அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, February 2, 2011

"நளீமிய்யாவின் இளம் உலமாக்களுக்கு பொருத்தமான ஒரு ஆய்வு தளம்."



"நளீமிய்யாவின்  இளம்  உலமாக்களுக்கு பொருத்தமான ஒரு ஆய்வு தளம்."
முதலாவது ஆய்வு தளம்.

அண்மையில் இனைய தளம் ஒன்றில் உஸ்தாத் மன்சூர் அவர்களின் பகிரங்க பேச்சொன்றை காணும் வாய்ப்புக் கிட்டியது.- அல்ஹம்துலில்லாஹ்.

அவரது உரையாடலில் ஒரு கட்டத்தில் "அஹ்ளுல்பைத்களைப்' பற்றிக் குறிப்பிடும் சூறா அஹ்ஜாபின் 33  :  33   வது ஆயத்துக்கு மிகவும் தப்பான விதத்தில் அர்த்தம் சொன்னதை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

அவரது உரையாடல் நெடுகிலும் "அஹ்ளுல்பைத்களுக்கு" ஆதரவான- அதே சமயம் உண்மையான நேர் வழியைத்  தேடி ஆய்வு செய்கின்ற பட்சத்தில் நேரிய பாதையை தெளிவு படுத்துகின்ற ஆய்வுக்குரிய   அனைத்து ஆதாரங்களையும் "சர்ச்சைக்கு உரிய ஆதாரங்கள்" என்கிற தோரணையில் பேசியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவர் பேசிய அனைத்து விடயங்களும் எமது ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.



எமது இந்த ஆய்வில் அஹ்ளுல்பைத்களின் எதிரிகளினால் திட்டமிட்டு மிகக் கவனமாக புனையப் பட்டக் கருத்துக்களில் - உஸ்தாத் மன்சூர் போன்ற மார்க்க மேதைகளினால்   மிகவும் கவனமாக காவி வரப் பட்ட ஒரு   கருத்தை மிக பகிரங்கமாக நாம் எமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

உஸ்தாத் மன்சூரின் உரையில் இருந்து இன்று, நாம் நமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனம் இதுதான்:

"................(நபியின்) வீட்டையுடயவர்களே ! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். ( அல் குரான்-33 :  33  )

இந்த வசனம் குறிப்பிடும் அஹ்லுல் பைத்களான நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்கள் யார்?

அஹ்ளுல்பைத்களுக்கு ஆதரவான அனைவரும் , இந்த ஆயத் குறிப்பிடும் நபி (ஸல்) அவர்களின் வீட்டார் அன்னை பாத்திமா (அலை) அவர்களின் வீட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

உஸ்தாத்  மன்சூர் தனது உரையில் இங்கே அல்லாஹ் குறிப்பிடுவது நபி (ஸல்) அவர்களின் மனைவியரையும் சேர்த்து  என்று நமட்டுச் சிரிப்புடன் கூறுகிறார்.

அது போதாதற்கு ,பார்வையாளர்களிடம்     ஒரு கேள்வியை கேட்டு, பாவம் அந்த பார்வையாளர்களையும் தடம் பிறழ்ந்த தன்னுடன் கூட்டுசேர்த்துக் கொள்கிறார்.

"நாம் எல்லாம் வீட்டார் என்று கூறும் பொழுது அதில் அப்படி குறிப்பிடப் படுபவரின் மனைவியையும் சேர்த்துக் கொள்வோம் தானே?" என்று பார்வையாளர்களிடம் அப்பாவித்தனமாக கேட்கிறார்.

நாம் எமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அல் குரான் வசனத்துக்கு ஆதார பூர்வமான பல ஹதீத்கள் எம்மிடம் இருப்பது என்னவோ  உண்மை.

இருந்தாலும்,   அந்த அல் குரான் வசனத்தையே எமது கருத்துக்கு வலுவான ஆதாரமாக  முன் வைக்க விரும்புகின்றோம்.

ஏனெனில், எப்பொழுதும் அல் குரானுக்கு சரியான விளக்கம் அல் குரானிலேயே அடங்கி இருப்பது புனித அல் குரானின் அற்புதங்களில் ஒன்று.

நளீமிய்யாவின் எதிர்கால உலமாக்களே! நீங்களும் எங்களுடன் இந்த முக்கியமான ஆய்வில் துணை நில்லுங்களேன். 

எங்களுக்கு சரியான பாதையை காட்ட அல்லாஹ் போதுமானவன்.

" நபியின் பெண்களே ! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சினால் (அந்நியருடன் நடாத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம் ) இருக்கின் றதோ - அவன் சபலங் கொள்வான். இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்"
(அல் குரான் 33  :  32    )

"நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள்.முந்திய அறியாமைக் காலத்தில் வெளிப் படுத்தி திரிந்துக் கொண்டிருந்ததைப் போல் நீங்கள் வெளிப் படுத்தி திரியாதீர்கள். தொழுகையை கடைப் பிடியுங்கள்; சகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப் படியுங்கள். ........."

இந்தக் கட்டம் வரை அல் குரான் உடைய உரையாடும்  தொணி பொதுவான பெண்களுக்கு அறிவுரை சொல்லி வருவது போல ஒலிக்கிக்றது.

அது மட்டுமன்றி பெண்களை விளித்தே அது பேசுகிறது.ஆனால் நபியின் பெண்கள் என்கிற வார்த்தைப் பிரயோகம் மட்டுமே இந்த இடத்தில் இது நபி (ஸல்) அவர்களின் வீட்டைச் சேர்ந்த பெண்களுக்கு பிரத்தியேகமாக அருளப்பட்டது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

"வ கர்ண" என்கிற  வார்த்தைப் பிரயோகம் பெண்களை மட்டுமே விளித்து உரையாற்றப் படும் ஒரு சொல்லாகும். அதேபோல, "பீ புயூதிகுன்ன"  என்கிற பதப் பிரயோகமும் பெண்களை மட்டும்  முன்னிலைப் படுத்தும் பதப் பிரயோகம் ஆகும்.

இந்த வகையில் அல் குரானின்  இந்த வார்த்தைப் பிரயோகமும் , அது சொல்லும் அறிவுரையும்   நபி (ஸல்) அவர்களின்  குடும்பத்தில் இருக்கும்  எல்லாப் பெண்களுக்கும் பொதுவானதே தவிர, நபி (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல.

"நீங்கள் உங்கள் வீடுகளிலேயே .......... என்கிற கட்டத்தில் "பைத்" என்கிற ஒருமைக்குப்  பதிலாக "புயூத்" என்கிற பன்மையில் அல் குரான்  பேசுகிறது.

இந்தப் பொதுவான அறிவுரை சொல்லும் பாணி முடிந்த பிறகு, அல்குர் ஆணின் தொணி சரேலென்று வேறு படுகின்ற அழகை கவனியுங்கள்.

"(நபியின்) வீட்டை உடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான்"

புனித அல் குரான் "............அன் குமுர்ரிஜுசா அஹ்ளல்பைதி...." என்று ஒலிக்கிறது.

இங்கே அஹ்லுல்பைத் -'"வீட்டையுடையவர்களே"  என்று ஒருமையில் விளிப்பதை கவனியுங்கள்.

உஸ்தாத் மன்சூர் சொல்லுவது போல நபி (ஸல்) அவர்களின் மனைவியரையும் இந்த வசனம் உள்வாங்குவதாக இருந்தால் "அஹ்லுல்பைத்" என்கிற ஒருமைக்குப் பதிலாக "அஹ்லுல் புயூத்" என்கிற பன்மைச் சொல்   பிரயோகமும், மனைவியரை மட்டும் தனித்து குறிப்பிடும் "லி அழ்வாஜிக" என்கிற வார்த்தைப் பிரத்தியேகமாக அல் குரானில் ஒலித்து     இருக்கும்.

ஏனெனில், அதே வசனத்தில் "புயூத்' என்கிற பதப் பிரயோகம் நபி (ஸல்) அவர்களின் பெண்களின் வீடுகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது சொல்லியாகிவிட்டது.

ஆனால், அஹ்ளுள்பைத்களுக்கு எதிராக இயங்கிய அதிகார வர்க்கங்கள் இங்கே ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.

அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த, உலகாயுத இன்பங்களுக்கு விலை போன புத்தி ஜீவிகளின் துணை கொண்டு, இந்த வசனம் குறிப்பிடும் 'நபியின் வீட்டார்கள் எனப் படுவோர்   பாத்திமா  (அலை) அவர்களின் வீட்டார்களுடன்  அல்லாஹ்வின்  தூதரின் மனைவியரும் அடங்குவார்கள்  என்று எம்மை கொஞ்சம் குழப்பி,திசை திருப்பி விட்டார்கள்.

இனி அல் குரானின் அடுத்த பதப் பிரயோகத்தை கவனியுங்கள்.

அந்த வசனத்தில் புனித அல் குரான் "............அன் குமுர்ரிஜுசா அஹ்ளல்பைதி...." என்று ஒலிக்கிறது.

"அன்குமூர்........." என்கிற இணைச் சொல் ஆண்களை மட்டும் குறிக்கும் சொல்லாக அல்லது ஆண்களையும் அந்த ஆண்களுடன் இருக்கிற பெண்களையும் இணைத்து சொல்லும் சொல்லாக அரபு இலக்கணத்தில்  பிரயோகிக்கப் படுகிறது.

அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடு என்கிற ரீதியில் பல வீடுகள் இருந்தன.

ஆனால், அந்த வீடுகள் எதிலும் ஆண்கள் இல்லை.

அதே போல நபி (ஸல்) அவர்களுக்கு ஆண்களும், பெண்களும் இருந்த இன்னுமொரு வீடு இருந்தது .

அது அன்னை பாத்திமா (அலை) அவர்களுடைய வீடு.

"அஹ்ல்" என்கிற வார்த்தைக்கு "உடையவர்கள்" அல்லது 'அங்கத்தவர்கள்" என்று பொருள் படும்.

"அஹ்லுல் பைத்" என்பது "அங்கத்தவர்கள் உடைய வீடு" அல்லது "வீட்டை உடையவர்கள்"  என்கிற அர்த்தத்தை தருகிறது.

அக்காலப் பிரிவில் எந்த வீட்டில் நபி (ஸல்) அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் இருந்தார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் ,அன்னை பாத்திமா (அலை) அவர்களின் வீட்டைத் தவிர வேறு எந்த வீட்டிலும் நபி (ஸல்) அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் இருக்கவில்லை என்பதே  நிஜம்.

"நபியின் வீட்டார்களே ..." என்று எந்த வீட்டை அல்லாஹுத்தஆலா குறிப்பிட்டான் என்பது இப்பொழுது தெளிவாக புரிந்து இருக்கும்.

இது தவிர, "அஹ்லுல் பைத்" என்கிற வார்த்தை பிரயோகத்துக்குப் பதிலாக "அஹ்லுல் புயூத்" என்கிற வார்த்தைப் பிரயோகம் வந்திருந்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் வீடுகளை குறிப்பிடுவதாக கருத முடியும்.
ஆனால் அப்படி இல்லையே?

இதே சூராவில் பல இடங்களில் அல்லாஹுத்தஆலா நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

அந்த இடங்களில் எல்லாம் " யா ஐயுகன் நபியு குள் லி அழ்வாஜிக ..." ("நபியே! உம்முடைய மனைவிகளிடம் ...") என்று மிக தெளிவாக "மனைவிகள்" என்று குறிப்பிட்டு இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

 சூறா 'அஹ்ஜாபில்" மட்டும் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் நபியின் மனைவியர் என்று வருகின்ற இடங்களில் "லி அழ்வாஜிக" என்ற வார்த்தைப் பிரயோகம் உபயோகிக்கப் பட்டிருப்பதை அவதானிக்கவும்.

ஆனால், இந்த ஆயத்தில் அது இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

உதாரணமாக; ( 33 :  06  ,  33  :  28  ,  33  :  50   ,   33   :    53   ,   33  :   59  ,    66   :    01   ,   66  :   03     )
ஆகிய அனைத்து அல் குரான் வசனங்களில் அல்லாஹுத்தஆலா நபியின் மனைவியரை "லி அழ்வாஜிக" என்று அழைத்திருப்பதை கவனியுங்கள்.

சூறா  அஹ்ஜாப் வசனம் 33 :  32  ,  33   :  33 ஆகிய வசனங்களில் மனைவியர்  என்கிற வார்த்தைப் பிரயோகத்தையே காணமுடியவில்லையே?

நபியின் மனைவியர் என்கிற வார்த்தைக்குப் பதிலாக நபியின் பெண்களே என்று தானே இந்த வசனம் விளிக்கப் படுகிறது?

இதன் படி சில சமயம் இந்த வார்த்தைப் பிரயோகத்தின் படி இது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் இருந்து இறுதி நாள் வரை வருகின்ற பெண்களையும் விளித்து அருளப் பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம் தானே?

சரி அதையும் விடுங்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில்  யாராவது ஒருவர் "நபியின் வீட்டார் ...."என்கிற இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் மனைவியரையும் குறிக்கும் என்று எங்காவது வாதிட்டு இருக்கிறார்களா?

அப்படியாயின் யார்?  எங்கே?  எப்பொழுது?

நபி (ஸல்) அவர்களின் மனைவியரே அஹ்ளுல்பைத்கள் எனப்படுவோர் அன்னை பாத்திமா (அலை) அவர்களின் வீட்டார் என்று ஒருமித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, எமது இந்த தலைவர்களின் தடம் பிறழ்ந்த பேச்சுக்களின்  நிஜமான இரகசியங்கள் என்னவாக இருக்கும்?

"எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அவர்களுக்கு முன் இருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப் படுவார்கள்.திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். இறை நிராகரிப்பாளர்களுக்கு இழிவு படுத்தும் வேதனை உண்டு." ( 58   :   05   )

ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறியதாவது;

ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டக சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப்  போர்வை அணிந்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

அப்போது அவரது பேரன் ஹசன் பின் அலி (அலை) அவர்கள் வந்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன்(அலை) அவர்களை தமது போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு ஹுசைன் (அலை௦) அவர்கள் வந்தார்கள். அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு மகள் பாத்திமா (அலை) அவர்கள் வந்தபோது அவர்களையும் ,  அவருக்குப் பின்னால் வந்த அலி (அலை) அவர்களையும் அந்தப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் "................(நபியின்) வீட்டையுடயவர்களே ! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். ( அல் குரான்-33 :  33  )"  என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
(ஆதாரம்; ஸஹிஹ்  முஸ்லிம் - நான்காம் பாகம் 4807 வது ஹதீத்.)          

( இந்த ஆய்வுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டித் தந்த  உலமாக்களுக்கும், ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கும் எமது உளப் பூர்வமான நன்றிகள்)


In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad