இப்பொழுதும், வழமைப் போலவே , நண்பர் இம்ராசின் கேள்விக்கு விடையாக எங்களது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் ஆதாரங்களையே நாம் கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.
முதலாம் கலீபாவுக்கும், அன்னை பாத்திமா (அலை) அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றுவதற்கு மூல காரணமாக அமைந்த இஸ்லாமிய தலைமைத்துவம் சம்பந்தப் பட்ட விடயத்தை முதலில் நாம் கவனிப்போம்.
இது தவிர, அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறமைக்கு எதிராக மீன்டும் ஒரு முறை உலகை ஆளும் ஒரு தலைமத்துவத்தைப் பற்றி முன்னறிவித்தார்கள்.
இந்த ஹதீத் புஹாரி ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவாகி உள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது;
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜதுல் வதாவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.
ஹஜ்ஜதுல் வதா என்பதன் கருத்து என்னவென்று எமக்குத் தெரியாது.
இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி "அல் மஷீஹுத் தஜ்ஜாலைப்" பற்றி கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள்.
அப்போது "அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத் தூதரும் அவனைப் பற்றி தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்தது இல்லை.
நுஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். .
அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத் தூதர்களும் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.
மேலும் உங்களிடையேதான் அவன் தோன்றுவான். அவனது தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப் படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் எனபது உங்களுக்கு நன்றாகவே தெரியும்"-
இதை மூன்று முறை கூறினார்கள்.
பிறகு, "உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டு இருக்கும் திராட்சைப் போன்றிருக்கும்" என்றார்கள்.
"அறிந்து கொள்ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும், உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்." என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, "நான் (இறைச் செய்தியை )உங்களிடம் சேர்த்து விட்டேனா?" என்று மக்களிடம் கேட்டார்கள்.
மக்கள் "ஆம்" என்று பதில் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "இறைவா! நீ சாட்சியாக இரு" என்று மும்முறை கூறிய பிறகு, "உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! " அல்லது "அந்தோ பரிதாபமே!" கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்" என்று சொன்னார்கள்'
(ஆதாரம்; புஹாரி ஹதீத் --கிரந்தம் ஐந்தாம் பாகம் ஹதீத் இலக்கம் 4402 : 4403 )
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றப் போகின்ற அபாயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகி விட்டது.
இந்த அபாயங்களில் இருந்து மனித சமுகம் எப்படி தப்புவது?
மனித சமுகம் எதிர் கொள்ளப் போகின்ற இந்த அபாயங்களில் இருந்து தப்புவதற்கான வழி முறை தான் என்ன?
ஒவ்வொரு நபிமார்களின் மறைவிற்குப் பிறகு அந்த நபிமார்களின் 'சிஷ்யர்களும், மார்க்க அறிஞர்களும் ' அந்த சமுகத்தை வழி கெடுத்து உள்ளார்கள்.
இது தொண்டு தொட்டு வரும் மனித குல வரலாறு.

ஆகவே, இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழி நடாத்த முன் வருகின்ற இந்தப் "புரோகிதர்களை அல்லது இடைத் தரகர்களை" நம்ப முடியாது? '
அப்படி என்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழிநடாத்த யாருமே இல்லையா?
பெரும் சிந்தனையுடன் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா நோக்கி திரும்புகிறார்கள்.
அப்படித் திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்' என்ற இடத்தில் நடைபெற்ற இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமன செயல் பற்றிய சம்பவம் ஹஜ்ஜதுல் விதா நடைபெற்ற ஹிஜ்ரி பத்தாம் வருடம் பிறை பதினெட்டில் நடைபெற்றிருக்கிறது.
இப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.
நபி (ஸல௦ அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள் எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.
ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வழியில் திடீரென அல்லாஹ்வின் புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.
""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன் தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5 : 67 )
இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டதன் பிறகு, இது என்ன புதிதாக ஒரு செய்தி முற்றுப் பெறாத இன்னுமொரு விடயத்தைப் பற்றி அருளப்படுகிறது?
அருளப் பட்ட ஆயத்தின் படி நபி (ஸல்) அவர்கள் சொல்லுகின்ற இந்த செய்தி தான் இறைவனின் தூதை முழுமைப் படுத்தப் போகிறது?
மனிதர்களுக்கு தயங்கித்தான் இதை இன்னும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை.?
அத்தகைய மக்களை அலட்சியப் படுத்தி விட்டு அந்த இறை செய்தியை ஏனைய மக்களுக்கு அறிவிக்குமாறு "வஹி" அருளப்பட்டு விட்டது.
அது என்ன செய்தி?
மக்களை வழி கெடுக்கும் தஜ்ஜாலின் தலைமைத்துவத்துக்கு எதிரான , இறுதி நாள் வரை தீர்மானமாக இருக்கப் போகின்ற "இஸ்லாமிய தலைமைத்துவம்" பற்றிய செய்தி சொல்லப் படப் போகிறது.
இந்த ஆயத் அருளப் பட்ட உடனேயே உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திலே தரித்து நின்று உடனே, தம்முடன் வந்தவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள்.
சேய்த் இப்னு அர்கம் அறிவித்ததாக அபூ துபைல் அறிவிக்கும் இந்த அறிவிப்பு அல் ஹாகிம் உடைய அல் முஸ்ததர்க்கில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது:
"நபி (ஸல௦ அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பும் வழியில் 'கதீர் கும்' என்கிற இடத்தில் திடீரென நின்றார்கள்.
"அவர்களுடன் வந்த அவரது தோழர்களுக்கு அவ்விடத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்யுமாறு வேண்டினார்கள்.
"தோழர்களும் மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்தார்கள்.
"அதன் பின்னர் நபி (ஸல௦ அவர்கள் 'அல்லாஹ்வின் கட்டளைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.
"நான் உங்கள் மத்தியில் இரண்டு பெறுமதியான பொக்கிஷங்களை விட்டு செல்கிறேன். அதில் ஒன்று மற்றையதை விட பெறுமதி கூடியது.
"அவை இரண்டும், அல்லாஹ்வின் வேதநூலும், எனது குடும்பத்தவர்களான எனது அஹ்ளுல்பைத்களுமாகும். அவை இரண்டின் விஷயத்திலும் மிகக் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை இரண்டும் மறுமையில் நியாய தீர்ப்பு நாளில் நீர் தடாகத்திடம் என்னை சந்திக்கயும் வரை ஒன்றை விட்டும் மற்றொண்டு ஒரு போதும் பிரியப் போவது இல்லை."
இதனை சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னார்கள்."நிச்சயமாக அல்லாஹ் எனது 'மௌலா'வாகும்.(பாது காவலன் அல்லது தலைவன்).அனைத்து விசுவாசிகளுக்கும் நான் மௌலாவகும்.(பாது காவலன் அல்லது தலைவன்)யார் யாருக்கு எல்லாம் நான் மௌலாவோ அவர்களுக்கு எல்லாம் இந்த அலி மௌலாவாகும் (பாது காவலன் அல்லது தலைவன்).
"அலியை நேசிப்பவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அலியுடைய விரோதிகளுடன் அல்லாஹ்வும் விரோதம் கொள்கிறான்.
(ஆதாரம்; அல் முஸ்த்தாதர்க் மூன்றாம் பாகம் பக்கம் 109 )

நபி (ஸல்) இந்த உரையை அவரது சஹாபாக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்தவுடன்
இமாம் அலியிடம் வந்த உமர் (ரலி) இமாம் அலிக்கு பைஆத் செய்துவிட்டு சொன்னார்கள் " அபூதாலிபின் புதல்வரே! என்னுடைய நல் வாழ்த்துக்கள் உங்கள் மீது உண்டாகட்டும். இன்று காலை நீங்கள் பெரும் அருள் பெற்றவராக மாறி விட்டீர்கள்.இன்று நீங்கள் அனைத்து மூமின்களினதும் ஏகோபித்த தலைவராக ஆகி விட்டீர்கள்"
மீர் செய்யிது அலி ஹமாதாணி என்பவர் ஸாபி மத்கபின் முக்கிய அறிஞர்களில் ஒருவர்.
அவர் அவரது மவத்தாத் அல் குர்பாவில் (ஐந்தாம் பாகம்) உமர் (ரலி) சொன்னதாக பிவருமாறு அறிவிக்கிறார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் கதீர் கும் மில் வைத்து சஹாபாக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் பொழுது உமர் (ரலி) க்குப் பக்கத்தில் அழகிய வாட்ட சாட்டமான ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்தார்.
அவரை உமர் (ரலி) இதற்கு முன்னர் எங்குமே காணவில்லை.
நபி (ஸல்) அவர்கள் இமாம் அலியின் கையை உயத்தி அவரை மூமின்களின் தலைவராக நியமித்ததன் பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த வாட்ட சாட்டமான அந்த வாலிபர்" நிச்சயமாக இது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் ஒப்பந்தப் பத்திரமாகும்."நயவஞ்சகர்களை தவிர வேறு எவரும் இந்த ஒப்பந்தத்தை முறிக்க மாட்டார்கள்." என்ற அவர் உமரை நோக்கி "உமரே ! நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முறிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். " என்று கூறி இருக்கிறார்.
இந்த சம்பவத்தை உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது , நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) யை நோக்கி "அது உண்மையை உங்களுக்கு சொல்லித் தந்த ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்" என்று சொன்னார்கள்.

அன்றைய தினம் அங்கு சமூகம் அளித்து இருந்த அனைத்து சஹாபாக்களும் இமாம் அலியை தங்களது தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அவருக்கு பைஆத்தும் செய்தார்கள்."
அதில் முதலாவது நபர் உமர் (ரலி௦ ஆவார்கள்.
இஸ்லாத்துக்குள் ஊடுருவி இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அந்தப் பிரசங்கத்தையும், முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவம் பற்றிய விடயங்களையும் திரிபு படுத்தி குழப்பி விட்டார்கள்.
என்றாலும், இதற்கு நேர் மாற்றமாக சுன்னத் வால் ஜமாத்தினரில் சில அறிஞர்கள் இதற்கு முரண் பட்ட கருத்தியலில் , அவர்கள் வழிக் கெட்டது போதாது என்று எம்மையும் வழிக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த சம்பவம் சிதைந்து போன இமாம் அலியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் நோக்குடனும், இமாம் அலியின் ஆன்மீக தலைமைத்துவத்தை ஸ்த்திரப்படுத்தும் நோக்குடனும் நபி (ஸல்) அவர்கள் செய்ததாக கூறுகிறார்கள்.