அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 25, 2017

‘உம்மிய்யீன்களின் நபி’ – மூன்று:நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். அதற்கு சோடிக்கப்பட்ட சில காரணங்களையும் கூறுகிறார்கள். ‘நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருந்தால் நபியவர்களுக்கு எழுத்தறிவித்த அந்த ஆசான் நபிகளாரை விடவும் அந்தஸ்த்திலும் , மகத்துவத்திலும் உயர்ந்து விடுவார். 

அப்படியொருவரை அல்லாஹ் நியமிக்கவில்லை. யாரையும் அப்படி செய்யவும் அனுமதிக்கவில்லை. ஆதலினால், அல்லாஹ் அவருக்கு எழுத்தறிவையும், வாசிக்கும் திறமையையும் வழங்க மறுத்து விட்டான். இந்த செயலின் மூலம் அல்லாஹ் இந்த சமூகத்துக்கு பேருபகாரம் ஒன்றை செய்திருக்கிறான். அதனால்தான் இஸ்லாத்தின் எதிரிகள் நபியின் ஆசானை அறிந்துக் கொள்ளவில்லை.’ 

இப்படித்தான் அவர்கள் நினைக்கிறார்கள். அதனை சொல்கிறார்கள். மற்றவர்களுக்கும் இதனை விசுவாசிக்குமாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.
அவர்களிடம் நாம் திருப்பி ‘நபிகளாருக்கு அனைத்து அறிவுகளையும் கற்றுக் கொடுத்த ஆசான் யார்?’ என்று கேட்டால், ‘அல்லாஹ்’ என்கிறார்கள்.அல்லது ‘ஜிப்ரீல்’ என்று சொல்கிறர்கள்.

‘அப்படியா?....நல்லது! நபிகளாரின் ஆசான்களான அல்லாஹ்வும் ஜிப்ரீலும் நபிகளாருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். சரி! அவர்கள் அப்படிக் கற்றுக் கொடுக்கும் பொழுது எழுத்தறிவையும் வாசிக்கும் திறமையையும் ஏன் கற்றுக் கொடுக்கவில்லை?’ என்று கேட்டால், ‘அது அப்படித்தான். கேள்விகள் கேட்காமல் நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல் குர்ஆனில் எழுத்தறிவும், வாசிப்பறிவும் இல்லாத சமூகத்திலிருந்துதான் நபிகளாரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறான். ஆதலினால், நபிகளாருக்கும் எழுத்தறிவும் வாசிப்பறிவும் அறவே இல்லை.’ என்று மிடுக்குடன் பதில் சொல்கிறார்கள்.

‘சரி!...அல்லாஹ்வும் ஜிப்ரீலும் நபிகளாருக்கு கல்வியறிவையும், ஞானத்தையும் போதித்ததன் பின்னர் அவர் ஞானவானாக, அறிவாளியாக மாறி விடுகிறாரே.....அந்த அறிவாளியை, ஞானவானை கல்லாதவர் என்று சொல்வது அழகில்லை இல்லையா?’ என்று கேட்டால் திரு திருவென விழிக்கிறார்கள். அடர்ந்த மௌனம் காக்கிறார்கள். 

அமைதியாக ஒன்றுமே நடக்காத மாதிரி கடந்துப் போகிறார்கள்.

அல் குர்ஆனில் அல்லாஹுத்தாலா நபிகளாரின் மகத்துவமான தனித்தன்மை கொண்ட ஆசானைப் பற்றி அறிமுகம் செய்திருக்கிறான்.

யாரது?

பதிலை அல் குர்ஆனே சொல்லட்டும். கேட்டவுடன் நீங்களும் அந்த ஆசானுக்கு முழுதாக சரணடைந்து விடுவீர்கள். இஸ்லாமிய அறிஞர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சப்பரை அறிஞர்களை முழுதாக புரிந்துக் கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.

‘(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.’ [4:113]

புனித அல் குர்ஆன் நபிகளாரின் ஆசானாக அல்லாஹ்வை அறிமுகம் செய்து விட்டது. 

அல்ஹம்துலில்லாஹ். 

வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரின் ஆசான் இல்லை.
இந்நிலையில், நபிகளாருக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்று யாராவது கூறினால் அதன் அர்த்தம் என்ன? அப்படி சொல்கிறவர் பேரறிஞர் ஆகிறார். அனைத்தையும் விமர்சிக்கும் அவர் இப்பொழுது கடமையில் தவறு செய்த அல்லாஹ்வையும் அவரை அறியாமல் விமர்சிக்கிறார். 

எப்படி தெரியுமா?

‘அகிலங்களின் இரட்சகனான அந்த இறைவன் அகிலங்களின் அருட்கொடையான நபிகளாருக்கு ஆசானாக இருந்ததாக சொல்லி விட்டான். என்றாலும், மகத்துவமிக்க அந்த ஆசான் நபிகளாருக்கு எழுத்தறிவையும், வாசிக்கும் அறிவையும் சொல்லிக் கொடுக்கத் தவறி விட்டான். இதன் மூலம் தனது கடமையில் தவறு செய்து விட்டான்.’

சில விசயங்களை விவரிப்பது இவ்விடத்தில் கடமையாகிறது. இறுதித் தூதரக அனுப்பப்பட்ட நபிகளாருக்கு சுமார் எழுபது மொழிகளின் அல்லது எழுபத்து இரண்டு மொழிகளின் அறிவை அல்லாஹ் கற்றுக் கொடுத்திருந்தான். உலகத்தின் அனைத்து மொழிகளிலும் உரையாடும் திறமையை, வாசிக்கும் திறமையை, எழுதும் திறமையை நபிகளார் பெற்றிருந்தார்கள். 

அப்படி இருந்தால்தானே அவரால் இறுதி நபியாக இருக்கும் தகுதியிருக்கும். அந்தத் தகுதி நபிகளாருக்கு இருந்தது. அறபுகள் அல்லாத் சிலருடன் அவர்களின் மொழியில் நபிகளார் உரையாற்றியதாக சில பதிவுகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது.

நபிகளாரிடம் வந்த ஒரு ஒட்டகம் தனது எஜமான் அதற்கு செய்யும் கொடுமைகளை முறையிட்டதாம். ஒரு மரம் நபிகளாருக்கு ஸலாம் சொன்னதாம். நபிகளார் சாய்ந்திருந்து உரையாற்றிய பேரீத்த மரக் குற்றி மஸ்ஜிதுன் நபவியில் பிரசங்க மேடை அமைக்கப்பட்டவுடன் அழுததாம். சான்றுகள் இருக்கின்றன. 

இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

எனக்கும் எனது நண்பர்களுக்கும் இப்படியான சான்றுகள் அவசியமில்லை. நாம் அல்லாஹ்வை முழுமையாக விசுவாசிக்கிறோம். அவனது வல்லமையை ஏற்றுக் கொள்கிறோம். அவன் நபிகளாரின் ஆசானாக இருந்த செய்தியை அல் குர்ஆன் அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு அது போதும். 

அல்ஹம்துலில்லாஹ்.

இனி இன்னொரு கேள்வி உங்கள் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். உங்களின் சார்பில் பயாசிடம் அதனையும் கேட்டுவிடுகிறேன். ‘எழுதும் அறிவும், எழுதுவதை வாசிக்கும் அறிவும் நபிகளாருக்கு இருந்ததாக நீங்கள் சொல்கிறீர்கள். அதுவும், உலகத்திலிருக்கும் அனைத்து மொழிகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்று இருந்ததாக இன்று சொல்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் எழுத வாசிக்கத் தெரிந்த உங்கள் நபி வஹியை எழுத எதற்காக மற்றவர்களின் உதவியை நாடி நின்றார்? அவர் தனது கைகளால் எழுதியதை எந்த சஹாபாவும் பார்த்ததில்லையே? 

ஹாஹ்ஹாஹ்ஹா....உங்கள் பாணியில் சொல்வதானால் இதுவும் அல்லாஹ்வின் கட்டளையா?’

அட.......நானே வலுவில் தண்டவாளத்தில் தலையை வைத்து விட்டேனா?

‘பயாஸ்..... எதற்கு இந்த விஷப்பரீட்சை. அறபு பண்டிதர்கள் உன்னை சூழ்ந்திருக்கிறார்கள். உன் பதிவிலிருக்கும் குறைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். உன்னைக் கவிழ்க்க தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள். நிலத்தில் வீழ்ந்தாயோ அவ்வளவுதான். உன்னை மிதித்தே சட்னி செய்து விடுவார்கள். பேசாமல் ஜூட் ஆகிறதுதான் சமர்த்து.’

ஆரோக்கியமான கருத்தாடல்கள் கௌரவமாக வரவேற்கப்படும்.

தேடல்கள் தொடரும்- இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad