அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, February 10, 2011

"அல்லாஹ்வின் எதிரிகளும் , நம்ரூதின் நண்பர்களும் "


"அல்லாஹ்வின் எதிரிகளும்  , நம்ரூதின் நண்பர்களும் "

உலகத்தில் முதன் முதல் ஜனநாயக முறையை அறிமுகப் படுத்தியது யார் என்று பார்த்தால் அந்தப் பெருமை பண்டைய   பபிலோனிய அல்லது மெசெபோதோமியன் நாகரிகத்தையே சாரும்.

அன்றைய காலத்தில் பரம்பரை பாராம்பரியத்தை  கொண்ட ஒருவர் அரசனாக இருப்பார். அதற்கு கோத்திரம் ஒரு காரணமாக இருந்தாலும், ஆளுமையும் ஏனையோரை அடக்கி ஆளும் தன்மையும் அதற்குப் பிரதான காரணியாக இருக்கும்.

அந்த அரசனைச் சுற்றிலும் உயர் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆட்சி செய்யும் முறைகளில் அரசனை வழி நடாத்திக் கொண்டு இருப்பார்கள்.

முக்கியமான சட்டஅமுலாக்கல்களை   இந்தஉயர்கோத்திரத்தை  சேர்ந்தவர்களே
தீர்மானிப்பார்கள்.

வாக்குப் பதிவின் மூலம் அந்த சட்ட திட்டங்கள் தீர்மானிக்கப்படும்.

இதன் மூலம் உலகில் முதன் முதலில் வாக்களித்து , அதன் மூலம் திட்டங்களை முடிவு செய்வது என்கிற ஜனநாயக முறை மேசெபோதோமியன் நாகரிகத்தில் இருந்தே தோற்றம் பெற்றது என  கூற முடியும்.

உயர் கோத்திரத்திலும் வாக்களிக்கும் தகுதி குறைந்தது ஒரு இலட்சம் அடிமைகளுக்கு சொந்தக்காரனாக இருக்கும் உரிமையாளனுக்கே வழங்கப்பட்டது.

சாதாரணமாகவே அந்த உயர் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான அடிமைகளுக்கு உரிமையாளனாக அக்காலத்தில் இருந்து இருக்கிறார்கள்.



பண்டைய பபிலோனிய அல்லது மெசெபோதோமியன் நாகரிகம் கட்டிடக் கலைக்கு பிரசித்தம்.

வண்டிகளின் சக்கரங்களை      உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் என்கிற பெருமையும் அவர்களை சாரும்.

இது தவிர மூலிகை மருத்துவத்தில் அவர்கள் தலை சிறந்து விளங்கினார்கள்.

பண்ட மாற்று வியாபாரத்திலும் முக்கிய இடத்தை வகித்தார்கள்.

சுருக்கமாக சொன்னால், இன்றைய அமெரிக்காவைப் போல அக்காலப் பகுதியில் இந்த உலகை தான் பிடிக்குள் வைத்திருந்த சமூகம் அது.

பெரிய பெரிய கட்டிடங்களை அமைப்பதற்கு மிகப் பிரமாண்டமான கருங்கல்  பாறைகளை  ஐரோப்பாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் கொண்டு வருவார்கள்.

எம்மைப் போன்ற மக்களை   அடிமைகளாகக் கொண்டுதான் இந்த வேலையை வாங்கினார்கள்.

இலட்சக் கணக்கான அடிமைகள் இந்த வேலைக்குப் பயன் படுத்தப் பட்டார்கள்.

இந்த தலைவர்கள் தங்களது கடவுள்களாக மிகப் பிரமாண்டமான சிலைகளை செதுக்கி அவற்றை வணங்கியும் வந்தார்கள்.

இந்த நாகரிகத்தில் வந்த நம்ரூத் என்கிற அரசன் அவனது வல்லமையினால் தன்னை இறைவன் என்று சொல்லி அவனை வணங்குமாறு அவனது மக்களை பணித்தான்.

பெரிய பெரிய நகரங்கள் அவனது பெயரில் உருவாக்கப் பட்டன.

பெரும் கோயில்கள் அவன் பெயரில் நிர்மாணிக்கப் பட்டன.

அவனது எல்லா செயல்களுக்கும் அவனது சபையில் இருந்த உயர் கோத்திரத்தினர் 'வாக்களித்து' அவனது செயல்களுக்கு உற்சாகமளித்தனர்.

இந்த ஜனநாயக முறைக்கும், அதர்மமான அடக்கு முறைக்கும், இறைவன் அல்லாத படைப்புகளுக்கு சிரம் சாய்த்து வணங்கும் வழிமுறைக்கும்  எதிராகத் தான் எங்களது இமாம் இப்ராஹீம் (அலை) எழுந்து நின்றார்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நம்ரூத்தின் அதே இறைவனுக்கு எதிரான செயல் முறையும், இறைவன் அனுப்பிய அவனது மக்கள் தலைவரின் அதிகாரத்துக்கு வேட்டு வைக்கும் வாக்களிக்கும் முறை மெல்ல மெல்ல மருவி புதிய பரிமாணங்கள் எடுத்து  எம்மை  ஆளுவது எமது துரதிர்ஷ்ட நிலையாகும்.

எப்படி என்கிறீர்களா?

நபி (ஸல்) அவர்களது காலத்தில் தாருன் நத்வாவில் உயர் கோத்திரங்களின் தலைவர்கள் ஒன்று கூடி வாக்களித்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

இந்த முறையை நபி (ஸல்) அவர்கள் முற்றாக ஒழித்தார்கள்.

இது இஸ்லாத்துக்கு எதிரான முறையாகும்.

நபி (ஸல்) ஒழித்த இந்த நடை முறையை ஹசரத் உமர் (ரலி ) நபிகளாரின் மறைவுடன் மீன்டும் கொண்டு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அவசர அவசரமாக மூன்று குறைஷிகளும் பல அன்சாரிகளும் ஒன்று சேர்ந்து முதலாம் கலீபாவை தெரிவு செய்தார்கள்.

இந்த செயல் முறை இப்ராஹீம் (அலை) அவர்களது மார்க்கத்துக்கு நேர் முரணானதாகும்.

இது நம்ரூத்   மன்னனின் உயர் கோத்திரத்தாரின் செயல் முறைக்கு ஒத்ததாகும்.

பின்னர், அந்த குழுவினர் செய்த முடிவை மக்களின் மீது திணித்து மூன்று நாள்களுக்குப் பிறகு பள்ளிவாசலில் மீன்டும்  மக்களிடம் 'பை அத்'  வாங்கினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற, மக்களை ஆளும்  இந்த தெரிவு செய்யும் முறை பிழையானது என்றும், அதன் கெடுதிகளில் இருந்து மக்களை அல்லாஹ் காப்பாற்றவேண்டும் என்று அவர் பின் நாளில் கூறியது இந்த தெரிவு முறையின் தவறுக்கு   நல்லதொரு அத்தாட்சியாகும்.

முஸ்லிம் சமூகத்தை ஆளும் அடுத்த தலைவரை முதலாவது கலிபா நியமித்தார்.

இந்தமுறை மன்னர்களின் வாரிசு முறைக்கு ஒப்பானதாகும்.

இதுவும் இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவ மார்க்கத்துக்கும் அல்லாஹ் மனித சமுகத்துக்கு காட்டித்தந்த வழிமுறைக்கும் முரணானதாகும்.

முஸ்லிம்  சமுகத்தை ஆளும் மூன்றாவது கலீபாவின் தெரிவு அறுவர் கொண்ட குழுவிடம் சில நிபந்தனைகளுடன் கையளிக்கப் பட்டது.

அது என்ன நிபந்தனை?

மூன்றாவது தெரிவு செய்யப் படும் இஸ்லாமியத் தலைவர் இப்ராஹீம் (அலை) அவர்களது மார்க்கத்துக்கு முரணாக செயற்பட்ட முதல் இரண்டு கலீபாக்களின் செயல் முறையை முற்று முழுதாக பின் பற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் எமக்கு சொல்லித்தந்த இஸ்லாமிய வழிமுறையையும் சேர்த்து மக்களை ஆள வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கூடிய இன்னொரு புதிய இறையாட்சிக்கு எதிரான மக்கள் தெரிவு முறை ஆட்சியை மக்களுக்கு அறிமுகப் படுத்தியதாகும்.

இந்த நிபந்தனைக்கு இமாம் அலி மறுத்த காரணத்தால் அவர் அறுவர் கொண்ட அந்தத் தெரிவுக்  குழுவால் முற்றாக நிராகரிக்கப்பட்டார்.

நம்ரூத்தின் அரச சபையில் இருந்த மக்களை ஆளும் சட்டங்களும், யாரை யார் ஆளுவது என்கிற தீர்மானம் எடுக்கும் முறையில் சில பகுதிகளும் முஸ்லிம்களிடையே  இப்படி திணிக்கப் பட்டது.

அமீர் முஆவியாவின் காலத்தில் முற்று முழுதாக இறைவனுக்கு எதிரான நம்ரூதின் செயல் முறைகள் அப்பட்டமாக மனித சமூகத்தில் 'அல்லாஹ்வின் பெயரால் , மா நபியின் பெயரால், எமது மத குரு மார்களின் வழிநடாத்தலில் மிக அற்புதமாக மக்கள்மயப்  படுத்தப் பட்டன.

விளைவு-

ஜிகாத் முலாம் பூசப் பட்ட வாட்கள் உரையில் இருந்து மீன்டும் உருவி வெளியே எடுக்கப் பட்டன.

அல்லாஹ்வின் சட்டத்தை இந்த உலகில் நிலைநாட்டப் போகிறோம் என்று சொன்னவார்களாக இஸ்லாமிய போர்வை போர்த்திய நம்ரூத்களின் சட்டத்தை நிலை நிறுத்த நாம் நிர்பந்திக்கப் பட்டோம்.

மனித சமூகம் வழமை போல உலகாயுத இன்பங்களுக்கு சோரம் போன மத குரு மார்களினால் மீன்டும் ஒருமுறை வழி கெடுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் பெயரால் அவனது அடியார்களை மீண்டும் நாம் ஆக்கிரமிக்கத் துவங்கினோம்.

நம்ரூத்தின் அதே அடிமைத்துவம் மக்களால் கவரப்பட்ட மத குரு மார்களுக்கு செவிசாய்த்து அடிபணிதல் என்கிற புதிய பரிணாமத்தில் மக்களை அடிமைப் படுத்துகின்ற அநியாயம் இப்பொழுது நடந்துக் கொண்டு இருக்கிறது.

மக்களை ஆளுகின்ற இறை ஆட்சிக்கு எதிரான நம்ரூத்தின் அரசாட்சி?

அதுவும் புதிய வடிவம் எடுத்து உள்ளது.

அது எப்படி?

இன்று நம்ரூத்தின் அந்த முறை மீள் பரிமாணம்   எடுத்து எம்மை ஆட்சி செய்யும் அழகை கவனியுங்கள்.

ஜமாஅத்தே இஸ்லாமில் அது ஷூரா உறுப்பினர்களின் முடிவு என்று தன்னை சொல்லிக்கொண்டு ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்களை ஆளுகிறது.

இஹ்வானுள் முஸ்லிமீனிலும் அதே போர்வையை போர்த்திக் கொண்டு அதன் அங்கத்தவர்களை ஆளுகிறது.

இலங்கை முஸ்லிம் காங்கிரசில் 'பொலி பீரோ' என்ற போர்வையில் அது எல்லா முஸ்லிம்களையும் ஆளப் பார்க்கிறது.

முழு உலகையும் ஐக்கிய நாடுகள்  சபை தீர்மானம் என்று பயமுறுத்தி இன்னொரு வடிவம் எடுத்திருக்கிறது.

ஒவ்வொரு நாட்டையும் 'யாப்பு' என்கிற , நாம் சரியாக அறியாத ஒருவரால் அல்லது ஒரு குழிவினரால் அல்லது சில தனி நபர்களினால் - சரியாக நம்ரூத்தின் உயர் கோத்திரத்தவர்கள் போல - வகுத்து வெறும் தாளில் எழுதப்பட்ட   சட்டங்களுக்கு கட்டு பட்ட நிலையில் மனித சமூகம் இப்ராஹீம் (அலை) நிலை நிறுத்திய இறை ஆட்சிக்கு எதிரான மக்கள் ஆட்சிக்கு அடிமைத்துவமாக ஆளப் படுகிறது.

ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும், ஜம்மியத்துல் உலமா அமைப்புககளிலும், இஸ்லாமிய இயக்கங்களிலும் இந்த யாப்பு மனிதர்களை ஆளும் விதத்தை உங்களால் அனுபவம் மூலமாகவே காணமுடியும்.

அல்லாஹ் மனித சமுகத்துக்கு அருளிய யாப்பு - அல் குர்ஆன்.

அல்லாஹ் மனிதர்களை நேர்வழிப் படுத்த அனுப்பிய தலைவர்கள் நபிமார்களாக இருந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைவர்கள் ரசூல்மார்களாகவும் இருந்து இருக்கிறார்கள்.

நபியும் ரசூலும் இல்லாத நிலையில் மனித சமுகத்தை யார்தான் வழி நடாத்துவது?

மக்கள் தாங்களாகவே தம்மை ஆள ஒரு தலைவரை தெரிவு செய்து கொள்வதா?

மனித சமுகத்தை அல்லாஹ் அப்படி நிர்க்கதியாகவா விட்டு வைத்தான்?

அந்த போக்கு சரி என்றால் நம்ரூதின் போக்கும் சரிதானே?

ஆனால், அல்லாஹ்வின் வழிமுறையில் தலைவருக்குப்  பின்னால் சமுகம் என்று இருக்கிறதே தவிர சமுகத்தின் தெரிவில் தலைவர் என்ற செயல் முறையைக் காணமுடியவில்லையே?

அப்படியானால் எங்களது நிலை என்ன?

இலங்கையில் உஸ்தாத் மன்சூர்,  அஷ் ஷேக் அகார் முஹம்மது,  உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அஷ் ஷேக் ரிஸ்வி  முப்தி ஆகிய, குறிப்பிடப் பட்ட மார்க்க அறிஞர்கள் ஒன்று கூடி அவர்களது யாப்புக்கு அடிபணிந்த நிலையில் தெரிவு  செய்யப்பட்ட தலைமைத்துவ   மத குருமார்கள் எங்களது மீட்சிக்கு அல்லாஹ் அனுப்பிய தலைவர்களா? 

அல்லது, எகிப்தில் இருந்து கட்டாருக்கு ஹிஜ்ரத் சென்று, கட்டார் நாட்டின் அரசர்களின் இறைக் கொள்கைக்கு முரணான கொள்கையை கண்டும் காணாமல் போல வாழ்ந்து கொண்டு அவவப்போது சி.ஐ.ஏக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப 'பத்வா' வழங்கிக்கொண்டு சொகுசாக வாழும் 'யூசுப் கர்ளாவி'  போன்ற மத குருமார்கள் எங்களது மீட்சிக்கு அல்லாஹ் எமக்கு அனுப்பிய தலைவர்களா?

அல்லது, அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருந்து, அமெரிக்க செய்கின்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் துணை நின்கின்ற சவுதி அரசுக்கு எப்பொழுதும் ஒத்துப் பாடுகின்ற சவுதி அரசின் மத குருமார்கள் எங்களது தலைவர்களா?

அல்லது, காஷ்மீர் ஜிகாத்துக்கு பகிரங்கமாக அரை கூவல் விடும் பாக்கிஸ்தானில் அமெரிக்காவின் சி.ஐ.ஏக்களின் அடிவருடிகளான  எங்களது மத குருமார்கள் அல்லாஹ் எமக்கு அனுப்பிய தற்போதைய தலைவர்களா?

இவர்கள் எல்லோரும்  ஒரு வகையில் கண்ணுக்கு தெரியாத 'யாப்புக்களுக்கு' அடிமை பட்டு இருக்கிறார்களே?

'யாப்புகளுக்கு' அடிமையாவது நம்ரூதின் இறைவனின் அரசாட்சிக்கு எதிரான அரசாட்சியின் புதிய பரிணாமம்.

அன்று நம்ரூத்தின் சட்டங்கள் மக்களை ஆண்டன.

இன்று மக்களால் நிறைவேற்றப் பட்ட 'யாப்புகள்'  ஆள்கின்றன.

'யாப்புகளின்' சட்டங்களை இந்த மத குருமார்கள் எங்கள் மீது திணிக்கிறார்கள்.

பண்டைய நம்ரூதின் அரச சபையின் நவீன கால புதிய பரிணாமம் எடுத்த இவர்கள் எமது தலைவர்கள் என்கிற தகுதியில் இல்லை.

ஏனெனில், இவர்கள் அல்லாஹ்வின் சட்டத்துக்கு அடிபணியாமல்  "யாப்புகளின்" சட்டத்துக்கு அடிபணிகிறார்கள்.

தங்களை அறியாமல், அல்லது நன்கு தெரிந்துக் கொண்டே அல்லாஹ்வுக்கு  இணை கற்பிக்கும் இவர்கள் எப்படி அல்லாஹ்வின்  பிரதிநிதியாக இருந்து எம்மை வழி நடாத்துவது?   

அப்படி என்றால் இந்த சமுகத்தின் தலைவராக யாரை அல்லாஹ் அனுப்பி இருக்கிறான்?

அவரைப் பற்றி அல் குரான், அல் ஹதீத்களில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?

 தற்போதைய  அல்லாஹ்வின் எதிரியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜதுல் விதா'வில் எமக்கு சொல்லி விட்டார்கள்.

அப்படி என்றால் இந்த சமுகத்துக்கு அல்லாஹ் அனுப்பிய தலைவர்தான்   யார்???????????

அல்லாஹ் எமக்கு அனுப்பி இருக்கிற அந்த தலைவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், எமது சமுகத்தில் புதிய பரிணாமம் எடுத்த நம்ரூதின் நிகழ்கால   நண்பர்கள் அந்த தலைவரை எமக்கு இனம்  காட்ட தயாராக இல்லை.

ஆனால், எங்களது சரித்திர ஆசிரியர்கள் அந்த தலைவரைப் பற்றி எமக்கு ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

 1 ) நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பன்னிரெண்டு இஸ்லாமிய ஆட்சியாளர்கள்    வருவார்கள். அதில் முதலாமவர் இமாம் அலி (அலை) அவர்கள்.  இறுதியானவர் இமாம் மஹ்தி (அலை) அவர்கள்.  சுமார் தொந்நூருக்கும்   மேற்பட்ட ஹதீத்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

2  )  நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இமாம்கள் பன்னிரெண்டு. அதில் இறுதியானவர் இமாம் மஹ்தி (அலை) அவர்கள். தொந்நூற்று நான்கு அறிவிப்புகள் இப்படி சொல்கின்றன.

3 ) இமாம்கள் பன்னிரெண்டு, அதில் ஒன்பது பேர் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பரம்பரையில் இருந்து தோன்றுவார்கள். அதில் இறுதியானவர் மஹ்தி (அலை) என்று அழைக்கப்படுவார். நூற்று ஏழு அறிவிப்புகள் இப்படி சொல்கின்றன.

4 ) இறுதி இமாம் மஹ்தி (அலை) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் இருந்து தோன்றுவார்கள். முன்னூற்று எண்பத்து ஒன்பது அறிவிப்புகள் இப்படி சொல்கின்றன.

5 )  இறுதி இமாம் மஹ்தி (அலை) இமாம் அலி (அலை) அவர்களின் சந்ததிகளில்   இருந்து தோற்றம் பெறுவார்.    இருநூற்று பதின் நான்கு அறிவிப்புகளில் இப்படி காணப் படுகிறது.

6  )  இறுதி இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நபி மகள் பாத்திமா (அலை) அவர்களின் வழித் தோன்றலில் தோற்றம் பெறுவார். இப்படி நூற்று தொந்நூற்று இரண்டு ஹதீத்கள் தெரிவிக்கின்றன.

7  )   இறுதி இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பரம்பரையில் இருந்து வருவார். இப்படி நூற்று எண்பத்து ஐந்து அறிவிப்புகள் சொல்கின்றன.

8  )  இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஒன்பதாவது வழித் தோன்றலாவார்.

 9  )  இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாம் முஹம்மது   பாகிர் (அலை)  அவர்களின் வழித் தோன்றலாவார். இவ்வாறு நூற்று மூன்று ஹதீத்கள் அறிவிக்கின்றன.

10  )  இமாம் மஹ்தி (அலை) இமாம் ஜாபர் சாதிக் (அலை)  அவர்களின் சந்ததிகளில் இருந்து வருவார் என்று நூற்று மூன்று ஹதீத்கள் அறிவிக்கின்றன.

எமது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சம்பந்தமாக எமக்கு விட்டுச் சென்ற அறிவிப்புகள் பற்றிய விரிவான விளக்கத்தை இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம். 

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad