அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 25, 2017

அல் பத்ர் - சில விளக்கங்கள்!


ஹேய்.....பயாஸ்....ஒன்றை எழுதும் முன்னர் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லனும்னு பயந்துக் கொள்ளுங்கள்?- இது ஒரு அன்பரின் அறிவுரை.

விவிலியம் பழைய ஏற்பாட்டில் அல்லாஹ் அவனது அடியார்களுக்கு அற்புதமான அனுமதியொன்றை கொடுத்திருக்கிறானாம். மேலே என்னைப் பயமுறுத்திய அந்த அன்பர் இப்படியும் சொன்னார். அதனை வாசித்தவுடன் இன்றைய இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாத்தை களங்கப் படுத்திக் கொண்டிருக்கும் ஐசிஸ் பயங்கரவாதிகள் எனது நினைவில் வந்தார்கள். அவர்களும் இந்த அனுமதியைத்தான் இஸ்லாமிய சரிஆ என்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

"அவர்கள் உன்னோடே யுத்தம் பண்ணுவார்களானால் நீ அதை முற்றிக்கைபோட்டு உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் போது அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக் கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும், மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோட வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய் கர்த்தர் உனக்கு ஒப்புக் கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அனுபவிப்பாயாக. (விவிலியம் பழைய ஏற்பாடு உபகாமம் 21: 12-14).

நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த மக்கள் எதிரிகளுடனான யுத்தத்தில் வெற்றிபெற்றவுடன் இப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அனுமதியை புனித இஸ்லாம் ரத்து செய்துவிடுகிறது. அதுதான் நிஜம். அல் பத்ர் யுத்த வெற்றிக்குப் பின்னர் நபிகளார் கைதிகளை கவனமாக பராமரித்தக் கதைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அந்தக் கதைகளைத் தெரிந்துக் கொள்ள ஆவலுள்ளவர்கள் முந்தைய பதிவை வாசித்துக் கொள்ளுங்கள். அந்தப் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டம் ஒன்றே இப்படி சமாதானம் சொல்கிறது. சமாதானம் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டக் காரணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

பத்ர் யுத்தத்தின் பின்னர் நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் கட்டளைக்கும் ரசூலின் கட்டளைக்கும் மாறு செய்து விடுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு நிகழவிருந்த அல்லாஹ்வின் வேதனையொன்று அல்லாஹ்வின் கருணையினால் தடுக்கப்பட்டு விடுகிறது. இனிமேல் இப்படியான தவறுகளை செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் அவர்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

நபித்தோழர்கள் அனைவரும் தவறே செய்யாத உத்தமர்கள் என்ற மாயையை உருவாக்கிய சிலருக்கு இந்த உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவர்கள் பத்ர் களத்தில் நடைபெற்ற தவறை வெவ்வேறு விதமாக திர்புபடுத்திக் கூறி சஹாபாக்களை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி, அத்தகைய அறிஞர்கள் ஒருபடி மேலே சென்று ஹசரத் உமர் (ரலி) அவர்களை நபிகளாரை விடவும் உயர்த்தி பேசியும் இருக்கிறர்கள். எனக்கு இந்தக் கதைகளில் ஆர்வமில்லை. அவை அவசியமும் இல்லை. பத்ரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம்.

என்னுடைய இரட்சகன் அல்லாஹ்வின் அருளால் அந்த உண்மைகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. எனது மரியாதைக்குரிய ஆசான்களான இமாம் தபரி இதனை தெளிவு படுத்தியிருக்கிறார். அவரது அல் குர்ஆன் தப்சீரும், வரலாற்று கிரந்தமும் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. அன்றிலிருந்து இன்றுவரை ஏனைய இஸ்லாமியக் கிரந்தங்களுடன் ஒப்பிடுகையில் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன.

என்னுடைய கதைக்கு உயிர் கொடுத்த மற்ற ஆசானின் பெயர் இமாம் ஹாகிம். அவர் ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு அறிஞர். அந்த நூற்றாண்டில் இவரை விடவும் ஒரு பேரறிஞர் இருக்கவில்லை. ஹிஜ்ரி மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளின்
முஹத்திதீன்களின் இமாம் என்று அழைக்கப்பட்டார். இத்தகைய
பெருந்தகை ை அவரது எழுபத்து இரண்டாம் வயதில் ஹதீஸ் கிரந்தமொன்றை எழுதத் துவங்குகிறார். இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் ஆகிய பெருந்தகைகள் அவர்களின் கிரந்தங்களில் ஏற்றுக் கொண்ட அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்களை இவர் சேகரிக்கிறார். புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களை எழுதும் பொழுது அந்த இமாம்கள் கடைபிடித்த அதே ஒழுங்கையும் இவர் பின்பற்றுகிறார். இமாம் புஹாரியும், இமாம் முஸ்லிமும் அவர்களது கிரந்தங்களில் பதியாத ஹதீஸ்களை மாத்திரம் இவர் தனது கிரந்தத்தில் பதிகிறார். அந்தக் கிரந்தத்துக்கு ‘அல் முஸ்தத்ரக் அல் சஹீஹைன்’ என்று பெயரிடுகிறார். அதன் பின்னர் அதனை மக்கள் மன்றத்தில் அறிஞர்களின் மத்தியில் சமர்பிக்கிறார். புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களுக்கு நிகரான கிரந்தமாக அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த நூற்றாண்டிலிருக்கும் முகநூல் ரொட்டி லெப்பைகள் இந்த இமாமின் நூலை ஏற்றுக் கொள்வதில்லை. ஆட்சேபனையில்லை.

எனக்கு பத்ர் சம்பந்தமான தேடல்களை முடுக்கிவிட்ட அடுத்த ஆசானின் பெயர் அல்லாமா ஷிப்லி நூமானி. இந்த மகான் இந்தியாவில் ஹிஜ்ரி ஆயிரத்து இரு நூறில் பிறந்தவர். நபிகளாரின் வரலாற்றை எழுதிய அவரது சீரத்துன் நபி நூலில் அவர் நான் சொன்ன அதே கதைகளை சொல்லியிருக்கிறார. சூசகமாக இன்னும் சில உண்மைகளையும் தொட்டு சென்றிருக்கிறார். அவரது நூல்கள் அனைத்தும் பலகலைக்கழக இஸ்லாமியப் பிரிவில் பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவுரையாளர்களுக்கு கற்றும் கொடுக்கப்படுகின்றன.

அந்தப்பதிவில் நான் சொன்ன கருத்துக்களை இந்த மகான்களின் நூல்களில் நான் வாசித்திருக்கிறேன். அந்த நூலகள் என்னுடைய அலுவலகத்தில் இருக்கின்றன.

அர் ரஹீகுல் மக்தூம் என்றொரு நூல் ஹிஜ்ரி ஆயிரத்து முன்னூறின் இறுதிப்பகுதியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூல் நபிகளாரின் வரலாற்றைக் கூறுகின்ற நூல்களில் ஒன்றாகும். அதனை சபியூர் ரஹ்மான் முபாரக் பூரி என்ற இஸ்லாமிய அறிஞர் தொகுத்திருக்கிறார். இவரும் அல்லாமா ஷிப்லி நூமானி பிறந்த உத்திர பிரதேசத்தில் பிறந்தவர்.

அவரது வரலாற்று நூலில் நான் குறிப்பிட்ட பத்ர் சம்பவங்களைக் காண முடியவில்லை. அதற்கு மாற்றமாக, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தவறுகளை பூசி மெழுகுுகின்ற சம்பவங்களே இருக்கின்றன. அந்த நூலை சவூதி அரசாங்கம் பல மொழிகளில் மொழி பெயர்த்து உலகம் பூராவும் இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறது. இஸ்லாமிய அறிஞர்கள் என்று அறியப்படுகின்ற பலர் இந்த நூலை மரியாதையுடன் பேணிப் பாதுகாக்கிறார்கள். அந்த நூலில் இருக்கின்ற அப்பட்டமான பொய்களை உண்மை என்று விசுவாசித்து அதனை மக்கள்மயப்படுத்துகிறார்கள்.

அர் ரஹீகுள் மக்தூம் அரபு நூல் முஹம்மத் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் விற்பனைக்கும் இருக்கின்றது. அதில் பத்ர் யுத்தம் சம்பந்தமாக சொல்லப்படுகின்ற சம்பவங்களில் நாம் கருத்தாடும் சம்பவம் பற்றிய குறிப்பும் காணக்கூடியதாக இருக்கிறது. சிலபோது அந்நூல் உங்களது வீட்டு நூலகத்திலும் இருக்கலாம். எடுத்துப் புரட்டுங்கள். 286ஆம் பக்கத்தைப் பாருங்கள்.

‘(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற ) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத்தொகையை ) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல் குர்ஆன் 8: 67,68)’

இப்படி இருக்கிறதுதானே?

இதனை வாசிக்கும் ஒருவர் நபிகளார் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக நட்ட ஈட்டுப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கைதிகளை கொலை செய்யாமல் இருந்திருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். இல்லையா?

ஆனால்,அல் குர் ஆனின் போதனையை தந்திரமாக திரிபுபடுத்தி இந்நூலில் பதிந்திருக்கிறார்கள். அல் குர் ஆனின் மொழி பெயர்ப்பு இப்படியான கருத்தை சொல்லவில்லை. உண்மையில் அந்த வசனங்கள் என்னதான் கூறுகின்றன......

(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.(8: 67)

அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.(8:68)

ஒரு மனிதனை காரணமின்றி சிறை பிடிப்பது நபிகளாருக்கு தகுதியில்லை. பூமியில் குழப்பம் செய்து மனிதர்களை கொலை செய்ய துணியும் மக்கள் மாத்திரமே கைது செய்ய முடியும். அப்படி கைது செய்ததன் பின்னர் அவர்களுடன் மிகக் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.

பத்ரில் இதுதான் நடந்தது.

சவூதி அரசில் மான்யம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஹசரத் முபாரக் பூரியினால் எழுதப்பட்டு அதற்குரிய மானியமும் பெற்றுக் கொள்ளப்பட்ட வியாபார நூலை நீங்கள் விசுவாசித்தால், அதனை உண்மை என்று நம்பினால், அந்நூலை விலை கொடுத்து வாங்கி நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தால் ஆட்சேபனையில்லை. ஆனால், நானும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். அதற்கு அல்லாஹ்வை, மறுமை நாளை, அந்நாளின் விசாரணையை சொல்லி என்னைப் பயமுறுத்தாதீர்கள்.

அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad