செய்திருக்கின்றனர்.
கண்ணியத்துக்குரிய பரிசுத்த சூபி மகான்கள் ‘இல்முல் றிஜால்’ என்ற தனி மனித ஒன்று திரட்டல் அறிவைக் கொண்டிருக்கும் இக் கலையை புனித அல் குர்ஆனின் சூறா سورة الحجرات வசனம் பன்னிரெண்டை முன்னிறுத்தி நிராகரிக்கிறார்கள்.
மனிதர்களின் குணவியல்புகளை துருவித் துருவி ஆராயக் கூடாதென்று புனித அல் குர்ஆன் தடுத்திருக்க இல்முல் றிஜால் என்ற இக்கலை மனிதர்களின் இயல்புகளை துருவித் துருவி ஆராய வழிவகுப்பதாக அவர்கள் வாதிடுகிறார்கள்.
“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” [49:12]
இல்முல் றிஜால் என்ற ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையை ஆராயும் இக்கலையை அறிந்ததன் பின்னர் எனக்குக் கிடைத்த விபரங்கள் இவை.
இறுதியில் நான் ஒரு முடிவெடுத்தேன்.
புனித அல் குர்ஆனின் தூய போதனைக்கு முரணான எந்த ஹதீஸையும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதே அம்முடிவு. உடனே உங்களது மனத்தில். அப்படியென்றால் முதவாத்திரான ஹதீஸ்களின் நிலை என்ன? என்று கேள்வி பிறக்கும்.
விடை சுலபம்.
முதவாத்திரான எந்த ஹதீஸும் புனித அல் குர்ஆனுக்கு முரணாக கருத்து சொல்வதில்லை.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad