அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 25, 2017

எண்பத்து மூன்று நினைவுகள்.........

எண்பத்து மூன்று நினைவுகள்..........
என்னுடைய வயதையொத்த நண்பர்கள் எண்பத்து மூன்றாம் வருட கருப்பு ஜூலையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த ஜூலை மாதத்தில் இலங்கை பூராவும் கலவரம் வெடித்திருந்தது. தமிழ் இந்து மக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டன. தீக்கு இரையாக்கப்பட்டன. அனைத்தயும் இராணுவம் தலைமையேற்று செய்தது. கலகக்காரர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களிலும் இலங்கையில் பட்டாசு வேடிக்கைதான். தமிழ் இந்துக்களின் சொத்துக்களை அழிப்பதிலும், பலவீனமான நிலையில் இருந்த அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதிலும், வசீகரமான பெண்களை குறிவைத்து வல்லுறவில் ஈடுபடுவதிலும் அந்தப் பெருநாட்கள் கழிந்தன. நாடே சீரழிந்துப் போனது. அரசு ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், வலிமையானவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நிலைமை மாறியிருந்தது. சிறுபான்மையின மக்கள் தங்களது பாதுகாப்பை அவர்களாகவே உறுதி செய்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
மாத்தளையில் நிலைமை வேறாக இருந்தது. உய்யவந்தன் செட்டியார் போலீஸ் துணையுடன் மாத்தளையில் எதுவும் நடைபெறாமல் காத்து வந்தார். அவரது பணம் அதிக அளவில் போலீசில் விளையாடியது. அதனால் போலீஸ் மிகக்கடுமையாக தனது கடமையை செய்தது.
வியாழன் இரவு மாத்தளை நகரின் பாதுகாப்பு போலீஸ்வசமிருந்து இராணுவப் பொறுப்பில் பலவந்தமாக மாற்றிக் கையளிக்கப்பட்டது. போலீஸார் சங்கடத்துடன் அமைதி காத்தார்கள். இராணுவம் திமிருடன் பொறுப்பை ஏற்றது. பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டாட்டம். சிறுபான்மை மக்களின் நிலையோ திண்டாட்டம்.
மாத்தளை நகரிலிருந்த முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று கூடினார்கள் . கலந்துப் பேசினார்கள். பெரியவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். முதலில் தமிழ் இந்துக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தீர்மானித்தார்கள். தமிழ் சகோதரர்களின் உடமைக்கு தீங்கு விளைவிக்காமல் காப்பதென்று திரண்டு நின்றார்கள். தமிழ் இந்துக்களை மாத்தளை சாஹிராவில் கொண்டு வந்து வைத்தார்கள். இந்து தனவந்தர்களும், முஸ்லிம் தனவந்தர்களும் அவர்களின் உணவுக்கான விடயங்களைப் பொறுப்பேற்றார்கள். முஸ்லிம் இளைஞர்கள் தங்களுக்குள் தலைமையை தீர்மானித்தார்கள். கூட்டம் கூட்டமாக பிரிந்து நின்று தங்களது பாதுகாப்பை தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். அனைத்து இளைஞர்களின் கரங்களிலும் கத்திகளும், வாள்களும் உறுதியுடன் வந்து வந்து சேர்ந்தன. சிறுவர்கள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வயோதிகர்கள் கொஞ்சம் பயந்துப்போய் இருந்தார்கள்.
கொடபொல வீதியும், கொங்காவளைப் பிரிவும் ஒன்றாக கூடியது. மஜீத்ஸ்டோர்ஸ், ஜெயினுலாப்தீன் தேங்காய்க் கடை, மீஸான் ஹார்ட்வெயார், இன்னொரு இந்திய வம்சாவளியின் ஹார்ட்வெயார் ஆகியன இந்தப் பிரிவின் இளைஞர்களுடன் பக்கத் துணையாக நின்றன. கடைகளில் இருந்த, வீடுகளில் இருந்த வெற்றுப் போத்தல்களில் ஒன்று திரட்டப்பட்டன. போத்தல்கள் ஆயிரக்கணக்கில் சேர்ந்தன. அவற்றில் கண்ணாடித்துண்டுகள் கலந்த மண் நிரப்பப்பட்டன. அவை நகரிலிருக்கும் கடைகளின் கூரைகளில் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.இலக்குத் தவறாமல் தூர வீசி எறிவதில் நிபுணத்துவம் கொண்ட பலசாலிகளான இளைஞர்கள் கூரைகளில் அமர்த்தப்பட்டார்கள். எரிபொருள் நிரப்பப்பட்ட லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதில் சில இளைஞர்கள் பயணிக்கத் தயாராக நின்றார்கள். இந்தப்பகுதியில் கலகக்காரர்கள் தீங்கு செய்தால் கலகக்காரர்களின் பகுதியின் பாதுகாப்பை சிதைப்பதுதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை. நமக்கு கெடுதல் செய்யாத மக்களுக்கு எக்காரணம் கொண்டும் தீங்கிழைக்க முடியாது. அத்தகைய கடுமையான ஒழுக்கத்தில் இஸ்லாம் முஸ்லிம்களைக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால், அதனை உணரும் அறிவில் அப்பொழுது நாமிருக்கவில்லை.
வீட்டில் இளைஞிகள் எண்ணெய்யை கொதிக்கவைத்து அவர்களுக்குத் தீங்கு செய்யும் நோக்குடன் வீட்டுக்கு வருபவர்களின் முகத்தில் வீசி எறியத் தயாரானார்கள். அவர்களுக்குத் தேவையான எண்ணெயும் விறகும் கொண்டு சேர்க்கப்பட்டன. சில பெண்கள் கத்திகளை, அரிவாள்களை தயாராக வைத்துக் கொண்டார்கள். கலகம் மூண்டால் கற்பை இழக்காமல் நாலுபேரை சாய்த்து விட்டு தாமும் சாவது என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
வெள்ளிகிழமை வழமைபோலவே விடிந்தது. கலகத்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தக் காரணத்தால் அந்த நாள் சுறு சுறுப்பாகவே துவங்கியது. ஊரடங்கு சட்டத்தால் நகரின் செயல்கள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயிருந்தன. விடுமுறை தினம் போலவே ஒவ்வொரு நாளும் இருந்தன. வீடுகளில் நல்ல உணவுகள் தயார் செய்யப்பட்டன. ஜும்மாஹ்வுக்கு அதான் சொல்லப்பட்டது. பள்ளிவாசல் நிறைந்தது. பிரசங்கத்தில் ஜிஹாதின் முக்கியத்துவமும், பொறுமையின் அவசியமும் போதிக்கப்பட்டன. தொழுகையும் முடிந்தது.
எதிர்பார்த்திருந்த எதுவுமே நடக்கவில்லை.
மக்கள் வீடுகளுக்கு வந்தார்கள். உணவை ஒரு பிடி பிடித்தார்கள். ஒரு பீங்கானுடன் மேலதிகமாக இன்னொரு பீங்கானை முடித்த திருப்தியில், அந்த மயக்கத்தில் கொஞ்சம் கண்ணயர்ந்திருந்தவேளை வீதியில் சிறுவர்களின் உற்சாகமான அலறல் கேட்கத் துவங்கியது. “ஆம்பிள்ளைகள் வீதிக்கு வாருங்கள்......பெண்கள் வீடுகளுக்குள் இருங்கள்.......”
வயிறு நிறைய உண்டு அந்த மயக்கத்திலிருந்த நானும் காஸியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ‘அட.......இந்த நேரத்திலேயா இது ஆரம்பிக்கப் பட வேண்டும்?....இப்பொழுது என்ன செய்வது?’
அப்பொழுது கிளப் லதீப் நானா அவரது மோட்டார் சைக்கிளில் தோளில் டபள்பெறல் துப்பாகியோன்றுடன் வந்துக் கொண்டிருந்தார். மனுஷன் மேலாடைகளின்றி சாரனுடன் மாத்திரம் தெரிந்தார். நேராக சோமபாலாவின் மரக்கறி கடைக்கு எதிரில் போய் நின்றார். "தயா...உன்னையும் சோமபாலாவையும் இந்தத் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பேன் "என்று கூக்குரலிட்டார். சொமபாலாவும் தயாவும்தான் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான நச்சுக் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தவர்கள். அந்த இருவரும் பயந்துப் போனார்கள். லதீப் நானா செட்டியார் தெரு சந்தியில் அமர்ந்துக் கொண்டார். முஸ்லிம்களுக்கு தெம்பு சொல்லிக் கொள்ளாமலேயே வந்து சேர்ந்தது.
வீதிக்கு வந்தோம். இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தார்கள். அனைவர் முகத்திலும் உண்ட களைப்பின் ஆயாசம் தெரிந்தது. அது சண்டைக்கான வேகத்தை குறைத்திருந்தது. பிரதான வீதியிலிருந்து கொடபொல வீதிக்குத் திரும்பிய அடுத்த கணம் பாரூக் மாஸ்டரின் வீடு இருந்தது. அவர்தான் எங்களது கராட்டே ஆசிரியர். நாம் அவரது தலைமையில் முகாந்திரம் வீதியிலிருந்த சூரத் பீடி நிறுவனத்தின் முன்றலில் ஒன்று சேர்ந்தோம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் Ismath Inoon நானா இதனை வாசித்துக் கொண்டிருப்பார். அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்திருப்பார். இல்லாவிட்டால் ஹனபி பள்ளிவாசல் அருகில் இருக்கும் குழுவுடன் இணைந்திருந்திருப்பார்.
வருகின்ற குழுவினரை எங்ஙனம் எதிர்கொள்வது என்று பாரூக் மாஸ்டர் விவரித்தார். கேட்டுக் கொண்டோம். திடீரென வானில் புகை எழுவது தெரிந்தது. மணிக்கூண்டு கோபுர பக்கமிருந்து அது எழுவது போலத் தெரிந்தது. சைக்கிளில் ஜுவாயிர் நானா விரைந்து வந்தார். அவருடன் மம்ம ரபீக்கும் வந்தார். இவர்கள் மாத்தளையிலிருந்த சண்டியர்களில் இருவர். மம்மா ரபீக் நானாவிடம் ஒரு வாள் இருந்தது. பார்ப்பவரை அச்சப்படுத்தியது. ‘காந்தி நிலையத்தை தாக்கிவிட்டார்கள். அதனை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.’ இப்படி ஜுவாயிர் நானா சொன்னார்.
‘வருகிறவர்களில் ஒருவரைக் கூட உயிருடன் திருப்பி அனுப்பக் கூடாது’ என்று காஸி கத்தினான். இளைஞர்கள் அவனுடன் இணைந்துக் கொண்டு ‘ஆம்......அவர்களுக்கு மறக்காத பாடமொன்றை புகட்ட வேண்டும்’ என்றார்கள்.
பாரூக் மாஸ்டர் காஸியைக் கண்டித்தார். இப்படியெல்லாம் பேசக் கூடாது என்றார். ஆனால் அவன் அப்படியிருக்கவில்லை. இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை என்றான். அப்பொழுதுதான் நான் அவனை முழுதாக கவனித்தேன். காஸி சண்டைக்கு ஏதுவாக ட்ரக் பொட்டம் அணிந்திருந்தான். கையில்லாத டி சேர்ட் அணிந்திருந்தான். தலையில் ஒரு பட்டியைக் கட்டியிருந்தான். இடுப்பில் நன்ச்சக்கோ வை செருகியிருந்தான். கைகளில் சீக்கியர் அணியும் வளையலை அணிந்திருந்தான். பார்க்க ஒரு தினுஷாக கலகத்துக்கு தயாராகவே வந்திருந்தான். நான் எழுதி இருப்பதை இப்பொழுது காஸியும் வாசித்துக் கொண்டிருப்பான். இப்பொழுது அவன் லண்டனில் இருக்கிறான். ‘ஹலோ......காஸி.....நலமா?’
சிறிது நேரத்தில் கடைகளை தீயிட்டுக் கொளுத்தியவாறு அந்தக் கூட்டம் வந்தது. கைகளில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள். கூக்குரலிட்டுக் கத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குடித்திருந்தார்கள். எவ்வித எதிர்ப்பையும் காணாமல் வந்தவர்கள் ஆயுதபாணிகளாக நின்ற எங்களது கூட்டத்தைக் கண்டு கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.மாத்தளை டவுன் பள்ளியின் எதிரில் நாமும் அவர்களும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டோம்.
அந்தக் கூட்டத்தினரின் தலைவனாக காமினி நின்றான். அவன் எங்களது கராட்டே வகுப்பில் எங்களுடன் ஒன்றாக தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டிருந்தான். காஸியிடம் நன்றாக அடி வாங்கியுமிருந்தான். பாரூக் மாஸ்டரும் அவனது ஆசான்தான். அவன் சாரன் அணிந்திருந்தான். கையில் தடியொன்றை வைத்திருந்தான். அவனை காஸி எதிர்கொண்டான்.சண்டைக் கோழியாக களமிறங்கி வந்த காஸியைக் கண்டதும் அவன் கொஞ்சம் வெல வெலத்துப் போனான். அதனைக் காட்டிக் கொள்ளாமல் ‘மச்சான் காஸி....மேக உம்பட்ட அவஸ்ய நேதி வெடக். உம்ப உம்பே வெடக் பலாகன பளயங்’ என்றான். (மச்சான் காஸி...இது உனக்கு அவசியமில்லாத வேலை. நீ உனது வேலையை பார்த்துக் கொண்டு ஒதுங்கிப் போ. இதில் தலையிடாதே’)
காஸி கடுமையாக இப்படி சொன்னான். ‘இது அப்பாவி மனிதர்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கும் யுத்தம். இதில் எனக்கு பங்கிருக்கிறது. உங்களுக்கு இந்த மனிதர்களின் உடமைகளுக்கு தீங்கு செய்ய அனுமதிக்க முடியாது. பேசாமல் திரும்பிப் போவது உனக்கும் உனது கூட்டத்துக்கும் நல்லது. இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள்’ என்றான்.
"உங்களால் என்னதான் செய்ய முடியும்" என்று காமினி கேட்டான்.
"மாத்தளையில் இருக்கும் மூன்று பெட்ரோல் நிலையங்களையும் தீயிட்டுக் கொளுத்துவோம். எங்களது வீடுகளையும், கடைகளையும், உங்களது வீடுகளையும் , கடைகளையும் மொத்தமாக தீயிட்டு அழிப்போம். கொடபொல சந்தியில் இன்னொரு சாதனையை நிலை நாட்டுவோம். இனக்கலவரங்களில் சாதனைகள் படைத்த இடம்தான் இந்த கொடபோல. இன்றே மாத்தளை மொத்தமாக எரிந்து நாசமாகிப் போகும். அதனை பார்க்க வேண்டுமா?" என்று காஸி அலறினான்.
'காமினியின் கூட்டம் அதிர்ந்துப் போனது. அச்சத்தில் உறைந்தும் போனது.'இவர்கள் சொன்ன மாதிரியே செய்யக் கூடியவர்கள்தான்.'
இப்படி இவர்களின் வாய்த்தர்க்கம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது சணீர் கடையொன்றின் கூரையில் தெரிந்தான். கைகளில் மண்ணும் கண்ணாடித் துண்டுகளும் நிரப்பிய போத்தல்கள் சிலதை வைத்திருந்தான். காஸியும் காமினியும் சத்தமாக கதைப்பதை சண்டை என்று நினைத்தான். உடனே அவனது கையிலிருந்த போத்தலொன்றை இவர்களை நோக்கி வீசி எறிந்தான். போத்தல் இலக்குத் தவறி இவர்களைக் கடந்து, கூட்டத்தைக் கடந்து கொஞ்ச தூரத்தில் வீழ்ந்து நொறுங்கி சிதறியது. அதிலிருந்த கண்ணாடித் துண்டொன்று வீசுண்டு பின்னால் நின்றிருந்த காமினியின் சகாக்களில் ஒருவனின் காலைப் பதம் பார்த்தது. கணத்தில் அவனது காலில் இருந்து இரத்தம் பீறிட்டுப் பாய அவன் திரும்பி ஓடத் துவங்கினான்.
இதனால், உற்சாகமாக வந்துக் கொண்டிருந்த அந்தக் கலகக் கூட்டம் நிலைமையின் விபரீதம் உணர்ந்து பயந்துப் போனது. உடனே அவர்கள் சமாதானத்துக்கு வந்தார்கள். திரும்பிப் போக தீர்மானித்தார்கள். அப்பொழுது நமது பக்கமிருந்து மூத்தவர் ஒருவர் அதில் தலையிட்டார். ‘சரி....சரி...பரவாயில்லை. நீங்கள் தமிழர்களை தாக்காதீர்கள். அவர்களின் கடைகளுக்கு தீ வைக்காதீர்கள். உங்களது கோபத்தை தனித்துக் கொள்ள ஒரு காரியம் செய்யுங்கள். தமிழர்களின் கடைகளில் இருக்கும் பொருட்களை வீதியில் போட்டு எரித்துவிடுங்கள். நாங்கள் அதனை தடுக்க மாட்டோம்.’
நிபந்தனையில்லாத சரணாகதிக்கு தயாரான அந்தக் கூட்டம் இதனைக் கேட்டதும் தன்னை சுதாகரித்துக்கொண்டு தோல்வியிலிருந்து மீள இதனை ஒரு வாய்ப்பாக பற்றிப் பிடித்துக் கொண்டது. அவர்கள் மீண்டும் உற்சாகமானார்கள். கூக்குரலிட்டார்கள். எதிர்ப்படுகின்ற ஒவ்வொரு கடையையும் உடைத்து கடைகளிலிருந்த பொருட்களை வீதியில் எறிந்தார்கள். சிலதை எடுத்துக் கொண்டார்கள். பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் எடுக்குமாறு தூண்டினார்கள். மிகுதியை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
அந்த மூத்தவர் அப்படி சொன்னதன் காரணத்தை பின்னால் நான் புரிந்துக் கொண்டேன். அவருக்கு இந்துக்களின் உடமைகள் கொள்ளையிடப்படுவதில், தீக்கிரையாக்கப்படுவதில், அவர்கள் கொல்லப்படுவதில் உள்ளார்த்தமாக ஒரு இன்பம் இருந்திருக்க வேண்டும். தனது காழ்ப்புணர்வை அவர் இப்படி மலினமாக தீர்த்துக் கொண்டிருக்கிறார். கிள்ளியும் விட்டு தொட்டிலையும் ஆட்டுதல் எனபது இதைத்தான். சில வருடங்களுக்கு முன்னர் அந்த மூத்தவரை நான் கண்டேன். கதைத்தேன். டவுன் பள்ளிவாசல் நிர்வாக சபையில் இருப்பதாக சொன்னார்.
“பெரியோர்களே....சகோதரர்களே......கதையை கேட்டுக் கொண்டிருந்தமைக்கு நன்றி. இனி, இவ்விதமாக தங்களது பாதுகாப்பை தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்ற நிய்யத்தை எடுத்த சகோதரர்கள் தங்களது பெயரைச் சொன்னால் நன்றாக இருக்கும்.”
“.......... ........... ..........”
“இந்த சகோதரர் நல்ல கேள்வியொன்றைக் கேட்டிருக்கிறார்.......பலமான ஆயுதங்களுடன், அரச ஆதரவுடன் வருகின்ற அவர்களை நான் எங்ஙனம் எதிர்கொள்வது?......இதுதான் கேள்வி. விடை சுலபம். அவர்கள் இரவில் வருகிறார்கள். ஒருவர் அல்லது இருவர்தான் வருகிறார்கள். கையில் பெற்றோலுடன், தீப்பெட்டியுடன் வருகிறார்கள். அச்சத்துடனும், பயத்துடனும் வருகின்ற அவர்கள் எதிர்ப்புகளைக் கண்டவுடன் ஓடத் துவங்குவார்கள். நீங்கள் அவரை அல்லது அவர்களை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. ஆனால், நீங்கள் முழுதான தயாரிப்புடன் இருக்க வேண்டும்.”
“........ ......... .........”
Mohamed Ansar Aathif சகோதரர் நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதுதான் இதுக்குத் தீர்வும் என்று நான் நினைக்கிறேன்.”
“........ பயாஸ் நானா ......அவர் என்னதான் சொன்னார்?”
“யார் வைத்தாலும் தீ எரியும்.......இன்னுமா புரியல...... காமினி வைத்தாலும், காஸி வைத்தாலும் தீ எரியும்”

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad