அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, May 24, 2011

பாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...



பாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...


நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்  பொழுது சிலருக்கு மரணதண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தார்கள்.

அதில் கஹ்பதுல்லாவின் திரை சீலையைப் பிடித்து 'அபயம்' கேட்டாலும் 'அபயம்' கொடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்த நபர்களில் ஹகம் இப்னு அல் ஆஸ்  முக்கியமானவன்.

லுஹருடைய நேரத்தில் இந்த ஹகமை ஹசரத் உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு பொது மன்னிப்பை வேண்டி அழைத்து வந்தார்கள்.

நபிகளார்(ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு  உடனே மன்னிப்பு வழங்க வில்லை.

உதுமான் (ரலி)  நபி (ஸல) அவர்களை அணுகி அவனுக்காக மீண்டும் பொது மன்னிப்பை வேண்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் கூறவில்லை.

இப்படியே பலமுறை இந்த ஹகமுக்காக உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டுவதும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் மெளனமாக இருப்பதுமாக நேரம் கடந்து கொண்டு இருந்தது.

இறுதியில் மாலையில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு மிகவும் கடுமையான ஒரு நிபந்தனையின் அடிப்படையில் பொது மன்னிப்பை வழங்கினார்கள்.

அது என்ன நிபந்தனை?

"இஸ்லாமிய அரசின் தலை நகரில் இந்த ஹகம் எந்தக் காரணம் கொண்டும் நுழையக் கூடாது. இவன், இஸ்லாமிய அரசின் எல்லையை விட்டும் நாடு கடத்தி வைக்கப் படல் வேண்டும்"

இதுதான் அந்த கடுமையான நிபந்தனை.

ஹகமுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைக் கேட்டதும் சஹாபாக்கள் அதிர்ந்து போனார்கள்.

ஹசரத் உமர் (ரலி)   நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் "யா... ரசூலுல்லாஹ்!
நீங்கள் ஹகமுக்கு இன்று பகலில் இருந்து மாலை வரை மன்னிப்பை வழங்க வில்லை."என்ற உமர் (ரலி) வியப்புடன் கேட்டார் "அப்படி மன்னிப்பு வழங்கும் பொழுதும் அவரை இஸ்லாமிய எல்லையை விட்டும் நாடு கடத்தும் கடுமையான நிபந்தனையுடனே மன்னிப்பை வழங்கி இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன?"

"நான் இந்த ஹகமுக்கு இவர் காபதுல்லாவின் திரை சீலையைப் பிடித்துக் கொண்டு அபயம் கேட்டாலும் அபயம் அளிக்காமல் இவரை கொன்று விடுமாறு இவருக்கு   மரண தண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தேன்." என்ற நபி (ஸல) அவர்கள் தொடர்ந்தார்கள் "உங்களில் யாராவது எனது 'பத்வாவை' கருத்தில் கொண்டு இவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுகிறீர்களா என்று மாலை வரை காத்து இருந்தேன்.ஆனால், உங்களில் யாரும் எனது நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை." என்றார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு மெதுவாக கண் சாடைக் காட்டி இருந்தால் நான் அந்த வேலையை செய்து இருப்பேனே" என்று அங்கலாயித்தார்.

இதைக் கேட்ட நபி (ஸல) அவர்கள் "அப்படி கண் சாடை காட்டி ஏமாற்றுவது தூதர்களுக்கு அழகல்ல" என்று உமர் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்.

இஸ்லாமிய அரசின் எல்லையினுள்  எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்கப் பட்ட ஹகமை , நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறி இஸ்லாமிய எல்லைக்குள் எடுத்தது மட்டுமன்றி, அவனது மகன் மர்வான் இப்னு ஹகமை இஸ்லாமிய அரசின் 'செயலாளராக' உதுமான் (ரலி) நியமித்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தார்.

உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால், வெற்றி பெற்ற உஹது யுத்தம் தோல்வியில் முடிவடைந்த கதை நமக்கு தெரியும்.

நபி (ஸல்) அவர்களால் மரண தண்டனை விதிக்கப் பட்ட ஒரு பயங்கரமான நபருக்கு தனது செல்வாக்கைப் பயன் படுத்தி மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் முதலாவது தவறை உதுமான் (ரலி) செய்கிறார்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் தேசபிரதிருஷ்டம் செய்த ஒருவனை இஸ்லாமிய அரசினுள் உள்வாங்கிய இரண்டாவது தவறையும் உதுமான் (ரலி) மீண்டும் செய்கிறார்.

அது மட்டுமன்றி, அந்த நபரின் மகன் மர்வானை தனது மருமகனாகவும் ஏற்றுக் கொண்டு மீண்டும் ஒரு பாரிய தவறை செய்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு திரும்பத் திரும்ப மாறு செய்தார்.

பின்னாளில், மர்வான் இப்னு ஹகம் செய்த சதிகளினாலேயே உதுமான் (ரலி) கொல்லப் படுகிறார்.

பரிதாபமாக, பாம்புக்கு பாலூற்றி வளர்த்து அந்தப் பாம்பினாலேயே தீண்டப் பட்டு முடிந்த கதையாக அவரது கதை முடிகிறது

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad